வகுப்பறை வாசனை 15

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சியடைந்து, பத்தாம் வகுப்பிற்கு மாறிவிட்டால், அப்புறம் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துவிடலாம் எனப் பெரும்பாலான மாணவர்கள் நம்பினர்.  அது, ஓரளவு உண்மையும்கூட. ஒன்பதாம் வகுப்பில் அ,ஆ,இ,ஈ என நான்கு பிரிவுகளில் பயின்ற நிலை, பத்தாம் வகுப்பில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கியது. ஒழுங்காகப் படித்து, முழு ஆண்டுத் தேர்வில் தேர்வடையாதவர்கள், ஒன்பதாம் வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டிய சூழல். அப்புறம் பள்ளியைவிட்டு இடையில் விலகிய கணிசமான மாணவியர், குடும்பச் சூழல் காரணமாக வெளியூரில் இருந்து வரமுடியாத மாணவர்கள் இருந்தனர்.



ஒன்பதாம் வகுப்பில் முப்பதுக்கும் கூடுதலாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, பத்தாம் வகுப்பில் பதினெட்டானது.  அதுவரை பொம்பளைப் பிள்ளைகளைத் தனியான வகுப்பில் வைத்துப் பாடம் நடத்திய  நிலை மாறியது. பத்தாம் வகுப்பு ’அ’ பிரிவில் பதினெட்டு மாணவியருடன் பன்னிரண்டு மாணவர்களும் சேர்ந்து படிக்க வேண்டிய சூழலில், சேட்டை பண்ணாத அமைதியான பையன்களைத் தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுத்தார். துரதிர்ஷ்டவசமாக எனது பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பொம்பளைப் பிள்ளைகள் இருக்கிற வகுப்பில் சேர்ந்து படிக்க மாட்டேன் என்று தலைமை ஆசிரியரிடம் சொன்னேன். அது, எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் மாணவிகளுடன் சேர்ந்து படிக்க வேண்டியதாயிற்று. முதல் நாள் வகுப்பறைக்குள் நுழைந்த எனக்குக் கூச்சமாக இருந்தது. முதல் இரு டெஸ்க்குகளில்  பையன்களும்,  பின்னால் இருக்கிற டெஸ்க்குகளிலும், பக்கவாட்டில் இருக்கிற டெஸ்க்குகளிலும்  மாணவிகள் இருந்தனர். சுற்றிலும் பொம்பளைப் பிள்ளைகள் சூழ இருந்த சூழலில் திணறிப் போனேன். அந்த வயதில் ஆண்-பெண் பால் வேறுபாடு எப்படி வலுவாக எனக்குள் உருவானது என்பது  புலப்படவில்லை.



பத்தாம் வகுப்பு ஆசிரியை ஜேம்ஸ் டீச்சர்.  அறிவியலில் பட்டம் பெற்றிருந்த அவர், எல்லோருக்கும் புரியும்படி அருமையாகப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.  சிவந்த தோற்றத்துடன் அழகாகவும், உயரமாகவும் இருந்த டீச்சர் எப்பவும் புன்முறுவலுடன் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், மாணவர்களிடம் ப்ரியத்துடன் பேசுவார். ஓரிரு நாட்களில் அந்த வகுப்பறை பழகிப்போன சூழலில், என்னைக் கிளாஸ் லீடராக டீச்சர் அறிவித்தார், எனது மறுப்பைப் பொருட்படுத்தாமல். ஜேம்ஸ் டீச்சர் சமயநல்லூரைச் சேர்ந்தவர். எனது குடும்பப் பின்புலமும், எனக்கு முந்தி, அந்தப் பள்ளியில் நன்கு படித்த எனது அண்ணன்கள் காரணமாகவும் என்னிடம் நெருக்கமாகப் பேசுவார்.



கிளாஸ் லீடர்  என்பது சள்ளைப் பிடித்த வேலை. ஆசிரியர் வராவிடில், அவரைப் பார்த்து வகுப்பு இருக்கிறது என்று நினைவூட்டல், அலுவலகத்திலிருந்து சாக் பீஸ் எடுத்து வருதல், எந்த ஆசிரியரும் வராதபோது, மாணவமாணவியர் சத்தம் போடாமல் பார்த்துக் கொள்ளுதல்… இப்படியான வேலைகள். ஆசிரியர் வகுப்புக்கு  வராதபோது, பொம்பளைப் பிள்ளைகளைப் பேசாமல் கண்காணிப்பது சிரமமான வேலை. பேசியவர்கள் பெயர்களை எழுதிக்கொண்டு ஹெட்மாஸ்டரிடம் தந்து விடுவேன் என்று மிரட்டினாலும், சில பொம்பளைப் பிள்ளைகள் அடங்காமல் பேசிக்கொண்டிருக்கும். நான் பேசியவர்கள் என்று பெயர்களை கரும்பலகையிலும், தாளிலும் எழுதினாலும் ஒரு பயனும் இருக்காது. பசங்கள் என் மீது இரக்கப்பட்டுப் பேசாமல் நமட்டுச் சிரிப்புடன் இருப்பார்கள். அதிகம் பேசியவர்கள் என்று எத்தனை பட்டியல் போட்டாலும்  பயன் இருக்காது. வேறு என்ன? அந்தப் பேசியவர் பட்டியலை நான் ஒருபோதும் ஹெட்மாஸ்டரிடம்  கொடுத்தது இல்லை. நான் கொஞ்சமாகச் சேட்டை செய்தாலும், என் வகுப்பறை நண்பர்கள் செய்கிற சேட்டைகளுக்காக ஆசிரியரிடம் போட்டுக் கொடுக்கிற வழக்கம் என்னிடம் இல்லை. அதனால் பக்கத்து வகுப்பறை ஆசிரியர் வந்து, கிளாஸ் லீடரான என்னைத் திட்டுவது அவ்வப்போது நடக்கும். இதெல்லாம் சகஜம் என்பதுபோல அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொள்வேன்.

ஜேம்ஸ் டீச்சர் எப்பொழுதும் மாணவர்களை உயர்த்தி வகுப்பில் பேசுவார். பொம்பளைப் பிள்ளைககிட்ட ரகசியம் சொல்லக் கூடாது,  அதுகளுக்கு அதை வச்சுக்கத் தெரியாது என்று சொல்லுவார். அவர்,  சாம்சன், டிலைலா காப்பியக் கதையைச் சொல்லி, பொம்பளைப் பிள்ளைகளை மட்டமாகச் சொன்னவுடன் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே வகுப்பில் மாணவிகளுடன் பேசாமல், எதிரெதிராக இருக்கும் மாணவர்கள் பொம்பளைப் பிள்ளைகளைத் தாழ்வாக நினைத்தனர்.  ஒருநாள் டீச்சர் அறிவியல் பாடத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் பாடத்தை விளக்கமாக நடத்திக்கொண்டிருந்தார். அந்தப் பாடத்தின் இறுதியில் இனப்பெருக்கத்திற்குத் தேவையான சுரப்பிகள் பற்றி மேல் வகுப்பில் படிப்பீர்கள் என்ற வரி இருந்தது.  இனப்பெருக்கம் என்ற சொல்லுக்குப் பொருள் அறியாமல்,  நான் வகுப்பில் எழுந்துநின்று ’ டீச்சர் அந்தச் சுரப்பிகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்றேன். டீச்சர் வழக்கமான புன்னகையுடன் ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். ‘ அந்தச்  சுரப்பிகளைப் பற்றி இந்த வகுப்பில் ஆம்பளைப் பசங்க மட்டும் இருந்தால் சொல்லலாம்; இல்லாட்டி பொம்பளைப் பசங்க மட்டும் இருந்தால் சொல்லலாம்; ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறப்ப சொல்ல முடியாது. ஏதாச்சும் ஆயிடும். பின்னாடி பெரிய ஆளான பிறகு உனக்குப் புரியும்’ என்று டீச்சர் சொன்னவுடன் சங்கட்டமாகப் போய் விட்டது. ஏதோ கேட்கக் கூடாத விஷயத்தை எனக்குப் பிடித்த டீச்சரிடம் கேட்டுவிட்டேன் என்று தோன்றியது. 


பத்தாம் வகுப்பில் மாணவமாணவியர் விரும்பிய பாடத்தைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து, பத்து, பதினொன்று வகுப்புகளில் படிக்க வேண்டும். வரலாறு, கணிதம், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களில் இருந்து ஏதாவது ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  எனக்கு மிகவும் பிடித்த பாடம் வரலாறு. ஆனால் சராசரியான மாணவர்கள் வரலாற்றையும், மீதமுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் உயிரியியலையும், என்னையும் சேர்த்து எட்டு மாணவர்கள் மட்டும் கணிதத்தையும் சிறப்புப் பாடமாக எடுத்தோம்.  அதில் ஒருத்தர் பெண். என்னுடைய சீனியர் மாணவர்கள் ஏன் கணக்குப் பாடத்தை எடுத்தாய்? மாட்டிக் கொண்டாய் எனப் பயமுறுத்தினார்கள். அல்ஜீப்ரா இஸ் கோப்ரா. அது, கொஞ்சம் அசந்தால் ஆளைப் போட்டுத் தள்ளிவிடும் என்று பெரும்பாலான மாணவர்கள் நம்பினர்.  எப்பவும் கொஞ்சம் வித்தியாசமானவனாக என்னைக் கருதியதால், கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்தேன். அது, ஒருவிதமான சாகச மனநிலையின் வெளிப்பாடு. அப்புறம் ராஜு சாரின் மீதான ஈடுபாடு.



சிறப்புக் கணிதப் பாடத்தில் அல்ஜீப்ரா, திரிகோணமிதி, தேற்றங்கள் எனப் புதிய வகைப்பட்ட கணக்குகள், புதிராகத் தோன்றின.  கணக்குகளைப் புரிந்துகொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. காலாண்டுத் தேர்வில் சிறப்புக் கணிதத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வறையில் உட்கார்ந்து, எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் எனக் கணக்குப் போட்டுக் கூட்டினேன். மொத்தம் 60 மதிப்பெண்கள்தான் கிடைக்கும் என்று மதிப்பிட்டவுடன் வருத்தமாக இருந்தது.  வகுப்பறையைவிட்டு வெளியே வந்தவுடன் என்னுடன் கணிதத் தேர்வு எழுதிய சக மாணவர்கள், சராசரியாக 90% க்கு மேல் கிடைக்கும் என்று உற்சாகத்துடன் சொல்வதைக் கேட்டவுடன், என்னுடைய வருத்தம் கூடியது. ஏதோ தவறு செய்துவிட்ட மனநிலையுடன், ’ஒழுங்காகத் தேர்வு எழுதவில்லை, கணக்குகள் ரொம்பக் கஷ்டம்’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போனேன்.  ஒவ்வொரு கணக்கும் ஒரு விநோதம், தேர்வில் காலை வாரி விடுகின்றன என்று நினைத்துக்கொண்டேன். காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிக்குப் போனபோது, ராஜு சார் விடைத்தாள்களைக் கொடுத்தார். நான்தான் முதல் மதிப்பெண். 66% மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். அப்புறம் ஏன் மற்றவர்கள் 90க்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்கள்? அதற்குப் பின்னர் எந்தத் தேர்வு எழுதினாலும், தேர்வு அறைக்கு வெளியில் வந்து சக மாணவர்களுடன் மதிப்பெண் அல்லது விடைகள் குறித்து ஒருபோதும் விவாதிக்கவில்லை. அந்தப் பழக்கம் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோதும் தொடர்ந்தது.



பத்தாம் வகுப்பில் சிறப்புப் பாடமாகக் கணிதத்தைத் தேர்ந்தெடுத்த மூன்று மாணவர்களும் வீட்டுக்கணக்குகளை நோட்டில் எழுதி, காலையில் ராஜு சாரின் மேசையில் வைத்து விடுவோம். எங்களுடைய நோட்டுக்களைச் சார் திருத்துவார். ஏனைய மாணவர்களின் வீட்டுக் கணக்கு நோட்டுக்களை ஆளுக்கு ஒன்பது பேர் என்ற கணக்கில் நாங்கள் திருத்துவோம். தமிழக அரசு, பத்தாம் வகுப்பில் புதிய கணக்குப் புத்தகம் வெளியிட்டிருந்தது.   சாரின் அறிவுரையின்படி அந்தப் புத்தகம் தரமாக இல்லையென்று, முந்திய ஆண்டில் பாடமாக இருந்த கணக்குப் புத்தகத்தில் இருந்து தினமும் மூன்று கணக்குகளைத் தேர்ந்தெடுத்து, பள்ளி முடிந்தவுடன், வகுப்பில் வாசிப்பேன். கணக்குகளைத் தேர்ந்தெடுக்கிற உரிமையை ராஜு சார், பத்து, பதினொன்று ஆகிய இரு வகுப்புகளிலும் என்னிடம் கொடுத்திருந்தார். அது, என் கணிதத் திறமைக்குக் கிடைத்த மரியாதை என்று நினைத்துக்கொண்டேன். பதினொன்றாம் வகுப்பிலும் தினமும் பத்து மாணவர்களின் வீட்டுக் கணக்கு நோட்டுக்களைத் திருத்தியதை இப்பொழுது நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.

பத்தாம்  வகுப்பில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் வகுப்பிற்கு வந்த ராஜு சார்  ஒவ்வொருவராக அழைத்து விடைத்தாளைக் கொடுத்து, அடியும் கொடுத்தார். நான் 99% மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் என்று அறிவித்தவர், விடைத்தாளை வாங்கிடச் சென்ற எனக்கு ஓர் அடி கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் 100 மதிப்பெண்கள் பெறவில்லை என்று செல்லமாகத் திட்டினார். விடைத்தாளைப் புரட்டிப் பார்த்தேன். இரு மதிப்பெண் கணக்கில் வர்க்கமூலத்தின் குறியீடைப் போட மறந்திருந்தேன். சாரிடம் வாங்கிய அடியையும் மறந்து, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் மகிழ்ச்சியடைந்தேன்.



கணக்குப் பாடத்தில் ஏற்பட்ட ஆர்வம், எதிர்காலத்தில் எந்தவொரு பாடத்தையும் எளிதில் கற்றிடும் தருக்க மனநிலையை எனக்குள் உருவாக்கியது. கணக்கு என்பது புதிர் போல. ஒவ்வொரு கணக்கையும் அசலாக யோசித்துத் தீர்வு காணும்போது, மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். கணிதப் பாடத்தில் எனக்கு ஆர்வத்தை உருவாக்கிய ராஜு சாரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு(1980) படிக்கும்போது, பதிவாளர் அறைக்கு முன்னர் பார்த்தேன்.  சாரிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு  பேசினேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. இருந்தாலும் புன்னகையுடன் என்னைப் பற்றி விசாரித்தார். ஏழாண்டுகள் கடந்தபோதும் சார் அப்படியே இருந்தார். அவர் என்னிடம் மரியாதையுடன் பேசியது சங்கட்டமாக இருந்தது.  எத்தனையோ மாணவர்களை உருவாக்கிய  ராஜு சார் நிச்சயம் சாதனையாளர்தான்.  



பொதுவாகப் பாடங்களை விழுந்துவிழுந்து படித்து வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டுமென்ற ஆர்வம், என்னிடம் எப்பவும் இல்லை. வகுப்பறையில் ஆசிரியர் நடத்துகிற பாடத்தைக் கவனத்துடன் கேட்பேன். என் மனதில் பாடம் பற்றிய சித்திரம் பதிந்துவிடும். அப்புறம் தேர்வுக்கு முதல்நாள் பாடப் புத்தகத்தைப் புரட்டி, முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வேன். தேர்வில் அப்படியே வரிவிடாமல்  எழுதி, மொட்ட மனப்பாடம் செய்வது என்னால் முடியாத விஷயம்.  சுருக்கமாகச் சொன்னால் எந்தவொரு  பாடத்தையும் சுமையாகக்  கருதுகிற மனநிலை, எனக்கு எப்பவும் இல்லை. ஒருக்கால் பாடம் புரியாவிடில், அதைப் புதிர்போலக் கருதி, மீண்டும்மீண்டும் வாசித்துப் பார்ப்பேன். அவ்வளவுதான். அப்புறம் என்னுடைய வகுப்பு மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்டால், என்னால் முடிந்தவரையிலும் விளக்கிட முயற்சிப்பேன்.  அப்புறம் சக மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கினால், அடுத்தத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டுமென நினைப்பேன். மற்றபடி பொறாமைக் குணம்  எனக்கு இல்லை. அப்புறம் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை மட்டமாகக் கருதுவது இல்லை. அத்தகையவர்கள் எனக்கு நெருக்கமான நண்பர்களாக எல்லா வகுப்புகளிலும் இருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com