மணல் புயலும் மனிதப்புயலும்

மணல் புயலும் மனிதப்புயலும்

விடை கொடு ரசிகனே- சச்சின் -3

அது கோகோகோலா கப். அன்று ஏப்ரல், 22, 1998. ஷார்ஜாவில் ஆட்டம். கல்லூரி விடுதி முதல் மாடியில் இருந்த டிவி அறையில் உட்கார்ந்திருந்தேன்.

‘’மாப்ளே இன்னிக்கு எப்பிடியும் நம்மாளுங்க தோத்துருவானுங்கடா.. ஏண்டா வெட்டியா ஒட்காந்துருக்க.. போய் ரிக்கார்டு எழுது” என்றான் நண்பன்.

‘’எனக்கு எப்புடியும் சச்சின் மேல நம்பிக்கை இருக்கு.”

‘’ஒங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா..” என்றான். அவன் சொன்னதில் நியாயம் இருந்தது. ஷார்ஜா மைதானத்தில் மணல்புயல் வீசி வீரர்கள் எல்லாம் உள்ளே போய்விட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மூன்று அணிகள் கலந்துகொண்ட ஆட்டம். அன்று நடந்தது ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவுக்குமான கடைசி லீக். அதில் இந்தியா வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் 254 ரன் எடுத்துவிட்டால் இறுதிப் போட்டியில் நுழைந்து ஆஸ்திரேலியாவுடன் ஆடலாம். அன்று முதலில் ஆடிய ஆஸி அணி 284 ரன்கள் குவித்திருந்தது. ஸ்டீவ் வாக், மார்க் வாக் பெவன் போன்றவர்கள் எல்லாம் இருந்த அணி அது. பெவன் 101 ரன்கள் குவித்திருந்தார். இந்த ஸ்கோரைப் பார்த்தவுடனே எங்கள் முகமெல்லாம் சோர்ந்துவிட்டது. ஆனால் இடையில் மணல் புயல் வந்ததால் நான்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு 46 ஓவர்களில் 250 ரன் அடித்தால் வெற்றி; 237 ரன் எடுத்தால் இறுதிப்போட்டிக்குத் தகுதி என்றும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. மிகவும் டென்ஷனான மேட்ச்.

ஐந்தாவது ஓவரில் மைக்கேல் கேஸ்பரோவிச்சை ஒரு சிக்ஸுக்கு அடித்து அதிரடியைத் தொடக்கினார் சச்சின். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸ். கேஸ்பரோவிச் காலி. நாங்கள் விசிலடித்து கைதட்டி களேபரத்தில் இறங்கினோம். அடுத்த ஓவருக்கு அடுத்த ஓவரில் கேஸ்பரோவிச் பந்துபோட்டபோது அதைத் தூக்கி அடித்தார் சச்சின். அதுபாட்டுக்கு மேலே மேலே போய் மைதானத்தில் விழ அதைப் பிடிக்க ஓடிய ஆஸி வீரர்கள் நழுவ விட்டார்கள். அப்பாடி என்று மூச்சு வந்தது. நம்மாளு கேட்சை அவங்க விட்டுட்டா நமக்கு திருப்தி. அதே அவங்க கேட்சை நம்மாளுங்க விட்டுட்டா வரும்பாருங்க கோபம்.. கொய்யால..

ஐம்பத்தியேழு பந்துகளில் சச்சின் அரை சதம் அடித்தார். 111 பந்துகளில் சதம். ரவிசாஸ்திரியும் கவாஸ்கரும் வாட் எ ஷாட், வாட் எ ஷாட் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள். 219 ஆக ஸ்கோர் இருந்தபோது சிக்ஸுக்குத் தூக்கி பவுண்டரி லைனில் விழுந்துபிடித்த ஆஸிவீரர் டேமியன் மார்டின் பந்தை நழுவ விட்டார். நாங்கள் செத்துப்பிழைத்தோம். எதிர்முனையில் இருந்த லட்சுமண் கிட்டே வந்து தட்டிக் கொடுத்து அடக்கி வாசி என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஒருவழியாக 237 ரன்களைக் கடந்தது இந்தியா. அப்பாடி  இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாயிற்று. 143 ரன்கள் எடுத்த நிலையில் ப்ளெமிங்கின் பந்தை ஹூக் ஆட முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் சச்சின். அது அவரது 187- போட்டி. அதுவரை குவித்ததிலேயே அதிகப்படியான ரன் அதுதான். அந்தப் போட்டியில் 131 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். ஐந்து சிக்சர்கள் 9 பவுணடரிகள். அந்தப் போட்டியில் இந்தியா ஜெயித்தது.

28 வது ஓவரில் கேப்டன் அசார் அவுட். அடுத்த ஓவரில் ஜடேஜா அவுட். லட்சுமண் உள்ளே வந்தார். 31வது ஒவரில் மணல் புயல்.ஆட்டம் தடைப் பட்டது. அப்போது சச்சின் 64 ரன்களுடன் இருந்தார் மணல்புயலால் அவர் மைதானத்தை விட்டு அகன்றபோது .மிகுந்த கனமான சிந்தனைகளுடன் அவர் முகம் காணப்பட்டது. பொதுவாக ஒரு ரிதத்தில் ஆடிகொண்டிருக்கும்போது அதுதடைப்பட்டால் பழைய போக்கைப் பிடித்து ஆடுவது சிரமம். அதனால்தான் ட்ரிங்க்ஸ் இடைவேளை, உணவு இடைவேளைக்குப் போய்விட்டு வரும் வீரர்கள் அவுட் ஆவது வழக்கம்.

உள்ளே போன சச்சின் யாரிடமும் பேசாமல் ஹெல்மெட்டையும் பேடையும் கழற்றாமல் அப்படியே பேட்டும் கையுமாக இறுக்கமாக கவனத்தை ஆட்டத்தில் மட்டும் குவித்து அமர்ந்திருந்திருக்கிறார். 16 நிமிடங்கள் ஆட்டம் நடக்கவில்லை. ஒருவேளை இன்னும் கிரீஸில் நின்று ஆடிக்கொண்டிருப்பதாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருக்கக் கூடும். ஆட்டம் தொடங்கியவுடன் அதே மனநிலையில் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார். பொதுவாக இதுபோன்ற பிரஷர் சூழ்நிலைகளில் நமது அணி சுருள்வதுதான் அதற்கு முன்பு வழக்கம். ஆனால் இம்முறை அதில் மாற்றம். ‘’பேய் பிடித்தவர் போல் சச்சின் அன்று ஆடினார். அவர் கண்கள் மணல் காற்றில் கோவைப் பழம்போல சிவந்திருந்தன.””என்று அன்றைய ஆட்டம் பற்றி லட்சுமண் சொன்னார்.

அன்று இரவு என் நண்பன் என்னை விட குஷியாக இருந்தான். இரவு முழுக்க விடுதி அறைகளில் டெண்டுல்கர் புராணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு அடுத்து இரண்டு நாள் கழித்து  ஆஸி- இந்தியா பைனல். அன்று சச்சினின் 25வது பிறந்த நாள். அவர் மீண்டும் சதம் அடித்தார். 134 ரன்கள். இந்தியா கோப்பையை வென்றது. அன்று வார்னே 61 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ’’கனவில் கூட டெண்டுல்கர் வந்து என் பந்துகளை துவம்சம் செய்வதுபோல் உள்ளது” என்று அந்த ஆட்டத்தின் விளைவாக வார்னே சொன்னார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com