மனதின் பயணி

இன்னொருவனின் கனவு - 33

"Life is not what one has lived, but rather what one remembers, and how one remembers it to recount it.'

- Gabriel Garcia Marquez

எது இவ்வுலகில் அறியப்படுகிற எதையும் கட்டுப் படுத்துகிறது?

எது இன்னமும் கட்டுப் படுத்தப் படாமல் இருக்கிறதோ அது.

எது எவ்வளவு தெளிவாக விளக்கிக் கூற முற்பட்டாலும் குழப்பமாகவே முடிந்து போகிறதோ அது.

எது கட்டற்ற வேகம் கொண்டதோ,
எது அளவற்ற பயணங்களை நிகழ்த்தக் கூடியதோ,
எது முன்னும் பின்னும் நினைத்த போது சென்று வருகிறதோ,
எது அசைக்க முடியாததோ,
எது அறியப் படாத கடவுள் எனப்படுகிறதோ,
எது சாத்தான் என அறியப்படுகிறதோ,
எது உணர்வுகளில் பொங்குகிறதோ,
எது தூங்கும் எரிமலை என எப்போதும் உறைந்து கிடக்கிறதோ,
எது மறைந்துஇருக்கிறதோ,
எதுவெளிப்பட்டு அமைகிறதோ,
எது புன்னகையையும் போர்க் களத்தையும் தீர்மனிக்கிறதோ,
எது முற்றிலும் விற்கவோ,வாங்கவோ,இரவல் தரப்படவோ,இயலாததோ அது.

மனது.

அமெரிக்கா என்று எதிரில் இருக்கும் நீங்கள் சொல்லி முடிக்கும் முன் நியூயார்க் சுதந்திர தேவியின் கரங்களில் போய் உட்காரும் சாகசப்பயணி அது.

அதற்கப்புறம் எஸ்கிமோ என்று சொன்னதும்,கிளம்பி,வடதுருவ பனிப்பிரதேசத்தில்,அக் குள்ள மனிதர்களின்,அவர்களை விடக் குள்ளமான வாசல் கொண்ட இக்லு வீட்டிற்குள்,தலையைக் குனிந்து உள்ளே சென்று ஹாய் சொல்லும் சாமர்த்தியப் பயணியும் கூட.



மனதின் பயணம் மிக விசித்திரமானது எனினும் மிக நிஜமானது.உணரக் கூடியது.ஆனால் விளக்க முடியாதது.நொடிக்கு நொடி பயணித்துக் கொண்டேயிருக்கும் சோர்வற்ற பயணி.காலத்தைக் கால்களில் அணிந்து கொண்டு அலையும் பயணி.

மனதின் பயணத்தைப் பதிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன வரலாற்றில்,கலையில்,அறிவியலில்.முடிந்தபாடில்லை.முயற்சி நடந்ததற்கான சாயல்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன பதிவுகளாக,படைப்புகளாக.காலத்தால் அழியாதவை அவற்றில் சில.

திருமூலர்,தருமுசிவராம்,தி.ஜா,எம்.வி.வெங்கட்ராம்,லா.ச.ரா.,ஆகியோர் ஆழ் மனதை அளக்க முயன்றதன் எஞ்சி நிற்கும் சில அற்புதத் தமிழ் படிமங்கள்.

உலக சினிமாவில் உன்னதமான சில படைப்பாளிகள் மனதைத் தேடி அலைந்திருக்கிறார்கள்.

இங்க்மர் பெர்க்மன்(14 July 1918 – 30 July 2007),ஸ்டான்லி குப்ரிக் (July 26, 1928 – March 7, 1999).

பெர்க்மானின் "வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்" (Wild Strawberries -1957),ஸ்டான்லி குப்ரிக் கின் "2001 எ ஸ்பேஸ் ஒடிஸி (2001: A Space Odyssey -1968)ஆகியன இன்னும் நம் நினைவுகளில் மிதந்து அலையும் மனதின் பயணங்கள்.படிமங்கள்.

எனினும்,நாம் தரிசிக்க இருப்பது மனதிற்குள்,அதன் கனவிற்குள்,கனவிற்குள்,கனவிற்குள்,கனவு ஒன்றை தரிசித்த,அதைக் கையகப் படுத்திய,கனவு மனதொன்றை.

கிறிஸ்டோபர் ஜோனாதன் ஜேம்ஸ் நோலன் (Christopher Jonathan James Nolan-born 30 July 1970).

மனதின் பயணி.

மனதின் பயணம் அவரின் சினிமா.

மனதின் பயணத்தை சினிமாவில் சொல்ல கொஞ்சம் வேறு மாதிரி மெனக்கெட வேண்டியிருக்கும்.ஏனெனில்,மனது காலத்தை மதியாதது.இறந்த கால,நிகழ்கால,எதிர்கால நிகழ்வுகளுக்குள் நினைத்த போது சென்று வரும் சாகசம் அதனுடையது.ஆகவே வேறு சில உத்திகள் தேவைப் பட்டன,மனதின் பயணத்தைப் பதிவு செய்ய.

நியோ-நொ'ர்(neo-noir:neo-புதிய,noir-கருப்பு,இருண்மை-NinoFrank,1946)என்றழைக்கப்படுகின்றன இந்த உத்திகள்.



ஆரம்பத்தில்,1950களில் நியோ நொ'ர் அல்லது பிலிம் நொ'ர் என்கிற வார்த்தை சமூகத்தின் இருளான அம்சங்களைக் கதைப் பொருளாகக் கொண்ட,கிரைம்,சைக்கோ த்ரில்லர்,ஆண்ட்டி ஹீரோ பாணி சினிமாவைக் குறிக்கும் (The Postman Always Rings Twice-1943,Luchino Visconti:stray dog-1949,akira kurosawa) ஒன்றாகவே பயன்பாட்டில் இருந்தது.70-களில் அதன் பொருள் இன்னும் விசாலமானது.இங்க்மர் பெர்க்மன்,ஸ்டான்லி குப்ரிக்,டேவிட் க்ரோனேன் பெர்க்,போன்ற இயக்குனர்கள் நியோ நொ'ர் உத்தியை மனதைத் திரைப்படுத்த உதவும் தொழில் நுட்பமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.இந்த மாற்றம் சினிமாவின் தேவையின் பொருட்டு தானாகவே நிகழ்ந்த மாற்றம் என்று தான் கொள்ளவேண்டும்.இவர்கள் யாரும் நியோ-நொ'ர் சினிமா எடுத்தே ஆகவேண்டும் என்று அவ் வுத்தியை உபயோகப் படுத்தியவர்கள் இல்லை.ஆனால் அவர்களின் திரைக் கதை அமைந்த விதம்,அவர்களின் சினிமா சொல்லப்பட்ட முறை,ஆகியவை நியோ நொ'ர்என்கிற பொது சினிமா கோட்பாட்டுக்குள் அவர்களை இணைத்தது.இந்த மாற்றம் நியோ நொ'ர் கோட்பாட்டை"மனித மனம்,அதன் செயல்பாடுகள்,அதன் இருண்மை மற்றும் குற்றங்கள்,அறிவு,நினைவாற்றல் மற்றும் அடையாளச் சிக்கல்களைக் குறித்த தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் கோட்பாடாக" பரிணமிக்க வைத்தது.

சரி,பிலிம் நொ'ர் அல்லது நியோ நொ'ர் (neo noir) கோட்பாட்டின் சினிமா அடையாளங்கள் என்ன?

* குறைந்த ஒளி அமைப்பு அல்லது லோ லைட்டிங்,ஆழமான நிழல் தன்மை(shadows)கொண்ட காட்சி அமைப்பு,நிலையற்ற,தெளிவற்ற கேமரா கோணங்கள்.
* முன்னும் பின்னும் சொல்லப் படும் நான் லீனியர் திரைக்கதை அமைப்பு,ரிவர்ஸ் க்ரோனாலாஜி.
* பொதுவான,நம்பிக்கையற்ற மனப் பான்மை நிலவும்,அல்லது அதை உருவாக்கும் கதை,மற்றும் தன்னிலை இழக்கும் கதாபாத்திர அமைப்பு.
*குற்றவியல் கதைகள்,சம்பவங்கள்,விசாரணையாளரின் கோணத்தில் இருந்தோ,அல்லது குற்றம் சாட்டப் பட்டவரின் கோணத்தில் இருந்தோ சொல்லி அமைபவை.
* யார் ஒருவரைச் சார்ந்தும் அமையாத கதை பாணி.தர்மம்,நியாயம்,குற்றம்,தண்டனை எது குறித்தும் விளக்கம் சொல்ல முற்படாத வெளிப்படையான ட்ரீட்மென்ட்.
* ஆரம்பம்,இடைவேளை,முடிவு பற்றி அக்கறைப் படாத நம்ப வைக்கும்,நம்ப முடியாத சினிமா.



இந்த அடையாளங்கள் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வரும் தமிழ் சினிமாக்களில் கமல்ஹாசனின்,விருமாண்டி,ஆளவந்தான்,மணிரத்னத்தின்,ஆயுதஎழுத்து,வெற்றிமாறனின்,பொல்லாதவன்,செல்வராகவனின்,புதுப்பேட்டை,தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டமும் குறிப்பிடத் தக்கவை.

சமகால உலக சினிமாவின் neo-noir' அடையாளமாகக் கருதப் படுபவர்,போஸ்ட் மாடர்னிச சினிமாவின் ஜீனியஸ் என்று மதிக்கப் படுபவர் கிறிஸ்டோபர் நோலன்.அவருடைய இன்சப்சன்(inception) மாபெரும் நியோநொ'ர் பயணம்.மனதின் பயணம்.கனவுகளின் பயணம்.அவருடைய பேட்மேன் வரிசைக்கு முந்திய அனைத்துப் படங்களுமே மனதின் கட்டற்ற நியோ நொ'ர் பயணங்கள் தான்.வியக்க வைக்கும் இருண்மை சினிமா பாணி அவருடையது.

நோலன் உடைய அதி பிரமாண்ட ஐமேக்ஸ் கனவான "தி டார்க் நைட் ரைசஸ்" ஆரம்பித்து அவருடைய அதி எளிய 16mm கருப்பு வெள்ளைக் கனவான " பாலோயிங்"(following) வரைக்கும் ரிவர்ஸ் க்ரோனாலாஜி பயணம் ஒன்றைச் செய்தோமென்றால் நவீன சினிமாவின் நவீன மனம் குறித்த பிம்பம் நமக்கு கிடைக்கக் கூடும்.

அப்போது பேட்மேன் நொடித்துப் போயிருந்தார்.1997-ல் ஜோயல் ஷுமேக்கர் (Joel Schumacher) ஜார்ஜ் க்லூனியை வைத்து,அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்,உமா துர்மன் என்று நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கிய பேட்மேன்&ராபின் 4 ,ஹாலிவுட் ட்டின் சோக சரித்திரம் ஆகியிருந்தது.வார்னர் பிரதர்ஸ் அதற்கப்புறம் பேட்மேன் பெயரையே மறந்து போயிருந்தது.கிறிஸ்டோபர் நோலன் அப்போது மொமேண்டோ(momento-2000) என்கிற ஹாலிவுட் டைத் திரும்பிப் பார்க்க வைத்த சினிமாவைச் செய்திருந்தார்.அவருடைய அடுத்த படமாக கனவுகளை மையமாக வைத்து அவர் பத்து வருடங்களுக்கும் மேலாக யோசித்துக் கொண்டிருந்த கதைக் களம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார்.

கனவுகளைக் களவாடுபவர்கள் பற்றிய கதை (inception) அது.நோலனுடைய எண்பது பக்க ட்ரீட்மெண்ட் படி அப் படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு அதகளமான தயாரிப்பு நிறுவனமும்,அதி அதிக பட்ஜெட்டும் வேண்டும் என்று புரிந்து கொண்டார்.ஏனெனில் 2001-ல் அவர் அணுகியபோது வார்னர் ப்ரதர் நிறுவனமே கம்'மென்று இருந்தது.சரி,inception எடுக்க பெரிய பட்ஜெட் சினிமா இயக்கிய அனுபவம் தேவை என்று புரிந்து கொண்டார் நோலன்.வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் தூசி படிந்து போயிருந்த பேட்மேனையே மறுபடி தூசி தட்டி* புத்துயிர் கொடுக்க எண்ணினார்.பேட்மேன் பிகின்ஸ் (batman begins) சினிமாவுக் கான ஐடியா உருவானது.இது வரைக்கும் காட்டப் பட்டு வந்த பேட்மேன் வரிசைப் படங்களில் வெறும் பிரமிப்பும்,ஸ்டைலும் தவிர வேறெதுவும் இல்லை என்று கருதிய நோலன்,பேட்மேன் பிகின்ஸ் படத்தில் பேட்மேனுக்கு ஒரு மனதை நிர்மாணித்தார்.அது சாதாரண பின்னணி உள்ள எளிய மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய மனது.அந்த மனது சூழ்நிலைகளின் தாக்கத்தால் அசாதாரணமான சூப்பர் ஹீரோ ஆக உருவெடுக்கிறது.உணர்வுப் பூர்வமான கதைப் பின்னணி யுடன் புதிய பேட் சூட்(batsuit),புதிய பேட்மொபைல் வாகனம்(batmobile),புதிய கதைக் களம்,ஒரு மெட்ரோ நகரைப் போன்ற லுக் குடன் கோதம்(gotham) சிட்டி எல்லாம் உருவானது.2005-ல் ரிலீஸ் ஆன பேட்மேன் பிகின்ஸ் புதிய வரிசைக்கான அடித்தளம் இடும் வகையில் வெற்றி பெற்றது.வார்னர் பிரதர்ஸ் நோலன் மேல் நம்பிக்கை வைத்தது.ஆனாலும் inception நோலன் கையில் தான் இருந்தது வெறுமனே.அவரின் மனதில் தீராத தாகத்தை மீண்டும் மீண்டும் உண்டு பண்ணியபடி.இன்னும் பிரமாண்டமாக ஒரு படம் செய்து விட்டு,inception செய்யலாம் என்று தோன்றியது நோலனுக்கு.ஹாலிவுட் மற்றும் உலக சினிமாவை மிரள வைத்த,அசர வைத்த,மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப் பட வைத்த பேட்மேன் வரிசையின் இரண்டாவது சினிமா உருவாக ஆரம்பித்தது.இந்தமுறை வார்னர் பிரதர்ஸ் உள்ளே ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க வரவில்லை.நோலன்.நோலன்.நோலன்.அவருடைய neo-noir மனம் மறுபடி வெளியே குதித்தது அதி சுதந்திரமாக.

தலைப்பில் கூட பேட்மேன் இல்லாத முதல் பேட்மேன் சினிமா.

"வாருங்கள்,சட்டங்கள் ஏதுமற்ற உலகத்திற்கு."
என்று ஆசை காட்டிய நோலனின் தெனாவெட்டு சினிமா.

தி டார்க் நைட்.( the dark knight,welcome to a world without rules).

நோலனின் neo noir மனம் பேட் மேன் சினிமாவில் நிகழ்த்திய முதல் மாறுதல் மிஸ்டர் ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் தான்.வழக்கமாக பேட்மேன் சினிமாவில் அனார்க்கி, பேனி, ப்ளாக் மாஸ்க், கேட்மேன், கேட் உமன் என்று விதவிதமான எதிரிகள் பேட் மேனுக்கு இருந்தார்கள்,டிசி காமிக்ஸ் காலத்தில் இருந்தே.ஆனால்,தி டார்க் நைட் படத்தில்,நோலன்,மிஸ்டர் ஜோக்கர் (Heath Ledger) என்கிற,கிங் சைஸ் இருண்ம கதாபாத்திரத்தை,பிரதான வில்லன் ஆகத் தேர்ந்தெடுத்தார்.ஜோக்கர் ஹீரோ என்று தன்னை நம் மனதுக்குள் புகுத்தி விடும் அபாயங்கள் நிறைந்த அசத்தல் கோணங்கி கதாபாத்திரம்.தி டார்க் நைட் என்கிற பேட்மேன் சினிமாவில்,நீக்கமற நிறைந்து விஸ்வரூபம் எடுத்து தலை விரித்து ஆடிய ஜோக்கருக்கு உயிர் கொடுத்தவர் ஹீத் லெட்ஜர்.உலக சினிமா வரலாற்றில் ஹீத் லெட்ஜரின் அற்புதமான ஜோக்கர் பர்பார்மன்ஸ் அழிக்க முடியாத காவியமாகவே நீடித்திருக்கும் வெகு நாளைக்கு.ஹீத் லெட்ஜர் அற்புதமான ஆஸ்திரேலிய நடிகர்.10 Things I Hate About You (1999), The Patriot (2000), A Knight's Tale (2001), Brokeback Mountain (2005) என்று தனது இருபத்தொன்பது வயதுக்குள் பத்தொன்பது படங்கள் நடித்தவர்.ஏகப் பட்ட விருதுகள் வாங்கியவர்.தி டார்க் நைட் படத்தின் விளம்பரங்கள் அவரை,அவரின் ஜோக்கர் கதாபாத்திரத்தை வைத்தே தீர்மானிக்கப் பட்டிருந்தன.நிஜமான இருள் மனிதரான வாழ்க்கை அவருடையது.இரண்டு மணிநேரம் கூட என்னால் தூங்க முடியவில்லை,என் மனம் தீப்பற்றி என்னை எரித்துக் கொண்டே இருக்கிறது என்று சொல்லி வந்த ஹீத் லெட்ஜர் தி டார்க் நைட் படம் ரிலீஸ் ஆகுமுன் தவறான மருந்து உட்கொண்டதன் காரணமாக இறந்து போனார் (4 April 1979 – 22 January 2008).இறப்பதற்கு முன் நியூயார்க் டைம்ஸ் நாளிதளுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,தன் 'தி டார்க் நைட் ஜோக்கர்' கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தார் ஹீத் லெட்ஜர் "கொஞ்சம் கூட கருணையோ,பச்சாதாபமோ அற்ற,கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலை செய்யக் கூடிய,மனநிலை பிறழ்ந்த,ஸீஸோபினிக் கோமாளி".இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் அளவற்ற அன்பு செலுத்துமாறு,உருவாக்கிய நோலனின் இருண்ம ஐமாக்ஸ் கனவு ஹாலிவுட் பார்த்திராத வசூல் மற்றும் வெற்றி சரித்திரத்தை எழுதியது.விமர்சகர்களும் கொண்டாடிய படம் அது.ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது(அவருடைய இறப்புக்கு பின்) கிடைத்தது.சமீபத்தில் வெளியான தி டார்க் நைட் ரைசஸ் அதன் தேவை குறித்த கேள்விகளை எழுப்பும் விதமாக இருந்தாலும் அதன் முதல் நாள் திரையிடலின் போதே,கொலராடோவில்,டென்வர் புறநகர் தியேட்டர் ஒன்றில்,நள்ளிரவில் ஜேம்ஸ் ஹோம்ஸ் என்கிற இளைஞன் நிகழ்த்திய வெறியாட்டத்தில் 12 உயிர்களைக் காலி செய்திருக்கிறது.அறுபது பேர் படுகாயம் அடைந்த அந்த சம்பவத்தை நிகழ்த்தி விட்டு,கார் பார்க்கிங்கில் அமைதியாக நின்றிருந்த ஜேம்ஸ் ஹோம்ஸ் சொன்னது,"நான் ஜோக்கர்,நான் பேட்மேனின் பரம விரோதி!".ஒரு இருண்ம படம் என்ன நிகழ்த்தும் என்று உலகில் யாருக்கும் புரிய வைத்த துன்பியல் சம்பவம்.

தி டார்க் நைட்டின் சரித்திரப் புகழ் பெற்ற வெற்றிக்கும்,தி டார்க் நைட் ரைசசின் கழுவ இயலா துன்பியல் சம்பவத்துக்கும் இடையில் நிகழ்ந்தது கிறிஸ்டோபர் நோலனின் விளங்க இயலாக் கனவு.உலக நியோ நொ'ர் சினிமா வரலாற்றின் மாஸ்டர் பீஸ்,பிரமாண்டக் கனவு,நோலனை உலக சினிமா மறக்க முடியாமல் இருக்கச் செய்த பரவசக் கனவு.

inception(2010).the beginning.ஆரம்பம்.

இன்செப்ஷன் என்ன செய்தது உலக சினிமாவுக்கு என்றால்,வணிக சினிமாவுக்கும்,அதி அற்புத கலைப் படைப்புக்கும் இருந்த எல்லையற்ற இடைவெளியைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்தது தான்.சினிமாவில் எதை சொல்ல முடியும்,எந்த மாதிரியான காண் அனுபவத்தை நிகழ்த்த முடியும் என்று புதிய எல்லைகளை வகுத்ததும் அதுவே.மனதின் எல்லையற்ற சூட்சுமங்களைக் கனவு கண்டதும்,அதற்கு அறிவியல் ரீதியான விளக்கங்களைத் தர முற்பட்டதும் தான்.நோலன் தன் படைப்பாற்றலின் உச்ச கட்டத்தை நிகழ்த்திய சினிமா அது.அப்படி ஒரு சினிமா செய்ய இயலுமா என்று இன்றைக்கும் ஜாம்பவான்கள் பலரையும் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கும் சினிமா.

பிரக்ஞை அற்ற மனது ஒன்றிற்குள் உட்புகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.அதற்குள் புகுந்து அந்த மனதின் சந்தோசம்,துக்கம்,திட்டம்,கருத்து,விருப்பு,வெறுப்பு,வக்கிரம்,கனவு அனைத்தையும் தரிசிக்க முடிகிறது.இப்போது எழும் கேள்வி என்ன வெனில்,இப்போது இதன் அடுத்த கட்டம்,இதை தரிசித்த இன்னொருவனின் மனதை எட்டிப் பார்த்த,இன்னொருவனின் கனவைக் கையாடிய உங்களின் எதிர்வினை எப்படி அமையும்?அது நல்லதுக்கா?இல்லை சர்வ நாசத்துக்கா?இது தான் ஓரளவு தெளிவாக விளக்க இயன்ற இன்செப்ஷனின் ஒன்லைன்.

மனம் மற்றும் கனவுகள் குறித்த பல் வேறு பார்வைகள்,சாத்தியங்கள்,கேள்விகள்,பதில்கள் ஆகியவற்றின் உணர்வு பூர்வமான,ஓரளவு அறிவியல் பூர்வமான சம்பவத் தொகுப்பு இன்செப்ஷன்.

உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனது.ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஏகப் பட்ட கனவுகள்.அந்த கனவுக்குள் புகும் போது அது கனவா,நிஜமா என்று புகுபவருக்கு தெரியும்.காண்பவருக்கு அது நிஜம் தான்.அது கனவு என்று அவர் உணராமலிருக்க ஒன்றன் உள் ஒன்றாக மூன்று அடுக்கு கனவுகள்,எது கனவு எது நிஜம் என்று உட்புகுபவர் தெரிந்து கொள்ள பம்பரம் சுற்றும் டெக்னிக்,அவருடைய கனவிற்குள் நாம் செய்ய வேண்டிய வேலைகள் முடிய தேவைப் படும் விஷயம் அந்தக் கனவை நீட்டித்தல்,அதற்கு உபாயம் மயக்க மருந்து,கனவிற்கும் நிஜத்திற்கும் ஆன கால முரண்பாடு,நிஜத்தில் பத்து நிமிஷ கனவு என்பது பல நாட்களின் அனுபவமாக கனவில் உணரப்படும் தன்மை,பத்து நிமிஷத்தில் பல நாட்கள் என்றால் பத்து வருடம் கனவில் வாழ்ந்தால் எத்தனை வருடங்கள் கனவில் கழியும்?கனவில் இருந்து வெளியே வர என்ன செய்யலாம்?கனவில் தற்கொலை செய்து கொள்ளலாம்,கனவில் தற்கொலை செய்துகொண்டு,நிஜத்தில் மயக்கத்தில் இருப்பவர்கள் கனவில் இருப்பார்களா,நிஜத்தில் இருப்பார்களா?நிஜத்தில் தற்கொலை செய்துகொண்டு தான் கனவில் இல்லை என்று நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்பு மட்டும் தான் உண்டு,சரி கனவில் தற்கொலை செய்து கொண்டு அதை கனவில் தான் செய்தேன் என்பதை நிரூபிக்க நிஜத்திலும் தற்கொலை செய்து கொள்ளும் ஒருவர் திரும்ப அவருக்குத் தெரிந்த இன்னொரு மனதின் சிந்தனைகளை பாதிக்க முடியுமா?அந்த பாதிப்பில் இருந்து எப்படி தப்புவது?மறுபடியும் கனவிற்குள் தற்கொலை செய்து கொள்வது தான்.கனவில் தற்கொலை செய்து கொண்டு நிஜத்தில் பிரக்ஞ்சை அற்று இருக்கும் ஒருவரின் நிஜ மனதின் நிலை என்ன?அது வாழ்கிறதா,இல்லைசிந்தனைகளின் ஜடமாக நீடிக்கிறதா?

இவ்வளவு சாத்தியங்களையும் சொல்லி அதை ஒரு கதையின் மையப் புள்ளியில் விவரித்து முடியும் கனவின் பேரனுபவம் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.உலகம் மிரண்ட காண் அனுபவம்.35mm கனவு.வணிகம்,விமர்சக மரியாதை,ரசிகர்களின் அங்கீகாரம் என எல்லாவற்றிலும் நோலனை தலை நிமிர வைத்த இன்செப்ஷன் இன்னொரு 16mm புள்ளிக்கு நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.நோலனின் ஆரம்பப் புள்ளி.அந்த ஐமேக்ஸ் கனவு நாயகனின் எளிய முதல் அடி.பர்ஸ்ட் ஸ்டெப்.அவரே ஒளிப் பதிவு செய்து,அவரே இயக்கி,அவரே எடிட் செய்த,வார விடுமுறை நாட்களில் மட்டும் படமாக்கப் பட்ட,அவரின் நண்பர்கள்,சகோதரர்கள் மட்டுமே பங்கு பெற்ற,ஒரு அடி பிலிம் கூட வீணாகி விடக் கூடாது என்று ரிகர்சல் பார்த்து,ரிகர்சல் பார்த்து ஷூட் செய்த ஒரு மணி நேர கருப்பு வெள்ளை சினிமா.தூய நியோ நொ'ர் சினிமா.மனதின் பயணம்.கன்னா பின்னா வென்று சம்பந்தப் படுத்திப் பார்த்தால் அவருடைய லேட்டஸ்ட் தி டார்க் நைட் ரைசசின் துன்பியல் நிகழ்வுக்கு காரணமான ஜேம்ஸ் ஹோம்ஸ் என்கிற அந்த அமெரிக்க,தன்னை ஜோக்கர்,பேட்மேனின் விரோதி என்று அறிவித்துக் கொண்ட இளைஞனின் மனது ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதற்கான விளக்கம் நோலனுடைய இந்த ஆரம்ப மனதின் பயணத்தில் கிடைக்கக் கூடிய விபரீத சாத்தியம் உண்டு.நோலன் என்கிற மனதைச் சுற்றி எதுவும் சாத்தியம் தான்,அது இருண்ம அனுபவம் எனும் போது.நோலனின் முதல் சினிமா அப்படி ஒரு அனுபவம் தான்.

following(1998).

பின்தொடரும் மனதொன்றின் பயணம்.விபரீத பயணம்.

கையுறைகளை அணிந்து கொண்டு,அந்த ஜூவல் பாக்ஸைத் திறக்கிறது ஒரு கை.ஒரு பாசி மணி கழுத்தணிகலன்,கொஞ்சம் புகைப் படங்கள்,ஒரு காய்ந்த கடல் குதிரையின் படிமம்,கொஞ்சம் டாலர்கள்...பாக்ஸை மூடுகிறது அந்தக் கை.குரல் ஒன்று ஒலிக்க ஆரம்பிக்கிறது.சுய அறிமுகம் செய்த படி.நான் லண்டன் தெருக்களில் தினசரி பயணிப்பவன்.வெறும் பயணம் போர் அடித்த நிமிடம் ஒன்றில்,அங்கே திரியும் முகம் அறியாத அந்நியர்களைப் பின் தொடர ஆரம்பித்தேன்.உள் நோக்கம் என்று எதுவும் கிடையாது.காட்சி நிகழுக்கு வருகிறது.அந்த புலனாய்வு அதிகாரி முன் அமர்ந்திருக்கிறான் அந்த இளைஞன்.அவர் கேட்கிறார் வேறு எதற்காக அவர்களைப் பின் தொடர்ந்தாய்,உள் நோக்கம் எதுவுமின்றி? டிடெக்டிவ் ஆகவேண்டும் என்கிற ஆசையிலா?இல்லை.இது இளைஞனின் பதில்.அப்புறம் வேறேதாவது செக்ஸ்...ச்சே ச்சே பெண்களைப் பின் தொடர்ந்திருக்கிறேன்,ஆனால்,தவறான நோக்கம் எதுவுமில்லை,அப்புறம்,எதற்காக பின் தொடர்ந்தாய்? அது வந்து நான் எழுத்தாளர் ஆக விரும்புபவன்.என் கதாபாத்திரங்களைத் தீர்மானிக்க அந்நியர்களைப் பின் தொடர்ந்தேன்.இப்போது சுய கதை சொல்லல் மறுபடியும் அர்மபிக்கிறது.இப்படித் தான் அந்த கருப்பு கோட் சூட் அணிந்த மனிதனைப் பின் தொடர ஆரம்பித்தேன்.ஆனால்,ஒரு ரெஸ்டாரண்டில் அவன் நான் அவனைப் பின்தொடருவதைக் கண்டு பிடித்து விட்டான்.

அந்த கருப்பு கோட் சூட் போட்ட மனிதன் நமது பின் தொடரும் ஹீரோவின் வாழ்க்கையில் அதற்கப்புறம் ஏற்படுத்திய மாற்றங்களின் விபரீத விளைவு தான் படத்தின் ஆரம்பத்தில் வரும் புலனாய்வு விசாரணைக் காட்சி.உண்மையில் அந்த கருப்பு கோட் சூட் போட்ட மனிதன் தான் நமது எழுத்தாளர் ஹீரோவைத் தேர்ந்தெடுத்துப் பின் தொடர்ந்திருப்பான்.முன் பின் நகரும் நியோ நொ'ர் நான் லீனியர் திரைக் கதையில் நம்மைக் கட்டிப் போடும் காண் அனுபவம் அது.அலையும் கோணங்கள்,காட்சிக்கு காட்சி உடையும் ஏற்கனவே உருவாக்கப் பட்ட நம்பிக்கைகள்,வீட்டைத் திறந்து கொள்ளை அடிக்காமல்,வேறு யாரோ வந்து போயிருக்கிறார்கள் என்கிற பயத்தை மட்டும் ஏற்படுத்த சில விஷயங்களைச் செய்து வெளியேறும் சைக்கோத் தனம் என்று மிகவும் சிக்கலான,விறு விறுப்பாக கொண்டு செல்லப் பட்டிருக்கும் கருப்பு சினிமா following.ஒரு காட்சி ஏன் வருகிறது என்பதன் முழு விளக்கமும் அடுத்த பத்தாவது காட்சியைப் பார்த்த பிறகு,நாமே இரண்டையும் இணைத்து யூகிக்கும் போது தான் தெரியும் என்கிற நோலனின் திரைக்கதை ஸ்டைல் அவரது பிற்கால படங்களின் வெற்றிக்கு அவரின் சகோதர்கள் அமைத்த திரைக்கதை தான் காரணம் என்று சொல்பவர்களுக்கு நோ சொல்லும் ஒரு பருக்கை உதாரணம்.

நம்மைச் சுற்றி இருக்கும் உலகம்,அதன் நிகழ்வுகள் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி அல்ல என்பது தான் அவருடைய பொதுவான சினிமா வெளிப்பாடு.

வெறும் $48,482 மட்டுமே வசூல் செய்த நோலனின் முதல் படத்தைப் பார்த்து விட்டு,அவரின் அப்போதைய காதலியும்,இப்போதைய மனைவியும் ஆன எம்மா தாமஸ் கொடுத்த மேமெண்டோ(memento) ஸ்கிரிப்ட்டைப் பார்த்து அசந்து போன new market films நோலனுக்கு அதை சினிமா ஆக்க 4.5 மில்லியன் டாலர் பட்ஜெட்டும்,வாய்ப்பும்(1999) கொடுத்தது.அப்போது நோலன் யாருக்கும் சொல்லாமல் ஒரு கனவில் மூழ்கியிருந்தார்.கனவுகளைக் களவாடுவது குறித்த கனவு அது.memento வெளியாகி வெற்றி பெற்றதும்,அந்தக் கனவை நோலன் வார்னர் பிரதர்ஸ் க்குச் சொல்லலாம் என்று எடுத்துப் போனார்.ஆனால் வார்னர் ப்ரதர் நிறுவனமே கம்'மென்று இருந்தது.சரி,inception எடுக்க பெரிய பட்ஜெட் சினிமா இயக்கிய அனுபவம் தேவை என்று புரிந்து கொண்டார் நோலன்.வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் தூசி படிந்து போயிருந்த பேட்மேனையே மறுபடி தூசி தட்டி*

ஆரம்பித்த புள்ளியில் முடிந்து,முடிந்த புள்ளியில் ஆரம்பிக்கும் கனவு அனுபவம் நோலனின் சினிமாவுக்கு மட்டும் அல்ல அவரது சினிமா வாழ்க்கை க்கும் பொருந்தும் என்பதற்கு தான் மேற்சொன்ன * இணைப்பு.

கிறிஸ்டோபர் நோலன் என்கிற அற்புத மனது இயங்கும் விசித்திரத்தின் ஒரு துளியாவது அவரைப் பற்றி,அவரின் சினிமா எழுதுகிற கட்டுரையில் இருக்க வேண்டாமா? ஏனெனில்,தூண்டும் சினிமா நோலனுடையது.பல நேரங்களில் அற்புதங்களையும்,சில நேரங்களில் மரணங்களையும்.

இன்னொருவனின் கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள் தோறும் இரவு குமரகுருபரனின்'இன்னொருவனின் கனவு' அந்திமழையில் வெளிவரும்....

'இன்னொருவனின் கனவு' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com