மாநகர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள்

இதமாய் பெய்யும் மழை - 1

மஞ்சணத்தி
தமிழச்சி தங்கபாண்டியன்.


மனித வாழ்வில் முரண்கள் , முடிச்சுகளுக்கு முக்கிய இடம் உண்டு.வாழ்க்கையின் அணைத்து கேள்விகளுக்கும் பதில் எளிதாக கிடைத்துவிடுமானால் சுவாரஸ்யங்களே இல்லாமல் போகும் ... சுவையே அற்றுப் போய் விடும் அபாயமுண்டு ,பிறகு ஏது படைப்புகான வெளி ? கலை இலக்கியப் பரப்புக்கான இடம்.?
மனித வாழ்வில் மரவல்லிப் பூக்களைப் போல நிறைந்திருக்கும் முரண்களின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சியாகவும், முடிச்சுகளை அவிழ்க்கும் பாவனைகளாகவுமே - இன்னும் சொல்லப்போனால் இவற்றின் ஒரு பயிற்சியாகவே இதுகாறும், புரியாத பூடக பூட்டுகளைத் திறக்கும் திறவுகோலாகவே கவிதைகளை தன்னிடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை எவருமே மறுக்க இயலாது.தமிழச்சியின் கவிதையுலகமும் முரண்களால் முடிச்சுகளால் ஆனதாகவே இருக்கிறது,மல்லாங்கிணறு கிராமத்தின் குளிர் நீருக்கும் , சென்னையின் 20 லிட்டர் மினரல் வாட்டருக்கும் இடையேயான இடைவெளிகளைத் தேடும் முயற்சி அது.!தூரத்தை அளவிடுவது ! துயரத்தைப் பதிவு செய்வது ...! இந்த பயணத்தில் மஞ்சணத்தி - யின் பல கவிதைகள் ஒட்டுமொத்த மாநகர வாசிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களாக பதிவாகி உள்ளன.!
கிராமங்களில் இன்றைக்கும் குப்பைகளுக்கோர் இடமுண்டு, மதிப்புண்டு, மாநகரமோ தன்னை இரண்டாக பிரித்து , 'ஆசிரியருக்கு கடிதம் எழுதும் ' ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்கு வெளிநாட்டு நிறுவனங்களைக் (!) கொண்டு குப்பையள்ளும் பணியையும், கேள்விகளே இல்லாத , இலவசங்களுக்காக எதையும் ஏற்று கொள்கிற இன்னொரு பகுதியில் மொத்த குப்பைகளையும் கொட்டும் பகுதியாகவும் பகுத்து கொள்கிறது ( வட சென்னையில் கொடுங்கையூர், கொருக்குபேட்டை பகுதிக்கு சென்று மூச்சி இழுத்து சுவாசித்த பின்னும் உயிரோடு இருப்பவர்கள் பாக்கியவான்கள்.! )
தன் வீட்டு குப்பைகளை எருக்குழிக்குள் தள்ளி மூடி நிலத்துக்கு உரமாக்கும் கிராமங்களையும் , வேளச்சேரி பாலத்தின் வேகப் பயணத்தில் சுவாசிக்கவிடாமல் தொல்லைபடுத்தும் அழுகிய குப்பை நாற்றத்தையும் இணைக்கும் வண்ணம் பதிவாகும் ஓர் வாக்குமூலம் தமிழச்சியிடமிருந்து.
" யாரும் கவனிக்காத அந்தக்
கணத்திற்க்காகக் காத்திருந்து
தெருவில் குப்பையைக் கொட்டியாயிற்று "
- ஆனால் கழுவித் துடைத்த பின்பும் ஒட்டிக் கொண்டிருப்பது மாநகர்களின் குற்ற உணர்வின்றி வேறென்ன..?
தங்கள் வீட்டு நெகிழிக்குப்பைகளைப் பொது சாக்கடைக்குள் யாருமறியாமல் கொட்டி செல்லும் மாநகர்களிடையே மனசாட்சியுள்ள ஒரு படைப்பாளியின் குரலும் முனகலாய் ஒலிக்கிறது.
" குடியிருப்பில்
அவரவர் கதவிலக்கம்/மின் கட்டணபெட்டி
பால் , தபால் பைகள்.
எல்லாமும் பிரித்தாயிற்று
திடிரென அடைத்துக் கொள்ள
எப்படி பிரிக்க அவரவர் சாக்கடையை.?

நட்சத்திர குறியிட்ட நல்லக் கேள்வி ! ஆனால் அதே சாக்கடையின் கறுத்த அழுக்கில் அல்லுவோர் கரைந்து மறைந்து கிடக்கிறது பதில்! அதே நேரம் இயற்கை பதில் எழுதுவது தனக்கே உரிய குரூரமான முறைகளில் தான் என்பதையும் சுனாமி சீற்றத்தையும் , ஜூலை 2006ல் மும்பை பெருமழையையும் பத்தி நதியின் சீற்றலையும் கொண்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழச்சிக்கு வாய்த்த கிராமம் / மாநகரம் என்ற இரட்டை வாழ்வு முறை அவருக்குள்ளிருக்கும் படைப்பாளியின் ஈரமனசை அவஸ்தைக் குள்ளாக்குகிறது , பாடாய் படுத்துகிற பிரச்சனைகளோ பாடு பொருளாகின்றன , வாசகனைத் தொந்தரவு செய்து தூங்க விடாமல் செய்யும் புதிய அனுபவப் பதிவுகளை தந்து யோசிக்க வைக்கின்றன.


- கூப்பிடு தூரத்தில் கடலிருக்க , போய்ப் பார்க்காமல் , கடல் பற்றிய கவிதை எழுதுபவர்கள்.
- கர்ப்பிணியின் வாந்தியினை எடுத்து உண்ணும் எத்தியோப்பியக் குழந்தைகளின் பட்டினியைக் தொலைக் காட்சியில் பார்த்த பின்பும் கலவி இன்பம் துய்க்கிற மாநகரவாசி !
- அடுத்த வீட்டுக்குள் குலை தள்ளி விடுமோ தன் வீட்டு வாழை என்கிற பதட்டம் .
- அறிமுகமற்றவர்களுடனான உரையாடலைத் தொடங்க இயலாத நகரத்து கூச்சம்.
- பதகை குளிரில் மிதக்கும் பெரு நகர வணிக வளாகத்துக்கு விஜயம் செய்கிற வனபேச்சியின் ஆச்சர்ய காதை..!
எனப் பல்வேறு ஒப்புதல் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ள அதே வேளையில் இதெற்கெல்லாம் காரணங்கள் யார் என்ற பதிலும் 'கொதி சுவை' என்ற கவிதை வழியாக பதிவாகிறது.
" உறங்கி கொண்டிருந்த
அக்கிராமத்தின் அந்தரங்கத்திய
அறிவித்தலற்ற வன்புணர்வாய்
அதிர புகுந்தது அந்த நாள்."
இது போன்ற குரல்கள் கன்னியாகுமரியின் கடலோர கிராமத்தில் அணு உலை நிறுவப்படும் போது, பசிய மலைகளின் இதயங்கள் மீது அடுக்ககங்கள் எழுப்பபடும் போதும் , கிராமங்களை அபகரித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கலாக முகம் மாற்றும் போதும், ஒரிசாவின் கடற்கரைக் கிராமங்களின் வேர் மனிதர்களைத் துரத்தியடித்து ஏவுகனைகளால் நிரப்பும் போதும், நிச்சயம் பதிவாகும்.! இவை உலகமயமாக்கல் தந்த பரிசுகள்.! அதிகார மையங்கள் அணிவிக்கிற டாலர் பதக்கங்கள்.!
மழையும் , மழை சார் வாழ்வையும் பதிவு செய்து படம் பிடிக்கிற கவிஞர் வெயில் ருசி யையும் பதம் பார்க்கிறார் .
மஞ்சணத்தி தொகுப்பின் ஈர்ப்பு மையமாய் , நவீன பார்வையுடன் கூடிய கவிதை -திரும்புதல் !
முழுக்க முழுக்க எண்களினாலான உலகம் நவீன மயமாக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கனம் சுழல்கிறது என்பதை மிக நுட்பத்துடன் எளிய மொழியிலும் தந்திருக்கிறார் தமிழச்சி . மிக சிறந்த குறும்படத்துக்கான கருவாகும் இந்த கவிதை.!
" தமிழச்சியின் முதல் தொகுப்பில் கிராமம் மீதான ஒரு மீன்வேட்கை ( நாஸ் டால்ஜியா) அவரை உந்துகிற சக்தியாக இருக்கிறது , இரண்டாம் தொகுப்பில் ஒரு பொது உருவமாக தலை காட்டும் வனப்பேச்சி , மூன்றாம் தொகுப்பில் ஆச்சர்யப்பட வைக்கும் கவித்துவப் பரிமானங்களைப் பெறுகிறது." என்கிற தமிழவனின் கூற்று மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று.
கவிதைப் புனையும் செயலாக்கத்தில் ஓர் உத்தியாக தமிழச்சி ஒரு கிராமிய பாத்திரத்தை வாசகனுக்கு அறிமுகபடுத்துகிறார்.அவள் தான் வனப்பேச்சி.!

தொன்மத்தின் ஒரு குறியீடான வனப்பேச்சி தமிழச்சியுடன் வளர்பவள் , வாழ்பவள், அவள் ' எஞ்சோட்டுப்பெண் ' அதாவது சம வயதுக்காரி எனவே தமிழச்சியின் பயணங்களில் எல்லாம் அரூபமாய் உடனிருக்கிறாள் வனப்பேச்சி. நீலாங்கரைக்கும் மல்லாங்கிணற்றுக்குமாய் அல்லாடிக் கொண்டிருப்பவள் வனப்பேச்சி.
பதனக்குளிர் அறையோ, பறக்கும் காரின் வேகமோ, தமிழச்சியை சமன் குலைப்பதில்லை.அதனாலேயே மாநகரத்தின் வியப்புகளை , ஆச்சர்யங்களை முரண்களை வனபேச்சி வாயிலாக பதிவு செய்கிறார் கவிஞர்.
எதிரெதிர் உலகங்கலும் அவற்றின் அனுபவங்களுமே படைப்புக்கான ஆணிவேர்கள் ' தமிழச்சியின் மனசுக்குள் விரிந்திருப்பது வேர் மண்ணாய் தாய் மண்ணாய் இருக்கிற ஈரகிராமம் , ஆனால் வாழ்வின் வரமோ மாநகரத்து வெய்யிலில் உப்புக்காற்றின் எரிச்சலை மறைத்து புன்னகை வேண்டிய அவசர வாழ்வின் இருப்பு . இந்த இரண்டையும் எதிர் கொள்வதும் எதிர் கொள்ளவியலாச் சிக்கலுமே தமிழச்சியை எழுதத் துண்டுகிறது.அவரின் அத்தகைய வலிகள் வரிகளாக அவஸ்தைகளோ கவிகளாகின்றன,எனவே ஒரு வகையில் தமிழச்சியின் படைப்புலகம் இருத்தலியல் பிரச்சனையின் தொகுப்பு வீடுகள் , ஆனால் கிரமங்களை சிளாகிக்கும் பழமலய் தமிழச்சி போன்றவர்கள் கிராமங்களின் நிஜமுகங்களை ஏன் பதிவு செய்வதில்லை.?
உண்மையில் கிராம வாழ்க்கை சுகமானது தானா..?
தற்போதைய கிராமங்கள் சாஷே மனிதர்களால் குறுகி போய் விட வில்லையா..?
மாநகர வாழ்வின் பலம் பலவினங்களை பதிவு செய்திருக்கிற கவிஞர் இந்திரன் கவிதைகளோடு ஒப்பிடும் போது வாசகனுக்கு பல கேள்வியலைகள்...!
' மஞ்சணத்தி மரம். ' என்கிற கவிதை " ஒரு பெண்ணின் சிறுபருவம் முதலாக அவளின் வாழ்வின் மாற்றங்களை , மரத்தோடு இணைத்து பதிவு செய்திருப்பது புதிய முயற்சி. இந்த நேரத்தில் சக்தி ஜோதியின் ஒரு கவிதையும் - பெண் பருவங்களை நிறங்களோடு கலந்து நெய்யபட்டது - நினைவுகூறத்தக்கது.
அந்தோ பரிதாபம் ! மஞ்சணத்தி தொகுப்பில் இசங்கள் இல்லை.தமிழின் அதி நவீன வாக்கியத் தொடர்கள் வன நாகங்களைபோல பின்னி பிணைந்த திருகளான கவிமொழியிறுக்கங்கள் இல்லை.பெண்ணியத் தொகுப்புகளுக்கே உரிய அந்தரங்க உறுப்புகளின் ' பெயர்கள் இல்லவே இல்லை. எனவே இலக்கிய உலகின் பிரதான அம்சமான புறக்கணிப்பின் அரசியல் இத்தொகுப்பையும் கண்டு கொள்ளாமல் விடக்கூடும்.
தமிழச்சியின் பலம் எளிய மொழியில் தனது செய்தியினை தனக்கான வாசகனுக்கு உணர்த்தி விடுவது . எனில் பலவீனமாகப்படுவது ஏனைய தமிழனும் தமிழச்சிகளும் வாங்க இயலா விலையில் மிக உயர் தரத்திலான உன்னதமான நூல் தயாரிப்பு .தமிழச்சியும் மனுஷ்யபுத்திரனும் மனசு வைத்தால் ஓர் எளிய பதிப்பும் கூட சாத்தியந்தான். எமது தோழியின் படைப்புகள் பலருக்கும் போகவேண்டும் என்பதே அவா.
எல்லாம் புரிந்திருக்கிற கவிஞருக்கு இதுவும் புரியும்...!

- அன்பாதவன்

அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்Ðìகளை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடியும்.அன்பாதவன் மதியழகன் சுப்பையாவோடு இணைந்து 'அணி' என்கிற கவிதைக்கான சிற்றிதழை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com