மதுரை சினிமா

மதுரைக்காரய்ங்க-38

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

கிட்டத்தட்ட தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இதுவரை அரசியல் பேசிக்கொண்டிருந்த நாம் கொஞ்சம் மதுரை சினிமாவையும் பேசுவோம்.

      தற்போது சென்னையை மட்டுமே மையம் கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்பட உலகம் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தனது தயாரிப்பு மையங்களைக் கொண்டிருந்தது. காரைக்குடியில் ஏ.வி.எம்., சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போன்றவை நமக்குத் தெரியும். அதுபோலவே சித்ரகலா ஸ்டூடியோ என்ற பெயரில் மதுரை திருநகரில் ஸ்டூடியோ இருந்தது..

   வரலாற்றை அடித்தளமாகக் கொண்ட சினிமாக்கள் பல வந்தாலும்  மதுரை வரலாற்றைச் சொல்லும் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே எம்.ஜி.ஆர். நடித்த சினிமாக்கள்.

        வி.ஏ.செல்லப்பா - டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939 வெளிவந்து வெற்றி பெற்றது மதுரை வீரன்.  இந்த மதுரை வீரன் கதையை லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் மீண்டும் பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். இந்த “மதுரைவீரன்” 13-4-1956ல் வெளிவந்து.

       மதுரை வீரனுக்கு, திரைக்கதை வசனம் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். டைரக்ஷன் யோகானந்த். பிறந்த குழந்தை நாட்டுக்கு ஆகாது என சோதிடர் சொல்வதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார் அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்) எடுத்து “வீரன்” என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி தூக்கிச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான் வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார். கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். மதுரை வீரன்  வழிபாட்டுக்குரிய தெய்வமாகிவிடுகிறான்.

           இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான சமூக மக்களின் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருக்கிறார்

           பல ஊர்களில் இருபத்தைந்து வாரங்களுக்கு மேல் ஓடி வசூலில் புரட்சி செய்தது மதுரைவீரன். குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. உடுமலை நாராயணகவி எழுதிய “பார் கடல் அலை மேலே” என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார். இப்பாடல் தனது கட்சி (திமுக) கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதியதால் அந்தப் பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் அருமையாக அமைந்திருந்த பத்மினியின் நடனம் இடம் பெற்ற அந்தப் பாடலை நீக்க பட அதிபர் லேனா செட்டியாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை. எனவே,  நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கி இடைவேளை முடிந்ததும் இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார்.

      “மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றின. மேலும் குறிப்பிட்ட பாடலுக்கு கொள்கை அடிப்படையில் எம்.ஜி.ஆர். தெரிவித்த எதிர்ப்பு தி.மு.கழகத்தில் அவரை சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுக்க வைத்தது.

     அதுபோல,  குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை சுந்தர பாண்டியன் மீட்ட கதையை எம்.ஜி.ஆர். நடித்து அவரே  இயக்கினார். "சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் இது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர்கிறது" என அ.தி.மு.க.வினர் இந்தப்படத்தை நிகழ்கால அரசியலோடு இணைத்து இன்றும் சிலாகிக்கிறார்கள்.

அண்மை காலப்படங்களில் மதுரை

சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி படத்தின் கதை பர்மா சென்று சென்னை வந்து தொடர்ந்து மதுரையில் நிகழ்கிறது. படத்தில்" தாலியறுத்த பெண்களுக்கெல்லாம் இட்லிக்கடை தானுங்க தாசில் உத்தியோகம்" என்று வசனம் பேசும் கல்யாணியைத்தான் மதுரையின் கோயில் பூசாரி பெண்டாள முயல்வார். பொறுக்காத கதாநாயகன் குணசேகரன் அருவியாய் வசனம் பொழிவார். சிவாஜிகணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படம் திண்டுக்கல்லில் துவங்கி மதுரை வழியாய்த் தூத்துக்குடி செல்லும் ரயிலில் ஆரம்பிக்கிறது. மதுரையில் ஒரு காலத்தில் இருந்த பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவினரை நினைவுபடுத்தும் வகையில் இதன் ஆரம்பக் காட்சிகள் அமைந்திருந்தன. இந்தக் கதையை சிவாஜி சொல்லி கதாசிரியர் பாலமுருகன் எழுதினார் என பாலமுருகனே ஒருமுறை கூறியிருக்கிறார். அது போலவே சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் உருவாகி இன்றளவும் தமிழ் மக்களால் நினைவு கூறப்படும் தில்லானா மோகனாம்பாள் படம் மதுரை அழகர் கோவிலில் கதைநாயகனும், நாயகியும் சந்திப்பதாக அமைந்தது.

மதுரையை மையம் கொண்ட சினிமாக்கள்..

பாரதிராஜாவின் பல படங்கள் மதுரை, தேனி கிராமங்களை மையமிட்ட கதையாடல்களைக் கொண்டனவாகவே உள்ளன. பரதன் இயக்கத்தில் உருவான கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், கமலஹாசனின் இயக்கத்தில் உருவான விருமாண்டி, சங்கிலி முருகனின் தயாரிப்பில் வெளிவந்த, எங்க ஊருப் பாட்டுக்காரன், பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் போன்ற பல படங்கள், இராம. நாராயணன் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கரிமேடு கருவாயன் மற்றும் கும்பக்கரை தங்கையா போன்ற உள்ளூர் நாயகர்களைப் பற்றிய படங்கள், விஜயகாந்த் நடித்த கள்ளழகர், தனுஷின் ஆடுகளம், மற்றும் அழகர் மலை என்றொரு படம் விஜய் நடித்த கில்லி, பாலாவின் சேது, அஜித் நடித்த ரெட், ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார், மற்றும் தூங்காநகரம், கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்கள், வசந்த பாலனின் வெயில், நட்ராஜ் நாயகனாக நடித்த மிளகா, ஹரிக்குமார் நாயகனாக நடித்த மதுரை சம்பவம், புதியவர்கள் இயக்கிய மதுரை - தேனி வழி உசிலம்பட்டி, அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன், சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம், பாலாஜி சக்திவேலின் காதல், சீனு ராமசாமியின் கூடல் நகர், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த சண்டைக்கோழி, மேலும் விஷால் நடித்த திமிரு, சேரனின் " தவமாய் தவமிருந்து".  " "வெண்ணிலா கபடி குழு " "கோவா" மாட்டுத்தாவணி" "கோரிப்பாளையம்" என மதுரை "பங்கேற்கும்" படங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

       அதுமட்டுமில்லாமல் மதுரையில் குறிப்பிட்ட சில ஷட்டிங் ஸ்பாட்டை சென்டிமென்டாக சில இயக்குநர்கள் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மணிரத்தினத்துக்கு திருமலை நாயக்கர் மஹால் என்றால் தனிப்பிரியம். மணிரத்தினத்தின் குரு, பம்பாய் படத்தில் கண்ணாளனே பாடல், மற்றும் இருவர் படத்தின் சிலகாட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. "கண்ணாளனே" பாடலுக்குப் பிறகு அப்போதைய இளைஞர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு "கொய்ராலா (மனிஷா) மஹால்" என்ற "திருநாமம்" சூட்டப்பட்டது.  "நேருக்கு நேர் " சினிமாவில் "மனம்விரும்புதே" பாடலிலும் மகால் நடித்திருந்தது.
        

    அதுபோல மதுரையிலுள்ள காந்தி மியூசியம் வளாகமும் திரைப்படங்களுக்கான ஷுட்டிங் ஸ்பாட், மணிரத்தினத்தின் இருவர், ஆயுதம் செய்வோம் சினிமாவில் சுந்தர்.சி, நாசர், விவேக், பேராசிரியர் ஞானசம்பந்தம் நடித்தகாட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. மேலும் அழகர்கோயில் பல படங்களில் வந்திருக்கிறது.

  விஜய் நடித்த கில்லி திரைபடத்தில் ஒரு காட்சி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுர வாசலில் படமாக்கப்பட்டது. அந்த படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தின் சென்டிமென்ட் ஆனது மதுரை.  மதுரையில் வைச்சு படமெடுப்பதை விட மதுர பெயரை வச்சே படமெடுக்கலாமே என நினைத்தவர்கள் கில்லி திரைப்படம் ஷுட்டிங் நடந்த இடத்திலேயே விஜய்யை வைத்து "மதுர" யைத் துவக்கினர். ஆனால்.. ஏமாந்து போனார்கள்.

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com