க்ளிக் மோசடி

க்ளிக் மோசடி

விரல்நுனி விபரீதம் -13

கணிணி மவுஸை 'க்ளிக்' செய்வதால் ஒரு நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாக்க முடியுமா? முடிந்திருக்கிறது. ஆனால் இது தனிப்பட்ட ஆளால் செய்யப்பட்டதல்ல.உலகில் இணையத்தில் உலவும் பல பேர்கள் இணைந்து முன்ணணி தேடு பொறியான "கூகிள்"க்கு இந்த நஷ்டத்தை உண்டாக்குகிறார்கள்.

உலகின் நெம்பர்.1 தேடுபொறி என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் கூகிள், தன் வருவாயில் தொண்ணூறு சதவிகிதத்தை விளம்பரத்தின் மூலமாகவே ஈட்டுகிறது.

கூகிள் தளத்தில் ஏதேனும் குறிசொல்லைத் தேடும் போது, தேடு பட்டையின் கீழாக, அந்த குறிசொல்லுக்குத் தொடர்புடைய அனைத்து இணையதளங்களின் பட்டியலும் வரும். தளத்தின் வலது புறமாக அந்த குறிச்சொல்லுக்கு சம்பந்தம் உடைய விளம்பரங்கள் வரும். இது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்தால் தெளிவாக புரியும். இந்த படத்தில் உள்ள தேடுதலில் "சாப்ட்வேர்" என்ற சொல் தேடப்பட்டிருக்கிறது. 0.04 வினாடிகளில் சுமார் நூறு கோடிக்கும் அதிகமான தளங்கள் கிடைத்திருக்கின்றன. பக்கத்தின் வலதுபுறமாக விளம்பரப் பட்டை இருக்கின்றது.(கட்டத்திற்குள் காண்பிக்கப்பட்டுள்ளது).

'சாப்ட்வேர்' என்பதை ஒரு குறிச்சொல்லாக நிர்ணயித்துக் கொள்ளலாம். இது போன்ற கணக்கிலடங்காத குறிச்சொற்களை கூகிள் விற்பனை செய்கின்றது. நிறுவனங்கள் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.அந்தச் சொல்லை கூகிள் தேடுபொறியில் யார், உலகில் எங்கு இருந்து தேடினாலும், வலப்பக்க விளம்பரத்தில் அந்தச் சொல்லை கூகிளிடமிருந்து வாங்கிய நிறுவனங்களின் விளம்பரங்கள் தெரியும். தேடுபவர், அந்த விளம்பரத்தை 'க்ளிக்' செய்தால் அந்த நிறுவனம், கூகிளுக்கு ஒப்பந்தத்தின்படியான தொகையை வழங்க வேண்டும். சொல்லின் மதிப்பிற்கு ஏற்ப தொகை வேறுபடும். உதாரணமாக 'கம்ப்யூட்டர்' என்னும் சொல்லை வாங்கும் நிறுவனம் ஒவ்வொரு 'க்ளிக்'கும் 40 டாலர் என்னும் அளவில் கூகிள்க்கு தர வேண்டும்.'ட்ரிக்','மணிகண்டன்' போன்று யாரும் கேட்காத சொற்களை ஐந்து சென்ட் என்ற அளவில் கூட கூகிள் விற்கிறது. இது கூகிளே நேரடியாக நடத்தும் விளம்பரம்.

இன்னொரு முறையில், நான் சொந்தமாக ஒரு இணையத்தளமோ அல்லது வலைப்பதிவோ நடத்தினால்,என்னுடைய‌ இணையத்தளத்தில் நான் ஒரு விளம்பரப்பட்டையை பொருத்திக் கொள்கிறேன் என்று சொல்லி கூகிளிடமிருந்து ஒரு விளம்பரப்பட்டையை வாங்கிக் கொள்ளலாம். இந்த விளம்பரப் பட்டையை என் தளத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய தளத்தினை பார்வையிடும் யாராவது இந்த விளம்பரப்பட்டையை 'க்ளிக்' செய்தால், எத்தனை முறை 'க்ளிக்' செய்யப்படுகிறது என்பது கூகிள் நிறுவனத்தால் கணக்கிடப்படும். எண்ணிக்கையின் அடிப்படையில்,விளம்பரத்தை தந்திருக்கும் நிறுவனத்திற்கு கூகிள் பில் அனுப்பும். தொகையினை விளம்பரம் செய்த நிறுவந்த்திடமிருந்து வசூல் செய்து விளம்பரப்பட்டையை பொருத்தியிருக்கும் எனக்கு தொகையின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு, மீதியை கூகிள் எடுத்துக் கொள்ளும்.

இரண்டாவது வகையான விளம்பரத்தின் மூலமாகத்தான் கூகிள் நிறுவனம் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அளவிற்கான நஷ்டத்தைச் சந்திக்கிறது. ஒவ்வொரு 'க்ளிக்'க்கும் தனக்கு வருமானம் வருகிறது என்பதற்காக, தளத்தின் உரிமையாளர் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் தளத்தில் உள்ள விளம்பரங்களை 'க்ளிக்' செய்வார்.இந்தக் கிளிக்குகளுக்கும் கூகிள், விளம்பரம் செய்திருக்கும் நிறுவனத்திற்கு பில் அனுப்பும். எனக்குத் தெரிந்த நண்பர், "மணி, என் பிலாக் படிக்கும் போதெல்லாம் விளம்பரத்தை க்ளிக் பண்ணு. பிலாக் படிக்காவிட்டாலும் சரி. குறைந்த பட்சம் ஒரு கிளிக் பண்ணு" என்பார்.



இதில் விளம்பரம் செய்யும் நிறுவனத்திற்குத்தானே நஷ்டம், கூகிள் எப்படியும் அந்த நிறுவனத்திடம் பணத்தை வசூலித்து விடுகிறதே என்றால், அது தவறு.

விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் நோக்கமே இதன் மூலம் வாடிக்கையாளர் கிடைக்க வேண்டும் என்பதுதான். வாடிக்கையாளரே இல்லாமல் வெறும் விளம்பரத்திற்கு அந்த நிறுவனம் எதற்காக‌ செலவு செய்ய வேண்டும்?. விளம்பரத்தின் தரம் குறைவதால் புதிய நிறுவனங்கள் இந்த விளம்பர யுக்தியை பின்பற்ற தயங்குகின்றன. ஏற்கனவே விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் பின்வாங்குகின்றன. இதுதான் கூகிள் நிறுவனத்தை பாதிக்கிறது.

இது கூகிள் என்ற தனியொரு நிறுவனத்தை மட்டும்தான் பாதிக்கிறது என நினைத்தால், இந்த மோசடியை வைத்து பல சிறு நிறுவனங்களை புதை குழியில் தள்ளியிருக்கிறார்கள் அவற்றின் போட்டியாளர்கள். ஒரு சிறு நிறுவனம், 'சாப்ட்வேர்' என்ற சொல்லை கூகிளிடம் 35 டாலர் என்ற விலைக்கு(இன்றைய தேதியில் 1 டாலர்=ரூ.40) வாங்கியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் ஏதேனும் ஒரு தளத்தில் இருக்கும். அந்தத் விளம்பரத்தின் மீது ஒரு 'க்ளிக்' செய்துவிட்டால், அந்த நிறுவனம் கூகிளுக்கு 35 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ஒரே ஒரு பயனற்ற க்ளிக் என்றால் கூட ஒரு மாதத்திற்கு 1400 டாலர்களை கூகிளுக்கு விளம்பரம் செய்திருக்கும் நிறுவனம் வழங்க வேண்டியிருக்கும்.(அதாவது 42,000 ரூபாய்).

ஒரு நிறுவனத்தை தொலைக்க வேண்டும் என்றே முடிவு செய்து 'க்ளிக்' செய்பவன் ஒற்றைக் கிளிக் மட்டும் போதும் என்று நிறுத்தப் போவதில்லை. குத்து மதிப்பாக கை வலிக்கும் அளவுக்கு அடித்து விடுவார்கள். இன்னும் கொஞ்சம் விவகாரம் பிடித்த ஆட்கள், தொடர்ச்சியாக 'க்ளிக்' செய்து கொண்டேயிருக்கும் படியான வைரஸ் புரொகிராம் எழுதி அதனை சுற்ற விட்டுவிடலாம்.

வைரஸ்ம் சோறு தண்ணியில்லாமல் 'க்ளிக்தலே கருமமாக' அடி நொறுக்கிவிடும். ஒவ்வொரு க்ளிக்கும் 35 டாலர் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் வைரஸ் ஆயிரம், இரண்டாயிரம் க்ளிக்களை ஒரு நாளைக்கு செய்தால் கூட போதும். கூகிள் அனுப்பும் பில்லுக்கு பணம் கட்டுவதற்காக நிறுவனத்தையே அடமானம் வைக்க வேண்டியிருக்கும். ஒரு மாத கூகிள் பில்லில் கூட எதிராளி நிறுவனத்தை அழித்துவிடலாம்.

இந்த முறைகளில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் புலம்பத்துவங்கின. கூகிளும் சில வழிமுறைகளைக் கையாண்டது. 'க்ளிக்' செய்யப்படும் கணிணியின் ஐபி அட்ரஸ், அதில் இருந்து எத்தனை முறை 'க்ளிக்' செய்யப்பட்டது போன்ற விவரங்களை சேகரிக்கத்துவங்கியது. இதில் சந்தேகம் வரும் பட்சத்தில், தவறான 'க்ளிக்'களுக்கு பில் அனுப்பாமல் இருந்தது. வாடிக்கையாளரும் தனக்கு சந்தேகம் வரும் பட்சத்தில் கூகிளிடம் புகார் தெரிவிக்கலாம். கூகிள் விசாரணை நடத்தும். ஏதேனும் தவறு நடந்திருப்பதாக தெரியும் பட்சத்தில் விளம்பரம் செய்து கொண்ட நிறுவனத்திடம் வசூல் செய்த‌ பணத்தை திருப்பித் தருவதாக அறிவித்தது.

இது போன்ற இணைய விளம்பர யுக்தியை பல நிறுவங்னங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அதிக இலாபம் சம்பாதிப்பது கூகிள்தான்.



இந்த மோசடியில் ஒரு விவகாரம் கசிந்தது. கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்த 'க்ளிக் மோசடி'யின் புள்ளி விவரத்தை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்றும் தங்கள் விளம்பர வருமானம் பாதிக்கப்படும் என்பதால் அமைதி காப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஸ்காட் ஹின்டின்சன் என்பவர், அமெரிக்காவில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். அவர், தான் 'க்ளிக் மோசடி'யால் பாதிக்கப்படுவதாகக் கருதி, இதற்கென ஒரு ஆளை தனியாக நியமித்து கவனிக்கச் செய்தார். பெரும்பாலான 'க்ளிக்'கள் ஒரே கணிணியில் இருந்து வருவதைக் கண்டறிந்த ஹின்டின்சன், அடுத்த முறை அந்த கணிணியில் இருந்து 'க்ளிக்' செய்தால் பின்வரும் தகவல் வரும்படி மாற்றியமைத்தார். "இத்தோடு இதனை நிறுத்திக் கொள்க. நீ யார் என்பது கண்டறியப்பட்டு, தக்க இடத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது". கொஞ்சம் பயந்த எதிராளி நிறுத்திக் கொண்டான். அதோடு ஹின்டின்சனின் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஆனால் தான் தண்டமாக அழுத தொகையில் ஐம்பது சதவிகிதத்தை மட்டுமே கூகிள் திருப்பி தந்திருப்பதாக ஹின்டின்சன் புலம்பிக் கொண்டிருக்கிறார். இவரைப்போல ஏகப்பட்டவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

ஜுலை   07 , 2008 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com