வகுப்பறை வாசனை: 12

வகுப்பறை வாசனை: 12

யோசிக்கும்வேளையில் எனது ஆளுமை உருவாக்கத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு ஆசிரியர் இருந்திருக்கிறார். பொதுவாக ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துவதுடன், தன்னுடைய அனுபவங்களையும், முக்கியமான தகவல்களையும் மாணவர்களிடம் பரிமாறிக் கொள்கிறார். ஒரு வகுப்பில் இருக்கிற முப்பது மாணவர்களில் ஓரிருவர் ஆசிரியரின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிற செயல், தானாக  நடைபெறும். அந்த ஆசிரியர்தான் சமூக மாற்றத்திற்கான விதையை இளைய தலைமுறையினரிடம் விதைக்கிற உன்னதமான பணியைச் செய்கிறார். வெறுமனே மாத ஊதியத்திற்காகக் கூலிக்கு மாரடிக்கிற பெரும்பான்மையான ஆசிரியர்களில் சிலர் மட்டும் சமூக அக்கறையுடன், தங்களுடைய ஆசிரியர் தொழிலின் முக்கியத்துவத்தைப் புரிந்து செயல்படுகின்றனர். இத்தகைய ஆசிரியர்கள்தான், புதிய உலகினைச் சிறுவர், சிறுமியருக்கு அறிமுகம் செய்கின்றனர்.   கல்வி பற்றிய எனது அனுபவப் பதிவுகளில் என்னைச் செதுக்கிய சிற்பிகளான ஆசிரியர்கள் பற்றி அவ்வப்போது பதிவாக்கிட விழைகிறேன். இன்று ஆசிரியர்- மாணவர் உறவென்பது அருகிவரும் விஷயமாகி விட்டது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லம் சந்தைக்கானதாக மாற்றப்படுகிற நுகர்பொருள் பண்பாட்டில் கல்வி மட்டும் விதிவிலக்காக இருந்திடச் சாத்தியமில்லை. கல்வித்துறையில் ஆசிரியர்களின் பணி மகத்தானது என்பதை இன்றைய சுயநலமான சுயநிதிக் கல்விச் சூழலில் பணியாற்றுகிற ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது; மாணவர்களுக்கும்தான்.  எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களை உருவாக்கிடும் கல்வியை வகுப்பறையில் மட்டுமின்றி, வெளியிலும் போதிக்கிற ஆசிரியர்கள்தான், சமூக மாற்றத்திற்கான அடிப்படை. கங்கை ஒருபோதும் வற்றாது என்பது வெறுமனே நம்பிக்கை மட்டுமல்ல.


என்னுடைய எட்டாம் வகுப்பில் தமிழாசிரியர் எஸ்.எஸ். வாசன் என்றும் மறக்கவியலாத ஆளுமை. திண்டுக்கல் பக்கம் கன்னிவாடி என்ற ஊர்க்காரர். எப்பவும் நகைச்சுவையுடன், கேலியாகப் பேசும் வாசன் சார் வகுப்பு என்றால், மாணவர்களுக்குக் குதூகலம்தான்.  ஆசிரியர் என்றால் எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன், மூலநோயில் அவதிப்படுகிறவர் போல வகுப்பறையில் சிரமத்துடன் பாடம் நடத்தவேண்டும் என்ற இலக்கணத்தை வாசன் சார் மாற்றியமைத்தார். அவர், வகுப்பில் பாடத்தை உற்சாகத்துடன் சுவராசியமான மொழியில் குட்டிக் கதைகளுடன் நடத்திய முறை எங்களுக்குப் பிடித்திருந்தது. பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களைப் பற்றியும், அவர்களுடைய பாடல்கள் எப்படி சிறப்பானவை என்றும் உணர்ச்சிப்பூர்வமாக வகுப்பில் விளக்கினார். அதுவரை தமிழ்ப் பாடத்தில்  மனப்பாடச் செய்யுள்களை மனனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுத்திய வெறுப்பு காரணமாகப் பாடல்களைப் புறக்கணித்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. வகுப்பறையில்  ஒரு திருக்குறளின் ஏழு சொற்களை ஆளுக்கு ஒன்றாக ஏழு மாணவர்கள் சொல்லிட, அதை விளையாட்டுப்போல மாற்றிய ஆசிரியரின் செயலால் எல்லோரும் ஐந்து நிமிடங்களுக்குள் மூன்று திருக்குறள்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொண்டோம்.



       
திரைப்படம் பார்ப்பதைப் பஞ்சமா பாதகங்களில் ஒன்று எனவும், சிறுவர்களின் மனதைச் சீரழித்து விடுமென்றும், குடும்பப் பெண்கள் பார்த்திடத் தகுதியற்றவை என்றும் கருத்துகள் நிலவிய காலகட்டத்தில் சினிமா பற்றிய விமர்சனத்தைச் சமூகவியல் நோக்கில் வாசன் சார் வகுப்பறையில் பேசினார். அவருடைய பேச்சு, திராவிட இயக்கத்திற்குச் சார்பாக இருந்தது. தமிழ்ப் பாடத்தை நடத்தும்போது, திரைப்படத்தையும், திரையிசைப் பாடல்களையும் மேற்கோள் காட்டி விளக்கியது பாடத்தை எளிதாகப் புரிந்திட உதவியது. அவர்,  மாணவர்களைக் கிண்டல் செய்யும்போது, வகுப்பறை சிரிப்பில் ததும்பும்.


 ’சூத்திரன் வேதத்தைக் கேட்டால், அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என மநுதரும சாஸ்திரம் சொல்கிறது என்று வாசன் சார் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பெரியாரின் சமூகச் செயல்பாடுகளையும், சாதிகளை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும்,  பார்ப்பனியத்தின் வைதிக வருணாசிரமக் கொடுமையையும் எளிய சொற்களில் அவர் விளக்கிய முறை, எனக்குள் அழுத்தமாகப் பதிந்தது.  நான், ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் நாத்திகனாக மாறியதிலும், பெரியார் சொல்லிய கருத்துக்களின் மீது ஈடுபாடு மிக்கவனாக மாறியதிலும் வாசன் சாரின் பேச்சுகளுக்கு இடம் உண்டு. ஒரு மூக்கு இருக்கிற நமக்குச் சளி பிடிக்கும்போது, மூக்கைச் சீந்தினால் இம்புட்டுச் சளி வருது. ஆறுமுகக் கடவுளான முருகனுக்குச் சளி பிடித்து, ஆறு மூக்குகளையும் சீந்தினால் எம்புட்டுக் குவியும் என்று கைகளை விரித்துக் காண்பிப்பார். மாணவர்கள் எல்லோரும் விழுந்துவிழுந்து சிரிப்போம்.

         
வாசன் சார் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று அவ்வப்போது, வகுப்பறையில் விவரிக்கிறபோது, எல்லோரும் அதை உண்மை என்று நம்பினோம். அவர் சொன்ன சம்பவம்:’’நான் ஒருநாள்  எங்கள் ஊரிலிருக்கிற ஆற்றங்கரையோரம்  நடந்து வரும்போது, அய்யர் ஒருத்தர் பூ, பழம், சந்தனம் எல்லாம் வைத்துக்கொண்டு, எள் கலந்த தண்ணீரை வானத்தை நோக்கி இறைத்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியாமல், ஏன் இப்படி தண்ணீரை இறைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், என்னுடைய இறந்துபோன தகப்பனார் விண்ணுலகமான சொர்க்கத்தில் இருக்கிறார். அவரை நோக்கித்தான் தண்ணீரைத் தெளிக்கிறேன் என்று பதில் அளித்தார். நான் கொஞ்சத் தொலைவு நடந்துபோய், ஆற்றுத் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் கரையில் இறைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து கரையோரமாக நடந்து வந்த அந்த அய்யர் என்னருகில் வந்தவுடன் நின்று என்னைப் பார்த்தவர்,’ என்ன செய்யறேள்’ என்று கேட்டார். நான், ’இரண்டு மைல் தொலைவிலிருக்கிற என்னுடைய வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்’ என்றேன். ’அது எப்படி முடியும்? இரண்டு மைல் தொலைவில் இருக்கிற வயலுக்குக் கையில் இறைக்கிற  தண்ணீர் எப்படி பாயும்?’ என்றார். நான், கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிற சொர்க்கத்து நீங்கள் இறைக்கிற தண்ணீர் போகும்போது, ரெண்டு மைல் தூரத்தில இருக்கிற வயலுக்கு நான் இறைக்கிற தண்ணீர் பாயாதா?’ என்றேன். வகுப்பில் இந்தக் கதையைக் கேட்டவுடன் எல்லோரும் சாரின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஆச்சரியப்பட்டோம். இது மாதிரி சொல்லப்பட்ட கதைகளின் பின்னர் கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவை இருந்தன.  சில நேரங்களில் அவர் வகுப்பறையில் பார்ப்பனர்கள், பிறப்பின் அடிப்படையில் தீண்டாமையை வலியுறுத்துகிற கபட வேதாரிகள் என்று வெளிப்படையாகப் பேசினார். தமிழாசிரியர் என்பவர் வெறுமனே மொழியைக் கற்றுக் கொடுக்கிற இயந்திரம் அல்ல; மொழிப் பாடத்தின் வழியாகக் கடந்த காலத்தின் வரலாற்றும் போக்குகளையும், பண்பாட்டுப் பதிவுகளையும் அரசியல் பின்புலத்தில் இளைய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்துகிறவர். வாசன் சார் அப்படிப்பட்டவர். யோசிக்கும்வேளையில் இந்தக் கட்டுரையை இப்பொழுது நான் எழுதுவதற்கு ஒருவகையில் வாசன் சார்தான் காரணம்.

ஒரு நாள் வகுப்பறைக்கு வந்த வாசன் சார் உடனடித் தேர்வு என அறிவித்தார். சார் நாளைக்குத் தேர்வு எழுதுகிறோம் என்று எல்லோரும் சொன்னோம். அது முடியாது என்றவர், கேள்விகளைக் சொல்லத் தொடங்கினார். ‘திருவள்ளுவரின் படம் வரைந்து பாகங்களைக் குறி, பாடப் புத்தகத்தில் இருக்கிற  இருபது திருக்குறள்களையும் எழுது அல்லது சொல்…’ இப்படியான கேள்விகளுக்கு ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் இம்போசிசன் கொடுத்தார். கேள்விக்கான பதிலை  இரு நூறு தடவைகள் எழுதிக் கொண்டுவரச் சொன்னார். சார், கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டவுடன் ஐநூறு தடவைகள் என்று எண்ணிக்கையைக் கூட்டினார். சார் என்று மீண்டும் சொன்னவர்களுக்கு எண்ணூறு தடவைகள் என்றார். சனி, ஞாயிறு முடிந்து, திங்கள் கிழமை வரும்போது, இம்போசிசன் எழுதாதவர்கள், வகுப்புக்குள்  நுழையக் கூடாது. அப்புறம் அப்பாவைக் கூட்டி வரவேண்டும் என்றவுடன், வகுப்பில் பேரமைதி நிலவியது. அன்று வகுப்புகள் முடிந்தவுடன், இவ்வளவு தடவைகள் எழுத முடியுமா? என்று எல்லோரும் கலந்து ஆலோசித்தோம்.  முடிந்த அளவில் பத்து அல்லது இருபது தடவைகள் இம்போசிசன் எழுதலாம். அப்புறம் பார்த்துக்கிடலாம் என முடிவெடுத்தோம்.  திங்கள் கிழமை அன்று வாசன் சார் வகுப்பிற்குள் நுழையும்போது, பெரும் மௌனம். சார் வழக்கம் போலப் பாடத்தை நடத்தினார். பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கியிருந்தபோது, விஷயம் புஸ்வானமாகியது.  இம்போசிசன் கொடுத்ததை அவர் மறந்து விட்டார் என்று நினைக்க முடியவில்லை.  எப்படியோ எங்களை ஒரு நாளில் உலுக்கி விட்டார். அது சரி, அவர்  ஏன் அப்படி  இம்போசிசன் எழுதச் சொல்லி எங்களைப் பயமுறுத்தினார் என்ற கேள்விக்கு விடை எதுவுமில்லை.

        
பொதுவாக வாசன் சார், படி, படி என்று வலியுறுத்திட மாட்டார்.  ஒருநாள் அவர், வகுப்பில் ஒழுங்காகப் பாடம் படிக்காவிட்டால், சினிமா தியேட்டரில் இடைவேளையில் ‘ஆ முருக்கு, ஆ முருக்கு’ விற்கப் போக வேண்டியதுதான் என்று குரலை ஒரு மாதிரி மாற்றிச்சொன்னபோது, எல்லோரும் சிரித்தோம். என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்த நண்பன் சாமிநாதன், அந்த நேரத்தில் தியேட்டரில் முருக்கு விற்றுக்கொண்டிருந்தான். அவனைத் தியேட்டரில் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். தினமும் இரண்டு காட்சிகள் திரைப்படத்தை  ஓசியாகப்   பார்ப்பதுடன், முருக்கு விற்பதில் கமிஷன் காசும் கிடைக்கிறது என்று நினைத்திருந்தேன். அப்புறம் அவனைச் சந்திக்கும்போது வருத்தப்பட்டேன்.
        

நான் முன்னர் படித்த தொடக்கப்பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு 1970ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது, விழாவில் வாசன் சார் எழுதி, இயக்கிய இரண்டரை மணி நேர நாடகத்தில் நானும்  நடித்தேன்.  நான் மொத்தம் 19 காட்சிகளில் நடித்தேன். ஒரு மாதக் காலம் ஒத்திகை நடந்தது. எமதர்மனின் அவையில் பூமியில் மனிதர்கள் செய்த செயல்களுக்குத் தண்டனையும், பூலோகக் காட்சிகளும் என்ற  நாடகக் காட்சிகளில் நகைச்சுவையும் சோகமும் தும்பின. அந்த  நாடகத்தின் பெயர் நினைவில் இல்லை. நான் எமனின் உதவியாளராகக் காலன் என்ற வேடத்தில் காமெடியனாக நடித்தேன். நாடகம் அரங்கேறிய மறுநாள் ஊரில் எங்கே போனாலும் எனது நகைச்சுவை நடிப்பைச் சிறுவர் முதலாகப் பெரியவர்கள் வரை பாராட்டினார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. புராண நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பின்னோக்கு உத்தியில்   சொல்லியிருந்த முறை, பலரையும் கவர்ந்தது.  அப்புறம் அடுத்த ஆண்டில் தொடக்கப்பள்ளியின் 51 ஆம் ஆண்டுவிழாவில் வாசன் சாரின் கதை, வசனம், நெறியாள்கையின் கீழ் நிகழ்த்தப்பட்ட ‘சுய ஆட்சி’ என்ற நாடகத்தில் நடித்தேன். அதிலும் காமெடியன் வேடம்தான். அப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.



       
மாணவர்கள் ஒன்றும் அறியாத களிமண் அல்ல என்ற புரிதலுடன் இயல்பாகச் செயல்பட்ட வாசன் சார் போன்றவர்கள், இளைய தலைமுறையினரின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எல்லாவற்றையும் சந்தேகப்படு; யார் சொன்னாலும் கேள்வி கேள் என்று என்று சொல்லிய வாசன் சார் வகுப்பறையில் அதிர்ச்சியைத் தந்தார். அவர், பள்ளிக்கு அருகில் தங்கியிருந்த  வீட்டுக்கு நண்பர்களுடன் அவ்வப்போது போயிருக்கிறேன். அவர், ஒருபோதும் என்னைச் சிறுவனாகக் கருதி, மட்டமாகப் பேசியது கிடையாது. எந்தவொரு விஷயத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அதேவேளையில் பகடியாகப் பேசுவார். எனக்குள் கலகப் பார்வையினை உருவாக்கிய வாசன் சாரைப் பெருமையுடன் நினைத்துக்கொள்கிறேன். அவர்தான் எனது ஆளுமை உருவாக்கத்தில் முதன்மையான ஆசான். அவரிடம் படித்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாசன் சார் பூமிப்பந்தில் நிச்சயம், எங்காவது இருப்பார் என்று தோன்றுகிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com