ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 16

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 16

சார்லி காணாமல் போனதைப் பற்றி எழுதியிருந்தேன். அதிசயத்தக்க விதமாக சமீபத்தில் அதைப்பற்றி ஒரு தகவல் கிடைத்தது. எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு சுரண்டையில் திருமணம் ஆகியிருக்கிறது. அவளது கணவர் வியாபாரம் பார்ப்பவர். அவ்வப்போது இங்கு மாமியார் வீட்டில் வந்து தங்கியிருப்பார். இங்கிருக்கும் நேரங்களில் எங்கள் வீட்டு வாசலில் வந்து பேசிக் கொண்டும் எங்கள் உயிரினங்களை ரசித்துக் கொண்டும் இருப்பார்.‌ கோவிட் பொதுமுடக்கக் காலத்தில் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் வாசலில் விளையாடுகையில், அருகில் அமர்ந்து பார்த்தபடி, சார்லியின் தலையில் கைவைத்து தடவிக் கொண்டிருப்பார்.

அவர் போன வாரத்தில் ஒரு நாள் அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திற்குப் போயிருக்கிறார். அங்கு குட்டையான வாலுடன் சார்லி போன்ற ஒரு நாய் கண்ணில் பட்டிருக்கிறது. சார்லி என்று அவர் கூப்பிடவும் விருட்டென்று திரும்பிப்பார்த்து அருகில் வந்திருக்கிறது. நன்றாக வாலையும் ஆட்டி மேலே உரசியிருக்கிறது. அதற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் நண்பர். அதுவும் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு இவரது பேருந்து வரும் வரை கூடவே நின்றதாம். நேற்று தான் வந்து கூறினார். கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது. என் சின்ன மாமனாரிடம் கூறினேன். இன்றைக்கு போய்ப் பார்ப்பதாகக் கூறி இருக்கிறார். சார்லி கிடைத்துவிட்டால் அவனை அப்படியே விட்டுவிடுவதா, இல்லை கூட்டிக் கொண்டு வந்து மறுபடியும் வளர்ப்பதா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்..

என் சின்ன மாமனார் லாரா என்ற கிரேட் டேனை வளர்த்து வந்தார். அவர் தொழில் முறையாக குட்டிகளை இனப்பெருக்கம் செய்வதையும் விற்பனை செய்வதையும் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்ற ஆண்டில் ஒருமுறை நாங்கள் அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது லாரா எட்டு குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் ஒன்று இறந்து போய்விட ஏழு குட்டிகள் இருந்தன. அதில் ஒரு குட்டியை எடுத்து அணைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தார் என் கணவர். அன்றைய நாள் முழுவதும் அதைக் கீழே விடவே இல்லை. 'போற போக்கு சரி இல்லையே' என்று முறைத்து முறைத்துப் பார்த்தேன். நீ நினைப்பது சரிதான் என்று சொல்வதைப் போல மாலையில் நாங்கள் கிளம்புகையில் சட்டென்று அந்தக் குட்டியைத் தூக்கி காருக்குள் போட்டுவிட்டுக் கிளம்பி விட்டார்.

 வேண்டவே வேண்டாம் இன்னொரு கிரேட் டேனை வளர்க்க முடியாது, ஏற்கனவே வீட்டில் சாக்கி, டெடி, பூப்பி மூன்றும் இருக்கின்றன என்று சொல்லிப் பார்த்தேன். கேட்கவே இல்லை. அதில் எனக்கு பெரும் கோபம். வீட்டிற்கு வந்த கிரேட் டேனுக்கு மீண்டும் டேனி என்றே பெயர் வைத்தார். என் தந்தை கூட, 'ஒன்றாம் ஜார்ஜ் மன்னர், இரண்டாம் ஜார்ஜ் மன்னர், ராஜராஜ சோழன் ஒண்ணு, ராஜ ராஜ சோழன் ரெண்டு அப்படிங்குற மாதிரி ஒரு நாய் போனா உடனேயே அதனுடைய இரண்டாவது வெர்ஷனை களம் இறக்குறீங்களே' என்று கூறினார்.

 சரி இப்போது சாக்கி கருவுற்ற கதைக்கு வருவோம். எனக்கு ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை, என் கணவர் கண்டிப்பா பிரக்னண்டா இருக்குது என்றார். இன்னும் அதன் வயது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. அதிக சத்துள்ள உணவுகளை வழங்கினோம். தினமும் கோழிக்கால் வாங்கி வர ஆரம்பித்தார் என் கணவர். அந்த வாசனை வீட்டில் ஒருவருக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் சளைக்காமல் கோழிக்கால் வாங்கி வந்து சாக்கிக்குக் கொடுத்தார். அந்த குட்டி நாய்க்கு இத்தனை கோழிக்கால் தேவையா என்போம் நாங்கள். சாக்கி மட்டுமா சாப்பிடுது.. ஐயோ பாவம் பூப்பியும் டெடியும் இருக்கே, அதுங்க சாப்பிடட்டும் என்று தினமும் கோழிக்கால் வாங்கி வருவதை நிறுத்தவில்லை. இன்றளவும் தொடர்கிறது.

 இப்படி இருக்கையில் சாக்கியின் பிரசவ நேரம் நெருங்கியது. இத்தனூண்டு உருவத்துடன் வயிற்றில் குட்டிகளை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் சாக்கி அசைந்து போவதைப் பார்த்தால் பாவமாக இருந்தது, வேடிக்கையாகவும் இருந்தது. வாசற் படிக்கு அருகில் ஒரு சிறிய சதுரமான மண் நிரம்பிய இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்தது. 'சாக்கி குட்டி போடுறதுக்கு இடம் ரெடி பண்ணிடுச்சு' என்றார் என் கணவர். எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று அவர் கணித்திருக்க, ஒருநாள் அதிகாலையில் ஒரு தீனமான ஒலி எழுந்தது. இடி இடித்தால் கூட எழுந்து கொள்ளாத என் கணவர் விசுக்கென்று எழுந்து சத்தம் வந்த திசையில் போனார். முன்புறமாக பிரசவ அறையை சாக்கியை ஏற்பாடு செய்து வைத்திருக்க முந்தைய நாள் இரவு அதை யாரோ பின்பக்கமாக போட்டுக் கதவை அடைத்திருக்கிறார்கள். நாங்கள் சென்று பார்த்தபோது முதல் குட்டி பாதி அளவுக்கு வெளியே வந்திருந்தது. டெடியும் பூப்பியும் சற்றுத் தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். 'குட்டி போடும் போது பெண் நாய் வேற எந்த நாயையும் பக்கத்தில் விடாதுன்னு சொல்வாங்க. இது ஏதோ விட்டுட்டு இருக்கு' என்று நினைத்தேன்.

முதல் குட்டியைப் பிரசவித்த நேரம் நாங்கள் உடனிருந்து பார்த்தோம். கருப்பு நிறத்தில் அரை வாலுடன் வந்தது அந்தக் குட்டி. எங்கள் மனங்களில் அந்தக் கேள்வி எழுந்தது. இந்தக் குட்டியின் தந்தை யார் என்று. குட்டை வாலைப் பார்த்தவுடன் எங்கள் இருவரின் பார்வையும் தன்னைப்போல டெடியின் பக்கம் திரும்பியது. ஏனென்றால் அதற்குத் தான் வாலே கிடையாது. அதன் பின் அரை மணி நேரம் நின்று பார்த்தும் அடுத்த குட்டி பிறப்பதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த குட்டிகள் என்ன நிறம், மொத்தம் எத்தனை வரப்போகிறது, அவற்றின் உருவ அமைப்பு எப்படி இருக்கும்? வால் இருக்குமா? இருக்காதா? இப்படிப் பல கேள்விகள் எங்களுக்குள்.

 காலையில் வேலைக்கு, பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தால் நாங்கள் கிளம்பினோம். என் கணவர் அந்தக் குட்டியைத் தூக்கிக் கொண்டு முன் வாசலுக்கு வந்தார். பின்னாலேயே சாக்கியும் வந்துவிட்டது. வந்து அது செட் பண்ணியிருந்த பிரசவ அறையில் படுத்துக் கொண்டது. நான் பணிக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருகையில் சாக்கியின் பிரசவம் நல்லபடியாக முடிந்திருந்தது. மொத்தம் மூன்று குட்டிகள். மூன்றும் அவ்வளவு அழகாக இருந்தன. 'ஆனை முகத்தில் ஒரு பிள்ளை; இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை' என்பதைப்போல் முதலில் வந்த குட்டிக்கு பாதி வால், இரண்டாவது வந்த குட்டிக்கு சாதாரணமான நீள வால், மூன்றாவது பிறந்ததற்கு மிக மிகச் சிறிதான ஒரு வால். இப்போது டெடியின் மீதான எங்கள் சந்தேகம் வலுத்தது. இருந்தாலும் பூப்பியையும் சந்தேக லிஸ்டில் இருந்து முழுவதுமாக எடுக்கவில்லை. குட்டிகள் வளரட்டும் பார்ப்போம் என்று இருந்தோம்.

 சாக்கிக்கு குட்டிகள் பிறந்த விஷயம் பலபேருக்குத் தெரிந்தது. அதைப் பார்ப்பதற்கு நிறைய பேர் வந்து போனார்கள். எனக்கு ஒரு குட்டி, எனக்கு ஒரு குட்டி என்று அட்வான்ஸ் புக்கிங் நடந்தது. அதில் இரண்டு பேருக்கு என் கணவர் வாக்குக் கொடுத்து விட்டார். மூன்றாவதாக ஒருவருக்குக் கொடுக்கலாம் என்று அவர் கூற, நான் ஆட்சேபித்தேன். அதில் அழகாக இருந்தப் பெண் நாயை நானே வளர்க்கப் போகிறேன், ப்ளூட்டோவின் நினைவாக அதற்கு ப்ளூட்டி என்று பெயர் வைக்கப் போகிறேன் என்றேன்.

 நிஜமாகவா என்று மீண்டும் மீண்டும் கேட்டார். நான் இதுவரை புதிய நாய் வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. குட்டி டேனி விஷயத்தில் எனக்கு இன்னும் கோபம் குறையவில்லை. அதனால் அவரை வம்பிழுக்கும் விதமாகத்தான் நான் நாய் வளர்க்கப் போகிறேன் என்றேன். அதையே இரண்டு மூன்று முறை அடுத்தடுத்துச் சொல்லவும் அதை வளர்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அப்படியே என் மனதிற்குள் பதிவாகிவிட்டது.

மதுரையில் எங்கள் உறவில் பிரணவா என்ற குட்டிப் பெண் இருக்கிறாள். அவள் என் கணவரிடம், ப்ளூட்டி நாயைக் காட்டி,  "மாமா! இதை எனக்குத் தரீங்களா?" என்று கேட்க, அவர் அத்தையிடம் போய்க் கேள் என்றிருக்கிறார். அத்தை இதன் எனக்கு தரீங்களா என்று அவ்வளவு செல்லமாகக் கேட்டாள் பிரணவா. "வேற எந்த நாய் வேணாலும் எடுத்துக்கோ.. ப்ளூட்டி எனக்கு வேணும். அது என்னோடது" என்று கூறினேன். சரி என்று விட்டுவிட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு முகராசி உண்டு. சின்னப் பிள்ளைகளிடம் போய் நான் எதைக் கேட்டாலும், அவர்கள் எனக்கு விட்டுத் தந்து விடுவார்கள். 'இன்னும் சின்னப் பிள்ளைங்க கிட்ட ஓசி கேட்கிறதை நீ விடலையா?' என்று என் நண்பர்கள் இன்றும் சொல்வதுண்டு.

பிரணவா இன்னொரு பெண் நாயைத் தேர்வு செய்து அதற்கு க்யூட்டி என்று பெயர் வைத்து அடுத்த மாதம் மதுரைக்கு எடுத்துப் போவதாகச் சொன்னாள். மூன்றாவதாக இருந்தது ஆண் நாய்க் குட்டி. அதை எங்கள் வீட்டினருகில் இருக்கும் தோழியின் மகள் அம்மு  கேட்டாள். அவளே அதற்கு டாமி என்று பெயர் சூட்டி, தினமும் மாலையில் தன் தோழர் படையுடன் வந்து பார்த்துச் சென்றாள். சாக்கி பெரியவர்களை அருகே விடவில்லை. குழந்தைகளை அனுமதித்தது. மூன்று குழந்தைகளையும் அவ்வளவு அழகாக வளர்த்தது. கண் விழிக்கும் வரை குட்டிகளை விட்டு அங்கிங்கு நகரவில்லை. எப்படித்தான் பிள்ளை வளர்க்கப் போறியோ நீ, என்று நாங்கள் நினைத்தது மாறி, எவ்வளவு அழகாக குழந்தை வளர்கிறே நீ என்று சாக்கியைக் கொஞ்சித் தீர்த்தோம்.

நாட்கள் ஓடின. மூன்று குட்டிகளும் வளர்ந்து, கண்திறந்து மூன்று திசைக்கு அங்குமிங்கும் ஓடின. சாக்கி டயர்டாகி நடுவில் படுத்து விட்டது. குட்டிகளைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம். ப்ளுட்டியை பிரணவா எடுத்துப் போனாள். அவளுக்கு ஏற்கனவே நாய் வளர்த்த அனுபவம் இருக்கிறது. அவள் அம்மாவிடம் இன்ன தடுப்பூசிகளைப், போடுங்கள் இன்னின்ன உணவு கொடுங்கள் என்று கூறி அனுப்பினார் என் கணவர். அவர்கள் அங்கு தடுப்பூசி போட்ட காலத்தில் நாங்களும் டாமி மற்றும் ப்ளூட்டிக்கு தடுப்பூசி போட்டோம். அம்மு டாமியை எடுத்துப் போய் நாலு நாட்கள் வைத்திருந்தாள். அது இரவு முழுவதும் கத்தவே, இன்னும் கொஞ்சம் நாட்கள் தாய்ப்பால் அருந்தட்டும் என்று சொல்லி அவளது அம்மா கொண்டு வந்து விட்டு விட்டு போனார்.  ப்ளூட்டியும் டாமியும் நாங்கள் வெளியே போய் விட்டு வருகையில் ஜோடியாக ஓடிவந்து அமர்ந்து எங்களை வரவேற்கும். டாமியையும் நாமே வைத்துக் கொள்வோமா என்ற எண்ணம் கூட வந்தது. எல்லாம் நன்றாகத்தான் போனது, அந்த தொடர் மழைக்காலம் வரும்வரை..

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com