வகுப்பறை வாசனை 16

வகுப்பறை வாசனை 16

பொதுவாகப் பள்ளிக்கல்வியில் வகுப்பிற்கு அப்பால், பல்வேறு விஷயங்களில் தொடர்புடையனவாக இருந்தேன். அதற்குக் காரணம் எனது செயல்பாடுகள்தான்.  சில ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தேன். அதேவேளையில்  சில ஆசிரியர்களின் வெறுப்பினுக்கு ஆளாகியிருந்தேன். இதெல்லாம் ஒருவகையில் புரியாத புதிர். பத்தாம் வகுப்பில் படிக்கும்போது,  தலைமை ஆசிரியர் என்னை அழைப்பதைக் கேள்விப்பட்டு, அவருடைய அறைக்குப் போவேன். அவர், அலுவலக உதவியாளரிடம் ஏதோ சொன்னவுடன், என்னிடம் ஒரு நோட்டுத் தரப்பட்டது. அதில் மாதந்தோறும் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளாகப் பட்டி மன்றம், பேச்சு, பாடல் பாடுதல் போன்றவை நடைபெற்றதாகத் தேதியும் நேரமும் பங்கேற்ற மாணவர்களின் பெயர்களும் பொய்யாக எழுதப்பட்டிருந்தது. மாணவர் செயலர் என்ற இடத்தில் நான் கையொப்பமிட்டேன்.  அந்த நோட்டில் குறிப்பிட்டிருப்பது போல இலக்கியக் கூட்டங்கள் எதுவும் பள்ளியில் நடைபெறாதபோது, ஏன் இப்படி தலைமை ஆசிரியர் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார் என்று  எனக்குக்  குழப்பம்.  அது சரி, அது போன்ற இலக்கிய நிகழ்வுகளை மாணவர்களுக்காக நடத்துவதில் என்ன பிரச்சினையென்று எனக்குப் புரியவில்லை. பள்ளியில் ஒருபோதும் நடக்காத இலக்கிய நிகழ்ச்சிகளை நடந்ததுபோல நோட்டில் எழுதிப் பதிவு செய்கிற தலைமை ஆசிரியரின் செயல், சரியல்ல என்று  அந்த வயதில் எனக்குத் தோன்றியது. பதினொன்றாம் வகுப்பிலும் மாணவர் செயலர் என்ற இடத்தில் கையொப்பம் இடுகிற எனது டூபாக்கூர் வேலை தொடர்ந்தது.  மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்திட வருகிறபோது, அந்த நோட்டு பயன்பட்டிருக்கும்.


எங்கள் பள்ளியில் இரண்டு சிறிய இரும்புப் பீரோக்களில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதுதான் பள்ளியின் நூலகம். அந்தப் பீரோக்களின் சாவிகள் ஹெட்மாஸ்டரிடம் இருந்தன. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது என்னை அழைத்துப்போன ஆசிரியர் ஒருவர், பதிவேட்டில் எழுதப்பட்டிருந்த புத்தகத்தின் தலைப்பைச் சொல்ல, ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ‘இருக்கிறது’ என்று சொன்னேன். அப்புறம் 10,11 வகுப்பு மாணவனாகப் பயிலும்போதும் புத்தகங்கள் கணக்கெடுப்பின்போது உடனிருந்து உதவினேன். அருமையான கதைப் புத்தகங்களுடன், பள்ளிச் சிறுவர்களுக்கான கட்டுரைப் புத்தகங்களும் அடங்கிய நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்து வாங்காமல், பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருந்தது ஏன் என்று நினைத்தேன். அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத்தின் கடற்பயணங்கள் ஆகிய இரு புத்தகங்களை ஆசிரியரின் அனுமதியுடன் வீட்டுக்கு எடுத்துப்போய் வாசித்துவிட்டு, மீண்டும் நூலகத்தில் ஒப்படைத்தது  நினைவுக்கு வருகிறது. நூலகப் புத்தகங்கள் கணக்கெடுப்பினுக்கு உதவியதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரு புத்தகங்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தன. எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வாசித்த ஒரே மாணவன் நான் மட்டும்தான்.  அப்புறம் அந்தப் புத்தகங்களை நேரில் பார்த்தவனும்  நான்தான். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட உதவும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்காமல், புத்தகங்களைப் பீரோவிற்குள் முடக்கி வைத்திருந்த தலைமை ஆசிரியர், நிச்சயம் மாணவர்களின் கற்றலுக்கு எதிரானவர். இன்றைக்கும்கூட பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் நூலகம் என்பது மாணவர்களைவிட்டு விலகியுள்ளது.

தமிழ்ப் பாடத்தில் தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் பாடப் புத்தகத்தில் இடம் பெறிருக்கும். பெரும்பாலான கட்டுரைகளின் மொழி நடை, கடினமாக இருக்கும்.  அந்தக் கட்டுரைகளைப் படித்து, அதில் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு விடையளிப்பதால், ஒரு மாணவனின் மொழிப் பயிற்சி எப்படி மேம்பாடு அடையும்? தமிழிலக்கியம் வேறு, தமிழ் மொழிப் பயிற்சி வேறு என்ற புரிதல் இல்லாமல், தமிழ்ப் புத்தகம் அந்தக் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. இத்தகைய கட்டுரைகளினால் மாணவர்களின் கற்றல் திறனும், மொழிப் பயிற்சியும் வளர்ச்சி அடையவில்லை. இதானால் என்னுடன் படித்த மாணவர்களில் சிலர், தமிழ்ப் பாடத்தைப் படிக்கவும், சுயமாக எழுதிடவும் சிரமப்பட்டனர்.


தமிழ்ப் பாடம் - இரண்டாம் தாளில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைப் பயிற்சி, கடிதம் எழுதுதல், இலக்கணப் பயிற்சி போன்றவை மொழிப் பாடத்தில் அடிப்படையானவை. அந்தப் பாடங்கள் முக்கியமானவை. ஆனால், பெரும்பாலான தமிழாசிரியர்கள் அவற்றைப் பொருட்படுத்தி நடத்தாமல் இருந்தமைக்கான காரணம் புலப்படவில்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சொந்தமாகத் தமிழில் எழுதிடத் திறன் அற்றவர்களாக இருந்தனர். இது, தமிழகக் கல்வி முறையின் சாபக்கேடு. பள்ளியில் தமிழ் இலக்கணத்தை மேலோட்டமாகச் சொல்லித் தந்ததால், மொழியைப் பிழையில்லாமல் எழுதிட அறிந்திடாத மாணவர்கள் எண்ணிக்கை பெருகியது. அதிலும் ஒரு சொல்லைக் கொடுத்து, இலக்கணக் குறிப்பு எழுதுதல் சவாலாக விளங்கியது. பண்புத்தொகை, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், தொழில் பெயர் என எப்படி எழுதுவது என்பதை அறியாமல் சிரமப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படியான சூழலில் என்னைப் போன்ற சிலர் பாடப்புத்தகத்தின் பாடத்திற்குப் பின்னர் இடம் பெற்றிருக்கிற பயிற்சிகளைச் சுயமாகச் செய்து, ஓரளவு இலக்கணத்தில் தேர்ச்சியடைந்தோம். இந்த நிலைமை இப்பொழுது மாறியுள்ளது என்று அறிந்தேன். எனினும் சுயமாகத் தமிழில் எழுதிடும் தன்னம்பிக்கையை மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்திட்டம் இன்னும் உருவாக்கிடவில்லை.


அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் இரண்டாம் தாள், உயர் வகுப்பு மாணவர்களுக்குக் கண்டம்தான். சில மாணவர்கள் பள்ளியைவிட்டு, இடையில் விலகுவதற்கு ஆங்கிலப் பாடம் முதன்மைக் காரணமாக இருந்தது. ஆங்கிலச் சொல்லை எழுத்துக் கூட்டி வாசிக்கமுடியாமல் திணறுகிற மாணவர்கள் வகுப்பில் இருந்தனர். அவர்கள் ஆங்கிலத்தை வாசிக்கத் தெரிந்த மாணவர்களிடம் கேட்டு, ஆங்கிலக் கட்டுரை வரிகளின் மீது தமிழில் எழுதிவைத்து வாசித்துக் குருட்டு மனப்பாடம் செய்தனர். ’காந்திஜி வாஸ் பார்ன் ஆன் போர்பந்தர்’ என்று தமிழில் எழுதிய நிலைமைக்கு நிச்சயம் மாணவர்கள் காரணம் இல்லை. மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்களை எழுதவும், வாசிக்கவும் தொடங்குகின்றனர்.  ஆறு முதல் பதினொன்று வகுப்பு வரையிலும் ஆறு ஆண்டுகள் ஆங்கிலப் பாடம் படித்துத் தேர்வெழுதிய பின்னரும் எளிய ஆங்கிலத்தைக்கூட வாசிக்க முயற்சிக்காமல் திணறுவதற்குக் காரணம் தமிழகக் கல்விமுறையின் கோளாறுதான். இப்பவும் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை எனக் கேள்விப்படுகிறேன்.

அன்றையக் காலகட்டத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள்,  ஆங்கில ஆசிரியராகப் பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. வரலாறு, அறிவியல், கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய பாடத்தில் வல்லுநர்கள். ஆனால், அவர்கள் ஆங்கில இலக்கணப் பாடத்தை நடத்திடச் சிரமப்பட்டனர். நான் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது, சகுனா பாய் என்ற அறிவியல் ஆசிரியை ஆங்கில இலக்கணப் பாடத்தை நடத்தினார்.  அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்துகிற  அந்த டீச்சர், ஆங்கில இலக்கணத்தை இயந்திரரீதியில் நடத்தினார். நாங்கள் புரியாமல் திண்டாடுகிற நிலையில் இருந்தோம்.  இதனால் பெரும்பாலான மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் ஆங்கிலம்-தாள் II இல் தேர்ச்சியடையவில்லை.

ஆங்கில இலக்கணத்திற்கான Work book பற்றிக் கேள்விப்பட்டு, அதை  எனது தந்தையார் மூலம் மதுரையில் இருந்து வாங்கி, அதன்மூலம் இலக்கண அறிவை விருத்திசெய்து, ஓரளவு ஒப்பேற்றினேன். அந்தப் புத்தகம் வகுப்பில் ஐந்தாறு மாணவர்களிடம்தான் இருந்தது. பெரும்பாலான மாணவர்கள் இங்கிலிஷ் கிராமர் வராது என்று உறுதியாக நம்பினர். சிலர் கணக்கு, இங்கிலிஷ் பாடத்தில் தேர்ச்சியடைய முடியாது என்ற மனநிலையுடன் இருந்தனர்.  ஆங்கிலப் பாடத்தில் கட்டுரை, கேள்வி- பதில், மனப்பாடப் பகுதி போன்றவைகளைப் படித்து, தேர்வெழுதிடும் மாணவர்கள், அடிப்படையான ஆங்கில இலக்கணக் கேள்விகளுக்கு விடையளிக்கத் தடுமாறினர். Direct to indirect, preposition, articles  போன்ற இலக்கண வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை. இலக்கண விதிகளை நினைவில் வைத்திடச் சிரமமாக இருந்தது. அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் ரென்னன் மார்டின் கிராமர் புத்தகம் மூலம் ஆங்கில இலக்கணத்தில் தேர்ச்சியுடன் விளங்கினர்.  ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல்போன எனது வகுப்பறைத் தோழர்களின் கல்விப் பயணம் உயர்நிலைப் பள்ளியுடன் முடிந்தது, துயரம் ததும்பிடும் சோகக் கதை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் மொழியான ஆங்கிலத்தில் தேர்சியடைவதுதான், பதினொரு ஆண்டுகள் பள்ளிக் கல்வி பயின்ற தமிழக மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது கொடூரமானது இல்லயா? அதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் கல்விப்புலத்தில் நடக்கிறது.


தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். புதிதாக அ.தி.மு.க. என்ற கட்சியை 1972 இல் தொடங்கியபோது, தமிழக அரசியலில் மாற்றம் உருவானது. அந்தச் சம்பவம், பள்ளி மாணவர்கள் இடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா நடிகர் என்ற முறையில் இளைய தலைமுறையினரிடம் பிரபலமாகவும், புகழுடனும் விளங்கிய எம்.ஜி.ஆர். பிம்பம், மாணவர்களை வகுப்பறையைப் புறக்கணித்து, வெளியேறத் தூண்டியது. தெருவில் இறங்கிப் போராடிய மாணவர்களைக் காவல்துறையினர் வன்முறையின் மூலம் ஒடுக்கிட முயன்றனர். அப்பொழுது ஒரு மாணவர் இறந்து விட்டார் என நினைக்கிறேன். இதனால் தமிழக மாணவர்கள் கொந்தளித்துத் தெருவில் இறங்கிப் போராடினர். அப்பொழுது பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நானும் இன்னும் சில மாணவர்களும் சேர்ந்து, இறந்துபோன மாணவனுக்காக இரங்கல் ஊர்வலம் நடத்திட திட்டமிட்டோம். தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றோம்.  கைக்காசைப் போட்டுக் கருப்புத் துணியும் குண்டூசிகளும் வாங்கிவந்து எல்லா மாணவர்களுக்கும் விநியோகித்தோம். கருப்புத் துணியைக் குத்திக்கொண்ட  மாணவர்கள், இருவர் இருவராக நடந்து, மௌன ஊர்வலமாக ஊரைச் சுற்றி மீண்டும் பள்ளியின் வாசலுக்கு வந்தோம். ஊர்வலத்தின் முன்னர் நடந்துவந்த சீனியர் மாணவர்களில் நானும் ஒருவன். பொது விஷயத்திற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் மனநிலையுடன் அன்றைய மாணவர்கள் இருந்தனர். எங்கள் தந்தையார் நடத்தும் கடை இருக்கிற சாலையில் ஊர்வலமாகச் செல்லும்போது, அவர் என்னைப் பார்த்து விட்டார். அதிலும் நான் ஊர்வலத்தின் தலைமையாக முன்னால் நடந்து சென்றது, தி.மு.க. அனுதாபியான எனது தந்தையாருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றிரவு வீட்டில் எனது செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

நான், பத்தாம் வகுப்பில் படிக்கும் போது, இடைவிடாமல் அடைமழை பொழிந்தது. கூரையைப் பொத்துக் கொண்டு மழைநீர் உள்ளே கொட்டியதால், வகுப்பறைத் தரை ஈரத்தில் சொதசொதத்திருந்தது. பத்து நாட்களாகப் பள்ளிக்கு விடுமுறை. மாணவர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அப்பொழுது காலாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தலைமைஆசிரியர், எங்கள் ஊரிலிருக்கிற திருமகள் திரையரங்க உரிமையாளரிடம் அனுமதி பெற்று, தேர்வுகள் நடைபெறுவதாக அறிவித்தார். சினிமா பார்த்தல் கெட்ட வழக்கம்  என்ற பொதுப்புத்தி நிலவிய சூழலில், சினிமா தியேட்டரில் தேர்வு என்பது மாணவர்களுக்குப் புதுமையாக இருந்தது. தியேட்டரில் தேர்வு எழுதிய நாட்கள் இப்பவும் மனதில் பதிந்துள்ளன. அந்தக் காலகட்டத்தில் முப்பது நாட்களுக்கும் கூடுதலாக வைகை ஆற்றில் ஆள் இறங்க முடியாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com