விரல்நுனி விபரீதம் -16

விரல்நுனி விபரீதம் -16

ட்ராஜன் - குதிரையல்லாத குதிரை

ட்ராஜன் குதிரை பற்றிய‌ ஒரு புராணக் கதையோடு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கிரீஸ் நாடு, ட்ராய் நகரத்தின் மீது போரை அறிவித்தது. இந்த‌ப் போருக்கான‌ பின்புல‌ம் ஒரு பெண்ணை, அவளின் விருப்பமின்றி ஒருவன் கவர்ந்து செல்லும் 'கிரேக்க'நாட்டு இராமாய‌ண‌க்க‌தைதான்.

டிராயின் இள‌வ‌ர‌ச‌ன் ஸ்பார்ட்டா(தெற்கு கிரேக்க‌த்து ந‌க‌ர‌ம்)அர‌சியை க‌ட‌த்திச் செல்கிறான். கடத்திச் சென்றவன் அதோடு நில்லாமல் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தவுடன் கிரேக்க மன்னரும் அந்நாட்டு மக்களும் க‌டும் கோப‌ம் அடைகிறார்க‌ள். த‌ங்க‌ள் ராணியை மீட்ப‌த‌ற்காக‌ ட்ராயின் மீது போர் தொடுக்கவும் முடிவு செய்தார்கள். என்னதான் கோபம் வந்தாலும் என்னதான் முயன்றாலும் அடுத்த‌ ஒன்ப‌து ஆண்டுகளுக்கு ட்ராய் நகரத்தை கிரேக்கர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தொட‌ர்ந்து போராடியும் ட்ராய் ந‌கர‌த்துக்குள் நுழைய‌ முடியாத‌ ச‌லிப்பிலிருந்த‌ கிரேக்க‌ ம‌க்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ஒடிஸீய‌ஸ் ஒரு திட்ட‌ம் தீட்டினான். மிக‌ப்பெரிய‌ ம‌ர‌த்தினாலான‌ குதிரையை வ‌டிவமைப்பது எனவும், அந்தக் குதிரைக்குள் அமர்ந்து கிரேக்க போர்வீரர்கள் ட்ராய் நகரத்திற்குள் நுழைவது எனவும் முடிவு செய்யப்பட்டது.இரவு பகலாக உழைத்து வடிவமைக்கப்பட்ட குதிரையை ட்ராய் நகரத்தின் எல்லையில் கிரேக்கர்கள் நிறுத்திவிட்டார்கள். உள்ளீட‌ற்ற‌ குதிரைக்குள் கிரேக்க‌ வீரர்க‌ள் ஒளிந்திருப்ப‌திப்ப‌தை அறியாத‌ ட்ராய் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் குதிரையை ந‌க‌ர‌ வீதீக‌ளுக்குள் இழுத்துச் சென்றார்க‌ள். கிரேக்க‌த்தின் மிக‌த்திற‌மை வாய்ந்த‌ வீர‌ர்க‌ள் ம‌ட்டுமே குதிரைக்குள் ஒளிந்திருந்தாலும், ட்ராய் ப‌டைக‌ளை எதிர்த்துப் போரிட‌ அவ‌ர்க‌ள் ம‌ட்டுமே போதுமான‌தாக‌ இருந்த‌து. ட்ராய் ப‌டையை வென்று த‌ங்க‌ள் அர‌சியை மீட்டெடுத்தார்க‌ள் என்ப‌தாக இந்த கதை செல்கிறது.

சைப‌ர் குற்ற‌ங்க‌ளை ப‌ற்றிய‌ புத்த‌க‌த்தில் புராண‌ம் எத‌ற்கு வ‌ந்த‌து என்றால்,ட்ராஜ‌ன் என்ற‌ ஒரு சொல் க‌ம்ப்யூட்ட‌ர் உல‌கில் மிக‌ப்பிர‌ப‌ல‌ம். ட்ராஜன் குதிரையை ஏதோ பரிசுப் பொருள் என நினைத்து இழுத்துச் சென்ற ட்ராய் மக்களுக்கு ஒன்பது ஆண்டுகால போரின் தோல்வியை அன்பளித்தது போல, ஏதோ உருப்படியான மென்பொருள் என நினைத்து திறந்தால் அந்த மென்பொருள் நினைத்ததற்கு முற்றிலும் முரணான‌ வேறொரு ப‌ணியை கணிப்பொறிக்குள் செய்து முடிக்குமென்ப‌தால் ட்ராஜ‌ன் என்ற‌ பெயர் இத‌ற்கு வ‌ந்துவிட்ட‌து.

ட்ராஜன், க‌ணிணியில் த‌ன‌க்கென‌ உப‌யோக‌ப்ப‌டுத்திக் கொள்ளும் இட‌ம் மிக‌க் குறைவென்ப‌தால் இவற்றை எளிதாக‌ ஒரு மின்ன‌ஞ்சலிலும், அனுப்பும் ஆன்லைன் வாழ்த்து அட்டையிலும் கூட‌ இணைத்து விட‌ முடியும். வாழ்த்து அட்டை என திறப்பவரை முட்டாளாக்கும்படியாக ட்ராஜன் புரொகிராம் கணிப்பொறியில் இடம் பிடித்துக் கொள்ளும்.

தொலைவிலிருந்து நிர்வ‌கிக்கும் ட்ராஜன்தான்(Remote administration Trojan)பொதுவாக‌ காண‌ப்படும் ட்ராஜ‌ன். இது சர்வர், க்ளையண்ட் என இர‌ண்டு கோப்புக‌ளை த‌ன்னுட‌ன் வைத்திருக்கும். ச‌ர்வ‌ர் கோப்பினை எந்த‌ க‌ணிப்பொறியை தாக்க‌ வேண்டுமோ அந்த‌ ந‌ப‌ருக்கு வாழ்த்து அட்டை போன்ற ஏதாவது ஒன்றோடு இணைத்து அனுப்பி வைத்துவிடுவார்க‌ள். இப்படி செல்லும் ச‌ர்வ‌ர் கோப்பு, செல்லுமிட‌த்தில் த‌ன‌க்கு வ‌ச‌மான‌ இட‌த்தில் அம‌ர்ந்து கொள்ளும். பொதுவாக‌ க‌ணிணியை நெட்வொர்க்கோடு இணைக்கும் 'போர்ட்'க‌ளைத் தேர்ந்தெடுக்கும் ட்ராஜன் அங்கு தன் குடிசையை அமைத்துக் கொள்ளும். க‌ணிப்பொறிக்குள் வ‌ருகின்ற‌ த‌க‌வ‌ல்க‌ளையும், க‌ணிப்பொறியிலிருந்து வெளியே செல்லும் த‌க‌வ‌ல்க‌ளை க‌ண்கொட்டாம‌ல் க‌வ‌னித்துக் கொண்டிருக்கும்.

ச‌ர்வ‌ர் ம‌ட்டும்தான் இந்த‌க் க‌ணிப்பொறியில் இருக்கும். கிளைய‌ண்ட் கோப்பு, ச‌ர்வ‌ரை இந்த‌க் க‌ணிப்பொறிக்கு அனுப்பி வைத்த‌வ‌ரிட‌மே இருக்கும். அவ‌ர் அங்கு இருந்து கொண்டு கிள‌ய‌ண்ட் கோப்பினை இய‌க்குவார். கிளைய‌ண்ட் கேட்கும் எல்லாத் த‌க‌வ‌ல்க‌ளையும் க‌ர்ம‌சிர‌த்தையாக‌ ச‌ர்வ‌ர் அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும். இப்ப‌டி ஒருவ‌ரின் கணிப்பொறித் த‌க‌வ‌ல்க‌ளை ட்ராஜ‌ன்க‌ளைப் ப‌யன்ப‌டுத்தித் திருட‌லாம். அல்ல‌து கிளைய‌ண்ட் இடும் க‌ட்ட‌ளைக‌ளை செய‌ல்ப‌டுத்தி எதிராளியை 'டார்ச்ச‌ர்' ஆக்க‌லாம்.

எதிராளி மிக‌ முக்கிய‌மான‌ ப‌ணியை க‌ணிணியில் செய்து கொண்டிருக்கும் போது க‌ணிணியை நிறுத்திவிடும்ப‌டி (ஷ‌ட் ட‌வுன்) ச‌ர்வ‌ர் கோப்புக்கு கிள‌ய‌ண்ட் மூல‌மாக உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌லாம் அல்ல‌து இப்ப‌டி வேறு ஏதாவ‌து 'குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்க‌' செய்தும் சாக‌டிக்க‌லாம். எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்க முடியும் என்பது ட்ராஜனை வடிவமைத்தவரின் 'கிரியேட்டிவிட்டி'யை பொறுத்த விஷயம் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

'பாஸ்வேர்ட் ட்ராஜன்'என்று இன்னொரு குட்டிச்சாத்தான் இருக்கிற‌து. பாஸ்வேர்ட் என‌ நீங்க‌ள் எதனை உங்கள் க‌ணிப்பொறியில் உள்ளீடு செய்தாலும் அதை அடுத்த‌ க‌ண‌த்தில் த‌ன் எஜ‌மான‌ருக்கு அனுப்பி வைக்கும். அது க‌ணிப்பொறியின் பாஸ்வேர்ட், ஆன்லைன் வ‌ங்கிக் க‌ண‌க்கு பாஸ்வேர்ட், இமெயில் பாஸ்வேர்ட் அல்ல்து ஏதாவ‌து 'கெட்ட‌'வார்த்தை த‌ளத்தின் பாஸ்வேர்ட் என்ற‌ பேத‌ம் எல்லாம் இந்த‌ ட்ராஜ‌னுக்கு கிடையாது. இத‌ன் ப‌ணியே எந்த‌ பாஸ்வேர்ட் ஆக‌ இருப்பினும் அதை தன் கிளையண்ட் கோப்புக்கு அனுப்பி வைப்ப‌துதான்.

பாஸ்வேர்ட் ட்ராஜ‌ன் ஆவ‌து கொஞ்ச‌ம் தேவலாம் போலிருக்கிற‌து. 'கீலாகர்'(Key logger) என்ற‌ ட்ராஜ‌னின் விசுவாச‌ம் கொஞ்ச‌ம் ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. கீ போர்டில் நீங்க‌ள் எதை அடித்தாலும், அவ‌ற்றை 'ல‌ப‌க்'க்கி அது த‌ன் எஜமானுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கும். ஒரு ல‌வ் லெட்ட‌ர் கூட சுத‌ந்திர‌மாக‌ அடிக்க‌ முடியாது என்ப‌துதான் இத‌ன் ஹைலைட் கொடுமை.

அழித்தொழிக்கும் ட்ராஜ‌ன்(Destructive Trojan) என்ற இன்னொரு ட்ராஜ‌ன் ஆங்கில‌ப்ப‌ட‌ வில்ல‌ன் குழுவைப் போன்ற‌து. எதிராளியின் மொத்த க‌ணிப்பொறியையும் அழிக்கும் வ‌ல்ல‌மையை இய‌ன்ற‌ வ‌ரை பிரையோகிக்கும்.

இவைத‌விர 'ஜோக் ட்ராஜன்' போன்ற‌ சிறு சிறு ட்ராஜ‌ன்க‌ள் பெரும‌ளவில் கணிபொறிக்கு பாதிப்பை த‌ராதவைகள் என்றாலும் ஏதாவ‌து அட்டகாச‌ம் செய்து எரிச்ச‌லூட்ட‌க் கூடிய‌வை.

பி.ஓ என்ப‌து புக‌ழ்பெற்ற‌ ட்ராஜ‌ன். சிடிசி(Cult of the Deadcow)என்ற‌ ஹேக்க‌ர்ஸ் குழு வ‌டிவ‌மைத்த‌ இந்த‌ ட்ராஜ‌னை யார் வேண்டுமானாலும் இணைய‌த்தில் இருந்து ப‌திவிற‌க்க‌ம்(ட‌வுன்லோட்) செய்து கொள்ள‌ முடியும். எந்த‌க் க‌ணிப்பொறியை தாக்க‌ வேண்டும் என‌ எண்ணுகிறோமோ அந்த‌க் க‌ணிணியின் ஐ.பி எண் தெரிந்தால், அந்த‌க் க‌ணிணிக்கு, இந்த ட்ராஜனின் ச‌ர்வ‌ர் கோப்பினை அனுப்பி வைத்துவிட‌லாம். கிளைய‌ண்ட் கோப்பு அனுப்புப‌வ‌ரின் க‌ணிணியியிலேயே இருக்கும். கிளைய‌ண்ட் சொல்லும் வேலைக‌ளை எதிராளியின் க‌ணிணியில் ச‌ர்வ‌ர் கோப்பு செய்யும்.தேவைப்ப‌டும் கோப்புக‌ளை எடுத்து அனுப்புவ‌து, எப்பொழுது வேண்டுமானாலும் கணிப்பொறியை ஷ‌ட்ட‌வுன் செய்ய‌ வைப்ப‌து போன்ற‌ ப‌ணிக‌ளைச் செய்ய‌ வைக்க‌லாம்.

நெட்ப‌ஸ் என்னும் மற்றொரு ட்ராஜ‌னைக் கொண்டு, தாறுமாறாக‌ சிடி இய‌க்கியை திற‌ப்ப‌து அல்ல‌து மூடுவ‌து, க‌ணிப்பொறியில் இருக்கும் ஒலி எழுப்பும் புரொகிராம்க‌ளை அல‌ற‌ச் செய்வ‌து, க‌ணிப்பொறி தானாக‌வே எதையாவ‌து த‌ட்ட‌ச்சு செய்ய‌ச் செய்வ‌து, விசைப்ப‌ல‌கையின் எந்த‌ கீயை அடித்தாலும் ஒலி எழுப்பும் ப‌டி செய்வ‌து, திடீரென‌ ஏதாவ‌து கோப்பினை க‌ணிப்பொறியிலிருந்து அழித்துவிடுவ‌து போன்ற‌ சில்ல‌ல‌றைத்த‌ன‌மான‌ வேலைக‌ளை தொட‌ர்ச்சியாக‌ச் செய்து எதிராளியை 'இர‌த்த‌க் க‌ண்ணீர்' சிந்த‌ வைக்க‌லாம்.

ட்ராஜ‌ன்க‌ளை கணிப்பொறிக்குள் நுழையாம‌ல் த‌டுக்க‌வும், நுழைந்த‌ ட்ராஜ‌ன்க‌ளை ஒழிக்க‌வும் ப‌ய‌ர்வால், ஆண்ட்டி வைரஸ் போன்ற‌ மென்பொருட்க‌ளை உப‌யோக‌ப்ப‌டுத்துகிறார்க‌ள். என்ன‌தான் த‌டுக்கும்/அழிக்கும் மென்பொருட்க‌ள் இருந்தாலும் அவ‌ற்றின் க‌ண்க‌ளில் ம‌ண் தூவும் ட்ராஜன்கள் இணையத்தில் உல‌விக்கொண்டுதான் இருக்கின்ற‌ன‌.

ட்ராஜன்களால் ஒரு கொடுமை இருக்கிற‌து. ட்ராஜன் ஏதாவது ஒலி எழுப்பும் கோப்பை இயக்கும் போது வரும் ஒலியை, க‌ணிப்பொறியில்தான் கோளாறு என‌ நினைத்து அதிக‌மான‌ ஒலியை குறைத்து வைக்கிறோம் அல்ல‌து ஒலி எழுப்பும் கோப்பையே மூடி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ட்ராஜ‌ன் அடுத்த‌ க‌ண‌மே திருப்பியும் அந்த‌க் கோப்பை திற‌ந்து ஒலி எழுப்பும். சிறு குழ‌ந்தையிடம் செய்யாதே என்று சொன்ன‌ வேலையை அது திரும்ப‌ திரும்ப‌ செய்வ‌து போல‌த்தான் இது. குழ‌ந்தை என்றாலும் கூட‌ திட்டிப் பார்க்க‌லாம், கேட்காத‌ ப‌ட்ச‌த்தில் ஒரு நாலு 'சாத்து' சாத்த‌லாம். ஆனால் ட்ராஜ‌னிட‌ம் இந்த‌ 'பாச்சா' எல்லாம் ப‌லிக்காது. இந்த‌ வேலைக‌ளை எல்லாம் ட்ராஜ‌ன்தான் செய்கிற‌து என்று க‌ண்டுபிடித்து ட்ராஜ‌னை அழித்தால் ம‌ட்டுமே த‌ப்பிக்க‌லாம்.

(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

ஜுலை   28 , 2008  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com