மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன் - முழங்கிய ஜெ!

மதுரைக்காரய்ங்க- 30

1989-ல் போடியில் சாதி கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடும் நடந்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி.  "நான் வெற்றி பெற்றதால் போடித்தொகுதிக்கு மக்கள் நலத்திட்டங்கள் சென்று சேரவில்லை" என்றக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார் ஜெயலலிதா. அதே நேரத்தில் வெற்றி பெற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு கூட செல்ல இயலாத நிலை ஜெயலலிதாவுக்கு. இந்தக் கலவரத்தையடுத்து தொகுதிக்குச் சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணிகளும் அரிசிகளும் வாரி வழங்கினார். நன்றாக நினைவிருக்கிறது.. கொளுத்தும் வெயிலில் மக்கள் மத்தியில் பேசி தி.மு.க. மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்தார். மதுரையோடு இணைந்திருந்த தேனி மாவட்டத்தில் இன்றுவரை அ.தி.மு.க. ஆளுமை செலுத்த இந்த சம்பவம் காரணமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

 இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. தி.மு.க. ஆட்சியிலிருந்தது. இணைந்த அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அ.தி.மு.க. மீண்டும் வெற்றி அத்தியாயத்தை எழுதத்துவங்கியது. ஐந்தாவது இன்னிங்ஸ்சும் மதுரை தான்

  .  1991-ல் முதல்வரானார் ஜெயலலிதா. 1996-தேர்தலில் வெற்றிவாய்ப்பைக் கைவிட்டார். 2001 தேர்தலில் மீண்டும் வெற்றி 2006-ல் தோல்வி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த காலகட்டத்தில் தி.மு.க. வளர்ச்சி பிரமிப்பானதாக இருந்தது. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் என கருணாநிதியின் குடும்பத்தினர் முழு செல்வாக்கில் இருந்தனர்.  இடைத்தேர்தல்களிலெல்லாம தி.மு.க. அனாயஸயமாக வென்றது. அப்போது மு.க. ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்தாலும் கூட  மு.க. அழகிரி பல்வேறு வகைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். எம்.பி., மத்திய அமைச்சர், தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவிகள் அவர் வசம் இருந்தன. இடைத் தேர்தல்களில் வெற்றியை எப்படி கைப்பற்றுவது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அழகிரி. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பத்து தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் தி.மு.க. அணி வேட்பாளர் வெற்றி பெற அவரும் ஒரு காரணமாக இருந்தார்.

 இதனால் மதுரை அ.தி.மு.க.வினர் கூட அழகிரியைத் தயக்கத்துடனேயே விமர்சிக்கும் நிலை இருந்தது. இந்த சூழலில் 2011 சட்டசபைத்தேர்தல் சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்தார் ஜெயலலிதா. ஆட்சி, அதிகாரம், பண பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்கவேண்டிய கட்டாயம் அவர் முன் நின்றது. அதேநேரத்தில் தி.மு.க. மீது மக்களுக்கு அதிருப்தியும் இருந்தது. இதை சாதகமாகிக் கொண்டார் ஜெயலலிதா. அழகிரி குறித்து மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலேயே தென் மாவட்டங்கள் அனைத்தும் தன் வசமாகும் என்பதைக் கணக்கிட்டார். மதுரையில் அடித்தால் தமிழகமெங்கும் எதிரொலிக்கும் என்பதையும் உணர்ந்திருந்தார்.  எனவே 18-10-2010-ல் தி.மு.க. அரசை எதிர்த்து மதுரையில கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்தார். பல்வேறு தடைகள், மிரட்டல்களைத் தாண்டி அந்தக் கூட்டத்துக்கு வந்தார் ஜெயலலிதா. இதுவரை மதுரையில் கூடாத அளவுக்கான கூட்டம் அது.

 தனது அடுத்த வெற்றியை... ஆறாவது இன்னிங்சை மதுரையில் எப்படி துவங்கினார் என்பதை அவர் அன்று பேசிய பேச்சுக்களின் வாயிலாக அறியமுடியும். அவர் பேசிய பேச்சின் சுருக்கம்.
   "வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம் நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.
தெற்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக கோயில் மாநகரமாம் மதுரை விளங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கம் தோன்றியது இங்கு தான்.  மதுரை ராஜ கோபுரம் கட்டப்படுவதற்கும், புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகால் உருவாவதற்கும், காரணமாக இருந்த பெருமைக்குரிய திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்த இடம் மதுரை.  சிலப்பதிகாரம் காவியத்தின் மையமாக விளங்கிய மதுரை நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதில் சிறந்து விளங்கியது.  தன்னுடைய கணவர் கோவலனுக்கு பாண்டிய மன்னர் தெரியாமல் அநீதியை இழைத்ததன் காரணமாக கோபமுற்று தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரை கண்ணகி எரித்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ் அறிஞர் நக்கீரன் பிறந்த ஊர் மதுரை.  இன்றளவும் பெண்களின் வீரத்திற்கு அடையாளமாக போற்றப்படும் வரலாற்று வீர மங்கை ராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த இடம் மதுரை.  இப்படிப்பட்ட பெருமைமிக்கவர்களின் குணங்கள் தான் மதுரை மாநகர மக்களின் ரத்தத்தில் குடி கொண்டிருக்கின்றன. உங்கள் மூதாதையர்களின் குண நலன்களைக் கொண்டுள்ள நீங்கள் அனைவரும் அநீதி, நேர்மையின்மை, கெடுதல், ஒழுக்கமின்மை, சுயநலம் ஆகியவற்றை எப்பொழுதும் எதிர்ப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

 மதுரை என்றாலே, ஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தான் நம் நினைவிற்கு வரும்.  அழகர் ஆற்றில் இறங்கும் அழகிய சித்திரைத் திருவிழா நம் நினைவிற்கு வரும். இன்று மதுரை என்றவுடன் இந்த புகழ் பெற்ற நினைவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மக்கள் முன் நிற்பது எல்லாம் வன்முறை, ரவுடிகளின் அராஜகம், கட்டப் பஞ்சாயத்து, கோரப் படுகொலைகள் போன்றவை தான்.  இன்று மதுரை என்று பேச ஆரம்பித்த உடனே மு.க. அழகிரியின் அராஜகங்களை நினைத்து தான் மக்கள் பயப்படுகின்றனர். 

 ஒரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியே மதுரை மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் யாத்ரிகர்களும், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் கூடிப் பழகுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் காரணமாக மதுரை "தூங்கா நகரம்" என்று அழைக்கப்பட்டது. இன்று இங்குள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மதுரை "தூங்க முடியாத நகரம்" ஆகிவிட்டது.

 சாதாரண இட்லி கடை வைத்திருப்பவர் முதல் நகைக் கடை அதிபர் வரை ஒவ்வொருவரும் "அழகிரி அரசுக்கு" கப்பம் கட்ட வேண்டும்.  ஒவ்வொரு  அரசு அதிகாரியும் அழகிரிக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மதுரையை விட்டு மாற்றப்படுவார்கள்.  கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் மதுரையில் 11  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அழகிரிக்கு அடிமையாக இருக்க மறுத்ததன் காரணமாக பல காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.  இந்த மாறுதல்களை எல்லாம் அழகிரி சார்பில் அவரது உதவியாளர் பொட்டு சுரேஷ் தான் கவனிக்கிறார்.

 சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் தற்போது இரண்டு அரசுகள் இருக்கின்றன.  கருணாநிதியை முதலமைச்சராகவும், அவருடைய மகன் மு.க. ஸ்டாலினை  துணை முதலமைச்சராகவும் கொண்டு சென்னையில் ஓர் அரசு செயல்படுகிறது. மு.க. அழகிரியை தலைவராகக் கொண்டு வேறு ஓர் அரசு மதுரையிலிருந்து செயல்படுகிறது.
 மதுரை தற்போது "அழகிரி நாடு" என்றும் ஏதாவது காரணத்திற்காக ஸ்டாலின் மதுரை வர வேண்டும் என்றால், அண்ணன் அழகிரியிடம் விசா வாங்கிக் கொண்டு தான் வர வேண்டும் .  மிகுந்த மன வேதனையுடன் உங்களில் ஒருத்தியாகத் தான் இதைச் சொல்கிறேன் எனப் பேசி மக்களின் நீண்ட நேர கைத்தட்டலை அள்ளினார் ஜெயலலிதா.

 லீலாவதி கொலை, தா.கி. கொலை என பட்டியலிட்டவர், " தா.கி. கொலை வழக்கில் விடுதலையை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு எதையும் செய்யவில்லை.  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் அழகிரியை கைது செய்ய உத்தரவிட்டேன் என்றால், தா. கிருட்டிணனை கொலை செய்தது யார்? சாகும் வரை தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தா. கிருட்டிணன் இறந்துவிட்டார் என்று கருணாநிதி கூறுகிறாரா? " எனக் கேள்வி எழுப்பினார் ஜெ.

 "தா. கிருட்டிணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டால் அஞ்சா நெஞ்சனின் படை ஜெயா டி.வி. அலுவலகத்தை அழித்துவிடும், என்ற அளவில் மிரட்டல் கடிதங்கள் ஜெயா டி.வி. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றவுடன் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்? மடியில் கனம் இருந்தால் தானே மனதில் பயம் வரும்?

 என்னையும், ""மதுரைக்கு வராதே! வந்தால் கொடூரமாகக் கொல்லப்படுவாய்!"" என்று எச்சரித்து பல கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஏனெனில் மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  இதைக் கண்டு நான் அஞ்சவில்லை.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? இந்த மிரட்டல்களில் இருந்து யாரோ ஒருவர் நம்மைக் கண்டு அஞ்சுகிறார் என்பது தெளிவாகிறது.

இப்படிப்பட்ட ஒரு நபருக்கு "அஞ்சா நெஞ்சன்"" என்று ஒரு பட்டப் பெயர் வேறு. 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு இவர் எங்கிருந்தார்? தந்தை முதலமைச்சர்.  தந்தையின் செல்வாக்கினால் மத்திய அமைச்சர் பதவி.  இந்த செல்வாக்கினால் நாட்டின் வளத்தையும் மக்களின் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டிருப்பவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டமா? யார் கொடுத்தது இந்தப் பட்டம்? இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். இவர் எங்களைப் பார்த்து மிரட்டுகிறார்.

 இவருடைய மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயந்தவள் அல்ல.  நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.  என்னை அரசியலில் இருந்து விரட்டி அடிப்பதற்காக எவ்வளவோ பொய் வழக்குகள் கருணாநிதியால் என் மீது போடப்பட்டன. என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளும் ஏற்கனவே நடந்தன.  அதைப் பற்றி எல்லாம் நான் என்றைக்குமே கவலைப்பட்டதில்லை.

   உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பதை இன்று நிரூபித்துவிட்டேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் என்றைக்குமே அஞ்சாத சிங்கங்கள். அழகிரியோ அஞ்சும் கோழை. ஒருவருக்கு ஒரு முறை தான் மரணம் ஏற்படும்.  அந்த மரணம் எனதருமை மக்களாகிய உங்கள் முன் ஏற்பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சியே என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 திரும்பத் திரும்ப மிரட்டல்களில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள்.  ஜெயலலிதா கொல்லப்படுவார். அதோடு அவருடைய கூட்டமும் குண்டு வைத்து கொல்லப்படும் என்று. அதாவது இங்கே குண்டு வெடிக்கும், மக்கள் சாவார்கள் என்ற பீதியை கிளப்பிவிட்டால் தொண்டர்களும் வரமாட்டார்கள், பொதுமக்களும் வரமாட்டார்கள், கூட்டம் சேராது என்று கணக்கு போட்டார்கள்.  ஆனால் வீரம்மிக்க என்னுடைய கழக உடன்பிறப்புகளும், வீரம்மிக்க தென்பாண்டி சீமை மக்களும் கருணாநிதியின் கணக்கை, அழகிரியின் கணக்கை முறியடித்து இங்கே கடலென திரண்டிருக்கிறீர்கள்.

 மதுரையில் அழகிரியை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.  அப்படி கேட்டால் கேட்பவர்கள் மிரட்டப்படுவார்கள். ஆனால் டெல்லியில் நிலைமை வேறு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அழகிரி ஓடி ஒளிந்து கொள்கிறார். பத்திரிகையாளர்களை கண்டால் பதுங்கிக் கொள்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தாலே அஞ்சா நெஞ்சன் அஞ்சுகிறார். அதை எப்படி புறக்கணிப்பது என்று சிந்திக்கிறார்.

 மத்திய அமைச்சர் ஆன பிறகு இரண்டு கின்னஸ் சாதனைகளை அழகிரி புரிந்து இருக்கிறார்.  ஒன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓராண்டிற்கு மேல் ஓடி ஒளிந்தது. மற்றொன்று நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறிய கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியது! அழகிரி தான் உங்களுக்கு பிரச்சினை என்பதால் அவரைப் பற்றி அதிக நேரம் பேசிவிட்டேன் என்றவர் அழகிரி முறைகேடுகளைச் செய்துள்ளார் எனக் கூறி அதனையும் பட்டியலிட்டார். இறுதியாக இதற்கெல்லாம்  சட்டமன்றத் தேர்தல் மூலம் தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் -நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

 ஜெயலலிதாவின் இந்த அளவு கோபத்துக்கு காரணம் "2011 தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது" என அழகிரி அடிக்கடி பேட்டிகளில் கூறிவந்தது தான்  இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அழகிரி கை ஓங்கியிருந்த மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் மக்கள் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா. அழகிரியை எதிர்த்துப் பேசத் தயங்கியவர்கள் பேசத் துவங்கினார்கள். இதன் விளைவு தி.மு.க. ஆட்சி இருந்தபோதும், அழகிரி மத்திய அமைச்சராக இருந்தாலும் மதுரையிலுள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வென்றது. மக்களவைத் தேர்தலில் அழகிரிக்கு நாற்பதாயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தைத் தந்த மேலூர் தொகுதியில் கூட தி.மு.க. தோற்றது தான் பரிதாபம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com