வீரத்தியாகி சொர்ணத்தம்மாள்...

மதுரைக்காரய்ங்க- 34

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

இயக்குநர் சங்கரின் "இந்தியன்" திரைப்படத்தில் ஒரு காட்சி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யா (நடிகை) உள்ளிட்ட சில பெண்களை ஆங்கிலேய அரசின் போலீசார் கைது செய்து அவர்களின் ஆடைகளைக் குறைத்து ஊருக்கு வெளியே இருட்டான பகுதியில் விட்டுச் செல்வார்கள். திரையில் பார்ப்பவர்களை பதறவைத்தக் காட்சி இது. ஆனால் இந்த காட்சியின் ஒரிஜினல் ஹீரோயின் மதுரை சொர்ணத்தம்மாள். மதுரையில் கூட பலர் இந்த சொர்ணத்தம்மாளை அறிந்திருக்க வில்லை. 

விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே "அனுபவித்து"க் கொண்டிருந்த அடி, உதை, சிறை, சித்ரவதை ஆகியவற்றையும் அதற்கு மேலாக அவமானத்தையும் அனுபவித்தவர் சொர்ணத்தம்மாள். மதுரை கடச்சனேந்தலில் வசித்து வந்தவர் சொர்ணத்தம்மாள்.   சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என். ஷேசபாகவதரின் மனைவியாகிய இவர், கணவர் பணிபுரிந்த கம்பெனியில் சாதாரண வேலை பார்த்து வந்தார்.

கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றிருந்த பாரதியாரைப் பார்த்து அன்னி பெசண்ட் அம்மையார் கேட்டார், "இந்த தேசத்தின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களை நீங்கள் ஏன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை ?" புதுமைக் கவிஞராகிய நீங்களே உங்கள் மனைவியை இம்மாநாட்டுக்கு அழைத்து வரவில்லையே, அப்படியிருக்கையில் உங்கள் போராட்டம் எப்படி வெல்லும்?" எனக் கேட்டு பாரதியாருக்கும் பாரத பெண்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டிய அன்னிபெசன்ட் அம்மையாரைப் பற்றியெல்லாம் அறிந்திருக்கவில்லை சொர்ணத்தம்மாள்.

அதுபோல 1930-களில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் சமூக, கல்வி, ஜாதி, பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் இந்தப் பின்புலம் ஏதுமில்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் சுதந்திர வேள்வியில் தன்னையும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தவர். "நாடு விடுதலையடையணும்" என்ற எண்ணம் அவரது மனதுக்குள் உலா வந்து கொண்டிருந்தது. அத்தோடு "வந்தே மாதரம் " என்ற ஒற்றைச் சொல் அவருக்குத் தாரகமந்திரமாக இருந்தது. விடுதலைக்களத்தில் குதிக்க தயாரானார். அப்பொழுது அவருக்கு வயது 26. 

நாடு சுதந்திரம் அடைய மகாத்மா கடைசி ஆயுதமாக "வெள்ளையனே வெளியேறு" கோஷத்தை முன்னெடுத்தார். இது நாடெங்கிலும் மூலை முடுக்கெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம். இதைத் தொடர்ந்து 1942-ல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.

அப்பொழுதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலே போலீசார் லத்தியைச் சுழற்றுவார்கள். வந்தேமாதரம் என்று முணுமுணுத்தால்  லத்தியால் அடித்து துவைத்து விடுவார்கள். முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்திற்குச் சென்றார் சொர்ணத்தம்மாள். வந்தேமாதரம் எனக் கோஷமிட்டார். இவர் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது. கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர். விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் தம்பதியினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெளியே வந்த அவர், "இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர் மறியலில் ஈடுபட வேண்டும் காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு" என்று வெளிப்படை கம்பீரமாகச் சொன்னார் சொர்ணத்தம்மாள். மூன்றாவது முறை கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைதானார். இம்முறை அவர் வேலூர் சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். அப்போதும், ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வந்ததும் மீண்டும் மறியலுக்குத் தயாரானார்.

ஒவ்வொரு விடுதலைக்குப் பின்னும் மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும் சொர்ணத்தம்மாளைக் கண்டு போலீஸ் நிர்வாகம் எரிச்சலடைந்தது. அடித்தும் சிறையில் போட்டும் கூட மீண்டும் மீண்டும் விடுதலைக் களத்தில் நிற்கிறாரே என்ற ஆத்திரம் வேறு. அதுமட்டுமின்றி சொர்ணத்தம்மாளின் தொடர் மறியல் என்பது பெண்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. பெண்களும் திரளாக மறியலில் கலந்து கொள்ளத் துவங்கினர். அதிலும் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகமானது.. இதை முடக்க போலீஸ் திட்டமிட்டது.

இன்றைய பெண்களுக்கு உடை என்பது தங்களின் அழகு, செல்வாக்கு, ரசனை, கற்பனைத் திறன் ஆகியவற்றை அடையாளம் காட்டுவதற்கான சாதனம். ஆனால் தியாகி சொர்ணத்தம்மாளுக்கு தான் அணியும் கதர் சேலை என்பது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். அதை விடுதலை இந்தியாவின் கொடியாக மதித்தார். அதை அவர் பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். அதை அவமதிப்பதன் மூலம் சொர்ணத்தம்மாளை அடக்கிவிடலாம் என போலீசார் கருதினர். அதையடுத்துத் அந்தக் கொடூரச் செயல் அரங்கேறியது.

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டியில் தனது சுதந்திரப்போராட்ட வாழ்க்கை குறித்து சொர்ணத்தம்மாள் கூறுகையில்,

"அவர் என்னைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போய் வந்தார். அப்படி நான்கு முறை அவர் ஜெயிலுக்குப் போனார். நீங்கள் மட்டும் போகிறீர்கள். நான் ஜெயிலுக்குப் போகவேண்டாமா எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னையும் அழைத்துக் கொண்டு போராட்டத்துக்குப் போனார். அந்த காலத்தில் "வந்தே மாதரம்" என்று சொன்னால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள்.

நாங்கள் அப்போது மதுரை சௌராஷ்டிரா ஹைஸ்கூல் பின்புறம் உள்ள வாலண்டியர் சந்தில் குடியிருந்தோம். மறியலுக்குப் போனபோது அவரையும் என்னையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு விட்டுவிட்டார்கள். மீண்டும் மறியல் செய்தோம். மீண்டும் கைது செய்து மதுரை ஜெயிலில் ஒரு மாதம் அடைத்து விட்டார்கள். அவரும் நானும் மாறி மாறி சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போனோம்.

மூன்றாவது முறையாக மறியல் செய்தபோது என்னை கைது செய்து வேலூர் சிறையில் ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தனர். நான்காவது முறையாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் மறியல் செய்தபோது தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி என்னை கைது செய்து ஒன்றாம் நம்பர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்தார். சிறிது நேரத்தில் லட்சுமி பாய் அம்மாவையும் கைது செய்து கொண்டு வந்தனர்.

தீச்சட்டி கோவிந்தன் என் கதர் சேலையைச் சுட்டிக்காட்டி "யார் வாங்கிக் கொடுத்தது?" உன்னை யார் மறியல் செய்யச் சொன்னது " எனக் கேட்டார். "யாரும் சொல்லல்ல. வெள்ளைக்காரன் நம்ம நாட்டைவிட்டு வெளியேறவேண்டும். நமக்கு விடுதலை வேண்டும்" என்று சொன்னேன். தடியால் அடித்தார். இரவு 11 மணி வரை போலீஸ்காரர்கள் என்னை அடித்தனர்.

"உண்மையைச் சொல் உனக்கு சோறு போடுகிறோம்.." என்றனர். "உங்கள் சாப்பாடு வேண்டாம் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும்.." என்றேன். நீ கட்டியிருக்கிற சேலையைக் கொடு எனச் சொல்லி அடித்தனர். தடியால் என் காதில் அடித்தபோது காது மடல் கிழிந்து ரத்தம் வந்தது. அன்றிலிருந்து எனக்கு காது சரியாகக் கேட்காது..

ஒரு கட்டத்தில் என் சேலையை பிடித்து இழுத்தனர். நான் அதைத் தடுத்ததோடு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். பெல்ட்டாலும், லத்தியாலும் செருப்பாலும் அடித்தார்கள். நான் அடிதாங்காமல் விழுந்துவிட்டேன். நான் அணிந்திருந்த கதர் சேலையை அவிழ்த்துவிட்டு நீளம் குறைந்த சேலையைத் தந்தார்கள். அதனால் உடலை முழுமையாக மறைக்கமுடியாது.

அதை கட்டிக்கச் சொல்லி என்னையும் லட்சுமி பாயையும் ஒரு போலீஸ் லாரியின் ஏற்றினர். டிரைவர் உட்பட பதிமூன்று போலீஸ்காரர்கள் அதில் இருந்தனர். ஜெயிலில் அடைக்கப்போகிறோம் எனச் சொன்னார்கள். ஆனால் ஜெயிலுக்குப் போகாமல் பல சந்துகள், இருட்டான பகுதி வழியாக போலீஸ் லாரி சென்றது. துக்கம் தாங்காமல் லட்சுமிபாய் அம்மா அழுதார். எனக்கு பயமாக இருந்தது.லாரி போய் கொண்டே இருந்தது.

லாரியின் டிரைவர், போலீஸ்காரர் ஒருவரிடம் "எங்க நிறுத்துவது" என்று கேட்டார். அதற்கு அவர் பனிரெண்டு மைல் போகட்டும் என்றார். அப்போது இரவு ஒரு மணி இருக்கும். வயலும் காடும் போன்ற இடத்தில் லாரியை நிறுத்தி எங்களை இறங்கச் சொன்னார்கள். இறங்கினோம். அப்போது ஒரு போலீஸ்காரர் என்னிடம் "சுயராஜ்யம் வேண்டும் சுயராஜ்யம் வேண்டும் எனக் கேட்பீர்களே இந்த பாதை வழியாக போ.. சுயராஜ்யம் கிடைக்கும்" எனக் கிண்டலாகச் சொன்னார். அப்போது நான், "சுதந்திரத்துக்காக எந்தப் பாதையில் போகவேண்டும் என்று என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போங்கள். உங்கள் வேலை முடிந்தது.." என்றேன். அதற்கும் என்னை அடித்தார்கள். அங்கேயே எங்களை விட்டுவிட்டு லாரி திரும்பி விட்டது.

அரைகுறை ஆடையுடன் அந்த இடத்திலிருந்து தட்டுத்தடுமாறி நடந்துவர ஆரம்பித்தோம். ஒரே இருட்டாக இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லை. வீடுகளும் இல்லை. ஒரு மைல் தூரம் சென்றிருப்போம். அப்போது ஒரு பையனும் இரண்டு பெண்களும் எங்களை வழியில் பார்த்தனர். எங்கே போகிறீர்கள் எனக் கேட்டார்கள். சொன்னோம். எங்களை ஒரு குடிசைக்கு கூட்டிட்டு போனார்கள். எங்களை சாப்பிடச் சொன்னார்கள். படுக்கத் தலையணை கொடுத்தார்கள். ஒன்றும் வேண்டாம் எனக் கூறிவிட்டோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எங்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் நல்லவராக இருந்திருக்கிறார். அவர் எங்களை இறக்கிவிட்ட விஷயத்தை மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்கனித் தேவரிடம் போய் சொல்லியிருக்கிறார். அவர் கட்சிக்காரர்கள் சிலரிடம் இரவோடு இரவாக எங்களைத் தேடியிருக்கிறார்கள். கடைசியில் நாங்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து எங்களைக் கூட்டிச் சென்றார்கள்.

மதுரை கீழ்பாலத்தில் இறங்கி வைகை ஆற்றில் குளித்துவிட்டு புதிய சேலையைக் கட்டிக்கொண்டோம். அங்கிருந்து குதிரை வண்டியில் மதுரை புதுமண்டபத்திற்கு கூட்டிச் சென்றார்கள். அங்கு போட்டோகடை வைத்திருந்த ராமலிங்கம் என்பவர் எங்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். அவரும் சுதந்திரப்போராட்ட தியாகி. பிறகு நடந்தது குறித்து அவரும் மற்றவர்களும் விசாரித்தனர். போலீஸார் எங்களைத் துன்புறுத்தியதையும் வயல்காட்டிற்கு கொண்டு போய் விட்டதையும் சொன்னோம். அவர்களுக்கு அளவிடமுடியாத வருத்தம். "நீங்க அடிபட்டி, அவமானப்பட்டு, கஷ்டப்பட்டது பெரிய தியாகம்.." என்றார்கள். பிறகு எங்களுக்கு கதர் சேலை வாங்கித் தந்து வீட்டிற்கு குதிரை வண்டியில் அனுப்பி வைத்தார்கள்.

போலீசார் இப்படி என்னை அவமானப்படுத்திய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் அதிகரித்தது. மேடையில் காந்தி பாட்டு பாடுவேன். ஒரு முறை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காந்திஜி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தொண்டர்களை மேடைக்கு வருமாறு காந்திஜி சொன்னார். நான் மேடைக்குப் போய் காந்திஜி காலைத் தொட்டு கும்பிட்டேன். காந்திஜி பதறிப்போய் "என்னை ஏன் தொட்டுக் கும்பிடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்?" எனக் கேட்டார் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சொர்ணத்தம்மாள்..

வீரத்தியாகி சொர்ணத்தம்மாள்...மதுரைக்காரய்ங்க- 34- சஞ்சனா மீனாட்சி

 சொர்ணத்தம்மாளை அரைகுறை ஆடை உடுத்த வைத்த போலீஸ்துறை அதிகாரிகள் மீது காங்கிரசாருக்கு சொல்லமுடியாத கோபம் இருந்தது.  அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்தக் கொடுமையைச் செய்தவன் விஸ்வநாதன் நாயர் என்ற  ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் "கெட்டிக்காரர்".

மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது ஆசிட் வீசிவிட்டு "பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது ஆசிட் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே ஆசிட் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம் போன்ற வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜகோபால், ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்ட ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது

சுதந்திரவேள்வியில் அடிபட, ரத்தம் சிந்த, உயிர்விடக் கூட தயார். ஆனால் பெண்மைக்கு இழிவு ஏற்பட விட மாட்டோம் எனக் கூறி மதுரையின் அடையாளத்தை உறுதி செய்து தண்டனையை அனுபவித்தார்கள்.

"பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம். சுதந்திரம் கிடைத்தபோது "கஷ்டப்பட்டது வீண் போகவில்லை." என சந்தோஷப்பட்டேன். இதையெல்லாம் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக, சாதி மதம் பாராமல் இணைந்து இருந்து சுதந்திரத்தைக் காப்பாற்றவேண்டும். என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் ஒரு பேட்டியில் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்தக் கட்டுரை எழுதும் முன் மதுரையில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறித்து அறிந்த பலரிடம் சொர்ணத்தம்மாளின் வாரிசுகள் யாராவது இருக்கிறார்களா? அவர் வீடு எங்கிருக்கிறது என விசாரித்தோம். சொர்ணத்தம்மாள் இறந்து பல ஆண்டுகள் ஆனதை உறுதி செய்தார்கள். அதற்கு மேல் அவர்களாலும் தகவல் தர முடியவில்லை. நம் நாட்டின் துரதிர்ஷ்டங்களில் நாட்டுக்காக உழைத்தவர்களை மறத்தலும் ஒன்று.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com