வகுப்பறை வாசனை 18

வகுப்பறை வாசனை 18

அரசுப் பொதுத் தேர்வெழுதுவதற்குத் தயாராகிற இன்றைய கல்விச்சூழலுடன் ஒப்பிட்டால், மாணவர்களின்மீது எவ்விதமான அக்கறையுமில்லாத எழுபதுகளின் விட்டேத்தியான சூழல் புலப்படும். அன்றைக்குப் பெற்றோர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாரும் பெரியஅளவில் பதினொன்றாம்  வகுப்பு மாணவர்கள் எழுதவிருக்கிற அரசு பொதுத் தேர்வுகள் குறித்துக் கவனம் கொள்ளவில்லை.  நகர்ப்புற அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஓரளவு விழிப்புணர்வு இருந்தது. கிராமப்புறத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலுகிற மாணவர்களின்  ஒளிமயமான எதிர்காலம்  என்ற பேச்சுக்கு இடமில்லை. ஓட்டத்தில் முக்கித்தக்கி ஓடி, வெற்றிக்கம்பத்தைத் தொட்டவர்கள் பாக்கியவான்கள். 1972-73 கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பில் படித்த மாணவர்களில் அரசுப் பொதுத் தேர்வெழுதி, தேர்ச்சியடைந்தவர்கள் ஓருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், அன்றைய அரசியல் சூழலும், கல்விச் சூழலும் கல்வி கற்றலுக்கு எதிராக இருந்தன.

1972-ஆம் ஆண்டு தி.மு.க.கட்சியின் உள்கட்சிப் பிரச்சினையினால் கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். அவர், பிரபலமான நடிகராகவும் விளங்கியதால், அவருக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன.  தமிழகத்தில்  அமைதியின்மை நிலவியது. எம்.ஜி.ஆர். ரசிகர்களான சில மாணவர்கள், அரசியல் கட்சியினரின் தூண்டுதலினால் நடத்திய போராட்டங்கள் காரணமாகப் பள்ளிகளை அடிக்கடி  மூடவேண்டிய சூழ்நிலை உருவானது. அரசாங்கம் அவ்வப்போது கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்தது. பாடங்கள், வகுப்பறையில் தொடர்ச்சியாக நடத்தப்படாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி, பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. குறிப்பாகப் பதினொன்றாம் வகுப்பில் அரசுப் பொதுத் தேர்வு எழுத வேண்டிய நிலையில் இருந்த எங்களுடைய பாடம் பெரிதும் பாதிப்படைந்தது. பள்ளிக்கூடம் நடைபெறாத காரணத்தினால் ஊர் சுற்றித் திரிந்தது ஜாலியாக இருந்தாலும், பாடங்களைப் படித்து அரசு பொதுத் தேர்வு எழுதவிருப்பதனால்,  மாணவர்களின் மனதில்  பயம். போராட்டங்கள் ஓய்ந்து ஒருவழியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் விரைவாகப் பாடம் நடத்தத் தொடங்கினர். நாங்கள் அரையும் குறையுமாகப் படிக்கத் தொடங்கினோம்.

ஒருவழியாகப் பள்ளி இயங்கிடத் தொடங்கும்போது, மீண்டும் இன்னுமொரு புதிய பிரச்சினை தோன்றியது. தமிழகமெங்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்  சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு. பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. அரசு பள்ளிகள் முடங்கின. போராட்டம் நீடித்தது. வகுப்பில் மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் வராத காரணத்தினால் பாடங்கள் நடத்தப்படவில்லை. குறிப்பாக ஆங்கிலம், கணிதம் பாடங்களைப் படிக்க சிரமப்படுகிற மாணவர்கள், திண்டாடினர். மாதந்தோறும் நடைபெறுகிற மாதத் தேர்வுகள் நடைபெறவில்லை. எவ்வளவு நேரம்தான் நடத்திய  பாடங்களை வகுப்பறையில் இருந்து படிப்பது? ஒருவகையில் கைவிடப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபிறகும் நிலைமை சீரடையவில்லை.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மூன்றுக்கும் கூடுதலான மாதிரி தேர்வுகள் எழுதி, பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாக இருந்தனர்.  நாங்கள் கடைசி நேரத்தில் ஒரே ஒரு மாதிரித் தேர்வுதான் எழுதினோம். அரசுப் பொதுதேர்வு, எங்கள் முன்னர் பூதாகரமாக இருந்து பயமுறுத்தியது. தேர்வில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பது, விடைகளை எழுதும் முறை குறித்து ஆலோசனைகள் எதுவும்  எங்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு பொதுத் தேர்வுக்கு தயாராகிய எங்களின் நலத்தில் அக்கறை இல்லாமல் தலைமை ஆசிரியர் ஒதுங்கி இருந்தமைக்கான காரணம் புலப்படவில்லை. மதுரை நகரில் சந்தைப்பேட்டையில்   இருக்கிற சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளிக்குப்   போய்த் தேர்வுகளை எழுத வேண்டுமென அறிந்தோம். அந்தப் பள்ளி எங்கள் ஊரிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் இருந்தது.  இரண்டு பேருந்துகளில் மாறி அங்கே செல்ல வேண்டும். கிராமத்து மாணவமாணவியருக்கு அதெல்லாம் பிரச்சினைதான்.

பொதுத் தேர்வன்று பேருந்துகளில் ஏறி ஒருவழியாகத் தேர்வு மையத்திற்குப் போனோம். அது, பெரிய கட்டடங்களுடன் பிரமாண்டமான பள்ளிக்கூடம். எப்படியோ தேர்வு எழுதும் அறையைக் கண்டுபிடித்து இடத்தில் அமர்ந்தால், ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியானதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. தேர்வறைக் கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாணவனுக்கும் ஏழெட்டுத் தாள்களுடன் இருந்த விடைத்தாளைக் கொடுத்தார். விடைத்தாளின் முதல் பக்கத்தில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த படிவத்தைப் பார்த்தவுடன் திகைப்பாக இருந்தது.  அதைப் பூர்த்திசெய்ய வேண்டுமென ஆசிரியர் சொன்னவுடன் பதற்றமாகி விட்டது. சுற்றிலும் பார்த்தேன். எங்கள் பள்ளி மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.  மற்ற பள்ளி மாணவர்கள் இயல்புடன் படிவத்தைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் படிக்கிற பள்ளியில் இதுபோன்ற விடைத்தாளைப் பூர்த்திசெய்து, தேர்வு எழுதிய அனுபவம் இருந்தது என்று பின்னர் கேள்விப்பட்டேன். கிராமத்து மாணவர்களாகிய எங்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல், எப்படி தேர்வு நடைபெறும் என்று சொல்லிக் கொடுக்காமல் நேரடியாக மதுரைக்கு அனுப்பப்பட்டதால், திக்குத் தெரியாத காட்டில் சிக்கியவர்கள் ஆனோம். இந்தச் சூழல் காரணமாகத் தேர்வெழுதிட ஏழெட்டு நிமிடங்கள் கடந்து போயின. எப்படியோ ஒருவழியாகக் கேள்வித்தாளை வாசித்து, விடைத்தாளில் பதில் எழுதுவதற்குள் உடலெங்கும் வியர்வை வடிந்தது. தேர்வெழுத தினமும் மதுரைக்கு நகரப் பேருந்துகளில் நெருக்கியடித்துப் பயணித்து, எழுதிய தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்களால் முழுமையான கவனம் செலுத்த இயலவில்லை. ஏற்கனவே கிராமியச் சூழல் காரணமாகக் கல்வியில் பின்தங்கியிருந்த  எங்கள் வகுப்பு மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தேர்வு குறித்த முறையான பயிற்சி இல்லாத காரணத்தினால் தேர்ச்சியடையாமல் பின்தங்கினர். அது, வருத்தமளிக்க்கிற விஷயம்.

எல்லாத் தேர்வுகளையும் எழுதி முடித்தவுடன் மனதில் அளவற்ற மகிழ்ச்சி.  விட்டு விடுதலையான மனநிலை. அப்பாடா என்று இருந்தது. வகுப்பறை நண்பர்களுடன் சேர்ந்து, அலங்கார் திரையரங்கில், ’வந்தாளே மகராசி’ திரைப்படம் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தேன். இரவில் படுக்கையில் படுத்தவுடன் இனிமேல் பள்ளிக்குப் போக முடியாது, நண்பர்கள் எல்லாம் பிரிந்து போய் விடுவார்கள் என நினைத்து ஏக்கமாக இருந்தது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுபுரண்டு படுத்துக் கிடந்தேன். எதையோ இழந்தது போன்ற மனநிலை.

அரசுப் பொதுத்  தேர்வு முடிவுகள் வெளியாகின. நான் 396 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வடைந்திருந்தேன். இன்னும் அதிகபட்சமாக முப்பது மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்ற என்னுடைய எதிர்பார்ப்பு, நிறைவேறவில்லை. என்னுடைய நண்பர்களில் சிலர் தேர்ச்சியடையாத நிலை எனக்கு வருத்தமளித்தது. பள்ளியின் ஒட்டுமொத்தத்  தேர்வு விகிதம் 67%. பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் எதிர்கொண்ட அரசு பொதுத் தேர்வு என்பது, மாணவர்கள் அடிக்கடி சொல்கிற கண்டம்தான்.  அதிலும் அந்த வருட அரசியல் சூழலும், ஆசிரியர் போராட்டமும், தலைமை ஆசிரியரின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் போனதற்கு முதன்மைக் காரணங்கள்.

மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காக எனது தந்தையாருடன் தலைமை ஆசிரியர் அறையின் முன்னர் காத்துக் கிடந்தேன். உடலில் வியர்வை; நாக்கு வறண்டது; ஒரே பதற்றம். சார், எங்களை உள்ளே வரச் சொன்னார். இருவரும் அறையினுள் நுழைந்தோம். என்னை வெறுப்புடன் பார்த்தவுடன் தலைமை ஆசிரியர்,’… ம்.. பாரு… உனக்கும் T.C.யில் Good போட்டிருக்கேன்’ என்று கடுகடுப்பாகச் சொன்னார். நான் மௌனமாக இருந்தேன். அறையைவிட்டு வெளியே வந்தோம்.  தந்தையார் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் கடைக்குப் போனார். நான் சான்றிதழ்களுடன் வீட்டுக்குப் போனேன். பள்ளியைவிட்டு நீங்குகிற நாளில்கூட என்னிடம் வன்மத்துடன் பேசிய தலைமை ஆசிரியர் குறித்துச் சொல்வதற்குச் சொற்கள் எதுவுமில்லை. சரி, போகட்டும். என் தந்தையார், ’என்ன நடந்தது? ஏன் ஹெட்மாஸ்டர் உன்மீது இவ்வளவு கோபப்படுகிறார்?’ என்று என்னிடம் கடைசிவரை எதுவும் கேட்கவில்லை. அதற்கான காரணம் இன்றுவரை எனக்குப் புலப்படவில்லை.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் அறையைவிட்டு வெளியே வந்தவுடன் திரும்பிப் பார்த்தேன். அவருடைய அறைக்கு எதிர்த்த அறைதான் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் அறை. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையாரின் சுண்டுவிரலைப் பிடித்துக்கொண்டு, அந்த அறைக்குள் நுழைந்தது நினைவுக்கு வந்தது. காலவெளியில் நினைவுப்புலத்தில் பதினொரு ஆண்டுகள் கரைந்து போய்விட்டன. யோசிக்கும்வேளையில் தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்தபோது எனக்குள்ளிருந்த நானுக்கும், உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறும்போது எனக்குள் படிந்திருந்த நானுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நினைவுகள் ஒருபோதும் அழிவதில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com