முதல் செஞ்சுரி

முதல் செஞ்சுரி

விடைகொடு ரசிகனே - சச்சின்-1

கழுத்தில் சின்ன தங்கச் சங்கிலி; இப்போதுதான் தொட்டிலில் இருந்து இறங்கி வந்த குழந்தையைப் போன்ற பால்மணம் மாறாத முகம். சுருட்டி விடப்பட்ட முழுக்கை. இங்கிலாந்தின் ஓல்டு ட்ரபோர்டு மைதானத்தில் தன்னுடைய ஒன்பதாவது டெஸ்ட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியபோது அவருக்கு வயது 17.  இன்னும் இந்தியாவில் வாக்களிக்கும் வயதுகூட நிரம்பியிருக்கவில்லை.

அன்று அந்த டெஸ்டின் கடைசிநாள். ஆகஸ்ட்,5, 1990. இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் இந்திய அணிக்கு 408 ரன்களை இலக்காகக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் விழுந்த நிலையில் டிக்ளேர் செய்திருந்தார். மிகவும் கடினமான இலக்கு. அதை சேஸ் பண்ணவே முடியாது. இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் பசித்த மிருகம் போல் இருந்தார்கள்: டேவன் மால்கம்,ஆங்கஸ் ப்ரேசர்,  எட்டி ஹெம்மிங்ஸ். வழக்கம்போல் இந்திய அணி பதட்டத்தில் சுருண்டுகொள்ளும் என்று எல்லோரும் நினைத்தார்கள். உணவு இடைவேளையை ஒட்டி நான்கு விக்கெட்டுகள் டுமீல் ஆகிவிட்டன. சித்து டக் அவுட், ரவி சாஸ்திரி 12 ரன்கள், சஞ்சய் மஞ்சுரேக்கர் 50 ரன்கள், வெங்சர்க்கார் 32 ரன்களுடன் திரும்பிவிட்டார்கள். வெங்க்சர்க்கார் திரும்பியவுடன் உள்ளே வந்தார் சச்சின்.

அசாருதீன் களத்தில் இருந்தார். அந்தோ பரிதாபம்…. முதல் இன்னிங்சில் 179 ரன்கள் குவிந்து பட்டையைக் கிளப்பி இருந்த இந்திய கேப்டன் 11 ரன்னில் பணால் ஆனார். இப்போது கபில்தேவ் உள்ளே வந்தார். அவர் சச்சினுடன் இணைந்து ஆடி 57 ரன்கள் கூட்டியபோது ஹெம்மின்ஸ் பந்தை அடிக்க இறங்கி வந்து அவுட் ஆனார். (கபில் எப்பவுமே இப்படித்தான். மட்டையை சுத்தி சுத்தி அடிப்பார். எப்போது அவுட் ஆவார் என்று எவருக்கும் தெரியாது. கரணம் தப்பினால் மரணம்) அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 183. ஆறு விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தன. இனி வெற்றிதான் என்று இங்கிலாந்து அணியினர் மகிழ்ந்தனர். உள்ளே வந்தார் அண்ணன் மனோஜ் பிரபாகர். இந்திய அணியில் இருந்த ஆல்ரவுண்டர். நன்றாக ஸ்விங் ஆகும் பந்து வீச்சாளர். ஓபனிங்கெல்லாம் ஆடுவார். கட்டை போட்டு இந்தியாவின் பல மேட்சுகளை கவிழ்த்தவர். ஆனால் இப்போது அவரது திறமை அவசியத் தேவை. சச்சினும் அவரும் சேர்ந்தார்கள். சச்சின் அடித்து ஆடினார். பின்னங்காலில் நின்று அவர் அடித்த பஞ்ச் ஷாட்களில் ஸ்கோர் உயர்ந்தது. இப்போது வெற்றி தேவையில்லை.  ஆட்டத்தை ட்ரா செய்யவேண்டும். சச்சின் தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் காட்டினார். மட்டையை நேராக வைத்து பந்துகளைச் சந்தித்தார். ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டோம். சச்சின் 10 ரன்களை எடுத்தபோது எளிதான ரிட்டர்ன் கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். ஹெம்மின்ஸ் அதைப் பிடிக்காமல் கோட்டை விட்டார். அது ஒன்றுதான் அவர் செய்த தவறு.

189 பந்துகளைச் சந்தித்து 119 ரன்களை சச்சின் குவித்து ஆட்ட மிழக்காமல் இருந்தார். 17 பவுண்டரிகள். மனோஜ்பிரபாகர் 67 ரன்கள் எடுத்தார். இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. ஆட்டம் டிரா ஆனது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஹெல்மெட்டைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு சச்சின் பெவிலியன் திரும்பியபோது அவருக்கு இந்த முதல் செஞ்சுரியைத் தொடர்ந்து இன்னும் ஐம்பது செஞ்சுரிகள் அடிப்போம் என்று தோன்றியிருக்குமா?

அன்று சச்சின் அணிந்திருந்தது கவாஸ்கரின் பழைய பேட்கள். சச்சின் 100 ரன்கள் அடிக்கையில் கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் இருந்தார். தன் சீடன் 100 ரன்கள் அடிப்பதைப் பார்க்கவேண்டுமே என்று அவர் கமெண்ட்ரி பாக்சை விட்டுவிட்டு ஓடிவந்து டீம் பால்கனியில் நின்றுகொண்டார். ஆங்கஸ் ப்ரேசரின் பந்தில் ஒரு பஞ்ச் அடித்து சச்சின் 100 ரன்களைக் கடந்தபோது அவர் குதித்து கைதட்டினார். தன் 34 செஞ்சுரி சாதனையை இந்தச் சிறுவன் முறியடிப்பான் என்று அவர் அப்போது நினைத்திருப்பாரா?

முதல் இன்னிங்க்சில் தன் முதல் ரன்னை அடிக்க சச்சின் ஒரு  மணி நேரம் எடுத்துக்கொண்டு மெதுவாக விளையாடினார். எதிர்முனையில் அசாருதீன் மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். முதல் இன்னிங்சில் சச்சின் எடுத்தது 68 ரன்கள். இரண்டாவது இன்னிங்சில் 119. அதுவும் மிகவும் தேவையான சமயத்தில் வந்தவை இந்த ரன்கள். அவருக்கு சரியாக 17 வயது 112 நாட்கள். 1961-ல் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் சதம் அடித்த பாகிஸ்தான் முஷ்டாக் முகமதுவை விட இவருக்கு வயது 30 நாட்களே அதிகம். 2001-ல் பங்களா தேஷ் வீரர் முகமது அஷ்ராபுல் தன் 17 ஆண்டு 61 நாட்கள் வயதில் சதம் அடித்து டெஸ்டில் மிகக் குறைந்த வயதில் சதம் போட்ட சாதனையை இப்போது கைவசம் வைத்திருக்கிறார்.

அன்று இந்தியா ட்ரா செய்ய முடியாமல் தோற்றுவிடும் என்றுதான் எல்லொரும் நினைத்தார்கள். ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த 1778 பேரும் மிகவும் அதிர்ஷ்ட சாலிகள். அவர்கள் சச்சின் என்கிற மிகப்பெரிய ஜீனியசின் முதல் செஞ்சுரியை நேரில் பார்த்தார்கள்.

அந்த ஆட்டத்தில் கூச், அதெர்டன், ஸ்மித், லேம்ப், அசாருதீன் ஆகியோரும் செஞ்சுரி அடித்திருந்தபோதும் ஆட்டத்தை ட்ரா செய்யப் போராடி செஞ்சுரி அடித்த சச்சினுக்குத்தான் மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுத்தார்கள்.

அன்று சச்சின் சொன்னது: என்னால் முடிந்த வரை இந்தியாவுக்காக விளையாடிக்கொண்டிருக்க விரும்புகிறேன்.

(இந்த கட்டுரைத் தொடர் தொடர்பான கருத்துகள், விமர்சனங்களை editorial@andhimazhai.com-க்கு எழுதுங்கள்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com