நாய்(கள்) வளர்ப்பது அனேக நேரங்களில் பெருமையையும் மகிழ்வையும் தந்தாலும் சில நேரங்களில் சங்கடத்தையும் தருகிறது என்பதை மறுக்க முடியாது. சிலபல நேரங்களில் வீடுகளில் சண்டை வருவதற்கும் வளர்ப்பு நாய்கள் காரணமாக இருக்கின்றன. ப்ளூட்டோ குழந்தைப் பருவத்திலிருந்து விடலைப் பருவத்தை அடைந்து அதையும் தாண்டி Adult நிலைக்குச் சென்றிருந்தது. இரண்டாம் இடம் மட்டும் மியூசிக்கல் சேர் போல் மாறிக்கொண்டே இருந்தது. ப்ளூட்டோ என்ற ராஜாவுக்கு சேவகன் இல்லை என்றோ குருவுக்கு சிஷ்யர்கள் யாரும் சரியாக அகப்படவில்லை என்றோ வைத்துக்கொள்ளலாம்.
இப்படி இருக்கையில் திருநெல்வேலியிலிருந்து டீனா என்ற ஒரு வயது நிரம்பிய ஃபீமேல் டாபர்மேன் நாயுடைய பிறப்பு சான்றிதழின் ஜெராக்ஸ் காப்பி எங்களுக்குத் தபாலில் வந்தது. நாய்க்கு பிறப்பு சான்றிதழ் இருக்கும் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். "இந்த நாய் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் வீட்டுல இருக்குது. நமக்கு வேணுமான்னு கேக்குறாங்க.. இது ஒரு லட்ச ரூபாய் போகக்கூடியதாம். வளர்க்க முடியலன்னு நமக்கு இப்ப ஃப்ரீயா தரேன்ங்கிறாங்க" என்று கூறினார் என் கணவர்.
"பெண் நாயா!? வேண்டவே வேண்டாம்!" என்றார் என் மாமியார். இன்னும் எனக்கு இது போன்ற விஷயங்களில் கருத்துக் கூறும் திறமை வந்திருக்கவில்லை என்பதால் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சான்றிதழில் என்னென்ன விவரங்கள் அடங்கியிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் பார்த்தேன். அந்த நாயின் Breeder (தொழில் முறையில் நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து விற்பனை செய்பவர்) யார் என்பதிலிருந்து அதன் பிறந்த தேதி என்ன, அதன் பெற்றோர்கள் யார் யார் (family treeயே வரைந்திருந்தார்கள்!) அவர்களின் தகுதி என்ன, சாதனைகள் என்ன, டாக் ஷோக்களில் பங்குபெற்ற விபரம் எல்லாம் போடப்பட்டிருந்தது. அப்போது முகநூல் புழக்கத்தில் இருந்திருந்தால் அந்தச் சான்றிதழை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருப்பேனாக இருக்கும். அதை இப்போது 15 வருடங்கள் கழித்து மெமரீஸ் என்று மார்க் ஜுக்கர்பெர்க் காட்டியிருப்பார்.
அந்தச் சான்றிதழுடன் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் தடுப்பூசி அட்டையைப் போன்ற ஒன்றையும் அனுப்பியிருந்தார்கள். அதில் அந்த நாய்க்கு என்னென்ன தேதியில் என்னென்ன தடுப்பூசி போடப்பட்டது என்பதை எழுதி, தடுப்பூசி பாட்டிலில் இருக்கும் ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்திருந்தார்கள். என் குழந்தைகளுக்கே ஆரம்பத்தில் சில முறை தடுப்பூசி போடும்போது மட்டும் தான் அந்த ஸ்டிக்கரை எல்லாம் பத்திரப்படுத்தி அட்டையில் ஒட்டி வைத்தேன். அடுத்து நமக்கு எதுக்கு அட்டை, 'சிப்'பில் சேமித்து கொள்ளலாம் என்று என் மூளையை நம்பி அட்டையைக் கைவிட்டிருந்தேன். அதனால் நாய்க்கு இவ்வளவு தகவல்கள் அடங்கிய சான்றிதழா என்று ஆச்சரியமாக இருந்தது.
அந்த பிரீடர் பெயர் 'ரெட்டி பிரதர்ஸ்'. ஆந்திராவில் இவர்கள் அம்பானி, அதானி போன்ற பெரிய தொழில் அதிபர்களாம்.. அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்டாம். இத்தகைய நாய் இலவசமாக கிடைக்கிறது, அதுவும் பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாகவும் கெத்தாகவும் இருக்கிறதாம் என்று அதன் அருமை பெருமைகளைக் கேட்டு முக்கால் மனதாக அனைவரும் டீனாவைக் கொண்டு வருவதற்கு ஒத்துக் கொண்டோம். டீனாவும் எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
பெண் நாய்கள் ஆண் நாய்களை விட மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். ப்ளூட்டோவே இவ்வளவு பாசம் வைத்திருக்கிறானே, டீனாவும் நிச்சயம் பாசக்காரியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் டீனா பயங்கர அராத்தாக இருந்தாள். நான்கு மாதங்கள் எங்கள் வீட்டில் இருந்திருப்பாள். எங்கள் யாரிடமும் ஒட்டவே இல்லை. சொல்பேச்சு எதையும் கேட்கவேயில்லை. 'கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும், கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும்' என்று நாங்களும் எங்கள் திறமைகளை எல்லாம் காட்டிப் பார்த்தோம். டீனா வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. எங்களையே கடிக்க வந்தது. எங்கள் வீட்டுக் குழந்தைகள் வாசலுக்கு வரவே பயப்பட்டனர். ப்ளூட்டோ ஒதுங்கி விட்டான். விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தானோ, இல்லை உன் பருப்பு ரொம்ப நாளைக்கு இங்கே வேகாது, நான் தான் இங்கே நிரந்தரம் என்று நினைத்தானோ என்று தெரியவில்லை. அவனிடமும் டீனா வம்பு வளர்க்கவே செய்தது. பெருந்தன்மையாக விட்டுவிட்டான் ப்ளூட்டோ.
அவிழ்த்து விடுவது ரொம்பத் தொந்தரவாக இருந்ததால் ஒரு நீளமான கயிற்றால் டீனாவைக் கட்டிப் போட்டிருப்போம். பெரிய மைதானம் போன்ற எங்கள் வாசல் முற்றத்தில் சுதந்திரமாக நடந்து கொண்டிருப்பாள் டீனா. இங்குள்ள உணவு தான் பிடிக்கவில்லையோ என்று நினைத்து எங்கள் வழக்கமான வழக்கத்தையும் மீறி அவ்வப்போது பெடிக்ரீ, எலும்புகள், பீஃப் எல்லாம் கூட வாங்கிப் போட்டோம். நெல்லுக்குப் பாய்வது புல்லுக்கும் பாய்வது போல ப்ளூட்டோவுக்கும் அவ்வப்போது பெடிக்ரீ கிடைத்தது. நான்கு மாதத்தின் இறுதியில் ஒரு நாள் இரண்டு வீடுகள் தள்ளிக் குடியிருந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்க, அவனை விரட்டிச் சென்று சைக்கிளிலிருந்து விழ வைத்து விட்டது டீனா. இனிமேல் தாக்குப் பிடிக்காது என்று நினைத்து அதை எங்களுக்குக் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டோம். ஒரு வேளை அங்கும் அடங்காத பிள்ளையாக சுற்றித் திரிந்ததால் தான் அவர்களும் வெளியே கொடுக்க முனைந்தார்கள் போலும் என்று தோன்றியது.
இன்னொரு நாய் வாங்கியே ஆக வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. நாட்டு நாய்களை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை எங்கோ படித்த நான், எனக்குத் தெரிந்த பெயர்களையெல்லாம் சொல்லி 'ராஜபாளையம் நாய் வாங்குவோமா? சிப்பிப்பாறை வாங்குவோமா?' என்று சீன் போட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர், 'குழந்தைகள் வளரும் பருவத்தில் இருக்கிறார்கள். லேப்ரடார் மாதிரி நன்றாகப் பழகக் கூடிய ஃப்ரெண்ட்லி டாக் தான் நல்லது' என்று கிரேட் டேனைத் தேர்வு செய்தார். விலங்குகளுக்குப் பெயர் வைக்கும் ஆர்வம் அவருக்குப் போய் விட்டது. அதனால் அந்தப் பொறுப்பை நானே ஏற்று, எனக்கு சட்டென்று தோன்றிய ஒரு பெயரை கூறுவேன். பெரும்பாலும் அதுவே அமைந்துவிடும். பின்நாட்களில் என் மகள்கள் அந்தப் பொறுப்பை ஏற்றனர்.
கிரேட் டேன் வெரைட்டி தானே, டேனி (Danny) என்று வைக்கலாம் என்றேன். A,E,I,O,U என்ற ஓசையில் முடியும் பெயர்கள் என்றால் நாய்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். ஐ ஓசையில் முடிந்ததால் டேனி என்ற பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எங்கள் வீட்டின் முதல் கிரேட் டேன் ஒரு சின்ன அட்டைப் பெட்டியில் அமர்ந்து எங்கள் வீட்டிற்கு ஒரு மாலைப்பொழுதில் வந்து சேர்ந்தது. அது பின்பு வளர்ந்து என் இடுப்பு உயரத்திற்கு வரும் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். அடர் பிரவுன் நிறத்தில் மேலே ஆங்காங்கே வரிகள் அமைந்து மிக சாந்தமான முகத்துடன் இருந்தது டேனி.
அப்போது நான் மதுரையில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் மிகச் சிறியவர்கள், என்னை விட்டுவிட்டு இருக்கமாட்டார்கள் என்பதால் அவர்களையும் அழைத்துக்கொண்டு போய் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தேன். அதனால் வார இறுதிகளில் மட்டுமே எங்கள் வீட்டு மனிதர்களையும் விலங்குகளையும் சந்திக்க முடியும். என் சிறிய மகளுக்கு ஒன்றரை வயது தான் ஆகியிருந்தது. அப்போது தான் பேசப் பழகிக் கொண்டிருந்தாள். மதுரையில் நாங்கள் வசித்த தெருவில் அக்கம்பக்கத்தவரிடம், 'எங்க வீட்ல பூட்டோ இக்கு (இருக்கு).. டேனி இக்கு.. கப்புயல் (கருப்பு முயல்) இக்கு.. ஃபிஷ் இக்கு.. எல்லாரும் வாங்க என்று அடிக்கடி மழலையாகக் கூறுவாள். நாங்கள் மதுரையில் வசித்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் நாய் இருந்தது. அது டால்மேஷன் வகையைச் சேர்ந்தது. அதற்கு எப்போதும் ஃபேன் போட்டு வைத்திருப்பார்கள். 24 மணி நேரமும் அந்த மின்விசிறி ஓடிக்கொண்டே இருக்கும். இரவில் கொசுக்கடிக்கும், பகலில் அதற்கு வியர்க்கும் அதனால் போட்டிருக்கிறார்கள் என்பார்கள் மற்றவர்கள். ஒருநாள்கூட அந்த நாய் வீட்டின் கேட்டைத் தாண்டி வெளியே வந்து நாங்கள் பார்த்ததில்லை. வீட்டிற்கு வெளியே நின்று நாங்கள் அதனிடம் பேச முயன்றால் ஆக்ரோஷமாகக் குரைக்கும்.
யாரும் அதனிடம் கொஞ்சியும் பேசியும் பார்த்ததில்லை. நாங்கள் வளர்ப்பது போல் Pet Dogஆக இல்லாமல் மற்றவர்களைப்போல் Guardஆக வளர்க்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு வருடங்கள் அந்தப் பகுதியில் குடியிருந்தும் அதன் பெயரைக் கூட எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஃபேன் நாய் என்று அதற்கு ஒரு தற்காலிகப் பெயரை சூட்டினோம்.
அதனால் எங்கள் பாசம் மொத்தத்தையும் சேமித்து வைத்து வார இறுதிகளில் வந்து வீட்டில் இருக்கும் ப்ளூட்டோவிடமும் டேனியிடமும் கொட்டிவிடுவோம். ப்ளூட்டோவின் வழிகாட்டுதலின் படி வளர்ந்து வந்தான் டேனி. ப்ளூட்டோவைத் தாக்கிய பார்வோ பயங்கர அனுபவங்களைத் தந்துவிட்டதால் டேனிக்கு மிக கவனமாக தடுப்பூசிகள் போட்டு கவனித்துக் கொண்டார்கள். ஆனாலும் அவனுக்கு டிஸ்டம்பர் வைரஸ் தாக்கிவிட்டது. டிஸ்டம்பர் என்றால் சுவருக்கு அடிக்கும் பெயிண்ட் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் மைக்ரோபயாலஜி புத்தகத்தில் ஒருஓரமாக பிற வைரஸ்கள் பட்டியலில் டிஸ்டம்பர் வைரஸைப் பற்றிப்போட்டிருப்பார்கள். அது பெரிதாக மனதில் பதியவில்லை. டேனிக்கு தொற்று வந்தபின் தான் அந்த நோயில் நரம்புகள் பாதிக்கப்பட்டு நாய்களின் கால்கள் நடுங்கிக்கொண்டே இருக்கும்; சமயத்தில் மொத்த உடம்பும் நடுங்கும் என்று தெரிந்து கொண்டேன். தன் இறுதிக்காலம் வரை அவ்வப்போது அதன் பாதிப்பால் அவனுக்கு ஒரு கால் மட்டும் கால் நடுங்கிக்கொண்டே இருக்கும். ப்ளூட்டோவுக்குக் கூறியதைப் போலவே என் கணவர் டேனி விஷயத்திலும் என்னை பயமுறுத்தினார். 'தெருநாய்க்கு டிஸ்டம்பர் வந்தா அதுபாட்டு ஆடிக்கிட்டே இருக்கும். கொஞ்சநாள் ஆடி ஆடி ஆடி அப்புறம் தன்னாலேயே சரியாயிடும், வீட்டு நாய்க்கு வந்தால் கஷ்டம்தான். பார்ப்போம்!' என்றார்.
டேனி பெரிய சைஸ் நாய் என்பதால் ஆரம்பத்திலிருந்தே கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் மாத்திரைகளைக் கொடுத் தேவந்தோம். அதனாலோ என்னவோ டிஸ்டம்பர் வைரஸ் தொற்றும் சரியாகி டேனி பிழைத்துக் கொண்டது. பத்து வருடங்களுக்கு மேல் எங்களுடன் இருந்தது. ப்ளூட்டோவிற்கு நிகராகப் பல சாகசங்களைப் புரிந்தது. இதுவும் அயல்நாட்டு வகை நாய் என்பதால் எங்கள் ஊரின் சுட்டெரிக்கும் வெயில் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எங்களால் ஏசியோ ஃபேனோ வழங்க முடியவில்லை.. தினசரி குளிப்பாட்டக்கூட முடியவில்லை என்பது இப்போதும் லேசான குற்ற உணர்ச்சியைத் தருகிறது. டேனிக்கு சிறிதும் பெரிதுமாகப் பல நோய்கள் வந்தன. ஒவ்வொன்றையும் எங்கள் மூளையைக் கசக்கி சிகிச்சையளித்துக் காப்பாற்றினோம். ஒருமுறை எங்களுக்காக ஒருமிகப் பெரிய ரிஸ்க்கை எடுத்தது டேனி. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்காததால் மிகப் பெரிய ஆபத்தில் அன்று சிக்கிமீண்டது.