வகுப்பறை வாசனை- 11

வகுப்பறை வாசனை- 11

ஆறாம் வகுப்பில் படிக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்த தினத்தந்தி நாளிதழை ஆர்வத்துடன் வாசித்தேன்.  அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்ட மன்றங்களில் இருந்து  தினமணி, முரசொலி, ஜனசக்தி, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. எதிர்த்த வீட்டு அக்காவிடமிருந்து ராணி  பத்திரிகையை ஓசி வாங்கி வாசித்தேன்.   என்னுடைய சின்னையா வைத்திருந்த விறகுக்கடையில் இருந்து, தற்செயலாக எனக்குக்  கிடைத்த வாண்டுமாமா எழுதிய சிறுத்தைச் சீனன்   புத்தகத்தை வாசித்தவுடன், புதிய உலகில் பயணித்தேன். காட்டிற்குள் வாழும் சிறுவன், அவனுடைய நண்பனான சிறுத்தை என விரிந்த கதை, சுவராசியமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் சின்னையா மகன் அண்ணாதுரை அண்ணன், வீட்டில் வைத்திருந்த காந்தி எழுதிய சத்திய சோதனை நூலைப் பார்த்தேன். ஏற்கனவே காந்தித் தாத்தா பற்றிக் கேள்விப்பட்டிருந்த காரணத்தினால் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கதை போல வாசிக்கத் தொடங்கினேன். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்த காந்தித் தாத்தா என்று பள்ளிக்கூடத்தில்  கேள்விப்பட்டவரின் வாழ்க்கை வரலாறு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி, சிறுவனாக இருந்தபோது தான் செய்த தவறுகளை வெளிப்படையாக விவரித்திருந்ததும், பெரிய மகான் என்று சொல்லப்பட்ட காந்தி சிறுவனாக இருந்தபோது எல்லோரையும் போல இருந்தார் என்பதும் எனக்குப் பிடித்திருந்தன. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, எப்பொழுதும் உண்மையே பேச வேண்டுமென்று காந்தி எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நானும்  ஏற்றுக்கொண்டேன்.

எங்கள் ஊரையொட்டி இருக்கிற ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த கிளை நூலகத்திற்கு நான்காம் வகுப்பில் படிக்கும்போது, தொடங்கி, அவ்வப்போது போய் அம்புலி மாமா, கண்ணன் போன்ற பத்திரிகைகளுடன் வெகுஜனப் பத்திரிகைகளும் வாசித்துக் கொண்டிருந்தேன். நூலகர் அமர்ந்திருக்கும் அறையில் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான், ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, கதர் வேட்டி, சட்டை அணிந்திருந்த நூலகரிடம் சென்று உள்ளிருக்கிற புத்தகங்களைப் பார்க்கலாமா? என்று கேட்டேன். அவர், மூக்குக் கண்ணாடியின் வழியாக என்னை உற்றுப் பார்த்தவர், கீழடுக்கில் இருக்கிற புத்தகங்களைக் காட்டி, ’பார்’ என்று வெறுமையாகச் சொன்னார்.  ஆவலுடன் உள்ளே சென்று புத்தகங்களைப் புரட்டினேன்.  எல்லாம்  குழந்தை இலக்கியப் படைப்புகள்.  சில புத்தகங்கள் படங்களுடன் இருந்தன. என் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. அங்கிருந்தவாறு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.  புத்தகத்தை வீட்டுக்கு  எடுத்திட்டுப் போக முடியாதா என்று கேட்டபோது, சின்னப் பசங்களுக்குக் கிடையாது என்றார். புத்தகம் கட்டாயம் வேண்டுமென்றவுடன் அவர்,  ’உங்க வீட்டில் படிச்சவங்க யாரிருக்காங்க?’ என்றார். என்னுடைய அண்ணன் குலோத்துங்க பாண்டியன் கல்லூரியில் படிப்பதாகச் சொன்னவுடன், கையளவிலான அச்சடிக்கப்பட்ட அட்டையைக் கொடுத்து, அதைப் பூர்த்திசெய்து, இரண்டு ரூபாயுடன் அவரையும் அழைத்துவரச் சொன்னார். அப்படி பெற்ற நூலக டோக்கன் எண்: 398. அந்த  டோக்கனை அவரிடம் தந்துவிட்டு, அடுக்குகளில் தேடி, ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுப்பேன். அவர் சிறிய தாளில் புத்தகத்தின் பெயரை எழுதி, என்னிடம் தந்து, என் அண்ணனிடம் கையொப்பம் வாங்கி வரச் சொல்வார். வீட்டுக்குப் போய் அண்ணனிடம் கையொப்பம் வாங்கி வந்து, தாளை அவரிடம் தருவேன். அவர் நம்பிக்கையில்லாமல், என்னையும், தாளையும் மாற்றிமாற்றிப் பார்ப்பார். நான்,  புத்தக அடுக்குகளில் தேடியெடுத்துத் தருகிற புத்தகத்தை என்னிடம் தரும்போதுகூட அவருடைய பார்வையில் அவநம்பிக்கை இருக்கும். இவ்வளவு சின்னப் பையன் புத்தகம் எடுத்துப் படிக்க மாட்டான் என்று அவர் கருதியிருக்க வேண்டும். அப்புறம் சுமார் ஏழு மாதங்களுக்குப்  பின்னர் அண்ணனின் கையொப்பம் இல்லாமல், புத்தகத்தை எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

நூலகத்தில் முதன்முதலில் எடுத்த புத்தகம் தமிழ்வாணனின் ’பேய் பேய் தான்’.  துப்பறியும் நாவல்கள், மர்ம நாவல்களை ஆர்வத்துடன் வாசித்தேன். அப்புறம் சாண்டில்யன், கல்கி எழுதிய வரலாற்று நாவல்கள். கதைப் புத்தகங்களை எடுத்துப் புரட்டி, சில பக்கங்களை மேலோட்டமாக வாசித்து, பிடித்திருக்கும் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துப்போய் வாசிப்பேன்.   எட்டாம் வகுப்புப் படிக்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் வாசித்து முடித்தேன். அந்த நாவல் வரலாற்றின் புனைவுகளுக்கு என்னை இட்டுச் சென்றது.  அதில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு வரலாற்றுச் சம்பவத்தையும், கதை மாந்தர்களையும் நிஜம் என்று நம்பினேன். எனது உலகம்,  புத்தகங்களின் மூலம் மெல்லப் புனைவுலகில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் காலத்தில் நிறையப் புத்தகங்களை வாசிக்கிறவர்கள், சோடா புட்டி அளவில் கண் கண்ணாடி அணிந்திட நேரிடும் என்ற நம்பிக்கை நிலவியது. நான் எங்கள் வீட்டுத் திண்ணையில்  உட்கார்ந்து புத்தகம் வாசிப்பேன்.  அப்பொழுது, ‘இப்படித்தான் ரொம்பப்  புத்தகங்கள் படிச்ச ஒரு பையன் லூஸாகப் போயிட்டான்’ என்று யாராவது சொல்வதைக் கேட்டுப் பயந்திருக்கிறேன். என்றாலும் புத்தகங்கள் மீதான எனது நேசம் கூடிக்கொண்டு போனது.  நூலகமும், பள்ளிக்கூடமும் அவசியம் இணைந்திருக்க வேண்டியது அவசியமானது. துரதிர்ஷ்டவசமாகத் தமிழகக் கல்விமுறைக்கும் நூலகத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. குறிபாகப் பள்ளிக்கூடத்தில் நூலகம் என்ற பேச்சுக்கு இடமில்லாத சூழலும், பாடப் புத்தகங்களை மட்டும் வாசித்தால் போதுமென்ற பொதுப்புத்தியும் கற்றலுக்கு முரணானவை. என்னுடைய இளமைக்கால வாசிப்பையும், கருத்தியல் உருவாக்கத்தையும் ஏற்படுத்தியதில் கிளை நூலகத்தின் பங்கு, மகத்தானது. நூலகப் புத்தகங்ளை ஆர்வத்துடன் வாசித்த காரணத்தினால், பாடப் புத்தகங்களும் எனக்குப் பிடித்தமானவையாக மாறின.

எழாம் வகுப்பில் என் வகுப்பு ஆசிரியை ஹெலன் மரியதெரசா, மாணவர்களிடம் ப்ரியத்துடன் பேசுவார்; எல்லோருக்கும் புரியுமாறு எளிமையாகப் பாடம் நடத்துவார். அவர், முன்னர் ஹிந்தி மொழிப் பாடம் போதிக்கிற ஆசிரியையாகப் பணியாற்றியதால், அவரை ஹிந்தி டீச்சர் என்று மாணவர்கள் சொல்வது வழக்கம். அவருடைய வீடு, பள்ளியின் காம்பவுண்டு சுவரையொட்டி இருந்தது.   அவருடைய கணவர் அம்ப்ரோஸ் பட்டதாரி ஆசிரியராக எங்கள் பள்ளியில் பணியாற்றினார். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்று பசங்களிடம் கிசுகிசு நிலவியது. அவருக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை வீட்டில் வேலைக்காரப் பெண் கவனித்துக் கொண்டிருந்தார் அவர், என்னிடம்  தினமும் காலையில் பள்ளி இடைவேளையில் அவருடைய வீட்டுக்குப் போய் பழரசம் வாங்கிட்டு வரச் சொல்வார். நான் பள்ளியின் காம்பவுண்டுச் சுவர் ஏறிக் குதித்து, டீச்சரின் வீட்டுக்குப் போய், வேலைக்காரப் பெண் தருகிற பழரசம் நிரம்பிய ஜக்கை வாங்கிக்கொண்டு வருவேன். சிலவேளையில் அந்த நேரத்தில் வெளியே திரியுற எங்கள் வகுப்பில் படிக்கிற சேட்டைக்காரப் பையனுகள் ஜக்கை வாங்கி, சில மிடறுகள் பழரசத்தைக் குடித்துவிட்டு, டீச்சரிடம் சொல்லாதே என்று எச்சரிப்பார்கள். அந்த விஷயம் மட்டுமல்ல, சக வகுப்பு மாணவர்கள் செய்கிற எந்தவொரு சேட்டையையும் ஆசிரியரிடம் சொல்ல மாட்டேன். அந்த மாதிரி சொல்வது காட்டிக் கொடுப்பது போல எனக்குத் தோன்றும். 

      நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்ட சி. என். அண்ணாத்துரை புற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அமெரிக்காவிற்குப் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிழகத்திற்குத் திரும்பியிருந்த அண்ணாவின் உடல்நலம், மோசமானது. அப்பொழுது ஏறக்குறைய பத்து நாட்கள் தினமும் பிரேயரில் தலைமை ஆசிரியர், அண்ணாவின் உடல் நலம் குறித்துக் கண் கலங்கிடப் பேசினார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட மாணவர்கள் வருந்தினர். திராவிட இயக்கப் பின்புலமுடைய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு அண்ணாவின் உடல் நலக்குறைவு துயரமளித்தது. அண்ணாவின் உடல் நலம் தேறி வருவதற்காகப் பிரேயரில் எல்லோரும் இறைவனிடம் உருக்கமாக வேண்டினோம். அண்ணா இறந்த செய்தி அறிந்தவுடன், தாங்க முடியாத துக்கத்துடன் இரங்கல் கூட்டத்தில் அழுதவாறு சில ஆசிரியர்கள் பேசினர். ஆசிரியர்கள் கருப்புக் கொடியைச் சட்டையில் குத்திக்கொள்ள, மாணவமாணவியரும், ஆசிரியர்களும் மௌன ஊர்வலமாக ஊரின் முக்கியத் தெருக்களில் சுற்றி வந்தோம். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவின் மரணம் பள்ளி மாணவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

 ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த முருகானந்தம் அற்புதமாகப் படம் வரைவான்.  அவன், பேனா நிப்பினால் நோட்டில் சாமி படங்களை எல்லோருக்கும் கோட்டோவியமாகப் படங்களை வரைந்து தருவான். அவன் எப்படி இவ்வளவு இளம் வயதில்  ஓவியம் வரையும் திறமையுடன் விளங்கினான் என இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரிமாக இருக்கிறது.

ஒவ்வொரு வகுப்பிலும் ஏதாவது இலக்கிய நிகழ்ச்சி நடத்த வேண்டுமெனத் தலைமையாசிரியர் அனுப்பிய சுற்றிக்கை காரணமாகத் தமிழாசிரியர் சண்முகம் ஐயா, சிறந்தது கல்வியா? செல்வமா? வீரமா? என்ற பெயரில் பட்டி மன்றம் நடத்திட முடிவெடுத்தார். மாணவர்கள் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. ஆசிரியர், மூன்று மாணவர்கள் அவசியம் பேச வேண்டுமெனக் கட்டளையிட்டு, என்னைச் செல்வம் தான் சிறந்தது எனப் பேசிடச் சொன்னார்.  ’எனக்குக் கல்வி தான் பிடிக்கும். அந்தத் தலைப்பில் பேசுகிறேன்’ என்று தமிழாசிரியரிடம் சொன்னேன். அவர், மறுத்து விட்டார். வேறுவழியில்லாமல் செல்வம்தான் உலகில் சிறந்தது என்று பேசுவதற்காகத் தாளில் ஏதோ எழுதியதை ஆசிரியரிடம் காண்பித்து, ஒப்புதல் பெற்றேன். அப்புறம் என்ன? மொட்ட மனப்பாடம்தான். குறிப்பிட்ட நாளில் ஆசிரியரின் தலைமையில் செல்வம்தான் சிறந்தது என்று  வகுப்பில் பேசினேன். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போன்று அமர்ந்திருக்கிற நடுவர் அவர்களே எனத் தொடங்கிய  எனது பேச்சு, ஒரே சொதப்பல். பேச்சு வரவில்லை. மனப்பாடம் செய்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை.    கைகால்கள் எல்லாம் நடுங்கின.  எனக்கு அந்தக் கூட்டம் வெட்டி வேலை என்று தோன்றியது.

 உயர்நிலைப் பள்ளிக் கல்வியில்   ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு புத்தகம் என்று இருந்தது  எனக்குப் பிடித்திருந்தது.  வரலாறு என்ற பெயரில் முன்னர் நடந்த சம்பவங்களை விவரிக்கிற வரலாற்றுப் பாடம், சுவராசியமாக இருந்தது.  அதிலும் ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில்  இடம் பெற்றிருந்த  புத்தரின் கதையும், அவருடைய போதனைகளும் எனக்குள் பெரிய பாதிப்புக்களை உருவாக்கின. ’எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; கொல்லப்பட்ட விலங்கை உண்ணக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தேன். தலைக்குப் பின்னால் ஒளி வட்டத்துடன் அமைதி தவழும் புத்தரின் முகம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டில் அசைவ உணவுகளான ’ கறி, மீன் சாப்பிட மாட்டேன். அது ரொம்பப் பாவம்’ என்று அம்மாவிடம் சொல்லி அடம் பிடித்தேன். ஞாயிற்றுக் கிழமையன்று பெரும்பாலும் மதிய உணவுவேளையில் தந்தையாருடன் சேர்ந்து சாப்பிடும்போது, அவர் எனது உணவு வட்டிலில் கறியை அள்ளிவைத்துச் சாப்பிடுமாறு வற்புறுத்துவார். நான் அவரிடம் உயிர்களைக் கொல்வது பாவம் என்று சொல்லி, சாப்பிடாமல் இருப்பேன். ’கொன்னால் பாவம் தின்னால் போகும். சாப்பிடாவிட்டால் அடி, பிய்த்து விடுவேன்’ என்று மிரட்டிச் சொல்கிற தந்தையாரின் பேச்சைத் தட்டமுடியாமல், வேறு வழியில்லாமல், கசப்பான மருந்தை விழுங்குவது போல உணவை விழுங்குவேன். ஆனால், தனிமையில் மிகவும் வருத்தமாக இருக்கும்.  வீட்டைவிட்டு ஓடிப் போகலாமா? என்றுகூட யோசித்திருக்கிறேன். புத்தர்தான் எனக்குள் கருத்தியல்ரீதியில் ஆளுகை செலுத்திய முதல் ஆளுமை. பதினான்கு வயதில் நாத்திகனான மாறிய பின்னரும், முப்பது வயதில் புத்த சமயக் கருத்துகளைக் கற்று, விமர்சனத்திற்குள்ளாக்கியபோதும் புத்தரின் மீது உருவான மோகம், இன்றளவும் குறையவில்லை. புத்தர் ஒரு தொன்மம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com