விழி பா.இதயவேந்தன்

கவிதைத்திருவிழா

எழுத்ததிகாரம்

நினைத்தபோது உயிர்பெற்றுவிடுகிறது
அம்மகா வார்த்தையின்
உன்னத அர்த்தங்கள் என்பது.

விவரம் அறிந்தநாள் தொடங்கி
வருபோதும் நான்
உச்சரித்துப் பார்த்ததில்லை.

எந்த மென் சொற்களிலிருந்து
மனிதத்தின் உயிர்நாளத்தைப் பிடித்து
சுண்டி இழுத்தோம் என்பதும் நினைவில்லை.

கேள்விகள் ஏதுமின்றி
வேள்விகள் நடத்தி
எதிரியை நெருங்காமலே
ஏசுதல் என்பதாய்
வார்த்தைகளைக் கொட்டிவிடமுடிகிறது.

சொற்களின் அர்த்தங்கள் அறிந்தே
தள்ளியே வைத்திருக்கும் உறவை
ஒன்றாக்க முயலுதல் அறியப் பெரும் தவம்

கொடுஞ்சொற்களின் விளையாட்டில்
விபரீதமாகிப்போய்விடுகிறது வாழ்க்கைப்
பலருக்கு.

அன்பையே நாளும் நினைத்துப் பூசிக்க
சூழல் விடுபட மறுக்கிறது.

என்றாலும் மொழியின் எழுத்துக்கள்
ஒவ்வொன்றாய்க் கூட்டி
கனமாய் அர்த்தங்களை உடைத்து
எழுத்தினை கையாளவேண்டியிருக்கிறது
வலுவாய்.


****** ***** *****

புதுவழி

தேடிப்போய்க்கொண்டிருக்கிறேன்
ஓர் புதுவழித்தடம் நோக்கியபடி.

காற்றின் திசைகள் அறிந்து
ஒளிகளின் திசைகள் குறிபார்த்து
கடக்கிறேன் ஓர்
பெரும் பயணத்திற்கான முன்னீடாய்.

ஒருபோதும் உணர்ந்ததில்லை
என் தனி வழிப்பயணத்திற்கான
கடைகோடி எல்லையினை.

விரிந்த வெண்சாம்பலான வானத்தின் கீழ்
வேறோர் எண்ணங்கள் புடைசூழ
கட்டுக்கடங்காமல் கடந்துவிட முடிகிறது.

ஒற்றையில் உலகை வலம் வரத்துடிக்கிறது
உள்ளுக்குள் உட்கார்ந்தபடி மனசு.

இதயத்தை இறுக்கி
நினைவுகளை வடிகட்டி
எண்ணங்களைச் சுருக்கி
முடித்துக்கொள்ள வேண்டும்
எனது நேர்த்தியான
விட்டுப்போன பயணம் என்பதை.

****** ***** *****

வாழ்வின் விடுதலை

கதிரவனின் கிரணங்கள்
களமெங்கும் வீழ்ந்து கிடக்க
காற்றின் மென் சங்கீதம்
சுழலின் கானம் பாடும்.

செல்வங்கொழித்த சிங்கார பூமியில்
நொடியில் ஒவ்வொன்றும்
நெஞ்சக் கலவரத்தில் அமிழ்ந்துக்கிடக்கும்.

காணும் திசையெங்கும்
கந்தகப் பூமியாய்ப் பதிவுகள்
தோட்டங்கள் தோறும்
துவக்குகளின் பட்டாளம்.

உயிர் வாழ்தலின் உன்னதத்தில்
உலகெங்கும் பறைசாற்றியது.
நீ அடிமை .... நீ அகதியென்பதாய்

சீராட்டிப் பாராட்டி சீர்பட வாழ்ந்து
செந்தமிழை அமிழ்தெனவூட்டி
தாய் மண்ணில் வளர்ந்த பெருமை
காற்றில் கரைந்தது எளிதாய்.

சேற்றின் பதிவுகள் யாவும்
செய்தி விளம்பரங்களாய் ஆனதின்று
முகவரிகள் இழந்து
தாய் , தந்தை, பிள்ளைகள் வெவ்வேறிடமென
திசையெட்டும் கடந்துவிட்டது.
அச்சத்தோடு துரத்திய வாழ்க்கை.

நேற்றில்லை , இன்றில்லை :
இன்றின் இன்னொரு நாளில்
எழும் பெரும் சூறாவளியில்
எம் மண்ணின் மரங்களும்
கிளைகளின் இலைகளும்
கைகூப்பி வரவேற்கும்.

கடல் நீரும் கட்டுக்குள் அடங்கி
வாவென கை நீட்டும்
விண்ணின் பறவைகளும்
சிறகசைத்து அழைக்கும்.

நேற்றின் மனிதர்கள் தொலைந்தும்
இன்றும் அவதரிப்பார்கள்.
வரலாற்றின் விளிம்பில்
விடுதலை கீதம் முழங்க
புதிய புதிய எழுச்சியோடு
மனிதர்கள்.

****** ***** *****

சமாதானம்

சமாதானமாய்ப் போவோம்
என்கிறாய்
இப்போதைக்கு
நமக்குள் ஏது சமாதானம்?

முரண்களின் மொத்தம்
வரலாற்றின் விலகல்
வாழ்வின் தொலைப்பு.

சமூகம் என்னும் வட்டத்திற்குள்
எங்கேனும் ஒரு முள்
தொடர்ந்து குத்தக் குத்த
ஒவ்வொன்றாய்
எடுத்தே
கழிகிறது காலம்.

மனங்குமைந்து
கண்ணீர் விட்டகாலங்கள் போய்
வாழ்வின் நுணுக்கத்தில்
எதிரியின் சுவடுகள்
மனதில் விழ
ஓவெனும் இரைச்சலோடு
பீறிட்டெழும்
எனது பதிவுகள்.

கரைக்குத் திரும்பிய கடலலையாய்
உன் சுவடுகள் அழித்து
திரும்பிய எனக்குள்
சுதந்திரம் என்பது
இனி இருக்கும் எப்போதும்
எனக்கானதாய்.

****** ***** *****

சொல்லாமல் சொன்ன சேதி

புழுதிகள் அப்பிய பரந்தவெளி
கல்லும் முள்ளும்
கலந்தபடி
காற்றின் துகள்கள் சேர்ந்து
மாசுகள் பலப்பலவென
ஒன்றாய்ப் பிணைந்த மண்வெளியில்
சொட்டு சொட்டாய்க்
கண்ணீர் வடித்த வானத்தின் கீழ்
புதையலைத் தேடுதல்போல்
நிலத்தைக் கீறும் உழுகலப்பை.

அடுத்தடுத்த நாளில்
வீழ்ந்த மழைத்துளியில்
நிலம் குழைந்தபடி
பசுமை எங்கும் பிரகாசிக்கும்.

வானம் பார்த்த பூமி
வறண்ட பாலையார் வீழ்ந்து கிடந்த நிலம்
இப்போதுதான் பூமியைப்பிளந்து
துளிர் துளிராய் உயிர் பெற
பார்த்துப் பார்த்து மேயும்
மாடுகளின் முதுகிலும் சுற்றியும்
வெண்ணிற கொக்கின்
ஒற்றைக்கால் நடனம் பார்க்கையில்
அற்புதக் காட்சியோ காட்சிதான்

வீழ்ந்து எழிகிறானோ
இல்லை எழுந்து வீழ்கிறானோ
எவரும் உணர முடியாதது

சொல்லாமல் சொல்கிறது சேதி
கோவணம் கட்டிய உழவனிடம்
"இந்த வருசம் தப்பிச்சுட்ட நீ "

- விழி பா.இதயவேந்தன்

 மார்ச்   16 , 2008

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com