மதுரைபொன்னுசாமி

மதுரைபொன்னுசாமி

மதுரைக்காரய்ங்க-36

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

"நலம்தானா?" என்ற பாடலும் அந்த பாடல்வரிகளுக்கு ஏற்ப நயமாக ஒலிக்கும் நாதசுர இசையும் நாற்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்த  பின்னரும் கேட்பவர்கள் இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. நடிகர் சிவாஜிகணேசன் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சி நம் கண்முன்னே வந்து போகிறது. இந்தப் பாடல் மட்டுமில்லாமல் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் முழுவதிலும் நாதஸ்வர இசையை வழங்கியவர்கள் நாதசுரக் கலைஞர்களான மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள். இவர்கள் மதுரையின் நிகழ்கால அடையாளம்,. பல ஆண்டுகாலம் ஓஹோவென புகழ் உச்சியிலிருந்தவர்கள். சகோதர்களில் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருப்பவர் பொன்னுசாமி மட்டுமே..

இந்த சகோதரர்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மட்டுமில்லாமல் மும்பை, டில்லி  உள்ளிட்ட நாட்டின் பெரிய நகரங்களிலும் நாதசுர இசையினால் பலருடைய இதயங்களைக் கொள்ளை கொண்டனர். இவர்கள் குடியரசு தலைவர் மாளிகையிலும் இசை மழை பொழிந்திருக்கிறார்கள். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் இவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார். காமராஜர் இந்தச் சகோதரர்களின் இனிமையான நாதசுர வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவர்களுக்கு அளித்த தங்க மெடல் பரிசளிக்க அதை மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சவானிடம் யுத்த நிதிக்காக மனமுவந்து இவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதற்காக இயக்குநர் ஏ.பி. நாகராஜன், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இருவர் முன்னிலையில் வாசித்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களின் நாதஸ்வர இசையைக் கேட்டு திருப்தியடைந்தவுடன், "நாளை இன்னொரு முக்கிய நபர் முன்னிலையில் நீங்கள் வாசிக்கவேண்டும்" எனக் கூறியிருக்கிறார்கள். அதே போல மறுநாள் மூன்று மணி நேரத்துக்கு மேல் அந்த நபர் முன்பு வாசித்திருக்கிறார்கள். அந்த நபர் ஓ.கே. சொன்னபிறகு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல. தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞராகத் தோன்றி அசரவைத்த நடிகர் சிவாஜி கணேசன் தான்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியான பிறகு இவர்களை சினிமாவின் ஹீரோக்கள் போலவே மதுரை மக்கள் பார்த்தார்கள். சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாளுக்கு இவர்கள் நாதஸ்வரம் வாசித்திருந்தாலும் கூட எம்.ஜி.ஆர். மீது அதீத அன்பு கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருந்தபோது அவர் உடல்நலம் தேறவேண்டும் என பிராத்தித்து இந்த சகோதரர்கள் நாதஸ்வர வேள்வி நடத்தியது இன்னும் என் நினைவில் பத்திரமாக இருக்கிறது. பல முறை பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். எப்போதுமே வாஞ்சையுடன் பேசுவார் பொன்னுசாமி.. தான் ஒரு கலைஞன் என்பதில் அவருக்கு பெருமை அதை அவரது மிடுக்கான தோற்றம் பறைசாற்றும்.

சில மாதங்களுக்கு முன்னர் மதுரை ராமன் செட்டி தெருவிலுள்ள  வீட்டில் பொன்னுசாமியைச் சந்திக்கச் சென்றேன். வீட்டின் முன்னறையில் நாற்காலியில் கம்பீரத்துடனேயே உட்கார்ந்திருந்தார். எண்பத்தோரு வயதா? என நம்பமுடியாத அளவுக்கு குரல் கம்பீரமாக இருந்தது. அவரிடம் நீண்ட நேரம்பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேச்சிலிருந்து..

"எங்க பூர்வீகமே மதுரை தான். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எட்டு தலைமுறையாக எங்கள் குடும்பம் தான் நாதஸ்வரம் வாசித்து வருகிறது.. அதுவும் அம்மனுக்கு வாசித்து வருபவர்கள் நாங்கள். எங்க தாத்தா பொன்னுசாமி பிள்ளை  மைசூர் சமஸ்தான நாதஸ்வர வித்துவான். (மதுரையில் அவர் பெயரில் தெரு உள்ளது). எங்க அப்பா நடேசபிள்ளையிடம் தான் நானும் அண்ணனும் (சேதுராமன்) நாதஸ்வரம் கத்துக்கிட்டோம். 1942-ல் என்னோட ஒன்பதாவது வயதில் நாதஸ்வரக் கச்சேரி செய்யத்துவங்கினேன். அப்போது எங்க அண்ணனுக்கு பதினான்கு வயது. எனது முதல் கச்சேரி சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில். பத்துநாட்கள் நிகழ்ச்சி. என் முதல் நிகழ்ச்சியிலேயே எனக்கு வெள்ளி மடல் பரிசளிச்சாங்க.. அடுத்த பத்து நாள் கல்லல் என்கிற ஊரில் கச்சேரி. அங்கு தங்க மெடல் அணிவித்தார்கள். அப்படியே பட்டமங்கலம், ராமேசுவரம் என பத்துபத்து நாட்களாக எங்க கச்சேரி நடக்கும். எங்க தாத்தா பிரபலமான நபர் என்பதால் "மதுரை பொன்னுசாமி பிள்ளை பேரன்கள் கச்சேரி" என விளம்பரப்படுத்துவார்கள். கூட்டம் அலைமோதும்.

அப்படி தமிழ்நாடு முழுவதும் அறிமுகமான எங்கள் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை ஆல் இந்தியா ரேடியோ நிகழ்ச்சியில் கேட்டுவிட்டு இயக்குநர் ஏ.பி. நாகராஜன்  தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வர இசை பகுதிக்கு எங்களைக் கூப்பிட்டனுப்பினார். படம் முழுவதும் எங்கள் நாதஸ்வர இசைக்கு முக்கியத்துவம் தந்தார். 27-7-1968 அன்று படம் ரிலீஸ் ஆச்சு. அதுவரை தமிழகம் முழுவதும் அறியப்பட்டிருந்த நாங்க ஒரே நாளில் உலகமெங்கும் அறியப்பட்டோம். தில்லனா மோகனாம்பாளில் உள்ள பாடல்கள், அதில் நாங்கள் வாசித்த இங்கிலீஷ் நோட்.. எல்லாமே பட்டி தொட்டிகளில் ஒலித்தது. இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்துக்குப் பிறகு பட்டம், பதக்கம், பதவி எல்லாம் கேட்காமலேயே தேடி வந்தது. அதன் பிறகும் சினிமா வாய்ப்பு வந்தது. திரையுலகின் உச்சியிலிருந்த நடிகர், இயக்குநர் ஆகியோருடன் வேலை பார்த்துவிட்டோம்.

நான் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இரண்டு முறை நியமிக்கப்பட்டேன். நாதஸ்வரம் வாசிக்கும் கோயிலிலேயே அறங்காவலர் என்பது ரொம்ப கௌரவமாக இருந்துச்சு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அரசு கலைஞராக எங்களை நியமித்து கௌரவித்தார். 2000-ம் ஆண்டில் அண்ணன் (சேதுராமன்) மறைந்தார். அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைஞ்சது. இது நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. பிறகு ஜெயா டி.வி.யில் ராகமாலிகா நிகழ்ச்சியில் நடுவராகக் கூப்பிட்டிருந்தாங்க. போனேன். திருப்புகழை நாதஸ்வரத்தில் வாசித்தேன். அதைப் பார்த்த பொதுமக்கள் பொன்னுசாமி இன்னும் அதே வேகத்தோடு வாசிக்கிறார் என உணர்ந்து எங்கிட்ட பேசினாங்க. கூப்பிட்டாங்க. கடந்த வருடம் கூட சென்னை தமிழ் இசைச் சங்கம் எனக்கு இசைப் பேரறிஞர் பட்டம் தந்தது

முதல்முறையாக நாதஸ்வர சகோதரர்கள் என்ற முறையில் எங்க இரண்டு பேருக்கும் கலைமாமணி விருது கொடுத்தாங்க. இப்போது ஆண்டுக்கு ஒருவருக்கு கொடுக்கவே யோசிச்சு யோசிச்சு கொடுக்கிறாங்க.

நானும் என் அண்ணனும் நேரு, ராஜேந்திரபிரசாத். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி.. இப்படி பலர் முன்னிலையில் வாசித்திருக்கோம். 1968, 1981, 1995 ஆகிய வருடங்களில் நடந்த உலகத்தமிழ் மாநாடுகள் எங்கள் நாதஸ்வர இசையோடு தான் துவங்கிச்சு. மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் எங்கள் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதல்வரின் (ஜெயலலிதா) நாட்டிய நாடகம் நடந்தது... பழசெல்லாம் பேசி எதுக்குங்க... எனச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.

"நாதஸ்வரக் கலைஞர்களான நீங்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்" எனக் கேட்டோம். பொங்கிவிட்டார்.. "நாதஸ்வரக் கலைஞர்களுக்கு அரசு பெருசாக ஏதுவுமே செய்யல்ல. பெரும்பாலான நாதஸ்வரக் கலைஞர்கள் வெளியே சொல்லமுடியாம பசியும் பட்டினியுமா இருக்கிறாங்க. பெரும்பாலான நாதஸ்வரக் கலைஞர்கள் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கிறார்கள் இன்றைக்கு தமிழகத்தில் முப்பத்தைந்தாயிரம் கோயிலில் நாதஸ்வர கலைஞர் இல்லை. அந்த இடங்களில் கலைஞர்களை நியமித்தாலாவது பலருக்கு வேலை கிடைக்கும்...

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு "அரசு கலைஞர்" என்ற அந்தஸ்தும் கொடுத்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினார். சுமார் அறுபது பேர் வாங்கிட்டு இருந்தாங்க. மரியாதையும் இருந்தது. இப்ப அரசு கலைஞர்கள் என்ற பதவியையே எடுத்துட்டாங்க. கலைஞர் ஆட்சியிலும் அரசு கலைஞர் பதவி இல்லை. ஒரு கலைஞராக (கருணாநிதி) இருப்பவர் இப்படி செய்திருக்கலாமா? என்ற கேள்வி எங்களுக்குள் இன்னும் இருக்கு. சாப்பாட்டில முட்டையோ கொண்டைக்கடலையோ கேட்கல்ல. சாப்பிடறதுக்கு வழி செய்ங்கன்னு தான் கேட்கிறோம்.

நாங்க ஒரு ஐம்பது அறுபது பேர் இருப்போம். அவர்களுக்கு மாதம் ஒரு பத்தாயிரம் உதவித்தொகை தர அரசுக்கு எண்ணமில்லை. நாதஸ்வர கலைஞர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்கலாம். அல்லது அரசு ஒதுக்கும் வீடுகளில் ஒதுக்கீடு அளிக்கலாம். ஒவ்வொரு அரசு விழா துவங்கும் முன்னரும் மங்கள இசையோடு துவங்கலாம். அப்படியென்றால் கூட நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை அதைச் செய்தார்.

மதுரை தனக்கன்குளம் பகுதியில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இடம் ஒதுக்குனாங்க. பட்டா கொடுத்தாங்க. பத்திரம் கொடுத்தாங்க. ஆனால் அந்த இடத்தை யாரோ அரசியல்வாதி ஆக்கிரமிச்சுட்டார். எங்களால நாதஸ்வரத்தைத் தான் தூக்கமுடியும். அரிவாள் தூக்கமுடியாதுங்க..இப்ப பட்டா மட்டும் எங்ககிட்ட இருக்கு. இடம் யாரிட்ட இருக்குதோ..? எங்களை பராமரிக்க அரசு மறந்திடுச்சுங்க.

நான் எனக்காகக் கேட்கவில்லை. பெரும்பாலான நாதஸ்வரக் கலைஞர்கள் சிரமத்திலிருந்தாலும் அதை வெளியேச் சொல்ல தயங்குறாங்க.. நாங்க எந்த அரசியல் கட்சியையும் சேராதவங்க. எந்தக் கட்சிக்காரங்க பணம் தந்தாலும் நாதஸ்வரம் வாசிக்கப் போவோம். கோரிக்கையை வைத்து ஸ்டிரைக் செய்யாத ஒரு சமுதாயம் நாதஸ்வர கலைஞர் சமுதாயம் தான்.

நான் ஏதோ சேமிச்சு வச்சு கௌரவத்தை. வசதியை விடாமல் காத்துட்டு இருக்கிறேன். அதற்காக என் நிலையும் பெருசா உயர்ந்துட்டதாக நினைக்கவேண்டாம். அங்கீகாரமும் அடையாளமும் தொலைஞ்சு போறப்ப தான் வேதனையா இருக்கிறது. மதுரையில் நடமாடிட்டு இருக்கிற மூத்த கலைஞர் நான். மதுரையில்  கோடி ரூபாய் செலவழித்து "மாமதுரை போற்றுவோம்" நடத்தினாங்க. அதுக்குக் கூட என்னைக் கூப்பிடல்லீங்க. கௌரவிக்கவில்லை. வேதனையா இருக்குது. இப்படித்தான் பல சங்கீத வித்துவான்கள் வெறுத்துப் போய் இருக்கிறாங்க..

என் குழந்தைகளுக்கும் இசையைச் சொல்லிக்கொடுத்திடலாம். அது ஒண்ணும் கஷ்டமில்ல. ஆனால் அவங்க சோத்துக்கு என்ன செய்வாங்க. அவங்களை யார் காப்பாத்துவாங்க..? இப்பவெல்லாம் இசையை ஆத்மார்த்தமா ரசிக்கலாம். மனம் ஒன்றிப்போய் கண்ணீர் விடலாம்..ஆனால் அது பசியைத் தீர்க்காதுங்க.." என்றார் வேதனையுடன்.

இவரது மகன்கள் பல்வேறு துறைகளிலும் மகள் இசைக் கல்லூரியிலும் பணியாற்றி வருகிறார்கள். நான் அவருடன் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது அவருக்கு அருகிலிருந்த அவரது மகன்..."யாருங்க இப்ப திறமையை மதிக்கிறாங்க. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மூத்த நாதஸ்வரக் கலைஞர்ன்னு கூட அப்பாவைச்  சொல்லலாம். அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கல்லையே.." என்றார்.  பதில் சொல்ல முடியவில்லை. நாதஸ்வரத்தில் இங்கிலீஷ் நோட் வாசித்து துள்ளல் இசைச் தந்தவர் இன்று சோகத்துடன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com