மின்னலும் இடியும் - போதியின் நிழல் 33

மின்னலும் இடியும் - போதியின் நிழல் 33

அன்று காலையில் கண்விழித்ததும் சிலாதித்தன் என்ற பெயரால் தன் நாடுமுழுக்க அறியப்பட்டிருந்த ஹர்ஷ சக்கரவர்த்தி பெரும் மகிழ்வுடன் இருந்தார். விடிகாலையில் அவர் கண்ட கனவு அவருக்குள் பெரும் உற்சாகத்தை உற்பத்தி செய்திருந்தது. நீல ஒளி நிரம்பிய அறையில் கையில் பொன் வளையங்கள் அணிந்த இரு கரங்கள் அவரை அன்புடன் தழுவின. நீலம் மாறி அறைக்குள் பொன்மஞ்சள் ஒளி நிரம்பி பின் அது மென்மையான வெண்ணிறமாக மாற்றம் கொண்டது. அறை விரிந்து தொலைவில் பனிமயமான உச்சியே தெரியாத பெருமலை ஒன்று தெரிந்தது. ஹர்ஷரைத் தழுவியிருந்த கரங்கள் சிறகுகளாக மாறி அவர் தோள் மீது படிந்தன. பேருவகையுடன் உச்சி நோக்கிப் பறக்கத் தொடங்கினார். மேலே எழ எழ அவருக்கு சக்தி அதிகமாகிக்கொண்டே போனது. களைப்புக்குப் பதிலாக உத்வேகம் அதிகமாகப் பொங்கிக் கொண்டே போனது. அதுமாதிரியொரு மகிழ்வான கணத்தை அவர் அனுபவித்ததில்லை. திடீரென மெல்ல போர்வை விலகுவதுபோல் அக்கனவு கலைந்தது. கண்விழித்தபோது குளிரை விரட்ட வைக்கப் பட்டிருந்த மண்சட்டி நெருப்பு அணைந்து சாம்பல் மயமாகி இருப்பதைக் கண்டார். ரோமத்தால் ஆன மென்மையான போர்வையைத் தன் மீது சுற்றிக் கொண்டு பஞ்சணையை விட்டு இறங்கினார். அவரது ராணிக்கு இன்னும் உறக்கம் விலகவில்லை. அவளை எழுப்பாமல் மெல்ல நடந்தார். புத்தம் சரணம் கச்சாமி என்று ஒருமுறை தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். வெளியே பெரிய கற்தூணில் அவலோகிதேஸ்வர போதிசத்துவரின் சிற்பம் எல்லையில்லாத கருணையின் வடிவாக நின்றது. அதன்முன் ஒரு கணம் கண்மூடி நின்றார்.

அவரது வருகையைக் கண்ட காவலர்கள் விறைப்பாயினர். அவர்களது கரங்கள் குளிர்காலம் என்பதால் குளிர்ந்துபோயிருந்த ஈட்டி முனைகளை இறுக்கமாகப் பிடித்தன. அவர்களின் மூச்சுக்காற்று புகையாக வெளிவரும் அளவுக்கு குளிர் அரண்மனையை இறுக்கக் கவ்வியிருந்தது.
சக்கரவர்த்தி அரண்மனையை விட்டு சிறு நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்தார். உடன் வர காவலர்களுக்கு அனுமதி இல்லை. இன்னும் பனி விலகாத காலையில் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு கன்னோசியின் தெருவொன்றில் மாபெரும் சக்கரவர்த்தியான ஹர்ஷர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அப்படி நடந்தாலும் கன்னோசி மக்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆரியவர்த்தம் முழுவதும் போர்களில் அனைவரையும் வென்று எந்த எதிரியும் இன்றி ஆட்சி நடத்திவரும் ஹர்ஷர், சதா குடிகளின் நலனில் அக்கறை கொண்டு எளிய வாழ்வே வாழ்வது அவர்களுக்குத் தெரியும். அவர் மாறுவேடத்தில் தலைநகரில் உலவுவது குடிகளிடையே பெரும் பிரசித்தமாயிருந்தது. அரண்மனையை விட்டு சற்று தூரம் சென்றதும் சுமார் பத்துபேர் சாலை ஓரமாக நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்துகொண்டிருந்ததைக் கண்டார் ஹர்ஷர். அருகில் நெருப்பு மூட்டி சூடான காய்கறிகள் வெந்த பானத்தை ஒருவன் விற்பனையும் செய்துகொண்டிருந்தான்.

அக்கூட்டத்தில் ஹர்ஷரும் போய் உட்கார்ந்து கைகளை நெருப்பில் காட்டி சூடு ஏற்றிக்கொண்டார்.

‘‘அப்புறம் ஆதித்தரே.. என்னதான் நடந்தது?’’ ஒரு முதியவர் கேட்டார்.

'‘எனக்கொரு குவளை சூடாக பானம் வாங்கிக்கொடும். சொல்கிறேன்’’ என்று பதில்வந்தது. நடுத்தரவயதில் பதில் சொன்னவன்தான் ஆதித்தனாக இருக்கவேண்டும் என்று ஹர்ஷர் நினைத்தார்.

‘‘ஏன் ஆதித்தரே, உமக்கு இல்லாததா... யுவான் சுவாங்கை பலிபீடத்தில் ஏற்றிப் படுக்க வைத்ததுடன் உமது கதையை நிறுத்திவிட்டீர்கள். நாங்கள் எல்லாம் ஆவலுடன் மேற்கொண்டு கேட்கத் தயாராக இருக்கையில் இப்படி பானம் கேட்டு தொந்தரவு செய்கிறீரே....?’’ என்றான் கும்பலில் இருந்த இன்னொருவன்.

‘‘கதை என்று சொல்லாதீர்கள். கடந்த முப்பது தினங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அய்யா இது. கதை என்று நீங்கள் நினைத்தால் நான் மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்திவிடுகிறேன்’’

‘‘இல்லை.. இல்லை.... நீர் தொடர்ந்து சொல்லும். அய்யா... சுடுபானக்காரரே. எங்கள்: எல்லோருக்கும் ஒரு குவளை பானம் கொடும்.’’ என்ற ஒருவன், ஹர்ஷரைப் பார்த்து,‘‘ நீங்களும் ஒரு குவளை அருந்துகிறீர்களா?’’ என்று உபசரித்தான்.

‘‘ம்ம்ம்..’’ என்று ஹர்ஷர் தலையசைக்க அவருக்கும் ஒரு குவளை சூடான பானம் வந்தது.

புளிப்பும் கசப்புமாக இருப்பினும் குளிருக்கு இதமாக இருந்தது. இருகைகளிலும் அந்த மண்குவளையை ஏந்தி சூட்டை அனுபவித்தார். எதிரே நெருப்பில் ஒரு மரத்துண்டு வெடித்தது.
ஆதித்தன் சொல்லத்தொடங்கினார்.

‘‘பலிபீடத்தில் பூக்களைக் கொட்டி அந்த சீனத்துறவியைப் படுக்க வைத்தார்கள். எங்கள் அனைவரையும் தரையில் அமரவைத்திருந்தார்கள். நான் எவ்வளவோ கெஞ்சினேன். ஒருநாள் தான் அந்த பிக்குவுடன் பயணம் செய்திருந்தாலும் அவர் மிக அரிய மனிதர் என்று உணர்ந்துகொண்டேன். அவர் மீது எனக்கு ஏற்பட்ட மரியாதை அவருக்குப் பதிலாக என்னைப் பலிகொடுங்கள் என்று கேட்கும்வரை சென்றுவிட்டது. என் நிலை மட்டுமல்ல. என்னுடன் படகில் இருந்த முன்பின் தெரியாத அனைவரின் நிலையும் அப்படித்தான். ஆனால் கொள்ளையர்களின் மனதுதான் இரங்கவில்லை. யுவான் சுவாங், கடைசியாக கொள்ளையர் தலைவனை அருகே அழைத்து, தனக்கு கடைசி பிரார்த்தனை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு மட்டும் அவன் ஒப்புக்கொண்டான். அவர் மேடையிலேயே பதமாசனமிட்டு அமர்ந்தார். மரணத்துக்கு முன்பாக அவர் அவர்ந்திருந்தபோதும் அவர் முகத்தில் சுடர் மிகுந்த ஜோதியையும் குளுமையையும் கண்டோம். அது ஒன்றுதான் கொள்ளையர்களை அச்சுறுத்தி இருக்கவேண்டும். வாளுக்கும் வேலுக்கும் அஞ்சாத அவர்கள் பிக்குவின் அமைதியான, அச்சமற்ற முகத்துக்கு முன்னால் சற்று நடுங்கினார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவரது பிரார்த்தனை சற்று நேரத்துக்கு நீடித்தது. அப்போது திடீரென்று எங்கள் தலைக்கு மேல் வானம் இருண்டது. கண்ணைப் பிடுங்கிவிடும் வெளிச்சத்துடன் ஒரு மின்னல் பலிபீடத்தைத் தாக்கியது. காற்று சுழன்று அடித்தது. கங்கை அன்னை மிகுந்த ஆவேசத்துடன் பொங்கி எழுந்ததைக் கண்டோம். நாங்கள் அனைவரும் பயந்து அலறினோம். கொள்ளையர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஓடிப்போய் சீனப்பிக்குவின் காலில் விழுந்தார்கள். அவரோ நடப்பது எதையும் அறியாதவராக கண்மூடி அமர்ந்திருந்தார். நான் சற்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர் அருகில் சென்று அவரை உலுக்கி கண் விழிக்கச்செய்தேன். அவர் விழித்தபின் இயற்கையின் அறிகுறிகள் அனைத்தும் நின்றுபோயின.’’

கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஆஹா.. ஓஹோ வென ஒலிகளை எழுப்பினர். பானம் விற்பவன் அவர்களின் குவளைகளை இன்னொரு முறை நிரப்பினான்.


‘‘கொள்ளையர்கள் அவரிடம் தங்களை மன்னித்துவிடுமாறு மன்றாடினர். அவிச்சி என்ற மிகக்கொடுரமான நரகம் அவர்கள் பாவம் செய்தால் காத்திருக்கிறது என்ற யுவான் சுவாங், அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, கொள்ளையர்களுக்கு ததாகதரின் தர்மத்தை உபதேசித்து அவர்களையும் அத்தர்மத்தை தழுவச்செய்தார். அந்த கொடும் கொள்ளையர்கள் இனி மாமிசம் உண்ணமாட்டார்கள்; ஆயுதம் ஏந்தமாட்டார்கள்; மது அருந்த மாட்டார்கள். ஏன் அவர்களில் சிலர் இனி பிக்குக்களாக மாறினாலும் கூட ஆச்சரியம் இல்லை... அந்த பிக்குவின் சக்தியும் ஆளுமையும் அளப்பரியது’’

‘‘சபாஷ்... நம் ஹர்ஷ சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்தில் அவர் இங்கே வந்துள்ளார். கன்னோசிக்கு வரும் திட்டம் ஏதேனும் உண்டா அவருக்கு? ஏனெனில் நம் சக்கரவர்த்தி அவரைச் சந்திக்க ஆசைப்படுவார் அல்லவா?’’

‘‘இப்போதைக்கு அவர் நாளந்தாவில் சிலகாலம் கல்வி பயிலச்செல்கிறார் என்று மட்டும் அறிந்தேன். எப்படியும் நம் மன்னரை அவர் சந்திப்பார். அதற்கு வாய்ப்பு அமையும் என்றே நான் கருதுகிறேன்’’ என்றார் ஆதித்தன்.

‘‘நானும் அவரைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’’ என்றார் ஹர்ஷர். பொழுது புலர்ந்திருந்த படியால் அவரது முகத்தை கவனித்த ஒருவன்,‘‘ ஆ.. சக்கரவர்த்தி!!!’’ என்று கூவினான்.
கும்பல் அதிர்ந்து எழுந்து பின் பணிந்தது.

ஹர்ஷர், ஆதித்தனை மட்டும் அழைத்துக்கொண்டு அரண்மனை நோக்கி நடந்தார். யுவான் சுவாங் பற்றி மேலதிக தகவல்களை அறியவேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com