வாளேந்திய பாலவர்மர்! - போதியின் நிழல் 32

வாளேந்திய பாலவர்மர்! - போதியின் நிழல் 32

யுவான் சுவாங் கங்கையின் தண்ணீரைப் பார்த்தவாறே வந்தார். படகின் ஓட்டம் குளிர்ந்த நீரின் பரப்பில் சிறுசிறு அலைகளை ஏற்படுத்தியது. அகன்று விரிந்து இருந்த கங்கையின் கரைக்காட்சிகளை அவர் ரசித்தார். பாலவர்மர் யுவான் சுவாங்கின் அருகில் இருந்தாலும் அவ்வப்போது ஜெயந்தா, ஆதித்தன் ஆகியோருடன் உரையாடலில் கலந்துகொண்டார். வேறுசில ஆட்களும் இப்போது நெருக்கமாகி விட்டார்கள். பலநாட்கள் பழகிய நண்பர்கள் போல அவர்கள் இப்போது ஆகிவிட்டிருந்ததை யுவான் கண்டார். பயணம் பலரை ஒன்றிணைக்கும் பெரும் சக்தி என்பதை அவர் தன் அனுபவத்தில் பலமுறை கண்டிருப்பதால் பாலவர்மரையும் அவரது புதிய சகாக்களையும் கண்டு புன்னகைத்தார்.

மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த இப்படகுப்பிரயாணத்துக்கும் ஒரு சோதனை வரத்தான் செய்தது. வெளிர் பச்சை நிறத்தில் இரு மருங்கிலும் அசோக மரங்கள் காடாக வளர்ந்திருந்த ஒரு இடம் வழியாக படகு சென்றபோது, படகோட்டிகளின் முகங்களில் கூடுதலாக எச்சரிக்கை உணர்வு தென்படுவதை யுவான் கண்டார். அந்த உணர்வு அவர் பார்த்துக்கொண்டிருக்கையில் பீதியாக மாறியது. கரையைப் பார்த்தார். அசோக மரங்களின் மறைவில் இருந்து சில படகுகள் அவர்களின் படகை நோக்கி சீறி வந்துகொண்டிருந்தன. அதில் இடுப்பில் மட்டும் ஆடையணிந்த பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கைகளில் கொடுவாட்கள் இருந்தன. ஒருவன் நீண்ட வேல் வைத்திருந்தான். அவன் மட்டும் தலைப்பாகை அணிந்திருந்தான்.

‘‘ஏய்.. படகை நிறுத்து..’’ என்று அவர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். கத்தியிருக்கவே தேவையில்லை. ஏனெனில் அவர்களைக் கண்டதுமே படகோட்டிகள் படகை நிறுத்திவிட்டு தொப்பென்று தண்ணீரில் குதித்து எதிர்த்திசை நோக்கி நீந்த ஆரம்பித்துவிட்டனர்.

படகோட்டிகள் இல்லாமல் தத்தளித்த படகில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் ஏறிக்கொண்டனர்.

‘‘யாரும் சப்தம் போடாமல் எங்களுடன் கரைக்கு வாருங்கள்... உங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்துவிட்டால் உங்களை விட்டு விடுவோம். முரண்டு பிடித்தால் கங்கை மாதாவின் முதலைகளுக்கு இங்கேயே உணவாக வேண்டியதுதான்’’ என்றான் ஒருவன். மொட்டையடுத்து மீசை மட்டும் பெரிதாக வைத்திருந்தான் அவன்.

படகில் இருந்த அனைவர் முகத்திலும் பீதி. யுவான் சுவாங் மட்டுமே அமைதியாகவும் புன்னகை மாறாமலும் இருந்தார்.

பாலவர்மர் நிலைகொள்ளாமல் இருந்தார். பீதியை விட இன்னெதென அறியாத ஒரு உணர்வு அவரிடம் ஏற்பட்டிருந்தது.

அந்த மொட்டையன் நேராக யுவான் சுவாங்கிடம் வந்து தன் நீண்டகொடுவாளை அவர் கழுத்தில் வைத்தான்.

‘‘ஏய் எழுந்து நில்.’’

யுவான் எழுந்தார். மொட்டையனை விட ஓர் அடி அவர் உயரமாக இருந்தார்.

அவரை மேலிருந்து கீழாகக் கவனித்த அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
‘‘ஏய் எல்லோரும் கவனியுங்களடா.... இவனைப் போல ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். காளிமாதாவுக்கு பலி கொடுக்க எல்லா லட்சணங்களும் இவனுக்கே இருக்கிறது. படகை கரைக்கு வேகமாக ஓட்டு. தாய்க்கு ரத்தப்பலி கொடுக்க நேரம் வந்து விட்டது. ஏய் துறவி.. நீ அதிர்ஷ்டக் காரன். உன்னை பலி கொடுக்கப்போகிறோம்....’’
படகில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயந்தா மிகுந்த பதற்றம் அடைந்தார்.

‘‘எங்கள் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். அவரை மட்டும் விட்டுவிடுங்கள். அவர் மிகப்பெரிய ஞானம் பெற்ற துறவி. அவரை ஏதும் செய்யாதீர்கள். உங்களுக்குப் பெரிய பாவம் வந்து சேரும்’’ என்றார் அவர்.
தலைப்பாகை அணிந்திருந்த கொள்ளையன் சிரித்தான்.

‘‘எங்கள் பாவத்தைக் களையத்தான் நாங்கள் இந்த துறவியைப் பலிகொடுக்கிறோம். நீ என்னடா என்றால் இதனால் பாவம் வரும் என்கிறாய்...’’

ஜெயந்தா பேசாமல் இருந்தார்.

பாலவர்மர் கோபத்துடன் எழவே...‘‘ஏய் கறுப்புத் துறவி.. எங்கே எழுகிறாய்... உன்னையெல்லாம் நாங்கள் கொல்லமாட்டோம்...’’ என்றான் மொட்டையன்.

காஞ்சி மண்ணின் வீரம் பாலவர்மரிடம் பிக்குவாக ஆனபின்பும் மிச்சமிருந்தது. கொடுவாளுடன் நின்ற கொள்ளையன் ஒருவனை நோக்கி யாரும் எதிர்பாராத விதமாகப் பாய்ந்தார். அவனது கையில் இருந்த வாளைப் பறித்த அவர்.... கர்ஜித்தார்.



‘‘எங்கள் பிக்குவை ஏதேனும் செய்யத் துணிந்தீர்கள் என்றால் உங்கள் அனைவரையும் தீர்த்துவிடுவேன்’’ என்றார்.

அமைதியே உருவான ஒரு பிக்கு இப்படி வாளேந்தி ஆவேசத்துடன் நிற்பதை படகில் இருந்த சக பயணிகள் பீதி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
தலைப்பாகை அணிந்திருந்த கொள்ளையன்தான் அவர்களின் தலைவன் என்பது அவன் பேசியதிலிருந்து புலப்பட்டது.

‘‘துறவியே.... வாள் பிடிப்பது என்பது குழந்தை விளையாட்டு அல்ல. நீரெல்லாம் வாள் பிடித்தால் என்னைப் போன்ற ஆட்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்தீரா? என் ஆட்கள் ஒன்றும் இளைத்தவர்கள் அல்ல...’’ என்ற அவன் ஒரு கொள்ளையனின் வேலை வாங்கினான். அத்துடன் துடுப்பைப் பிடித்திருந்த ஒரு கொள்ளையனைப் பார்த்து ஏதோ சைகையும் செய்தான்.

உடனே படகு கடுமையாக ஆடியது. இந்த ஆட்டத்தை எதிர்பார்த்திருந்த கொள்ளையர்கள் கால்களை வலிமையாக ஊன்றியும் பக்கவாட்டில் பிடித்தும் நிற்கையில் பாலவர்மர் மட்டும் தடுமாறினார். படகின் ஆட்ட வேகத்தில் வாளுடன் அவர் தடுமாறி படகின் பக்கவாட்டுத் தடுப்பில் சரிந்தார். படகு மீண்டும் வேகமாக ஆடியது. காஞ்சி தேசத்து பிக்கு தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்தார்.- அவர் விழுந்த இடத்துக்கு வேகமாக ஓடிவந்த கொள்ளையர் தலைவன் தன் வேலை தண்ணீருக்குள் பாய்ச்சினான். கங்கை நதி நீர் சிவந்தது.

‘‘ம்..’’ என்று அவன் உறும, படகு கரையை நோக்கி நகர்ந்தது. பாலவர்மரின் சுவடே தண்ணீரில் தெரியவில்லை. ரத்தம் மட்டும் கொஞ்ச நேரம் நீர்ப்பரப்பில் மிதந்தது. பயணிகள் அனைவரும் பீதியுற்று பாலவர்மர் வீழ்ந்த இடத்தைத் திரும்பித்திரும்பிப் பார்த்தனர். யுவான் சுவாங் மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாகி போதிசத்துவர்களை கண்மூடித் துதிக்கலானார்.
‘‘ஏய் இவன் ஏதோ முணுமுணுக்கிறான். ஏதோ மந்திரம் போடுகிறான் போலிருக்கிறது’’ என்று ஒரு கொள்ளையன் யுவானை நோக்கிப் பாய்ந்தான்.


தன் வேலை நீட்டி அவனைத் தடுத்தான் தலைவன். ‘‘டேய்.. நீ.. இவனை எதுவும் செய்துவிடாதே... ஏதாவது பங்கம் ஏற்பட்டால் பலி கொடுக்க இயலாது. இந்த துறவியின் மந்திரங்கள் எதுவும் நம்மை எதுவும் செய்துவிடாது’’ என்று சொல்லி அவன் உல்லாசமாக சிரித்தான். பெரும் நகைச்சுவை ஒன்றைக் கேட்டதுபோல் அனைத்துக் கொள்ளையர்களும் ஒரேயடியாக தங்கள் கொடுவாட்காளை ஆட்டியவண்ணம் சிரிக்க, படகில் இருந்தவர்கள் மிரண்டு போயினர்.

படகு கரைக்கு வந்து சேர்ந்தது. ஒரு அசோக மரத்தில் அதை மிக எளிதாகக் கட்டினான் கொள்ளையன் ஒருவன். பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகள் அனைத்தும் இறக்கி வைக்கப்பட்டன. அப்போது மனித உள்ளத்தின் மகத்தான உணர்வுகளில் ஒன்றான தியாக எண்ணத்தை நிரூபிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று நடந்தது.
ஆதித்தன் கொள்ளையர் தலைவனிடம் நெருங்கி வந்து சொன்னார்.

‘‘இந்த பிக்குவை விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக என்னை பலியாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’

இந்த கோரிக்கையை நம்பமுடியாமல் அவன் பார்த்தான். பயணிகளில் வேறுசிலரும்..
.
‘‘அவருக்குப் பதிலாக நான் பலியாகத் தயார். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

‘‘டேய்.. அற்பப் பதர்களே... இங்கே என்ன ஹர்ஷ சக்கரவர்த்தி எழுதிய நகைச்சுவை நாடகமா நடக்கிறது? எல்லாரையும் கைகால்களை வெட்டி கங்கைக்குள் போட்டுவிடுவேன். ஜாக்கிரதை.. இந்த பிக்குவின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டி, காளி தேவிக்குப் பலி கொடுக்கப்போகிறோம். நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்து அந்த காட்சியைக் கண்டு களியுங்கள். பின்னர் உங்களை விடுதலை செய்வேன்.. எல்லோரும் ஒடிப்போகலாம். இடையில் ஏதாவது இந்த சீனாக்காரனுக்கு வலிந்து பேசி உதவ வந்தீர்களே என்றால்.. கங்கைக்குள் விழுந்து செத்துப்போனானே இன்னொரு காவிச்சட்டைக் காரன் அவன் கதியே உங்களுக்கு ஏற்படும்’’
கங்கையின் கரையைத் தாண்டி ஒரு மேடான பகுதிக்கு அனைவரும் நடத்திச் செல்லப்பட்டனர். அங்கு மேடை தயாரானது.

யுவான் சுவாங் கொள்ளையர் தலைவனிடம் இறுதியாகப் பேசிப்பார்ப்பது என்று முடிவு செய்தார்.

‘இந்த உடல் உங்கள் பலிக்குப் பயன்படுமாயின் அதை விட மகிழ்ச்சி அடையப்போகிறவன் என்னை விட்டால் வேறு யாருமில்லை. ததாகதரின் தர்மத்தைக் கடைபிடிக்கும் என்னால் உங்களுக்கு இப்படி உதவி செய்ய முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே ஏற்படும். ஆனால் இந்த கட்டை தான் பூமிக்கு வந்ததின் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை. இன்னும் ததாகதர் ஞானம் பெற்ற போதிமரத்தின் நிழலை இன்னும் காணவில்லை. அவரது பாதம் படிந்த கிரிதர்கூட மலைகளை என் கண்கள் காணவில்லை. தூர தேசத்தில் இருந்து என் பயணத்தின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. இப்போது என்னைக் கொன்றீர்கள் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய பாவம் வந்து சேரும்’’

‘‘ஹி..ஹி..... துறவியே.. நீ என்ன வேண்டுமானாலும் சொல். எந்த பாவமும் எங்களைத் தீண்டாது. ஆண்டு தோறும் தேவிக்கு சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு உயிரைப் பலிகொடுப்பது எங்கள் வழக்கம். இந்த ஆண்டு எவனும் கிட்டவில்லை. நாட்களோ வீணாகிப் போய்விட்டன. இரவில் என் கனவில் வந்து ரத்தப்பலி எங்கே.. எங்கே என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள். உன்னைப் பார்த்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. எங்கள் தேவியும் மகிழ்ச்சி அடைந்திருப்பாள். அடுத்த ஜென்மத்தில் உன் நோக்கத்தை நீ நிறைவேற்றிக் கொள்...இந்த ஜென்மம் இங்கேயே உனக்கு முடிவடையப் போகிறது’’

‘‘பிக்குவே.... அடுத்த பிறவியில் எங்களைப் போன்ற கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்ளாதீரும்....’’ என்று மொட்டையன் கொடூரமாக சிரித்தவாறே சொன்னான். அவன் கண்கள் ரத்த சிவப்பாக இருந்தன. யுவான் சுவாங்கைப் பிடித்து அவரது கைகளைக் கட்டினான் அவன். சிவப்புப் பூக்களால் செய்த மாலை ஒன்றை அவர் கழுத்தில் போட்டார்கள். அவரது தலையில் ஒரு சொம்பு கங்கை நீர் ஊற்றப்பட்டது.

பிறகு அவரை அழைத்துக்கொண்டுபோய் தயாராக வைக்கப்பட்டிருந்த பாறை மீது மல்லாந்து படுக்க வைத்தனர். அவரது கழுத்துக்கு குறிபார்த்து கொடுவாளை ஓங்கி இரண்டுமுறை வீசிப் பயிற்சி எடுத்துக்கொண்டு பலியிடத் தயாரானான் ஒரு கொள்ளையன். யுவான் சுவாங் முகத்தில் கொஞ்சமும் கலக்கமே இல்லை. புன்னகையே இருந்தது. அவரது முகத்தில் தோன்றிய அந்த புன்னகைக் குறி கொள்ளையர்களை சற்று அடிவயிற்றைக் கலக்கினாலும் பலியை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான் தலைவன்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com