ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 12

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 12

'பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஏனென்றால் ப்ளூட்டோவின் மறைவிலிருந்து வெளி வருவது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. நாய்கள் ரொம்ப நாள் உயிரோட இருக்காது. அதோட பிரிவு கஷ்டத்தைக் கொடுக்கும் என்று என் அப்பா சொன்னது அடிக்கடி ஞாபகம் வந்து போனது. நமக்குத் தான் இன்னும் ரெண்டு நாய் இருக்கே, பார்த்துக்கலாம் என்று மனசை சமாதானப் படுத்த முயன்றேன்.

 டேனியுடனும் பூப்பியுடனுடனும் ப்ளூட்டோ அளவுக்கு நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறு குறைகள் இல்லை. கிரேட் டேன் வகை நாய்கள் குளிர் பிரதேசத்துக்கானவை. அதிக வெயில் டேனிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது தான் எங்கள் வீட்டில் நிறைய செடிகள் நட்டு வைத்திருந்தோம். எதுவும் மரமாகவில்லை. அதனால் நிழலுக்குப் பஞ்சமாக இருந்தது. ஈரமான இடத்தில் போய் படுத்துக் கொள்வான் டேனி. துவைப்பதற்காகத் துணியை ஊற வைத்திருந்தால் அதை எல்லாம் இழுத்துப் போட்டுவிட்டு அதன் மேல் படுத்துக் கொள்வான். உருவத்தில் பெரியவன் என்பதால் பல துணிகள் கிழிந்து நாசமாய்ப் போய் இருக்கின்றன.

 அவனுடைய முட்டிப் பகுதிகளில் கீழே உரசி உரசி புண் ஏற்பட்டு அடிக்கடி அவதிப்பட்டான். அதற்கு மருந்து போடுவதும் சுத்தம் செய்வதுமாகப் பொழுதுகள் கழிந்தன. அவனுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று கூறி ஒரு நாள் பூப்பி அந்தக் காயத்தை நக்கப் போக, அதிலிருந்து ரத்தம் நிற்காமல் வந்துவிட்டது. அதீத ரத்தப் போக்கால் அடுத்த சில நாட்களுக்கு மிகவும் சோர்வாக காணப்பட்டான் டேனி. எங்களுக்குப் பதற்றம். மூச்சு விடவும் சிரமப்பட்டான். என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாறியிருந்தேன். முன்பைவிட பெரிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிக அனுபவம் கிடைத்திருந்தது. ரத்த சோகையின் காரணமாகத் தான் டேனி சோர்வாக இருக்கிறான் என்று எனக்குத் தெளிவாக தெரிந்தது. நாய்களுக்கு எங்கேனும் ரத்தம் ஏற்றுகிறார்களா, நாய்களின் ரத்த வகைகள் என்னென்ன, எங்காவது நாய்க்கு ரத்த வங்கி இருக்கிறதா என்றெல்லாம் தேடிப் படித்தேன். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டதுடன் சரி; நடைமுறையில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று புரிந்தது. மனிதர்களுக்குப் போடும் இரும்புச் சத்து ஊசி ஆன அயர்ன் சுக்ரோஸ் இன்ஜக்ஷனை வாங்கி வந்தேன். ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து அந்த ஊசியை சலைனில் கலந்து போட்டோம். அதன்பின் மூன்று நாட்களுக்கு புரதசத்துக்கான அஸ்டைமின் மருந்தை ஏற்றினோம். நான்கு நீளமான கால்கள் இருந்ததால், சற்று பிரவுன் நிறம் என்றாலும் கஷ்டப்பட்டு நரம்பைக் கண்டுபிடித்து போட்டாயிற்று. ஐவி போடுவதும் நாயைப் பிடித்துக் கொள்வதும் என் கணவரின் வேலை. ஊசியை முழுவதுமாக செலுத்தி முடிப்பது என் வேலை. ப்ளூட்டோவைப் போலவே டேனியும் சிகிச்சைக்கு எந்த விதத்திலும் தடங்கல் கொடுக்கவில்லை. இந்த சிகிச்சைகள் எல்லாவற்றையும் பூப்பி பார்த்துக் கொண்டே இருப்பான். பூப்பிக்கு முதன்முதலில் மோட்டாரில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட போது கொஞ்சம் வசமாகக் கண்டித்திருந்தோம். கூடவே "நீயா டேனியைக் கடிச்சு ரத்தம் வர வெச்சே?" என்று அதட்டுவது போல் செய்தால், தான் தான் காரணம் என்பது போல மன்னிப்பு கேட்கும் பாவனையில் விழித்தபடி இருப்பான் பூப்பி. ப்ளூட்டோ மற்றும் டேனியை ஒப்பிட்டுப் பார்க்கையில் பூப்பி பெரிய சேட்டைகள் எதுவும் பண்ணவில்லை. இருந்தாலும் ஒரு திருட்டு முழி நிரந்தரமாக அவன் முகத்தில் தங்கி விட்டது. அவனைப் பார்க்கையில் நடிகர் பாண்டியராஜனின் முழி தான் நினைவுக்கு வரும்.

டேனி இன்னொருநாள் சாகசம் செய்கிறேன் என்று ஒரு பாம்பிடம் கடிபட்டு சாகக் கிடந்தான். ஞாயிறன்று என் தங்கையின் நிச்சயதார்த்த விழா ஏற்பாடாகியிருந்தது. முதல் நாளே நாங்கள் கிளம்பி எங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டோம். என் கணவருக்கு அன்று சில அறுவை சிகிச்சைகள் இருந்ததால் அதை முடித்துவிட்டு காலையில் வருகிறேன் என்றார். சனிக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்து வருகையில் டேனியும் பூப்பியும் சேர்ந்து தோட்டத்தில் ஒரு மூலையிலிருந்த அடுக்குமல்லிச் செடிக்குப் பின்புறம் எதையோ பார்த்து தொடர்ந்து குரைத்திருக்கின்றன. செல்போனில் உள்ள டார்ச்சை அடித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு போவது தெரிந்திருக்கிறது என் கணவருக்கு. கம்பை எடுத்துக்கொண்டு வந்து உள்ளிருந்து பெரிய எமர்ஜென்சி லைட் உதவியுடன் வந்து பார்த்திருக்கிறார். அந்த புறமாக இரவில் ரோந்து வந்த போலீஸ்காரர்களும் சேர்ந்து தேடியிருக்கின்றனர். பாம்பைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'சரி விடுங்க ரெண்டு பேரும்' என்று டேனியையும் பூப்பியையும் சொல்லிவிட்டு என் கணவர் வீட்டிற்குள் வந்து தூங்கி விட்டார். அதன் பின்னும் அவ்வப்போது குரைத்தல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

 காலையில் எழுந்து பார்த்தால் டேனியின் முகம் முழுவதுமாக வீங்கி மூக்கிலும் காதிலும் ரத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. நிச்சயமாக பாம்பு தான் கடித்திருக்க வேண்டும், ரத்தம் வர ஆரம்பித்து விட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் ஊரில் விசேஷம் வேறு என்று நினைத்து டேனிக்கு பாம்பு கடித்த விஷயத்தை எங்களிடமும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பி வந்து விட்டார். எதிர்பார்த்ததை  விட அவர் தாமதமாக வந்து சேரவும் "என்னாச்சு" என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்றார். அவரது முகம் சரியாகவே இல்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்கவும், "டேனிக்கு பாம்பு கடிச்சுடுச்சு.. மூக்குல ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.. இனிமே பொழைக்காதுன்னு நினைக்கிறேன்" என்றார் சோகத்துடன்.

 நடந்தது என்ன என்று விலாவாரியாகக் கேட்டேன். அவர் சொன்ன கணக்கிற்கு பாம்பு கடித்து 12 மணி நேரத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.. அரசு மருத்துவமனையில் தினமும் நான்கைந்து பேருக்காவது பாம்புக் கடிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதுவும் இப்படி இரத்தத்தை உறைய வைக்காமல் இருக்கும் விரியன் பாம்பு (viper) எங்கள் பகுதியில் சாதாரணமாக பார்க்கக் கூடிய ஒன்று. ஆன்ட்டி ஸ்நேக் வீனோம் செலுத்தினால் காப்பாற்றுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. "இப்படியா போனாப் போகுதுன்னு விட்டுட்டு வருவீங்க?" என்று என் கணவரை கடிந்து கொண்ட நான், எலக்ட்ரீஷியன் கோபாலுக்கு அழைத்தேன். வேலை நிமித்தமாக கொஞ்ச நாட்களாக சென்னை சென்று விட்ட அவர், நல்ல வேளையாக அப்போது ஊரில் இருந்தார். கால்நடைகளுக்கான மருந்துகளையும் வைத்திருக்கும் ஒரு மெடிக்கல் ஸ்டோர் நண்பரை அவர் தொடர்பு கொண்டு கேட்க, ஒரே ஒரு பாம்புக் கடி ஊசி கடையில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

ஒரு கால்நடை மருத்துவரை அழைத்துவந்து அந்த ஒற்றை ஊசியைப் போட்டுவிட்டார் கோபால். அவரும் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை. போட்டாச்சு பார்ப்போம் என்றே கூறினார். வழக்கமாக மனிதர்களுக்கு ஏற்படும் பாம்புக்கடிக்கு எட்டு பாட்டில்கள் (8 vials) anti snake venom செலுத்துவோம். எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர்களிடம் விசாரிக்க, எத்தனையோ நாய்களுக்கு நான் வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஒற்றை ஊசியிலேயே சரியாகி விடும் என்று கூறினார் ஒரு நண்பர்.

இருந்தாலும் எனக்கு நிச்சயதார்த்த விழாவில் இருப்பே கொள்ளவில்லை. விழா முடிந்த கையுடன் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு நானும் என் கணவரும் மட்டும் கிளம்பினோம். போகும் வழியில் விசாரித்து, கிடைத்த இடங்களில் எல்லாம் பாம்புக்கடி மருந்தை வாங்கிக் கொண்டோம். மனிதர்களுக்கான டோஸ் எட்டு வயல்களை சேகரித்து டேனிக்கும் போட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். ஒன்று போதும் என்று உறுதியாக நண்பர் கூறினாலும் எனக்கு மனமில்லை. வென்ஃபிளான், ஐவி செட்டுகள் என்று நிறைய வாங்கிக் கொண்டோம். வீட்டுக்குப் போய்ச் சேர்கையில் டேனி பரிதாபமாகப் படுத்திருந்தது. பூப்பி மட்டும் அதைச் சுற்றிச் சுற்றி வந்து வாலாட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் போனவுடன் டேனி கஷ்டப்பட்டு தலையைத் தூக்கி, வாலை லேசாக ஆட்டி, 'பாம்பு கடிச்சிருச்சு, ஏதாவது செய்ங்களேன்' என்று சொல்வதுபோல் எனக்குத் தோன்றியது.

ப்ளூட்டோ தான் அறிவாளி,டேனி அதற்கு அடுத்து தான் என்று நானே பலரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் செய்தித் தொடர்பில் நான் ஒருபடி அதிகமாக்கும் என்று சில முறை செயலில் காட்டி இருக்கிறான் டேனி. ஒரு நாள் என் கணவர் வீட்டைப் பூட்டி சாவியை கால் மிதியடிக்குக் கீழ் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். நாங்கள் வந்து சாவியை அங்குமிங்கும் தேடிப்பார்க்க, டேனி அந்த மிதியடியைக் காலால் இழுத்துத் தள்ளி சாவியை எங்களுக்கு காட்டிக்கொடுத்தான். சாவியைத் தான் தேடுகிறோம் என்று அதற்கு எப்படிப் புரிந்தது என்று இன்றளவும் நான் வியப்பேன். அதேபோல் நாங்கள் அனுப்பித் தான் அன்று கோபால் வந்திருக்கிறார் என்பதும் அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். இத்தனைக்கும் ப்ளூட்டோ இருந்தபோதுதான் அடிக்கடி அவர் வருவார். எங்கள் வீட்டுக்கு டேனி வந்தபின் அவ்வளவாக வந்ததில்லை. அவனுடன் அதிகப் பழக்கமும் அவருக்கு இல்லை. இருந்தும் அவனுக்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

எட்டு ஊசிகளையும் சலைனில் கலந்து டேனிக்கு செலுத்தினோம். நாங்கள் ஊசி போட்டு முடிக்கையில் கூட ரத்தம் வந்து கொண்டுதான் இருந்தது. அதிலிருந்து அரை மணி நேரத்தில் ரத்தம் வருவது சுத்தமாகக் குறைந்து விட்டது. தேவைப்பட்டால் ஆறு மணி நேரம் கழித்துப் போடுவதற்கென அடுத்த எட்டு டோஸ் மருந்தையும் திருநெல்வேலியிலிருந்து வாங்கி வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். நல்லவேளையாக அதற்கு எந்த அவசியமும் நேரவில்லை. அத்துடன் டேனி பிழைத்துக் கொண்டான். வாயின் அருகே கடி பட்டிருந்ததால் ரொம்ப நாட்களுக்கு முகமும் வாயும் வீங்கியிருந்தது. அதற்கு இன்னும் சில ஊசிகள், மருந்துகள் என்று தொடர்ச்சியாகப் போட்டோம். சாப்பிடவும் மிகவும் சிரமப்பட்டது. மீண்டும் அயர்ன் சுக்ரோஸ், அஸ்டைமின் என்று பொழுதுகள் கழிந்தன. 15 நாட்களில் பழைய படிக்கு மிகவும் இயல்பாகிவிட்டது. அந்த 15 நாட்களில் டைனியை பார்ப்பதற்கு நிறைய பேர் வந்து போனார்கள். சத்துமாவு, சூப், எலும்புகள் என்று நிறைய உணவுப் பொருட்கள் அவனுக்கு உறவுகளிடம் இருந்தும் நட்புகளிடம் இருந்தும் வந்தன.

அவ்வளவு பெரிய உடம்பால் நீராகாரத்தை மட்டும் வைத்து சமாளிக்க முடியவில்லை. இருந்தாலும் முடிந்த அளவு கொடுத்தோம். டேனியும் ஒத்துழைத்தான். இனி எப்படியடா சாப்பிடும் என்று பயந்ததெல்லாம் போய் பின்னொரு நாள் பக்கத்து பேக்கரிக்குப் போய், முட்டை பப்ஸுக்காக வேகவைத்து உரித்து வைத்த 40 முட்டைகளைத் திருடி சாப்பிட்ட கதையும் நடந்தது. பின் பேக்கரிக்காரர் வந்து சண்டை போட்டு அந்த 40 முட்டைகளுக்கான பணத்தை எங்களிடம் வாங்கிச் சென்றது தனிக்கதை! நாய் வாய் வைக்கிற மாதிரியா இந்த பேக்கரில பொருட்களை வச்சிருக்காங்க.. அப்ப இனிமே இங்கே எதுவுமே வாங்கக் கூடாது என்று நாங்கள் முடிவு எடுத்தது இன்னொரு கதை. அன்று முதல் கொஞ்ச நாட்களுக்கு '40 முட்டை' என்று டேனி அன்புடன் அழைக்கப்பட்டான்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com