ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17

மழை நேரம் வந்தால் எப்படி உணர்வோம்? முதல் நாள் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்தால் 'அப்பாடா இப்பதான் பூமி குளிர்ந்திருக்கு' என்போம். அதே மழை ஒரு வாரத்திற்கு மேல் நச்சு நச்சு என்று தொடர்ந்தது என்றால் கொஞ்சமாக எரிச்சல் படுவோம். 'துணி காயவே மாட்டேங்குது, வீடு பூரா சகதியை மிதிச்சு மிதிச்சு மண்ணா ஆகுது' என்போம், சின்னப் பிள்ளைகள் வைத்திருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம். ஈரமும் சளியும் அவஸ்தையுமாகக் காலம் நகரும்.

மொத்தமாகப் பார்த்தாலே வருடத்திற்கு 30, 40 நாட்கள் கூட மழை பெய்யாத எங்கள் ஊரில் சென்ற தீபாவளியை ஒட்டி தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் தினமும் மழை பெய்தது. வீட்டில் ஒரு ஆறு பேர், கணக்கற்ற பறவைகள், நான்கு நாய்கள், அத்துடன் டாமியும் ப்ளூட்டியும். முதல் இருபது நாட்களுக்கு மேல் நன்றாகவே சென்றது. மழைக்காலத்தில் வழக்கமாகக் கோழிகளுக்கு வரும் உடல் நலமின்மை கூட சென்ற முறை அவ்வளவாக இல்லை. 'தண்ணீரில் டெட்ராசைக்ளின் கலந்து வச்சுட்டேன்' என்றார் என் கணவர். புறாக்களும் நலமாக இருந்தன. சாக்கியே ப்ளூட்டியையும் டாமியையும் நல்லபடியாகப் பார்த்துக் கொண்டது
 கியூட்டி மதுரைக்கு பயணம் ஆகி விட்டிருந்தது. அப்போதுதான் பால்குடியை ப்ளூட்டியும் டாமியும் நிறுத்தியிருந்தன. குட்டி டேனியும்  டெடியும் பின் வாசலில் இருக்க, சாக்கியும் பூப்பியும் முன் வாசலில் இருந்தன.

 ப்ளூட்டி டாமி இருவரும் சாக்கியுடன் மட்டுமல்லாமல் மற்ற நாய்களுடனும் நன்கு விளையாடின. திடீரென்று ஒரு நாள் ப்ளூட்டி இரண்டு முறை வாந்தி எடுத்தது. எதையோ விழுங்கி இருக்கக்கூடும், புறா அல்லது வாத்தின் இறகாகக் கூட இருக்கலாம், என்று நினைத்து மருந்து கொடுத்தோம். சோர்வாகவே இருந்தது. சந்தேகம் தோன்ற பின்புறம் சென்று பார்த்தேன். மிக மிக லேசாக அதன் மலத்தில் ஒரு சொட்டு ரத்தம் இருந்தது. எங்களுடைய பழைய கால nightmare ஆன பார்வோ வைரஸ் மீண்டும் அலைக்கழிக்கப் போகிறதோ என்று அதிர்ந்தேன். அப்போது முதல் ப்ளூட்டிக்கு தீவிர சிகிச்சையை ஆரம்பித்தோம். டாமி நன்றாக இருந்தது. இரண்டு பேரையும் பிரித்து விட்டோம். டாமியை வளர்க்கப் போகிறேன் என்று சொன்னவர்கள் வீட்டிற்கு அனுப்பினோம். ப்ளூட்டியின் நிலை மோசமாகிக் கொண்டே போனது. கால்நடை மருத்துவர் வந்து ஊசி போட்டார். தெரிந்த சிகிச்சைகள் எல்லாவற்றையும் செய்தோம். அப்படியும் சரியாகாமல் நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின் சென்ற தீபாவளியன்று எங்களை விட்டுப் போய்விட்டது ப்ளூட்டி. எங்களுக்கு மனதே ஆறவில்லை. பிரணவா கேட்டாளே.. பேசாமல் அவளிடமே கொடுத்துவிட்டிருக்கலாமே, இன்னும் இரண்டு மூன்று வெளியூர் காரர்கள்  முகநூலில் புகைப்படத்தைப் பார்த்து விட்டு 'எங்களுக்கு ஒரு குட்டி?' என்று கேட்டார்கள்.. அவர்களிடமாவது கொடுத்திருக்கலாம் என்று எல்லாரும் புலம்ப ஆரம்பித்தோம்.

எனக்கு ஒரு டோஸ் கூடுதலான குற்றவுணர்வு. குட்டி டேனியை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன் என் கணவரிடம்.. அவர் கேட்கவில்லை. அதற்குப் பழி வாங்கும் விதமாகத்தான் 'இனிமேல் நீங்க ஒரு நாய் கொண்டு வந்தா நானும் புதுசா ஒண்ணு வளர்ப்பேன்' என்று சொல்லி ப்ளூட்டியை எங்களுக்கென்று ஒதுக்கி வைத்திருந்தேன். எங்கள் வீட்டிலேயே பிறந்த குட்டி அதுவும் முதன்முறையாக எனக்கென்று நான் நினைத்துவிட்ட குட்டி போன்ற கூடுதல் காரணங்கள் வருத்தத்தின் அளவை அதிகரித்தன.

 சோகம் அத்துடன் முடிந்துவிடவில்லை ஒரு வாரம் கழித்து டாமியும் சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது, அம்மாவைத் தேடுகிறதோ என்னவோ என்று கொண்டுவந்து விட்டார்கள். கண்கள் இடுங்கிப் போய் வந்தது டாமி. கொண்டு வந்து கொடுத்தவர்களால் அதற்கு வயிற்றுப்போக்கு இருந்ததா, வாந்தி இருந்ததா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே.. சீசன் வேறு இப்படி இருக்கிறது. இங்கிருந்த போதே டாமிக்கு தொற்று வந்திருக்கலாம், இல்லை அங்கே போன இடத்தில் வந்திருக்கலாம். வீட்டில் யாருடைய முகமும் நன்றாக இல்லை. கொண்டு போனவர்கள் அப்படியே கொண்டு போயிருக்கக் கூடாதா, மறுபடியும் ஏன் கொண்டு வந்து விட்டார்கள் என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்தது, வாய் விட்டு சொல்லத்தான் இல்லை.

அதிதீவிர சிகிச்சையை டாமிக்கு ஆரம்பித்தோம். அதுவும் பலனளிக்கவில்லை. ஒரு முறை நான் மருத்துவமனைக்குப் போய்விட்டு திரும்ப கையில் என் கணவர் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவனம் அதில் இல்லை. 'டாமி ஏதாவது சாப்பிட்டதா, எப்படி இருக்கிறது, ட்ரிப் போட்டீர்களா?' என்று கேட்டேன். பதிலே கூறாமல் அமர்ந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என் மகள் ஏதோ சொல்ல வர இருந்த கோபத்தில் அவளைத் திட்டினேன். அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. 'டாமிக்கு மட்டுமே ஏதாவது ஆகட்டும், நான் வீட்டை விட்டே போயிடுவேன்' என்று ஆரம்பித்து சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் கத்தினேன். அப்படி அதுவரை நான் நடந்து கொண்டதே இல்லை.

அப்போதும் என் கணவர் சோகமாக இருக்க, பிள்ளைகள் இரண்டு பேரும் அழ ஆரம்பித்தார்கள். ஒருத்தி பெட்ரூமிலும் இன்னொருத்தி வீட்டு வாசலிலும் போய் அமர்ந்து கொண்டு அழுதார்கள். கொஞ்ச நேரம் கழித்து சுய உணர்வுக்கு வந்த நான் முதலில் வாசலில் அமர்ந்திருந்த என் பெரிய மகள் அஞ்சனாவைப் போய் பார்த்தேன். "சரி சரி! அழாதே உள்ளே வா" என்றேன். "எங்களுக்கும் டாமிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கவலையா தான் இருக்கு.. நாங்க அழுதா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவேன்னு தான் நாங்க கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கோம்" என்று அழுகையினூடே சொன்னாள். எவ்வளவு சொல்லியும் அவள் எழுந்து வருவதாக இல்லை. சரி பெட்ரூமில் இருக்கும் சின்னவளையாவது சமாதானப்படுத்துவோம் என்று உள்ளே போனால், பேசி வைத்து கொண்டதைப் போல அவளும் அதையே சொன்னாள், எனக்காகப் பார்த்துக் கொண்டுதான் அழுகையை அடக்கி வைத்திருப்பதாக. எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இங்கு யார் குழந்தை என்று தோன்றியது. என் கணவர் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். 'கொஞ்சமாவது டாக்டர் மாதிரி யோசி' என்றார். அதற்கும் சண்டை போடத் தான் செய்தேன். நிதர்சனம் உரைத்தது. ப்ளூட்டி, டாமி இருவரின் உடல்நிலை சுணங்க ஆரம்பித்த அந்த கணமே இரண்டு பேரும் பிழைக்க மாட்டார்கள் என்பது எங்கள் அடிமனதிற்குத் தெரிந்திருந்தது. அதை ஒத்துக் கொள்ளத்தான் விரும்பவில்லை.



மறுநாளின் விடியலை டாமி பார்க்கவில்லை. "அம்மா! நமக்கே எவ்வளவு கஷ்டமா இருக்கு.. சாக்கிக்கு எப்படி இருக்கும், யோசிச்சுப் பாரு" என்றாள் அஞ்சனா. அதற்கு வருத்தமாக இருக்குமா, டாமியும் ப்ளூட்டியும் நம் வீட்டில் வைத்து இறந்து போனதை உணர்ந்திருக்கிறதா, கியூட்டியைக் காணவில்லையே என்று நினைக்குமா என்று என் கணவரிடம் கேட்டேன். "வழக்கமா குட்டிகளை பிறந்து ஒரு மாசமான பிறகு வெளியிடங்களுக்கு கொடுத்துடுவாங்க.. மறக்கத்தான் செய்யும்னு நினைக்கிறேன்" என்றார்.

மருத்துவ வாழ்வில் நன்றாக இருந்த நோயாளி திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறி மோசமாகி உயிரிழக்கும் பொழுதுகளில் ஒரு அவஸ்தையான உணர்வு ஏற்படுமே, அது போன்றதொரு உணர்வு நீண்ட நாட்களுக்கு இருந்தது. ப்ளூட்டி- டாமியை சரியாக பார்த்துக் கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்ச்சியும் அதையும் விட சாக்கியை இந்த சுழற்சியில் கருவுறாமல் பாதுகாத்திருக்க வேண்டுமோ என்ற எண்ணமும் மனதை வலிக்க வைத்தது.

எங்கள் வீட்டில் பிறந்த முதல் குட்டிகளில் மீதம் இருக்கும் ஒன்றே ஒன்றான க்யூட்டியின் வளர்ச்சி அவ்வப்போது வாட்ஸப் மூலமாக மதுரையிலிருந்து எங்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதைப் பார்த்து ஆறுதல் படுகிறோம். வளர வளர கியூட்டி பூப்பியின் குணங்களைக் கொண்டிருப்பதாக எங்களுக்குத் தோன்றுகிறது. அதே பணிவு, பாண்டியராஜன் போன்ற பார்வை, நடை எல்லாம் வைத்து சாக்கியைக் கையை பிடித்து இழுத்தவன் பூப்பியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் டாமி மற்றும் ப்ளூட்டியின் வால் அளவுகளை இந்த நேரத்தில் நாம் மறந்து விடக்கூடாது. வாலே இல்லாத டெட்டியின் குழந்தைகளாக அவை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். தடைய அறிவியல் படிக்கும்போது தான் super fecundation என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது. மனிதனின் இனப்பெருக்கத்தில் அரிதாக நடக்கக் கூடிய நிகழ்வு இது. ஒரு பெண்ணுக்கு வழக்கமாக மாதத்திற்கு ஒரு கருமுட்டை தான் வெளியேறும். அரிதாக இரண்டு முட்டைகள் வெளியேறலாம். அந்த காலகட்டத்தில இரு வேறு நபர்களுடன் கொண்ட உடலுறவு காரணமாக ஒவ்வொரு முட்டையும் வெவ்வேறு நபர்களின் விந்தணுக்களுடன் இணைந்தால், ஒரே சமயத்தில் வேறு வேறு தந்தைகளை உடைய இரண்டு குழந்தைகள் பிறக்கலாம். இது அரிதிலும் அரிதாக நடக்கக் கூடியது, சில குற்றவியல் வழக்குகளில் இந்தக் கருத்து பயன்பட்டிருக்கிறது என்று படித்திருக்கிறேன். சாக்கி விஷயத்தில் அப்படி இருக்கலாமா என்ற என் கேள்விக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பதிலை நிபுணர் ஒருவர் கூறுகிறார் (அது நம் எடிட்டர் தான் என்பது உபரி தகவல்!) நாய்களுக்கு ஒரு முறை சுழற்சியின் போது இரண்டு முதல் பத்து முட்டைகள் வரை வெளியேறுவதுண்டு. சில சமயங்களில் பன்னிரெண்டு குட்டிகள் கூட போட்டதுண்டு, எனவே நாய் இனங்களில் அது சாதாரணம். எனவே சாக்கி கதையில் பூப்பி டெடி இரண்டு பேரும் 'கல்ப்ரிட்ஸ்'!

ப்ளூட்டி டாமி உயிரிழந்த நேரத்தில் டேனியின் வயதும் ஒரு வயதிற்குக் கீழ் தான். நல்ல வேலையாக டேனிக்கு ஒன்றும் ஆகவில்லை. ப்ளூட்டி டாமிக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு மாதம் முன்பு டேனிக்கு போட்டிருந்தோம். அது வேறு பேட்ச் வாக்சினாக இருக்கலாம், இந்த பேட்ச் சரியில்லை தயாரிப்பிலோ பாதுகாப்பில்லோ தவறு நடந்து விட்டது என்பது எங்கள் அனுமானம். நல்லவேளையாக கியூட்டிக்கு மதுரையில் போய் தான் தடுப்பூசி போட்டார்கள் என்று கெட்டதிலும் நல்லதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இதுவரை எங்கள் வீட்டு நாய்கள் உயிரிழந்த போது தொலைதூரத்தில் போய் புதைத்தோம். இந்த முறை இரண்டு குட்டிகளையும் எங்கள் வீட்டிலேயே தென்னை மரத்தின் அடியில் புதைத்து விட்டார் என் கணவர். போய்ப் பார்க்கவும் tombstone வைக்கவும் மனதில் பலமில்லை. எங்கள் பக்கத்துத் தெருவில் ஒரு பாட்டி, எங்கு நாய் இறந்ததாகக் கேள்விப்பட்டாலும் அலைந்து திரிந்து அதைக் கொண்டு வரச் செய்து தன் வீட்டு தென்னை மரங்களுக்கு அடியில் புதைத்து விடுவாராம். அப்படி செய்தால் தேங்காய் நிறைய காய்க்குமாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நான் அந்த இழப்பிலிருந்து மீண்ட நேரம், "இப்பல்லாம் முன் வாசல்ல ரெண்டு நாய், பின் வாசல்ல ரெண்டு நாய் ட்யூட்டி பாக்குது" என்று என் கணவர் விளையாட்டாகக் கூற, "ரெண்டு நாய் தென்னைமரத்தடியில் ட்யூட்டி பாக்குது" என்றேன் நான், சற்றும் யோசிக்காமல். "அதை விடவே மாட்டியா நீ?" என்று கடிந்து கொண்டார். ப்ளூட்டி டாமியின் முகத்தை ஒரு முறை பாருங்கள், பின் நீங்களே சொல்லுங்கள்.. எப்படி மறப்பது ரெண்டு பேரையும்?

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com