வலித்த சதம்!!!

வலித்த சதம்!!!

விடை கொடு ரசிகனே: சச்சின்-5

அது 1999 ஜனவரி மாதக் கடைசி வாரம். பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்று வந்துவிட்டாலே... அதைப்பற்றி பெரிதாக ஊதிவிட்டு ஒருவித டென்ஷனை ஊடகத்தினர்கிளப்பிவைத்திருப்பார்கள். ரசிகர்களும் அதேபோல் ஒரு வித வெறியுடன்இருப்பார்கள். இந்த போட்டி உணர்ச்சி வீரர்களையும் தொற்றிக்கொள்ளும்.ஒவ்வொரு போட்டியும் போர்க்களம்தான். பாகிஸ்தான் இந்தியா இடையிலான இந்தடெஸ்ட் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் போட்டி என்பதால் கூடுதல்பரபரப்பில் தொடங்கி நடந்தது.


அன்று சென்னை டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ். 271 ரன்களை இந்தியா எடுத்தால் வெற்றி. சென்னை மைதானத்தில் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு குழந்தைகூட ஸ்பின் பவுலிங் போட்டு பெரிய ஆட்களையெல்லாம் சாய்த்துவிடக்கூடிய அளவுக்கு பிட்ச் மோசமாக இருப்பது வழக்கம்.
இப்போதுதான் அது கொஞ்சம் ப்ளாட் பிட்ச் ஆகிவிட்டது. 271 என்பது கடினமான இலக்குதான்.



நான்காவது நாள் மாலை இந்திய அணி மட்டை ஆட்டத்தைத் தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே ஓப்பனிங் ஆட்டக்காரர்கள் இருவரும் வீழ்ந்து இந்தியா ஆறு ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்று தடுமாறியபோது டெண்டுல்கர் உள்ளே வந்தார். ட்ராவிடும் சச்சினும் சேர்ந்து அன்று மாலை 2 விக்கெட்டுக்கு 40 ரன் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தார்கள்.  அது சச்சின் இடுப்பு வலியால்
சிரமப்பட்டு கிரிக்கெட் வாழ்க்கையே வீணாய்ப்போய்விடுமோ என்று அஞ்சிக்கொன்டிருந்த காலம்.


ஐந்தாவது நாள் காலையில்  ட்ராவிட், அசாருதீன், சவுரவ் கங்குலி என்று எல்லோரும் வந்தவேகத்திலேயே அவுட் ஆகி, ட்ரெஸ்சிங் அறைக்கு காலையிலேயே தூங்கப் போய்விட்டார்கள். அப்போது ஸ்கோர் என்ன தெரியுமா? 82. ஐந்து விக்கெட் வீழ்ந்திருந்தது. சச்சின் மட்டும் கட்டை போட்டுக்கொண்டு நின்றார்.நயன் மோங்கியா சச்சினுடன் வந்து சேர்ந்தார். ரசிகர்கள் சோர்ந்தாலும்
எப்போதும் சச்சின் அற்புதங்கள் நிகழ்த்தக் கூடியவர் என்ற எண்ணம் இருப்பதால் காத்திருந்தார்கள். பலர் நகங்களை கடித்தார்கள். சச்சின் மெல்ல ஆடினாலும் உறுதியாக ஆடினார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் பயங்கர பார்மில் இருந்தார். ஏற்கெனெவே செமத்தியான ஸ்பின்னர் அவர். சென்னை மைதானத்தின் ஐந்தாம் நாள் பிட்ச். கேட்கவா வேண்டும்? எல்லா
பாலிலும் விக்கெட் விழும் என்று நினைக்கும் அளவுக்கு பந்து திரும்பியது.சச்சினுக்கு பளீர் என்று இடுப்பு வலி வெட்டியது. இருப்பினும் சமாளித்து ஆடினார். மெல்ல ஸ்கோர் உயர்ந்தது. ஸ்வீப் ஷாட்டுகளில் ரன்கள் வந்தன.விக்கெட் எதுவும் விழாமல் இருவரும் பார்த்துக்கொள்ள சச்சின் சதம்
அடித்தார். இருவரும் சேர்ந்து 136 ரன்களைச் சேர்த்தனர். மோங்கியா 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிவிடுகிறார். இருப்பினும் சச்சின் தொடர்ந்து ஆடுகிறார். ஸ்கோர் உயர்ந்து 254&ஐத் தொட்டது. இன்னும் 17 ரன் எடுத்தால் வெற்றி. சச்சின் பயங்கர வலியுடன் ஆடிக் கொண்டிருப்பதை எல்லோரும் பார்க்கிறோம். அவர் சற்றி ஏறிவந்து முஷ்டாக்கை தூக்கி அடிக்கிறார்.தவறிவிடுகிறது. மிட் ஆப்பில் பந்தைப் பிடித்து விடுகிறார்கள். சச்சின்அவுட். மைதானமே மரண அமைதியில் இருக்க, துயரத்துடனும் வலியுடனும் அந்த மாவீரன் வெளியேறுகிறான். 273 பந்துகளை எதிர்கொண்டு 136 ரன்கள். முதல்இன்னிங்சில் அவர் டக் அவுட் ஆகியிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

இன்னும் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. அந்த இலக்கை அடைந்துவிடலாம்தான்.ஆனால் அடுத்த நால்வரும் மாவீரர்கள்.( அதாவது மாவினால் செய்யப்பட்ட வீரர்கள்). சுனில் ஜோஷி, கும்ப்ளே, ஸ்ரீநாத், பிரசாத். இவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரமும் சக்லைனும் அடுத்த சில
ஓவர்களில் கபளீகரம் செய்துவிட... இந்தியா வெற்றியின் முனையில் தோல்வியைத் தெரிவு செய்தது. 13 ரன்களில் தோல்வி.தோற்றவுடன் சச்சின் ட்ரெஸ்சிங் ரூமில் தேம்பித் தேம்பி சிறுகுழந்தையைப்
போல் அழுததும் கமெண்டரி பாக்ஸில் இருந்த கவாஸ்கர், சச்சின் இப்படி தூக்கி அடித்து அவுட் ஆகியிருக்கக் கூடாது. மேட்சை சச்சின்தான் கடைசி வரை நின்று கொடுத்திருக்கவேண்டும். தனக்குப் பின்னால் வரும் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விடக்கூடாது என்று பிலாக்கணம் வைத்ததும்,இந்திய அணியின் தோல்வியால் என்னைப் போல லட்சம் ரசிகர்கள் இரவு சாப்பிடப்பிடிக்காமல் வருந்தியதும் இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால்(!) பொறிக்கப் படவேண்டிய வரலாறு.


தோற்றாலும் இந்த சதம்தான் சச்சினின் மிகச் சிறந்த சதம் என்று சச்சினின் சகோதரர் அஜித் கூறுகிறார். தம்பி வலியோடு அடித்த சதம் அல்லவா?


இரண்டு டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் அடுத்த டெஸ்டை டெல்லியில் ஆடியது. அதில் இரண்டாவது இன்னிங்சில் கும்ப்ளே பத்துவிக்கெட்டையும் வீழ்த்தி சாதனை செய்தது கூடுதல் தகவல்.


இந்த தொடர் முடிந்து இரண்டே மாதங்களில் பாகிஸ்தானுடன் கார்கில் போர்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com