யாரோ தோனியாம்! இந்திய ஏ விக்கெட் கீப்பராம்!

யாரோ தோனியாம்! இந்திய ஏ விக்கெட் கீப்பராம்!

ஆட்டத்தை முடிப்பவன்-8

கொஞ்சம் அல்ல.. பல ஆண்டுகள் பின்னால் போகலாம். மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திருப்பத்தை உண்டு பண்ணிய வெளிநாட்டு போட்டித்தொடர் அது. 2004-ல் ஜிம்பாப்வே மற்றும் கென்யாவுக்கு இந்தியா ஏ அணி கிரிக்கெட் தொடருக்காகப் பயணப்பட்டது. தோனி அப்போது அந்த அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். சாய்ராஜ் பகுதுலே கேப்டன். கூடவே தினேஷ் கார்த்திக்கும் அணியில் விக்கெட் கீப்பராக இருந்தார். கார்த்திக்குத்தான் முதலிடம். தோனிக்கு இரண்டாவது இடம்தான்.

இந்திய ஏ அணி ஜிம்பாப்வேயில் முதலில் ஆடியது. அங்கே ஜிம்பாப்வேவின் ஒரு உள்ளூர் அணியுடன் இரண்டாவது நான்கு நாள் ஆட்டம் நடந்தது. அதில் கார்த்திக் பேட்ஸ்மேனாகவும் தோனி விக்கெட் கீப்பராகவும் களமிறங்கினர். தோனியின் விக்கெட் கீப்பிங் அட்டகாசமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் 11 கேட்ச் பிடித்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதுதான் அதுவரைக்கும் இந்திய விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது. தோனியும் அதை சமன் செய்தார். அதே ஆட்டத்தில் 48 பந்துகளில் 45 ரன்களும் அடித்தார்.

கென்யாவில் ஆடிய பிற ஆட்டங்களில் தோனி கீப்பிங் செய்யவில்லை. தினேஷ் கார்த்திக் தான் அதை  மேற்கொண்டார்!

நயன்மோங்கியாவுக்குப் பின் இந்திய அணியில் 2000-2004 வரை விக்கெட் கீப்பருக்குப் பஞ்சம் நிலவியது.  திராவிட் அவ்வப்போது கீப்பிங் செய்வார். சையது சபா கரிம், விஜய் தாஹியா, பார்த்திவ் படேல், அஜய் ராத்ரா,  தீப் தாஸ் குப்தா என்று பலர் வந்து போயினர். ரன் குவிப்பதிலும் சரி; விக்கெட் கீப்பிங் செய்வதிலும் சரி; யாரும் சரியாகச் செயல்படவில்லை… ஒரு பெரிய வெற்றிடம் இருந்தது. அந்த இடத்துக்குத்தான் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வருவார் என்று எதிர்பார்த்தார்கள்.

இந்த தொடரின்போதுதான் அதுவும் நடந்தது. தினேஷ் கார்த்தி இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று, இங்கிருந்தே இங்கிலாந்துக்குப் போய்விட்டார். தோனிக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவர் தன் திறமையை நன்கு வெளிக்காட்ட முடிந்தது.’

ஜிம்பாவ்வேயிலிருந்து இந்திய அணி கென்யாவுக்குப் போனது. அங்கே பாகிஸ்தான் ஏ அணி, கென்ய அணியுடன் முத்தரப்பு ஒரு நாள் ஆட்டம்!

முதல் ஆட்டம் கென்யாவுடன் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. தோனி தொடக்க ஆட்டக்காரர். அடித்தது வெறும் எட்டு ரன்கள்தான். அடுத்த ஆட்டம் பாகிஸ்தானுடன். இதில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். தோனி  70 ரன்கள் குவித்தார். அவருக்கு முதல் சர்வதேச ஆட்டநாயகன் விருது அப்போது தான் கிடைத்தது!

யாரோ தோனியாம்! இந்திய ஏ விக்கெட் கீப்பராம்! அடிச்சு பொளக்கறானாம். என்று கென்யாவில் பேசத்தொடங்க, மீதி ஆட்டங்களில் ரசிகர்கள் மைதானத்துக்கு தோனியைப் பார்க்கவே வந்தனர். அடுத்த ஆட்டம் கென்யாவுடன். அதில் இந்திய அணி வென்றது. தோனி பேட் செய்ய தேவை இல்லாமல் போனது. ஆனால் நான்கு காட்ச்கள், ஒரு ஸ்டெம்பிங் செய்தார்.

அடுத்தது பாகிஸ்தானுடனான ஆட்டம். அதில்தான் தோனி தன் முதல் சர்வதே சதத்தை அடித்தார். 122 பந்துகளில் 120 அடித்தார். பத்து 4கள், இரண்டு 6கள்! அப்போது அவருடன் இன்னொருவருவர் தொடக்க ஆட்டக்காரர். அவரும் அதில் சதம் அடித்தார். அவர் பெயர் கவுதம் கம்பீர்!

இந்த லீக் ஆட்டங்களில் இன்னொரு முறை பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்தது. அதிலும் தோனி சதமடித்தார். 119 ரன்கள்!

இதைத்தொடர்ந்து இறுதி ஆட்டம்! கென்யாவை முந்தி பாகிஸ்தான் அணி இறுதிக்குள் நுழைந்தது. இங்கும் இந்திய அணியிடம் தோற்றது. தோனி 15 ரன்கள்தான் அடித்திருந்தார்!

இந்த சுற்றுப்பயணத்தில் தோனி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருந்தார். இந்திய அணிக்குள் நுழைவதற்கு இனிமேல் வெகுகாலம் பிடிக்காது என்று தெரிந்துவிட்டது. ஏனெனில் அடித்து நொறுக்கக்கூடிய, அதே சமயம் மிகப்பாதுகாப்பான கரங்களைக் கொண்ட விக்கெட் கீப்பருக்காக இந்தியா காத்திருந்தது!

தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்குப் போனவர்,  நன்றாகத்தான் கீப்பராக செயல்பட்டார். ஆனால் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை! அவரது துரதிருஷ்டம் தோனி, இந்திய அணியின் கதவுகளை வலிமையாகத் தட்டினார்! அதே ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்குப் போன இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைத்தது இந்திய அணிக்காக அவரது முதல் ஒரு நாள் ஆட்டம் வங்கதேசம், சிட்டகாங்கில் டிசம்பர் 23, 2004-ல்!

இது 2019! இந்த உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்ற வதந்திகளுக்கு இடையே அவர் ஆடிக்கொண்டிருக்கிறார்!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

ஜுலை   03 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com