மூன்றாவது பந்தில் பவுண்டரி- முதல் ரஞ்சி சதம்!

மூன்றாவது பந்தில் பவுண்டரி- முதல் ரஞ்சி சதம்!

விடைகொடு ரசிகனே-சச்சின் 6

’’என்ன சொல்றீங்க.. பதினாலு வயசுப் பையனையா ரஞ்சிலே இறக்கப் போறாங்க.. பாம்பே அணிக்காகவா? ‘’ கேட்டார் ஆலன் சிப்பி. இடது கை ஆட்டக்காரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். தகவல் உண்மை என்று உறுதிப் படுத்திக் கொண்டதும் அவருக்குத் தோன்றியது இதுதான்: ‘’ சும்மா ஏதோ பப்ளிசிட்டி ஸ்டண்ட் பன்றாங்க. இந்த சின்னப் பையனுக்கு ஒண்ணும் ஸ்பெஷல் டேலண்டெல்லாம் இருக்காது.”

தன் தந்தையிடம் இதையே சொல்லவும் செய்தார். அப்பா சும்மா தலையை ஆட்டிக் கொண்டார்.

இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு  முன்னால் 1988 டிசம்பர் 10, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொண்டது.

மும்பை சார்பாக விளையாட அந்த அணியின் தேர்வுக்குழுவினர் நரேன் தமானே, ராமகாந்த் தேசாய், சுதிர் நாயக், மிலிங் ரெகே ஆகியோர் 15 வயதான சச்சினைத் தேர்வு செய்து அனுப்பியது பல மட்டங்களில் வியப்புடன் பார்க்கப்பட்டது.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து மும்பை அணி ஆட ஆரம்பித்தது. கேப்டன் எல்.எஸ்.ராஜ்புத்தும் எஸ்.எஸ். ஹட்டங்காடியும் ஓபனிங். ஹட்டங்காடி 35 ரன்னில் அவுட் ஆனதும் உள்ளே வந்தார் ஆலன் சிப்பி. ஒரு விக்கெட் வீழ்ந்தபின்னர் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். நல்ல ஸ்கோர் வந்தது. ‘’ நல்ல ஸ்கோர் இருக்கிறது எனவே உங்களில் யார்  யாராவது அவுட் ஆனால் உள்ளே  சச்சினை அனுப்புகிறோம். சின்னப்பையன்,  உங்கள் இருவரில் யார் களத்தில் இருந்தாலும் அந்த பையனைக் கவனித்து  வழி நடத்துங்கள்’’ என்று டீம் நிர்வாகம் மதிய உணவு இடைவேளையில் அவர்களுக்குச் சொல்லி இருந்தது.

ராஜ்புத் 99 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டார்.  சச்சின் உள்ளே வந்தார். சிப்பி சச்சினை நன்கு உற்றுப்  பார்த்தார். நிச்சயம் நடுக்கம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். ’’அராம்சே.” என்றார். அவசரப்படாமல் மெதுவாக ஆடு என்று அர்த்தம்.

சச்சின் புன்னகைத்தார். இரண்டுபந்துகளை எதிர்கொண்டு மூன்றாவது பந்து பவுண்டரிக்குப் பறந்தது. பையன் நடுக்கமாக இருப்பதால் அதைச் சமாளிக்க இப்படி அடித்துப் பார்க்கிறான் என்று சிப்பி நினைத்துக் கொண்டு மீண்டும் ’’அராம்சே” என்றார். சச்சின் குறும்பாக சிரித்தார்.

அடுத்து இரண்டு பந்துகள் பவுண்டரிக்குப் பறந்தன. சிப்பி ட்ரெஸ்சிங் ரூமைப் பார்த்தார். ’’கொய்யால.. யார் யாருக்குடா வழிகாட்டறது.. இந்தப் பையனுக்கு அட்வைஸ் பண்ணச் சொல்லி எனக்குச் சொல்லியிருக்கானுகளே. பையன் எமகாதகனா இருப்பான் போலருக்கே” என்று நினைத்துக் கொண்டார்.

‘’நாங்கள் இணைந்து ஆடினோம். ரொம்ப அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை. நான் 127 ரன்னுக்கு அவுட் ஆனேன். சச்சின் 100 ரன் எடுத்து அவுட் ஆகாமல் நின்றார். முதல் ரஞ்சிப்போட்டியிலேயே சதம். அந்த போட்டி ட்ரா ஆனது. வீட்டுக்குப் போனதும் என் அப்பா அந்த பொடியன் எப்படி ஆடினான் என்று கேட்டார். அவன் இங்கே இருக்கவேண்டியவனே இல்லை என்று அவன் திறமையை ஒப்புக் கொண்டேன்” என்கிறார் இப்போது 51 வயதாகும் சிப்பி.

ஜூனியர் போட்டிகளில் ஏராளமான ரன்களைக் குவித்திருந்தான். நல்ல முதிர்ச்சி இருந்தது. நெட்டில் ஆடும்போது அவன் திறமையைப் பார்த்தோம். அதை வைத்துத்தான் அவனை ஆட வைக்க முடிவு செய்தோம் என்கிறார் ராஜ்புத், சச்சினின் அப்போதைய மும்பை அணி கேப்டன்.

14 வயதில் சச்சினை மும்பை ரஞ்சி அணிக்காக 14,  1987- நவம்பரில் (குழந்தைகள் தினம் பாஸ்!) தேர்வு செய்தாலும் அவரை ஆட்டத்தில் விளையாடச் செய்ய எல்லோரும் தயங்கினார்கள். ஒரு சப்ஸ்டியூட்டாகத்தான் அவர்இருந்தார். அவ்வப்போது உள்ளே வந்து பீல்டிங் செய்வார்.

ஓர் ஆண்டு கழித்துத்தான் முதல் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் ஆட்டத்திலேயே சதம்! மிகக் குறைந்த வயதில் முதல்தரப் போட்டியில் சதம் அடித்த இந்தியன் என்ற பெருமையும்கிடியது. அந்த சீசனில் மும்பைக்காக ரஞ்சியில் அதிக ரன் குவித்தவரும் சச்சின் தான்!.

ரஞ்சியில் மட்டுமல்ல தன் முதல் தியோதர்  கோப்பைப் போட்டி, துலீப் கோப்பைப் போட்டியிலும் சதம் அடித்தார்.

87-ல் கவாஸ்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் அவருடன் இணைந்து ஆடும் வாய்ப்பு சச்சினுக்கு இல்லை. ஆனால் கவாஸ்கர் சச்சினுக்கு பெரும் ஆதரவாக இருந்தார். 1986-87-ல் மும்பை கிரிக்கெட் சங்கம் வழங்கிய சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருது 14 வயது சச்சினுக்குக் கிடைக்கவில்லை. சச்சின் உடைந்து நொறுங்கிப் போய்விட்டார். கவாஸ்கர் அவரைத் தேற்றி ஒரு கடிதம் எழுதினார். அதன் கடைசியில்  ’இந்த ஜூனியர் கிரிக்கெட்டர் விருது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதே… இது போல கடந்த ஆண்டுகளில் யார் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலைப் பார்த்தால் அதில் ஒரு பெயர் விட்டுப் போயிருக்கும்.. ஆனாலும் அந்தப் பெயர்கொண்டவன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஓரளவுக்கு சாதித்திருக்கிறான்.“ என்று அதில் சொல்லியிருந்தார். ஆம் கவாஸ்கர்தான் அது என்பது எல்லோருக்கும் புரியும்.  அத்துடன் சச்சினுக்கு எடைகுறைவான கால் பேடுகளைப் பரிசளித்தார். அதைவிடவா பெரியவிருதோ பரிசோ வேண்டியிருக்கிறது?

இங்கே ஒரு விஷயம் சொல்லவேண்டும்? சச்சினுக்குப் பதிலாக அந்த விருதைப் பெற்றவர் யார்? என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா? அவர் பெயர் ஜதின் பரஞ்பே. இந்தப் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அவர் சுமார் பத்தாண்டுகள் முதல் தர கிரிக்கெட் ஆடினார். இந்திய அணிக்காக 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட வாய்ப்புக் கிடைத்தது. இப்போது ஜதின் பரஞ்பே நெதர்லாந்தில் நைக் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சச்சினைவிட இவருக்கு ஒரு வயது அதிகம்.

16 வயதில் சச்சின் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடியபோது எப்படி இருந்தது பரஞ்பேக்கு?
” நான் அவருக்காக  பிரார்த்தனை செய்துகொண்டேன்.  சச்சினோடு என்னை ஒப்பிடுவது அவரை அவமதிப்பதாகும். என்னைப் பொறுத்தவரை மும்பை அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய கவுரவம்” என்கிறார் இப்போது ஜதின்.

வால் செய்தி: 1987-ல் சச்சினை ஒதுக்கினாலும் அதற்கு அடுத்த ஆண்டு சச்சினுக்கு ஜூனியர் கிரிக்கெட்டர் விருதை மும்பை கிரிக்கெட் சங்கம் வழங்கி தவறை நேர் செய்தது. விருதுகள் எதையும் தீர்மானிப்பதில்லை. உழைப்பும் ஆர்வமுமே வெற்றியைத் தரக்கூடியவை.( ஏதாச்சும் இப்படி மாரல் சொன்னாதானுங்களே.. ஒரு இதுவா இருக்கும்?)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com