ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 11

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 11

ப்ளூட்டோவை காணவில்லை என்று பிட் நோட்டீஸ் அடித்து பேப்பர் காரரிடம் கொடுத்துவிட்டு வந்த பின் இரவில் சரியாக தூக்கம் இல்லை. விழிப்பு பாதியும் தூக்கம் பாதியுமாகக் கழிந்தது பொழுது. ஐந்தே முக்காலுக்கு வந்தது முதல் அலைபேசி அழைப்பு. எங்கள் டிரைவர் பெருமாளுக்கு ஃபோன் செய்த எவரோ ஒருவர் கழுகுமலை ரோட்டில் நாய் நிற்கிறது என்று கூறியிருக்கிறார். எங்களுடன் சேர்ந்து முந்தைய இரண்டு நாட்களும் ஊர் முழுவதும் ப்ளூட்டோவைத் தேடி அலைந்திருந்தார்  பெருமாள். பதறி அடித்துக்கொண்டு பல் கூட விளக்காமல் அந்த இடத்துக்குப் போய் பார்த்திருக்கிறார். எங்களுக்கும் சொல்லிவிட நானும் எழுந்து கிளம்ப ஆரம்பித்தேன்.

 அதற்குள் மீண்டும் அழைத்த பெருமாள், "மேடம்! அது சும்மா கலாய்ச்சிருக்காங்க.. இங்கே போச்சு அங்க ஓடுதுன்னு என்னை அங்கேயும் இங்கேயும் அலைக்கழிச்சுட்டாங்க" என்றார்.

'அடடா! இது ஒரு தொல்லையாக இருக்கும் போலிருக்கிறதே.. இன்னும்  எத்தனை அழைப்புகள் வருமோ' என்று நினைத்தேன். அடுத்தும் சில அழைப்புகள். 'சன்மானம் எவ்வளவு கொடுப்பீங்க, எத்தனை வயசு, நாய் பேரு என்ன, விசில் அடிச்சா பக்கத்தில் வருமா..' என்பது போல. நோட்டீஸ் அடித்ததே தவறோ என்று சலித்த நேரம், திருப்புமுனையாக ஒரு அழைப்பு காலை ஏழே காலுக்கு வந்தது. சுபேதார் என்பவர், "இலவங்குளம் ரோட்டுல நான் தோப்பு வச்சிருக்கேன்.. ரெண்டு நாளா நீங்க சொல்ற நாய் அங்கே தான் சுத்திட்டு இருந்துச்சு.. நல்ல நாயா இருக்கே, வளர்க்கலாம்னு கட்டிப் போட்டேன். அப்புறம் அவுத்துக்கிட்டு எங்கேயோ போயிடுச்சு" என்றார்.

அச்சச்சோ என்று நாங்கள் வருத்தப்பட, "கவலைப்படாதீங்க இந்தப் பக்கமா தான் எங்கேயாவது இருக்கும். அங்க இருக்கிற ஆட்களை வச்சு தேடச் சொல்றேன்.. கிடைச்சவுடனே ஃபோன் பண்றேன்.." என்றார். இருப்பே கொள்ளவில்லை எங்களுக்கு. அந்தப் பகுதிக்குப் போய்த் தேடிப் பார்ப்போம் என்ற எண்ணம்.

 தெரியாத இடத்துக்கு எப்படிப் போய் அலைவது.. கிளம்பி வேலைக்குப் போ, கிடைத்தால் பார்க்கலாம் என்றார்கள் வீட்டிலுள்ளவர்கள். அதன் பின்னும் ஓரிரு அழைப்புகள் வந்தன. அந்த இலவங்குளம் என்ற ஊருக்கு மறுபுறமாக இருக்கும் சில கிராமங்களில் இருந்து அழைத்த மூன்று பேர் ஒன்றுபோல் ப்ளூட்டோவைப் பார்த்தோம் என்று உறுதியாகச் சொன்னார்கள். பலர் பார்த்திருந்ததால் கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்று நம்பினோம். அரை மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் சுபேதாரே அழைத்தார். "நாயைப் பிடிச்சு அடைச்சு வச்சுட்டாங்களாம்.. வாங்க வந்து கூட்டிட்டுப் போங்க" என்றார். காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றோம். அந்தத் தோட்டத்தை அடைந்து ப்ளூட்டோவை கண்ணால் பார்க்கும் வரை திடுக் திடுக் என்று அடித்துக் கொண்டுதான் இருந்தது.

 ஒரு பெரிய வேலிக்குல் ப்ளூட்டோவை அடைத்துப் போட்டிருந்தார்கள். எங்களைப் பார்த்த உடன் ஓடி வந்த ப்ளூட்டோ மன்னிப்புக் கேட்பது போல் கீழே படுத்துக் கொண்டது. அந்த வேலிக் கதவைத் திறந்துவிட்டு, கார் கதவைத் திறந்து வைக்க அமைதியாகப் பின்னால் போய் படுத்துக் கொண்டது. அந்த தோட்டத்தில் இருந்த பண்ணையாட்கள், "உங்க நாயா? ரொம்ப நல்ல நாய்.. எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு.. நாங்க சாப்பாடு போட்டோம்.. முட்டை போட்டோம்.. ஒரு அரை கிலோ மீட்டர் தள்ளி நின்னுக்கிட்டு இருந்துச்சு. இன்னைக்குக் கூட இருபது ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி ஒன்னொண்ணா போட்டு இங்கே கூட்டிட்டு வந்தோம்" என்றெல்லாம் சொன்னார்கள்.

 ப்ளூட்டோ மேல் அந்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு பாசம் வளர்ந்திருந்தது. வேண்டாம் என்று அவர்கள் மறுத்தாலும் கொஞ்சம் பணத்தை சன்மானமாக கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். திரும்பும் வழியில், சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் அழைத்து வந்த மிலிட்டரிக்காரரின் வீடு தெரிந்தது. பல வருடங்களுக்கு முன்பு மேட்டிங்கிற்காக ஒரே முறைதான் அங்கு ப்ளூட்டோவைக் கூட்டிப் போயிருந்தார்கள். 'அவர் இப்போ அங்கு இல்லையாம் காலி பண்ணிட்டுப் போயிட்டாராம்.  பழைய ஞாபகத்துல கேர்ள் ஃப்ரெண்டைத் தேடி வந்திருக்கும்.. அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்கு வர்ற வழியைத் தேடி மோப்பம் பிடிச்சிருக்கும்.. கண்டுபிடிக்க முடியலை.. எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் விட்டிருந்தாலும் அதுவா வந்திருக்கும்" என்றார் என் கணவர்.

"அதெல்லாம் இல்ல.. நான் தான் கண்டுபிடிச்சிருக்கேன்.. க்ரெடிட் எனக்குத்தான்" என்றேன். உண்மையில் இன்று வரை ப்ளூட்டோவை மீட்டுக் கொண்டு வந்தததைப் பெரிய சாதனையாகவே நினைக்கிறேன். குழந்தைகள் அன்று பள்ளிக்குப் போகவில்லை. நாள் முழுவதுமே ப்ளுட்டோவுடனே இருந்தார்கள். நேரடியாக பாசத்தைக் காட்டாத என் மாமனாரும் மாமியாரும் கூட அன்று ப்ளூட்டோவை விழுந்து விழுந்து கவனித்தார்கள்.

 வயதாகிவிட்டது, அதன் மோப்ப சக்தி குறைந்து விட்டது அதனால் தான் அதனால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைத்திருந்தோம். ஆனால் அப்படியல்ல, தன் புலன்கள் இன்னும் கூர்மையாகத் தான் இருக்கின்றன என்று இன்னொரு சம்பவத்தின் மூலம் நிரூபித்தான் ப்ளூட்டோ. அது ஒரு மழை நாள் மாலை. வீட்டின் பின்புறமாக இருக்கும் பாத்ரூமுக்கு முகம் கழுவுவதற்காக என் கணவர் செல்ல ப்ளூட்டோ அவரைச் சுற்றிச் சுற்றி வந்து தடுத்திருக்கிறான். டிஸ்டர்ப் பண்ணாதே.. போ அங்கே என்றாலும் கேட்கவில்லை. கடைசியில் வம்படியாகப் பிடித்து கட்டிப் போட்டு விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்திருக்கிறார். அதில் பல்பு சமீபமாக ஃப்யூஸ் போயிருந்தது. எதையோ மிதித்த உணர்வு வர, என்னை அழைத்து டார்ச் லைட் கொண்டுவரச் சொன்னார்..

அங்கே ஒரு மூன்றடி நீள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் ப்ளூட்டோவின் குரைக்கும் சத்தத்தை வைத்தே காரணத்தைக் கண்டு பிடிக்கப் பழகிக் கொண்டோம். வெளியே சுற்ற வேண்டுமென்றால் ஒரு விதமான குரைப்பு, உணவு வேண்டுமென்றால் ஒரு விதமான குரைப்பு, பாத்ரூமுக்குள் அடைத்துப் போட்டிருக்கையில் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் தேவை ஏற்பட்டால் அதற்கு வேறு விதமான குரைப்பு, இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் வித்தியாசமான  சத்தங்களை வெளிவரும். ஆபத்தில் குறைப்பதற்கு என்று தனியாக ஒரு தொனியை வைத்திருந்தான். அன்றும் அப்படிப்பட்ட 'அலர்ட் கால்' தான் அது என்பதை நாங்கள் தான் கணிக்கத் தவறிவிட்டோம். ப்ளூட்டோவைப் போன்ற நுண்ணுணர்வையும், தான் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாத பாதுகாப்பு உணர்வையும் வேறு எந்த நாயிடமும் நாங்கள் பார்க்கவில்லை.

இது நடந்து சில வருடங்களுக்குப் பின்னர், என் மாமியார் திடீரென நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். குணப்படுத்துவது கடினம் என்ற நிலை. அந்தச் சூழலில் ப்ளூட்டோவின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது. வீட்டில் ஒருவருக்கு உடல் நலமில்லை, நிறைய உறவினர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள், விரும்பத் தகாத நிகழ்வு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டதாகவே அவன் செயல்பாடுகள் இருந்தன. என் மாமியார் மறைவதற்கு ஒரு சில தினங்கள் முன்பு அவரது உடன்பிறந்தவர்கள் சிலர் அவரைப் பார்க்க வந்திருந்தனர். எல்லாரும் அவரின் கட்டிலைச் சுற்றி நின்று கொண்டிருக்க, எப்போதும் உள்ளே வராத ப்ளூட்டோ அன்று வந்தான். ஒரு வாரமாக சுயநினைவிழந்து போய் தொடர்பற்று பேசிக்கொண்டிருந்த என் மாமியார் அன்று, "ப்ளூட்டோ! கம் ஹியர். சிட்!" என்றார். அவரது காலடியில் போய் அமர்ந்தான். பிஸ்கட் கொண்டுவரச் சொல்லி கேட்டு வாங்கி ப்ளூட்டோவிற்குக் கொடுத்தார். அவர் மறைந்த அன்று ப்ளூட்டோ, டேனி, பூப்பி மூன்று பேரும் சுத்தமாக சாப்பிடவே இல்லை. சாதாரணமாக வெளியாட்கள் யாராவது வந்தாலே குரைப்பவர்கள் அன்று நூற்றுக்கணக்கான ஆட்கள் வந்தும் ஒரு சத்தமும் போடவில்லை. அவர்களாகவே பின்புறம் சென்று அவர்களை வழக்கமாக அடைக்கும் பாத்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். தனியே இருக்கும் முதியவர்கள் பலருக்கு நாய்கள், குறிப்பாக லேப்ரடார்கள் நல்ல துணையாக இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ப்ளூட்டோ விஷயத்தில் நன்றாகப் பார்க்கவும் செய்தேன்.

ப்ளூட்டோவுக்குப் பத்து வயது ஆனபோது கொஞ்சம் காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் வந்தது. கண் பார்வை தெளிவாகத் தான் இருந்தது. சொல் பேச்சு கேட்காத தன்மை நிறையவே வந்துவிட்டது. மனிதர்களில் முதியவர்கள் பலர் ஒரு வயதுக்கு மேல் அவர்களது உடல் நலத்திற்காக பிறர் அக்கறையாகக் கூறும் விஷயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. தன் போக்கில் நடப்பார்கள். அதுபோலவே ப்ளூட்டோவும் சில விஷயங்களில் disobedient ஆகி விட்டான். அப்போதும் நான் வாக்கிங் போகும்போது என் உடன்வருவான். ஆனால் நான் போகும் திசையை விட்டுவிட்டு வேறு எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து வருவான். அப்படி ஒரு முறை ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து எதையோ எடுத்து சாப்பிட முயன்றவனை கூப்பிட்டு பார்த்தேன், வரவில்லை. எனக்கு வேலைக்குக் கிளம்ப நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கவே ப்ளூட்டோவை என்னமோ பண்ணு என்று வந்து விட்டேன். குப்பைத் தொட்டியில் வாயை வைத்தது ஒத்துக் கொள்ளவில்லையா தெரியவில்லை, வாந்தியும் வயிற்றுப் போக்கும் அதிகமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் கொடுத்தோம். உணவு உட்கொள்வது மிகவும் குறைந்தது. என்னென்னவோ கொடுத்துப் பார்த்தும்  சரியாக சாப்பிடவில்லை. குட் டே பிஸ்கட்டை மட்டும் ஒவ்வொன்றாக வாயில் கொடுத்தால் வாங்கிச் சாப்பிட்டான். உடல் சரியாகி சாப்பிட்டானா அல்லது நாம் கொடுக்கிறோம் என்பதற்காக மறுக்க முடியாமல் உண்டானா என்று இனம் காண முடியவில்லை. மூன்று நாட்கள் கழித்து  கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுக்க ஆரம்பிக்க, நாங்கள் ஐந்து நாள் பயணமாக வெளியூருக்குப் போக வேண்டியதாக இருந்தது. வெகு நாட்கள் முன்பே திட்டமிட்ட பயணம் மாற்ற முடியாது. டேனி, ப்ளூட்டோ, பூப்பி மூன்று பேருக்கும் உணவு கொடுக்க அருகில் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். டிரைவர் பெருமாளிடமும் பார்த்துக்கொள் என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டுப் போனோம். நாங்கள் வெளியூர் போய்த் திரும்ப 5 நாட்கள் ஆயின.

 நடுவில் மறுபடியும் எதுவும் சாப்பிடாத நிலைக்குப் போயிருக்கிறான் ப்ளூட்டோ. பெருமாள் பிஸ்கட் கொடுத்துப் பார்த்தும் சரியாகவில்லை. நாங்கள் ஊரில் இருந்து வருகையில் மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டு, இடுங்கிய கண்களுடன் மிகச் சோர்வாகப் படுத்திருந்தான் ப்ளூட்டோ. பார்க்கையில் எங்களுக்கெல்லாம் கண்ணீரே வந்துவிட்டது. நாங்கள் வருவதற்காகவே உயிரை பிடித்து வைத்திருந்தவன் போல அடுத்த ஒரு நாளில் எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்து போனான் ப்ளூட்டோ. அன்று நாங்கள் அடைந்த சோகத்திற்கு அளவே இல்லை.

 இன்றும் ப்ளூட்டோ உயிருடன் இருப்பது போலவே எனக்கு கனவுகள் வருகின்றன. அன்று ஒரு நாள் காணாமல் போய் கிடைத்தது போல, கனவில் தொலைந்து போய் விட்டு, வேறு வேறு ஊர்களிலிருந்து வந்து கொண்டே இருக்கிறான். எந்த ஒரு ஃபான் கலர் நாயைப் பார்த்தாலும், 'ஹை! ப்ளூட்டோ!' ஒரு நிமிடமாவது நின்று ரசிக்காமல் போவதில்லை. எல்லா லேப்ரடார்களுடனும் ப்ளூட்டோவை ஒப்பிடச் சொல்கிறது மனம். இனிமேல் ப்ளூட்டோ திரும்பி வர வாய்ப்பில்லை என்பது மூளைக்குத் தெரிந்தாலும் பாழாய்ப் போன மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது.

என்ன நடந்ததென்று அடுத்த வாரம் சொல்கிறேன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com