வகுப்பறை வாசனை -10

வகுப்பறை வாசனை -10
Published on

பள்ளிக்கூடம் என்றால் ஆசிரியர் வகுப்பறையில் நடத்தும் பாடத்தைக் கவனித்தல்,  பாடத்தை மனப்பாடம் செய்தல் என்ற வழமையில் இருந்து மாறியிருந்த ஆறாவது வகுப்புப் பாட அட்டவணை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்புக் கைவேலைப் பாடத்தில் மரவேலை, தையல் வேலை என இரு பிரிவுகள் இருந்தன.  மரவேலை என்றால் ஒரு நோட்டு மட்டும் போதும், தையல் என்றால் துணி, ஊசி, நூல்கண்டுகள் வாங்க வேண்டும். எனவே, வகுப்பில் ஐந்தாறு மாணவர்கள்தான் தையல் பிரிவில் சேர்ந்தனர். அப்புறம் தையல் என்பது பொம்பளைப் பிள்ளைகள் படிக்கிறது என்று சில மாணவர்கள் கேவலமாகக் கருதினர். ’ஏ’ வகுப்பில் படிக்கிற எல்லா மாணவிகளும் கட்டாயம் தையல் பிரிவில் இருந்தனர்; யாரும் மரவேலைப் பிரிவுக்குச் செல்வது கிடையாது. கைவேலைப் பிரிவில் மாணவர்களைப் பிரிக்கிற நாளில் பள்ளிக்குப் போகாத காரணத்தினால், என்னுடைய பெயர், மரவேலைப் பிரிவில் சேர்க்கப்பட்டு விட்டது. எனக்கு ஏனோ மரவேலை பிடிக்காமல், தையல் பிரிவில் சேர விரும்புவதாக ஆசிரியரிடம் போய்ச் சொன்னேன். அவர், அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டார்.

வுட் ஒர்க் என்று சொல்லப்பட்ட மரவேலைப் பிரிவு ஆசிரியர் வாட்ட சாட்டமானவர்; எப்பவும் சிடுசிடுவென இருப்பார்; மிகவும் கோபக்காரர். அந்த வகுப்பில் நெருக்கியடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருப்போம். உளி, இழைப்புளி, தலைப் பலகை, முக்காலி போன்றவற்றின் படங்களை அளவுத்திட்டத்துடன் கரும்பலகையில் வரைந்து,  நோட்டில் பிரதியெடுக்கச் சொல்வார். நான் மிகவும் மோசமாக வரைந்து, திட்டு வாங்குவேன்.  அவர், மரத்தை எப்படி இழைப்பது, காடி அடிப்பது, துளையிடுவது எனச் சொல்லிக் கொடுப்பார். கொட்டாப்புளியால் உளியை அடிக்கும்போது எழுகிற ஓசையினால், மாணவர்கள் கண்ணைச் சிமிட்டுவதைப் பார்க்கும்போது, என்னையறியாமல் மெல்லச் சிரிப்பேன். அதற்காகச் சில தடவைகள் அடியும் வாங்கியிருக்கிறேன்.  மரவேலை ஆசிரியர், மாணவர்களுடன் சேர்ந்து செய்த மரச் சாமான்கள், வருட முடிவில், மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டத்தில் ஏலம் விடப்படும். சிலர் ஆர்வத்துடன் ஏலம் கேட்டுச் சாமான்களை வாங்குவார்கள். மாணவர்கள், எப்பொழுதும் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்காமல், பட்டறைக்குப் போய் மரத்தை வைத்துச் சாமான்களைச் செய்திடக் கற்றுக்கொடுத்த முறை, எனக்குப் பிடித்திருந்தது.

ஏழாம் வகுப்பில் தையல் பிரிவுக்கு மாறிவிட்டேன். தையல் ஆசிரியை அதிர்ந்து பேசாதவர்; அப்பாவி.  மேட்டித் துணி, ஊசி, பராசக்தி நூல்கண்டுகள்  மூலம் எனது தையல் பயிற்சி தொடங்கியது. ஒட்டுத் தையல், சங்கிலித் தையல் என விதம்விதமாகத் துணியைத் தைத்திட ஆசிரியை பொறுமையுடன் சொல்லிக் கொடுத்தார். கோபுரம், கிளி என வண்ண நூல்களினால் துணியில் அழகாகப் பின்னுவது எனக்குப் பிடிக்கும். அந்தத் துணி, அரைகுறை வேலைப்பாட்டுடன் இப்பவும் என்னிடம் இருக்கிறது.  எட்டாம் வகுப்பில் ஜவுளிக் கடையில் வாங்கிய காடா துணியை ஆசிரியையின் உதவியுடன் வெட்டி, கைத் தையல் மூலம்  இரு ஜட்டிகள் தயாரித்தேன். இப்பொழுதும் அப்படியான வகுப்புகள் நடக்கின்றனவா என்பது தெரியவில்லை.    

எப்பொழுதும் விளையாட்டு என்று அலைந்து திரிகின்ற எங்களுக்கு விளையாட்டுக்கு என வாரத்திற்கு இரு வகுப்புகள்  ஒதுக்கப்பட்டிருந்த பாட அட்டவணை மகிழ்ச்சியைத் தந்தது. எங்கள் பள்ளியில் விளையாட்டுத் திடல் என்பது கபாடித் திடல் மட்டும்தான்.  உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற பெயரில் உதை மாஸ்டராக மாறியிருந்தார். விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு நெருக்கமான சிநேகிதராக விளங்கிட வேண்டிய பி.டி. ஆசிரியரை அடியாளாக மாற்றிய பள்ளிச் சூழல் கொடுமையானது; கண்டனத்திற்குரியது. தினமும் காலையில் பள்ளியில் நடைபெறுகிற பிரேயருக்குத் தாமதமாக வருகிற மாணவர்களைப் பிரம்பினால் வெளுக்கிற பி.டி.யைப் பார்த்து மாணவர்கள் நடுங்கினர். 9-11 வகுப்புக்கான சீனியர் விளையாட்டு ஆசிரியரைப் பெரிய பி.டி. சார் என்றும், 6-8 வகுப்புக்கான ஜூனியரைச் சின்ன பி.டி.சார் என்றும் மாணவர்கள் சொல்வார்கள். இண்டர்வெல் எனப்படும் இடைவேளையில் பள்ளிக்கு வெளியே போய் சிறுநீர் கழித்துவிட்டு அல்லது ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுவிட்டு, தாமதமாக வருகிற மாணவர்களைப் பெரிய பி.டி.யின் விசில் தொங்குகிற தடிமனான கயிற்றின் முடிச்சு, பின்னியெடுத்து விடும்.  எப்பொழுதும் கடுகடுவென்ற முகத்துடன் இருக்கும் ஹூசைன் என்ற பெரிய பி.டி. வாத்தியார்  பெயரைக் கேட்டவுடன் வெறுப்படைகிற மாணவர் எண்ணிக்கை, கணிசமானது. எந்த விளையாட்டு ஆசிரியரும் எங்களுக்கு விளையாட்டுகள் சொல்லித் தரவில்லை. ஒருக்கால் அவர்கள் முயன்றிருந்தாலும், விளையாடுவதற்குத் திடல் எங்கே?

கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பற்றி, நாளிதழ்களில்  வாசிக்கும்போது, அந்த மாதிரி விளையாட்டுகள் சொல்லித் தருகிற பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கவில்லையே  என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் கைப்பந்து விளையாட்டு மும்மரமாக நடைபெறும். ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள், மதுரை போன்ற நகரத்தில் ஒரு மாதம்கூட நடக்கும். எங்கள் பள்ளியைப் பொருத்தவரையில் மாணவர்கள் விளையாட்டு வகுப்பில் புளியமரத்தடியில் உட்கார்ந்திருப்போம். சிலர் சதுரக் கட்டத்தை மணலில் வரைந்து,  மூன்று கற்களை வைத்து விளையாடுவார்கள். நான்கைந்து பேர் சேர்ந்து வட்டமாக அமர்ந்து,  ஒருவன் மனதுக்குள் ஏதோவொரு திரைப்படப் பெயரை நினைத்துக்கொண்டு, ‘பா ’ என்று சொல்ல, இன்னொருவன்  ’ ச’ என்று சொல்ல … இப்படியாக நீளும். அந்தச் சொல்லைச் சொல்ல முடியாதவன் தோற்றவன் ஆவான். சிலர் ஆடு, புலி ஆட்டம் ஆடுவார்கள்.

மாணவர்களுக்காக வாங்கப்பட்ட கேரம் போர்டு, செஸ் போன்றவற்றை ஆசிரியர்கள், ஓய்வறையில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  எட்டாவது ஆசிரியர் லட்சுமிகாந்தன் சார், அலுலகத்தின் முன்னர் இருக்கிற வரண்டாவில் அமர்ந்து, யாருடனாவது செஸ் விளையாடுவதை அருகில்நின்று அவ்வப்போது வேடிக்கை பார்ப்பேன். செஸ் ஆட்டத்தின் விதிமுறைகள் எனக்குப் பிடிபட்டன. ஒன்பது, பத்து வகுப்புகளில் படிக்கும்போது, சக மாணவர்கள், திடலில் இருக்கிற மரத்தடியில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். நானும் இன்னும் சில மாணவர்களும் செஸ் விளையாடுவோம். எனக்குச் செஸ் விளையாட்டுப் பிடிக்கும். அந்த விளையாட்டுத் தெரிந்ததால், பிற மாணவர்களைவிட புத்திசாலி என்று எனக்குத் தோன்றியது. ஆண்டு முடிவில் பழைய கேரம் போர்டுகள், பந்துகள், செஸ் போன்ற விளையாட்டுக் கருவிகளைப் பொது ஏலத்தில் விடுவார்கள். பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் ஏலமெடுத்தனர்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு மிகவும் பிடிக்கும்.   ஓவிய ஆசிரியர் கலர் பென்சில் கொண்டுவராத மாணவர்களைக் குச்சியால்  மெல்லக் காலில் அடிப்பதும், மாணவர்கள் துள்ளிக் குதிப்பதும் வேடிக்கையாக இருக்கும். எல்லா மாணவர்களும் வயிறு குலுங்கிடச் சிரிப்பார்கள்.  அவர்,  நகைச்சுவையாகப் பேசியவாறு, எளிய முறையில் ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார்.  சில கோடுகளினால் உயிர் பெற்றிடும் ஓவியம், எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. என்னால் அழகாக ஓவியம் வரைய முடியவில்லை என்று வருத்தப்பட்டேன்.  சில மாணவர்கள் தரையில் படுத்துக்கொண்டு அழகாக ஓவியம் வரைந்தனர். டிராயிங் நோட்டில் வரைந்த ஓவியங்களுக்கு வண்ணப் பென்சில்கள் மூலம் வண்ணம் தீட்டி முடித்தவுடன், ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அந்த ஓவியங்களை ஆசிரியரிடம் காண்பித்தால் அவர் 10க்கு 6,7,8,9 என மதிப்பெண் போடுவதுடன் Good, V.Good, Fair என எழுதுவார்.  அவருடைய கையொப்பம்கூட ஓவியம் போல இருக்கும். ஒவ்வொரு மாணவனும் பிறர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து ரொம்ப அழகாக வரைந்திருக்கிறாய் என்று பாராட்டுவார்கள். எட்டு, ஒன்பது வகுப்பு மாணவர்கள் பெட்டியில் இருக்கிற வண்ணக் கட்டியில் தண்ணீரால் நனைத்துத் தூரிகையால் வண்ணம் தீட்டுவார்கள்.  ஓவியக் கலையைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்தது, அழகியலுடன் தொடர்புடையது. எண்ணும், எழுத்தும் மட்டுமல்ல ஓவியமும் அவசியம் கற்க வேண்டிய பாடமாகும்.

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, தமிழகமெங்கும் இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களும் ஆர்வத்துடன் இணைந்தனர். எங்கும் போராட்டத்தின் வீச்சு பரவியது.  அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த எங்கள் பள்ளிக்கூடத்திற்குத் திடீரென சோழவந்தான், அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கும்பலாக வந்தனர்; வகுப்பறைக்குள் நுழைந்து சீனியர் மாணவர்களைப் போராட்டத்திற்கு அழைத்தனர்.  அவர்கள் என்ன செய்வது எனத் திகைத்தபோது, ’வளையல் வாங்கித் தருகிறோம் போட்டுக்கோ, கண் மை தருகிறோம் தீட்டிக்கோ, சேலை வாங்கித் தருகிறோம் உடுத்திக்கோ’ என்று கத்தினார்கள். வெளியூர் மாணவர்களைத் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் பள்ளிக்கூட வாசலுக்கு வெளியே தள்ளினர். அந்தச் சம்பவம்  எங்கள் பள்ளியின் சீனியர் மாணவர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது. மறுநாள் காலையில் பள்ளியிலிருந்து  மாணவர்கள், கும்பலாக  வெளியேறினோம். இந்தி ஒழிக என்ற முழக்கம் காற்றில் பரவியது. பலர் வீட்டிற்குப் போய் விட்டனர். பள்ளிக்கு முன்னர் கூடியிருந்த கூட்டத்தில் நானும் இருந்தேன்.  அடுத்து என்ன செய்வதென்று தெரியாத சூழல். அப்பொழுது பள்ளிக்கூடத்திற்கு வெளியே நெடுஞ்சாலையில் சென்ற லாரியை நிறுத்திய சீனியர் மாணவர்கள், எல்லாம் ’ஏறுங்க’ என்றவுடன், நானும் லாரியில் ஏறினேன். நெடுஞ்சாலையில்  வேகமாகச் சென்ற லாரியில் இருந்த நாங்கள் வழி முழுக்கத் தமிழுக்கு ஆதரவாகவும், இந்திக்கு எதிராகவும் கோஷமிட்டோம். எனக்கு வேடிக்கையாகவும், பயமாகவும் இருந்தது. லாரி, கொடைரோடு அருகில் சென்றபோது, மாணவர்கள் எல்லோரும் லாரியை நிறுத்தச் சொல்லிக், கீழே இறங்கினோம்.

ஏதோ சாதனை செய்தது போன்ற மனநிலை. பயங்கரப் பசி. சாலையோரத்தில் இருந்த கரும்புத் தோட்டத்தில் புகுந்து கரும்பை ஒடித்துத் தின்றோம். தோட்டத்தில் இயங்கிய மோட்டாரில் இருந்து கொட்டிய தண்ணீரைக் குடித்தோம்.  பின்னர் மறுபடியும் ரோட்டில் வந்த லாரியை மறித்து, அதில் ஏறி, கோஷமிட்டவாறு   ஊருக்கு வந்தோம். இந்தியை  அரக்கியாகச் சித்திரித்தும், தாய்ப்பால் தமிழ் இருக்க, நாய்ப்பால் ஹிந்தி எதற்கு என்று முழங்கியதும் இப்பவும் நினைவில் உள்ளது. மற்றபடி ஆறாவது படிக்கும்போது, லாரியில் கிளம்பிய எனது செயல், ஒருவகையில் சாகசம்தான்.  பத்து வயதிலே இந்தி மொழி எதிர்ப்புப் போராளி என்று என்னைச் சொல்ல முடியுமா? சரி, போகட்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com