வகுப்பறை வாசனை 19

வகுப்பறை வாசனை 19

1967ஆம் ஆண்டு சிறுவனாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த நாள் முதலாக 1973 ஆம் ஆண்டில் மாற்றுச் சான்றிதழ் பெற்றுப் பதின்பருவத்தின் தொடக்கத்தில் வெளியேறிய காலகட்டம், எனது வாழ்க்கையில் முக்கியமானது. அது, ஈரத்துடன் ததும்புகிற நினைவுகளின் வழியாகக் காலவெள்ளத்தில் பின்னோக்கிய பயணம். கிராமத்துத் தெருக்களில் சுற்றித் திரிந்தவனின் வாழ்க்கையில் எண்ணும், எழுத்தும் வழியாகப் புதிய உலகிற்குள் பயணித்திட வழிகாட்டிய உயர்நிலைப் பள்ளிக்கூடம் எப்பொழுதும் நினைவுகளில் ததும்புகிறது. பள்ளிக்கூடம் என்பது வெறுமனே கட்டடம் அல்ல. அங்கே உயிரோட்டமான வாழ்க்கை, ஒளிமயத்துடன் இருக்கிறது. அங்குதான் என்னை உருவாக்கிய என்னுடைய ஆசான்களின் அறிமுகம் கிடைத்தது. ஒவ்வொரு நாளிலும் கேலியும், கிண்டலும், விளையாட்டும் எனக் குதூகலத்துடன் திரிந்த நாட்களை மறக்க முடியுமா? பின்னர் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்தபோதும், எவ்விதமான கவலைகளும் இல்லாமல், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகத் திரிந்தபோதும் உயர்நிலைப் பள்ளியை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன் யோசிக்கும்வேளையில் எவ்விதமான பொறுப்புகளும், பொருளாதாரரீதியிலான எதிர்காலம் குறித்த கவலையும் இல்லாமல் இருந்த பள்ளிப் பருவம் கொண்டாட்டமானது; ஒப்பீடு அற்றது.

இந்தக் கட்டுரையை 2020, ஜூன் மாதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். கொரோனா கோவிட்-19 என்ற வைரஸின் தாக்கத்தினால், வெளியே ஊரடங்கு. கடந்த மார்ச் மாதம் முதலாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எவ்வளவு நேரம்தான் குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க முடியும்? பள்ளி அனுபவங்களை நம்முடைய  குழந்தைகள் இழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலைமை சீரடைந்து, விரைவில் பள்ளிகள் திறக்கிற நாள் குழந்தைகளுக்கு முக்கியமானது. நான் பள்ளியில் பயிலும்போது, காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறையில் ஊர் சுற்றித் திரிந்தாலும் என்றைக்குப் பள்ளிக்கூடம் திறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. சரி, இருக்கட்டும்.

  பள்ளியைப் பற்றி இன்னும் கொஞ்சம்:

அன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர் வீட்டில் நடைபெறுகிற டியூஷனுக்குப் போகிற வழக்கம், குறைந்த அளவில் எங்காவது இருந்தது.  பாடங்களைப் படிக்க முடியாத மக்குப் பிள்ளைகள்தான் டியூஷனுக்குப் போவார்கள் என்று ஓரளவு படிக்கிற நாங்கள் நம்பினோம். பெரும்பாலான ஆசிரியர்கள் டியூஷன் நடத்துவதில் ஆர்வமற்று இருந்தனர். பள்ளியில் பாடங்களைப் படிக்க முடியாமல் திண்டாடுகிற மாணவர்களுக்கு டியூஷன் பணம் செலவழிக்க முடியாத பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பாடம் நடத்தும்போது ஒழுங்காகக் கவனிக்காமல் எங்காவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், எப்படி மண்டையில் படிப்பு ஏறும் என்று திட்டுகிற பொதுப்புத்தி அன்று நிலவியது. இன்றைக்கு எல்.கே.ஜி. படிக்கிற குட்டிப் பிள்ளைகளையும் சாயங்காலம் டியூஷன் அனுப்புகிற பட்டம் பெற்ற தாய்மார்களின் மனநிலை, வேறு வகையிலானது. அப்புறம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் டியூஷன் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.      

 அன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், பள்ளிகளுக்குப் படிக்க மட்டும் போகவில்லை. ஓய்வுநேரத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்தனர். அதிலும் சினிமா தொடர்பான பேச்சுகளை ஆர்வத்துடன் பகிர்ந்தனர்.  பெரும்பாலும் எங்கள் ஊரில் இருக்கிற திருமகள் திரையரங்கில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் பேச்சுகள் சுழலும். சினிமா சித்திரிக்கிற மாயவுலகு கவர்ச்சியாக இருக்கும். சிலர் மதுரைக்குப் போய்ப் பார்த்த புதிய திரைப்படங்கள் பற்றி விலாவரியாகக் கதைப்பார்கள். எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்தை மதுரை சிந்தாமணி திரையரங்கில் சென்று பார்த்த மாணவன்,  எல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு, காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்துக் கதை சொல்வதில் கில்லாடியாக இருப்பான். அந்தக் காலகட்டத்தில்  மாடர்ன் தியேட்டர்ஸாரின் துப்பறியும் படங்களைப் பற்றி விவரிக்கையில் டைட்டில் கார்டு எனப்படும் எழுத்து எப்படியெல்லாம் விநோதமாகச் சுழலுகிறது என்பதைச் சிலர் ஆர்வத்துடன் விவரிப்பது வேடிக்கையாக இருக்கும். மாய மந்திரக் காட்சிகள் நிரம்பிய விட்டலாச்சாரியாரின் திரைப்படங்கள் மாணவர்களுக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பொதுவாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஒருபுறமும், சிவாஜி கணேசன் ரசிகர்கள் இன்னொருபுறமும் கேலியும், கிண்டலுமாகப் பேசுவார்கள். அதேவேளையில் சினிமா ரசனை வேறு, நட்பு வேறு என்ற புரிதல் எங்களுக்கு இருந்தது.

மாணவர்களைப் பொருத்தவரையில் விளையாட்டு என்பது முடிவற்றது. அன்றாடம் ஒவ்வொரு செயலும் விளையாட்டின் வழியாகப் புதிய வடிவமெடுத்தது. பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போதும் விடுமுறை நாட்களில் நாள் முழுக்க விளையாடினோம். பம்பரம், கோலி, கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகள் எங்களுக்குள் கூட்டு உணர்வை ஏற்படுத்தின. அப்புறம் கண்மாய், கிணறுகளில் மணிக்கணக்கில் நீச்சல். ஆற்றங்கரை மணலில் கபடி விளையாட்டு. ஆடி மாதக் காற்று வீசும்போது, சுயமாகக் காற்றாடியைத் தயாரித்து, வானவெளியில் பறக்கவிடும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவேது? விளையாட்டே உலகம் என்று கொண்டாட்டத்துடன் கடந்துபோன எனது இளமைப் பருவத்தில் பள்ளியில் உடன் பயின்ற வகுப்பறை நண்பர்களும்  கணிசமான அளவில் பங்கேற்றனர்.  சிலருடன் வகுப்பறையில் ஏற்பட்ட நட்பு, இன்றளவும் தொடர்கிறது. எனது பள்ளிக்கூட நண்பர்களில் மூன்றாம் வகுப்பு ஜோதி வெங்கடாசலமும், பத்தாம் வகுப்புப் பாஸ்கரனும் 2016 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எனது மகளின் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தினர். அது, எனது பள்ளி நட்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

 1987 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற என்னுடைய திருமணத்திற்கு ஏழாம் வகுப்பு ஆசிரியை ஹெலன் மரியதெரேசா வந்து வாழ்த்தியதை நினைக்கும்போது, இப்பவும் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. எனது பள்ளி வாழ்க்கைக்கு ஏதோவொரு அர்த்தம் இருக்கிறது என்று தன்னுடைய வருகையின் மூலம் தெரிவித்த டீச்சரை என்றும் மறவேன். அவருடைய வருகை எனக்குக் கிடைத்த பெரும் பேறு.

 என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களில் ஜோதி வெங்கடாசலம், அரசு போகுவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி, கணேசன் கருவூலத்துறையில் எழுத்தர், நெடுஞ்சேரலாதன் கால்நடைத் துறையில் மருத்துவ உதவியாளர், பாஸ்கரன் டியூசன் சென்டர் உரிமையாளர், பன்னீர்ச்செல்வம் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பில் பொறுப்பாளர் என இன்றும் ஊரில் இருக்கின்றனர். நேரம் வாய்க்கையில் அல்லது தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொள்வோம். இன்று எல்லோரும் சீனியர் சிட்டிசனாகி விட்டோம்; பேரன், பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

என்னுடன் பதினொன்றாம் வகுப்பில் படித்த மாணவிகள் பற்றிச் சொல்ல வேண்டும். சந்திரா, விஜயா, பாக்கியம், ஸ்டெல்லா ஆரோக்கிய மேரி… சிலரின் பெயர்கள்  மட்டும் நினைவில். திராவிடச்செல்வி என்ற மாணவி, எண்பதுகளின் தொடக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். காலவோட்டத்தில்  எல்லாம் பொய்யாய், பழங்கதையாய்.

எண்பதுகளின் முற்பகுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, சாயங்காலம் அரட்டை அடிப்பதற்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் போவேன். அன்றைய காலகட்டத்தில் கோவிலில் பெரிய அளவில் கூட்டம் இருக்காது. நான், மீனாட்சி சுந்தரம், ஜெகதீசன் பொற்றாமரைக் குளக்கரையில் அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டு இருந்தோம். பின்னர் எழுந்து அம்மன் சந்நதி பக்கம் நடக்கத் தொடங்கினோம். நான்கைந்து பெண் காவலர்கள் சீருடையுடன் நின்றுகொண்டிருந்தனர். நாங்கள் விலகி நடந்தோம். அப்பொழுது ஜெகதீசன்,’ தலைவா ஒரு பெண் போலீஸ் உங்களையே பார்க்குது’ என்று காதில் கிசுகிசுத்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்த பெண் போலீஸை எங்கேயோ பார்த்த ஞாபகம். யார் இவர்? அவர், என்னை நோக்கி நடந்து வந்தார். உயரமான தோற்றம். மலர்ச்சியான முகம். என்னுடன் பள்ளியில் படித்த மீனாம்பாள். மகிழ்ச்சியால் மனம் ததும்பியது. எப்படி இருக்கீங்க? பரஸ்பர உசாவல். மனசுக்குள் மத்தாப்பு.  இளமைக்காலத் தோழி அல்லவா? அவர், எங்கள் மூவரையும் கோவிலுக்கு வெளியே அழைத்துவந்து, வடையும் தேநீரும் வாங்கித்தந்து, சந்திப்பைக் கொண்டாடினார். இருவரும் பழைய பள்ளிக்கூட நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தோம். என்னுடன் பள்ளியில் படித்த மீனாம்பாள், தமிழ்நாடில் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர் அணியில் சேர்ந்திருந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. மீனாம்பாள் பின்னர் பதவி உயர்வுபெற்று, காவல்துறையில்  அதிகாரியாகப் பணியாற்றினார் எனக் கேள்விப்பட்டேன். 

நண்பர்கள்,  விடுமுறை நாளில்கூட பள்ளிக்கூடக் காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி, புளிய மரத்தில் ஏறி, புளியங்காய் பறித்துச் சாப்பிடுவோம். அது, எங்களுக்குச் சிலவேளைகளில் அரட்டை அடிக்கிற இடமாகவும் விளங்கியது. சில நாட்களில் கிட்டிப்புள் விளையாடுவோம். அந்தக் காலகட்டத்தில் பள்ளி என்பது என்னைப் பொருத்தவரையில் எனக்கு எப்பவும் நெருக்கமான நண்பன். என்னுடைய ப்ரியத்திற்குரிய உயர்நிலைப் பள்ளியைவிட்டு வெளியேறும்போது, மனதில் சின்ன நெருடல். அப்புறம் 47 ஆண்டுகள் கடந்து விட்டன. சமயநல்லூர் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் கம்பீரமாக நிற்கும் பள்ளியின் புதிய கட்டடங்களைப் பார்க்கும்போது, உள்ளே செல்ல வேண்டுமென  நினைத்துக் கொள்வேன். அங்கு பயிலுகிற  மாணவர்களுக்கு இலக்கியரீதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உதவிட வேண்டுமென்று, மனதில்  ஆவல் கொப்பளிக்கும். ஆனால், இன்றுவரையிலும் அந்தப் பள்ளி வளாகத்திற்குள் நுழையவில்லை. காத்திரமான வெறுப்பு என்று எதுவுமில்லை. பள்ளிக் கட்டடம் ஏனோ என்னைவிட்டு விலகி, எங்கோ தொலைவில்  இருக்கிறது. நானும்தான். விரைவில் அந்த நிலைமை மாறும் என நினைக்கிறேன். ம்… பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com