ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13

ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் மற்ற வீடுகளில் எப்படி என்று தெரியவில்லை.. இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் எங்கள் வீட்டில் இரண்டு மகள்களிலும் பெற்றோராகிய எங்கள் இருவரின் குணங்களை நாங்கள் தேடுவோம். நாய் வளர்க்கும் விஷயத்தில் என் பெரிய மகள் அஞ்சனா பல விஷயங்களில் என்னைப் போல. புதிதாக ஒரு நாயை வாங்குவது என்றால், அதை நம்மால் பார்க்க முடியுமா அது தேவையா அதில் வரும் சாதக பாதகங்கள் என்ன என்று யோசிப்பாள். கூடவே நாய்களால் வரும் அசுத்தங்களுக்கும் என்னைப் போலவே முகம் சுளிப்பாள். என் சிறிய மகள் அபர்ணாவின் பல குணங்கள் என்னைப் போல இருந்தாலும் நாய் வளர்க்கும் விஷயத்தில் அப்படியே அப்பாவைப் போல. அத்தனைக்கும் ஆசைப்படுபவள்!

அவள் பிறந்ததிலிருந்தே வாரத்திற்கு ஒரு முறையாவத வீட்டிற்குள் புதிதாக ஒரு வளர்ப்புப் பிராணி நுழையும் என்பது அவளுக்குப் பழகிவிட்டது. நாங்கள் நாய் வளர்ப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பவள் அவ்வப்போது தன் கருத்துக்களையும் சொல்வாள். அவளுடைய மிகச்சிறிய வயதில் தான் ப்ளூட்டோ தொலைந்து, பின் கிடைத்தது. அதற்கு சில மாதங்கள் கழித்து டேனி கொஞ்சமே கொஞ்ச நேரம் காணாமல் போய்விட்டது. நிச்சயம் வந்து விடும் என்று தெரியும். அதனால் நாங்கள் பொறுமையாகவே இருந்தோம். வேலைப்பளு காரணமாக நான் தூங்கியே விட்டேன். அபர்ணா தூங்கிக் கொண்டிருந்த என்னை வந்து வேகமாக எழுப்பினாள். "அம்மா டேனியும் ப்ளூட்டோ மாதிரியே காணாமப் போச்சு... எந்திரிச்சு வா. நீ பேப்பர்ல விளம்பரம் குடுத்தால் தான் கிடைக்கும்" என்றாள் மிகவும் சீரியஸாக.

அபர்ணாவும் அவளது அப்பாவுமாகச் சேர்ந்து எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு மூன்று பெட் ஷாப்களுக்கு அடிக்கடி சென்று வருவார்கள். நியாயப்படி பார்த்தால் கடைக்காரர்கள் தான் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். அந்தக் கடைகளை விட எங்கள் வீட்டில்தான் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம். இருந்தாலும் சும்மா ஒரு விசிட்  போவார்கள். போனால் சும்மாவா வரமுடியும்.. அவ்வப்போது அந்தக் கடைகளிலிருந்து அவள் அப்பா பங்குக்கு ஏதாவது ஒன்றையும், அவள் பங்குக்கு ஏதாவது ஒன்றையும் தூக்கி வருவது உண்டு.

 ஒரு முறை சின்ன பொமரேனியன் நாய் ஒன்றைத் தூக்கி வந்தாள். அது எங்கள் வீட்டில் இருந்த நாய் பொம்மை போலவே அவ்வளவு அழகாக இருந்தது. பொம்மி என்று பெயரிட்டு ஒரு கூடையில் வைத்து ஒரு வாரம் வரை பராமரித்தாள். வீட்டிற்குள் வந்து கொண்டே இருந்தது பொம்மி. வீடு முழுவதும் சிறுநீர் கழித்து வைத்தது. சொல்பேச்சு கேட்கவில்லை. அதைப் பிடிக்கவில்லை என்று கொண்டுபோய் கடையிலேயே விட்டுவிட்டாள். ஆனால் அவளது பொமரேனியன் ஆசை குறையவில்லை. 'பொமரேனியன் கண்டிப்பா கடிக்கும்.. விடாம குரைச்சுக்கிட்டே இருக்கும்.. கடிக்கிறதும் நேரடியா கடிக்காது.. நம்மைப் போகவிட்டு பின்னால் வந்து தான் கணுக்காலில் கடிக்கும்' என்றெல்லாம் என் கணவர் சொன்னாலும் அவளுக்கு அவ்வப்போது பொமரேனியன் ஆசை துளிர் விட்டுக் கொண்டே இருந்தது. பொம்மியைக் கொண்டு விட்டுவிட்டு வந்து ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் பெட் ஷாப்புக்கு சென்று வந்தவள் கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள்.

"என்ன ஆச்சு? விழுந்துட்டியா? அடிபட்டுடுச்சா? அப்பா ஏதாவது சொன்னாங்களா?" என்று நான் கேள்விகளாக அடுக்க, ஐந்து நிமிடங்களுக்கு விடாமல் அழுதாள். என்னவென்று புரியாமல் கையைப் பிசைந்தேன். கடைசியில் விஷயம் இதுதான். "கடையில ஒரு நாயைப் பார்த்தேன்மா.. அது ரொம்ப ரொம்ப அழகா இருந்துச்சும்மா.. எவ்வளவுதான் ஆசையை அடக்கினாலும் அது வேணும்னே தோணுதும்மா.. உனக்கும் அது ரொம்ப பிடிக்குமா.. அது எனக்கு வேணும்மா ப்ளீஸ்!" என்று அழுதாள். மறுப்பதற்கு முன்பே இவ்வளவு அழுகிறாளே அப்படி என்ன நாய் என்று என் கணவரைப் பார்த்தேன்.

"பொமரேனியன் வகை தான். ஆனால் வால் கிடையாது. பார்க்க எனக்கே ஆசையாய் இருந்துது" என்றார் அவர். ஆறு வயதுப் பிள்ளை இவ்வளவு கெஞ்சிக் கேட்டால் யார்தான் மறுப்பார்கள் (அந்த வயதுக்கு அவள் பேசிய வசனம் ஓவர் தான்).. சரி என்று சொன்னேன். மூத்தவனான டேனி, இரண்டரை வயதில் பூப்பி இவர்களோடு மூன்றாவதாக டெடியும் வந்து சேர்ந்து கொண்டது.

"நீ தான் பார்த்துக்கணும்.. நாங்க எதுவும் செய்ய மாட்டோம்" என்று சொன்னோம். அவள் தான் எதற்கும் அஞ்சுகிறவள் இல்லையே.. அந்த ஆறு வயதிலும் அதை தினமும் குளிப்பாட்டினாள், உணவு கொடுத்தாள், வாக்கிங் கூட்டிப் போனாள், அதற்கென தனியாக ஷாம்பூ வாங்கி வைத்தாள். 'சடைநாய்னாலே  முடி ரொம்ப ஒட்டிக்கும், சடை விழும்' என்று அவள் அப்பா கூறியதைப் பொய்ப்பிக்கும் விதமாக அடிக்கடி விசேஷமான சீப்பால் அதற்குத் தலை வாரினாள். அவ்வப்போது முடி வெட்டியும் விடுவாள். என் மாமனார் தான் "அடடா.. அதுகூடவே உருண்டு புரண்டுக்கிட்டு இருக்காதே" என்று திட்டுவார்.

எல்லாம் சில காலம் தான். டெடியின் மீதான ஆசை நீர்த்துப் போனது. அப்பாவைப் போலவே நாய் வளர்க்கும் ஆவல் அபர்ணாவுக்கு இருந்தாலும் புத்தகம் படிப்பதில் என்னைப் போல பேராவல். வாசிக்கப் பழகியதும் அவளது கவனம் புத்தகங்கள் பக்கம் திரும்பியது. நாயைக் காலடியில் போட்டுத் தடவிக் கொடுத்துக் கொண்டே புத்தகத்தை கையில் வைத்துப் படிக்க ஆரம்பித்தாள். குளிப்பாட்டுவது தலை சீவுவது படிப்படியாகக் குறைந்து அரிதாகிவிட்டது. நாங்கள் பயந்ததுபோல் யாரையும் டெடி கடிக்கவில்லை. ஆனால் யாரைக் கண்டாலும் விடாமல் குரைத்தது.


'பரவாயில்லையே.. எத்தனை நாய்க்கு சோறு போட்டு வளத்திருப்போம்.. இதாவது சாப்பிடுற சாப்பாட்டுக்கு நல்லா குரைக்குதே' என்று சொல்லிக் கொள்வோம்.

ப்ளூட்டோ, டேனியாகட்டும், இப்போது பூப்பியாகட்டும், தேவையின்றி குரைப்பதில்லை. புதிய நபர்கள், சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று வந்தால் மட்டுமே குரைப்பது. அல்லது தெரு நாய்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால் குரைப்பார்கள். டெடிக்கு ஒரு கெட்ட பழக்கம். மற்ற நாய்கள் எதையும் நாங்கள் கொஞ்சினால் அவனுக்குப் பிடிக்காது. நாய் தான் என்றில்லை, பிற விலங்குகளுக்கும் அப்படியே. இந்தக் காலகட்டத்தில் எங்கள் வீட்டில் கோழிகள், வாத்துகள் குடிபுகுந்திருந்தன. புறாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

 என் கணவரிடமும் மாமனாரிடமும் பவ்யம் காட்டும் டெடி, என்னிடமும் என் மகள்கள் இருவரிடமும் அதிகமாக உரிமை எடுப்பான். நாங்கள் மற்ற விலங்குகள் கிட்டே சென்றாலே பிடிக்காது. என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாத்து, கோழிகளுக்குத் தீவனம் போடச் சென்றால் வாத்துக் கூட்டத்தில் தலைவன் அருகில் போய் விடாமல் மாங்கு மாங்கு என்று குரைக்கும். டேனிக்கு எட்டு வயது ஆகிவிட்ட போதிலும் நாங்கள் அருகில் வந்தால் எங்களை உரசுவதையும், நக்குவதையும் விடவில்லை. அதனால் டேனிக்கும் டெடிக்கும் எப்போதும் வாய்க்கால் தகராறு வரப்பு தகராறு தான்.

'அது இருக்கிற சைஸைப் பாரு.. டேனியோட தலை சைஸ் கூட இல்லை இந்த டெடி.. அது கிட்ட போய்ப் போராடுது.. லேசா மிதிச்சாப் போதும் சட்னி ஆயிரும்' என்பார் என் கணவர். லேப்ரடார் மற்றும் கிரேட் டேன் வகை நாய்களுக்கேயுரிய 'பாசக்கார பய புள்ளை' குணத்தால் பூப்பி, டேனி இரண்டு பேரும் டெடியை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. ரொம்பவும் தொல்லை செய்தால் மட்டும் வள் என்று டேனி ஒரு முறை குரைக்கும். பூப்பி அதுவும் செய்யாது. ஒதுங்கிப் போய்விடும். வயதாகிவிட்ட டேனிக்கு விளையாடப் போவதற்கு சோம்பல். டெடி அவனை சதா விளையாடக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதனால் எரிச்சல் ஆகியும் ஓரிருமுறை வள்ளென்று எரிந்து விழுந்திருக்கிறான் டேனி.
பூப்பிக்கு தெருவில் ஓடுவது நடப்பது எல்லாம் மிகவும் பிடிக்கும், ஆனால் வீட்டிற்குள் பெரும்பாலும் சும்மாவே தான் படுத்துக் கிடப்பான். டெடி இழுத்த இழுப்பிற்கு அவன் போவதில்லை.

 எங்கள் வீட்டின் எந்த நாயையும் வாசல்படியை தாண்டி உள்ளே வர நாங்கள் அனுமதித்ததில்லை. ப்ளூட்டோவிற்கு மட்டும்தான் அந்தப் பயிற்சியை சிரமேற்கொண்டு அளித்தோம். மற்ற நாய்கள் ப்ளூட்டோவிடம் இருந்து தானாகவே கற்றுக் கொண்டன. நோ என்று சொன்னாலே வாசற்படியுடன் விலகிப் போய்விடுவார்கள். வேட்டுச் சத்தம் வந்தால் மட்டும் விதிவிலக்கு. டெடி வெடிச் சத்தத்தைக் கேட்டால் பூனைபோல் பதுங்கி வந்து எங்கள் வீட்டின் கட்டில், பீரோ என்று எதற்கு அடியிலாவது ஒளிந்துகொள்ளும். டெடியைக் காணோம் காணோம் என்று தேடி, பின் அதன் வழக்கமான பதுங்குமிடங்களில் பார்த்தால் அங்குதான் பம்மிக் கொண்டு படுத்திருக்கும். குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வெளியேவிடவேண்டும்.



 நாய்கள்பிறக்கும்காலகட்டத்திற்கும், இந்தவேட்டுச்சத்தத்திற்குபயப்படும்குணம்வளர்வதற்கும்தொடர்பிருப்பதைப்பார்த்திருக்கிறேன். தீபாவளிநேரத்தையொட்டிப்பிறக்கும்நாய்கள்தங்கள்குழந்தைபருவத்தில்முதன்முறையாகஅதிகவேட்டுச்சத்தத்தைப்பார்த்துபயப்படுகின்றன. பின்அவற்றிற்குபத்துவயதுஆனாலும்கூடஅந்தபயம்அப்படியேஇருக்கிறது. இதுவேதீபாவளியின்போதுஅந்தநாய்க்குஆறுமாதம்ஆகியிருந்தால், அதற்குகொஞ்சம்விபரம்வந்திருக்க, வேட்டுசத்தம்நம்மைபாதிக்காதுஎன்றுபுரிந்துகொள்ளும்என்றுஎனக்குத்தோன்றுகிறது. இன்றையதேதியில்நான்குநாய்கள்எங்கள்வீட்டில்இருக்கின்றன. இரண்டுசத்தத்தைக்கேட்டால்நடுங்குகின்றன, மீதம்இரண்டுஎவ்வளவுஅடிச்சாலும்தாங்குவேன்டாஎன்பதுபோல்சும்மாபடுத்துக்கிடக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com