முப்பது லெட்சணங்கள்

செவக்காட்டு சொல்கதைகள்-7

பெண் பார்க்கும் படலம் என்பது சில இடங்களில் நீண்டு கொண்டே  போகும். பெண் எப்படி இருக்க வேண்டும் என்று மாப்பிள்ளை ஒரு பட்டியலே வைத்திருப்பார்.

மாப்பிள்ளையின் தாயார் சில நிபந்தனைகளை விதிப்பார். மாப்பிள்ளையின் தந்தையார் சில கோரிக்கைகளை வைப்பார்.

பெண் வீட்டிலும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும், ‘சும்மா கேட்கிறவனுக்கெல்லாம் பெண் பிள்ளையைக் கட்டி கொடுத்து விட முடியுமா? என்று பெண்ணோட தாயார் சொல்வார்.

பெண் அழகுள்ளவளாக இருக்க வேண்டும் , குணவதியாகவும் இருக்க வேண்டும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்காகவும் திகழ வேண்டும், ஒத்தப்படை எண்ணில் வயது இருக்க வேண்டும், வசதி வாய்ப்புள்ள இடமாகவும் இருக்க வேண்டும், மாப்பிள்ளை வீட்டார் சொல்கிறபடி நகை , நட்டு போட வேண்டும், அதேபோல பெண் வீட்டாரும் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்க என்று பல நிபந்தனைகளைப் போடுவார்கள் , . மாப்பிள்ளைப் பையன் படித்தவனாக இருக்க வேண்டும் , கை நிறைய சம்பளம் வாங்குகிறவனாக இருக்க வேண்டும், குடும்பத்தில் வேறு  ‘ அக்கு , தொக்கு , பிக்கல் , பிடுங்கல் இருக்க கூடாது, வீடு வாசல் செழிப்பாக இருக்க வேண்டும், இப்படி பல எதிர் பார்ப்புகள் பெண் வீட்டுக்காரர்களுக்கு இருக்கும்.

இதற்கெல்லாம் மேலே , குலம் கோத்திரம் எல்லாம் ஒத்துவர வேண்டும் , ஜாதகப் பொருத்தமும் பொருந்தி வர வேண்டும், சில சம்பந்தம் பேசி முடிவாகும் போது பெண் வீட்டுக்கு வேண்டாதவன் எவனாவது வந்து பெண்ணைப் பற்றி எதையாவது போட்டுக் கொடுத்து விடுவான்.பிறகு என்ன வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாகிவிடும்.

ஒரு ஊர்ல ஒரு பணக்காரர் இருந்தார் , அவருக்கு ஒத்தக்கி ஒரு மகன் இருந்தான். ஆளும் வளர்ந்து நல்ல வாலிபனா இருந்தான் . சொத்து சுகத்திற்கு குறைவு ஒன்றும் இல்லை, ஆளும் பார்க்க ‘ஜம்’ மென்று இருந்தான். அந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.

முதலில் சொந்த பந்தங்களில் அலசி ஆராய்ந்து பார்த்தார்கள் , பெண்ணுக்கு அழகு இருந்தால் பணம் இல்லை, வசதி வாய்ப்பு இருந்தால் பெண் அழகில்லாமல் இருந்தது. உள்ளூரில் உள்ள பெண்களை எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரகள் எதாவது ஒரு குறையைச் சொல்லி கழித்து விட்டார்கள்.

பிறகு , அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள பெண்களைப் பார்த்தார்கள் , அங்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மனசுக்கு பிடித்தபடி பெண் அமையவில்லை , மாப்பிள்ளையின் தாயார் பெண்ணின் நாடி சரியில்லை , கூந்தல் நீளம் இல்லை என்று எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பெண்களை கழித்துக் கொண்டே இருந்தாள்.

அதன் பிறகு சற்று தொலைவில் உள்ள ஊர்களில் பெண் இருப்பதாக ‘துப்பு’ வந்தது . எனவே மாப்பிள்ளையின் தந்தையும், தாயும் வில்வண்டி பூட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். அங்கும் இவர்கள் எதிர்பார்த்தது போன்ற பெண் கிடைக்கவில்லை.

கடைசியில் தரகர்கள் மூலம் பெண் தேடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள். சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண் தரகர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார் முப்பத்துரெண்டு லெட்சணம் உள்ள பெண் தான் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள், தரகர்கள் ஒவ்வொருவரும் முதல்கட்டமாக கொஞ்சம் முன் பணம் பெற்றுக்கொண்டு , பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தார்கள்

.

தரகர்கள் சொன்ன துப்பின் படியும் நாள், நட்சத்திரம் பார்த்து மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் ஊர் ஊராகச் சென்று பெண் பார்த்து வந்தார்கள் . எந்தப் பெண்ணுக்கும் இவர்கள் எதிர்பார்த்த முப்பத்தி ரெண்டு லெட்சணங்களும் இல்லை.

அதற்குள் வருசம் ரெண்டு உருண்டோடிவிட்டது . மாப்பிள்ளைக்கும் வயது ஏறிக்கொண்டே சென்றது , மாப்பிள்ளையின் சேக்காளிகள் (நண்பர்கள் ) எல்லாம் “மாப்ளே , உனக்கு உங்க அம்மையும் , அப்பனும் இந்த ஜென்மத்தில் பெண் பார்த்து கட்டி வைக்க மாட்டார்கள் , நீயாகப் பார்த்து எவளையாவது இழுத்துக்கொண்டு போனால்தான் உண்டு “ என்று கேலி பேசினார்கள்.

பெண்பார்த்து, பெண் பார்த்து மாப்பிள்ளையின் பெற்றோர்களுக்கும் சலித்துவிட்டது , தரகர்கள் தவித்துவிட்டார்கள், ஒருநாள் பட்டுவேட்டி , பட்டு சட்டை , நெற்றி நிறைய விபூதிப்பட்டை , கழுத்தில் உத்திராட்சக் கொட்டை , கையில் வெத்திலைப்பெட்டி என்று படோடமாக ஒரு தரகர் வந்தான், ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி நன்கு அறிந்து இருந்தான்.

நேரே மாப்பிள்ளையின் பெற்றோர்களைப் பார்த்து , உங்க அந்தஸ்த்துக்கும் , ஆஸ்திக்கும் ஏற்றப்படி ஒரு அழகான பெண் இருக்கிறாள் , உங்கள் பையன் ஜாதகத்தையும் வேறொரு தரகர் எனக்குத் தந்துவிட்டார், பையனுக்கும் பெண்ணுக்கும் , முப்பது பொருத்தங்கள் இருக்கிறது , ரெண்டே ரெண்டு பொருத்தங்கள் தான் இல்லை, சர்வ லெட்சணமும் பொருந்திய பெண்ணை இந்த பூமியில் பார்ப்பது அரிது, இந்தப் பெண்ணிற்கு முப்பது லெட்சணங்களும் சுத்தமாக உள்ளது, நாளையே வந்து நீங்கள் பெண்ணைப் பார்க்கலாம் என்று பகட்டாக வந்த தரகன் மூச்சு விடாமல் பேசினான் .

அலையோ அலை என்று தவித்துப்போய் இருந்த மாப்பிள்ளை வீட்டுக் காரர்களுக்கு , இந்தச் சம்பந்தமாவது அமையாதா என்றிருந்தது.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க போனார்கள் , பெண் வீட்டுக்காரர்களும் தடபுடலாக வரவேற்று விருந்து , உபச்சாரம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை அசத்திவிட்டார்கள் , எனவே மாப்பிள்ளையின் பெற்றோர்களும் பெண்ணைப்பற்றி தோண்டி துருவி ஒரு விபரமும் கேட்கவில்லை.

பொண்ணு பார்க்க அழகேஸ்வரியாக இருந்தாள், உச்சி முதல் பாதம் வரை பெண்ணை வைர நகையால் ஜோடித்து இருந்தார்கள் , மாப்பிள்ளையின் தாயாருக்கு பெண்ணைப் பிடித்துவிட்டது என்று தலையை ஆட்டியது தான் தாமதம் , பெண் வீட்டுக்காரர்கள் அடுத்த முகூர்த்ததிலேயே நாள் குறித்து விட்டார்கள்.

கல்யாணம் தடபுடலாக நல்லபடி மிகச்சிறப்பாக நடந்தேறியது , சாந்தி முகூர்த்தம் எல்லாம் முடிந்த பின் தான் தெரிந்தது, பெண் கூமுட்டை என்று , எல்லாம் முடிந்த பின் இனி என்ன செய்ய முடியும் ? எது எப்படி இருந்தாலும் , இனி இவள் தான் என் பொண்டாட்டி .தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும் ? ஆயிரம் பெண்ணைக் கழித்த உங்களுக்கு ஆண்டவன் அறிவற்ற பெண்ணை மருமகளாக அனுப்பி வைத்திருக்கிறான் என்று மாப்பிள்ளையே தன் தாயாருக்குச் சமாதானம் சொன்னான்.

என்றாலும் , மாப்பிள்ளையின் தந்தையார் அந்தத் தரகனைத்தேடி அலைந்தார் , “அவனை கண்டால் நாலு கேள்வி நறுக்கென்று கேட்க வேண்டும் என்று .

ஒரு நாள் , ஒரு கல்யாண வீட்டில் வசமாக மாட்டினான் அந்தத் தரகன் . மாப்பிள்ளையின் தந்தையார் , முப்பது பொருத்தமும் பெண்ணுக்கு பொருந்தி வருகிறது  ரெண்டே ரெண்டு பொருத்தம் தான் இல்லை என்று புழுகிவிட்டீரே இதுதானா , அந்த லெட்சணம், என்று கேட்டார்.

பெண் புரோக்கர் சொன்னார், நான் ரெண்டு லெட்சணங்கள் பெண்ணுக்கு இல்லை என்று சொன்னது உண்மைதான் , அதில் ஒன்று அந்தப் பெண்ணுக்கு சொன்னாலும் தெரியாது , இன்னொன்று சுய புத்தியும் கிடையாது , என்பது , மற்றபடி எல்லாப் பொருத்தமும் பெண்ணுக்கு இருக்கிறதல்லவா ? என்று மாப்பிள்ளையின்  தந்தையான பண்ணையாரைப் பார்த்து திருப்பிக் கேட்டார். தரகர்..

பண்ணையார் பதில் பேசாமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல் உறைந்து போய் உக்கார்ந்திருந்தார்.

“குறைவற்ற மனிதர்கள் குவலயத்தில் கிடையாது என்பது பழமொழி எனவே குறைகளோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கதையை சொல்லி முடித்தார் சுப்புத்தாத்தா

(இன்னும் சொல்வார்)

ஜுலை   12 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com