ஹீரோ கோப்பை சாகசம்!

ஹீரோ கோப்பை சாகசம்!

விடை கொடு ரசிகனே- சச்சின் 8

ஹீரோ கோப்பையின் அரையிறுதிப் போட்டி. அன்று நவம்பர் 23, 1993. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம். 20 வயதே ஆன துணைக்கேப்டன் சச்சின் வீசிய இறுதி ஓவர் ஞாபகம் இருக்கிறதா?

அது கெப்ளர் வெஸ்ஸல்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி. ஹட்சன், ஆலன் டொனால்டு, பிரைய ன் மேக்மில்லன் ஃபேனி டிவில்லியர்ஸ் போன்றவர்களைக் கொண்ட அணி.

முதலில் பேட் செய்து இந்தியா எடுத்தது 195. அசாருதீன் 93 ரன் எடுத்திருந்தார்.பிரவீன் ஆம்ரே 48. தென்னாபிரிக்க அணியைப் பொருத்தவரை இந்த இலக்கை எளிதாக எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது அணியில் இருந்த கபில்தேவ், ஸ்ரீநாத், மனோஜ்பிரபாகர் போன்றவர்கள் கொஞ்சம் கட்டுக்குள் பந்துவீசியதால் தென்னாப்பிரிக்கா திணறியது. ஆனால் மேக்மில்லன் மிகமோசமான நிலையில் இருந்து தங்கள் அணியை மீட்டு இறுதிஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் ஐந்து ரன்கள் எடுக்கவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்தார். அவர் தங்கள் அணியின் விக்கெட்கீப்பர் டேவ் ரிச்சர்ட்சனுடன் சேர்ந்து 44 ரன்களை சேர்த்திருந்தார்.

எல்லாரும் சோர்ந்துபோய்விட்டார்கள். யாரைப் பந்துவீச வைப்பது?

அசாருதீன், கபில்தேவ், சச்சின் அஜய் ஜடேஜா ஆகியோர் கூடிப்பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகருக்கு 2 ஓவர், சலில் அங்கோலாவுக்கு 4 ஓவர், ஸ்ரீநாத்துக்கு 2 ஓவர் மிச்சம் இருக்கிறது.

சச்சின் நான் வீசுகிறேன் என்றார்.

அசாருதீன் இந்த சூதாட்டத்துக்குத் தயார் ஆனார்.

சச்சின் கையில் பந்து வந்து சேர்ந்தது.

பால் 1:  பந்தை மெக்மில்லன் தட்டிவிட்டு ஓடினார். ஆனால் டிவில்லியர்ஸ் எப்படியும் மேக்மில்லனையே மீண்டும் பந்தை எதிர்கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது ரன்னுக்கு ஓடி வர, மேக்மில்லன் அதை எதிர்பாராமல் நிற்க, சலீல் அங்கோலா சரியா பந்தை விக்கெட் கீப்பர் விஜய் யாதவுக்கு வீசினார். சரியான த்ரோ. ரன் அவுட்.

பால் 2: அடுத்து உள்ளே வந்தவர் ஆலன் டொனால்ட். இறுதி விக்கெட் ஜோடி. டொனால்டுக்கு வீசினார் சச்சின். பந்து மட்டையில் படவில்லை. ரன் இல்லை

பால் 3: தடுத்தாடினார் டொனால்டு. ரன் இல்லை.

பால்  4: இன்னும் மூன்று பந்துகள் ஐந்து ரன்கள் எடுக்கவேண்டும். ரசிகர்களின் இதயத்துடிப்புகள் எகிறுகின்றன. மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். சச்சின் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த பந்தை சற்று தள்ளி வீசுகிறார். அதை அம்பயர் பக்னர் ‘வைடு’ என்று அறிவிக்க மறுக்கிறார்.

பால்: 5  இப்போது இரண்டு பந்துகள் ஐந்து ரன்கள் தேவை. விஜய்யாதவைக் கூப்பிட்டு சச்சின் ஏதோ சொல்கிறார். எல்லோரும் இருக்கையின் நுனிக்கு வருகிறார்கள். இதைத் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கிறார் டொனால்டு.

பால் 6: நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி. அல்லது மூன்று ரன்கள் எடுத்து டை செய்தாலேகூட தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குப் போய்விடலாம். மேக்மில்லன் பந்தை எதிர்கொள்கிறார். அதற்குள் விக்கெட் கீப்பர் விஜய் யாதவை நன்றாகப் பின்னால் போய் உள்வட்டத்திற்கு அருகே நிறுத்துகிறார் சச்சின். பேட்டில் உள்பக்கமாகப் பட்டு பந்து உருண்டால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு வசதியாக.

கடைசிப்பந்து. மேக்மில்லன் அடிக்கிறார்.  பந்து சரியாகப் படவில்லை. உருண்டு விஜய்யாதவிடம் போக, ஒரு ரன்தான் எடுக்க முடிகிறது. அவ்வளவுதான். மைதானமே கொந்தளிக்கிறது. இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அந்த ஆட்டத்தை வென்றுவிடுகிறது. கிட்டத்தட்ட தோல்வியின் நிலையிலிருந்து வெல்வதால் உணர்ச்சிமயமான நிலையில் அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது.

சின்னவயசில் வேகப்பந்து வீச்சாளன் ஆகவேண்டும் என்று சச்சினுக்கு ஆசை. எம்.ஆர் எப் பேஸ் பவுண்டேஷனில் டென்னிஸ் லில்லி அவரை எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் பேட்டிங்கில் பெரிய புலியாக ஆனாலும் அவ்வப்போது ஸ்பின்னும் மிதவேகப் பந்துமாகக் கலந்துகட்டி சச்சின் பந்துவீசிக்கொண்டுதான் இருந்தார். அந்த மேட்ச்சில் சச்சின் பெற்றுக்கொடுத்த வெற்றி அதுவரை ஒரு விளையாட்டுப் பையனாக அறியப்பட்ட அவருக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தது. அன்று கமெண்டரி பாக்ஸில் இருந்த கவாஸ்கர் சச்சினை மிகுந்த மகிழ்ச்சியோடு வானளாவப் புகழ்ந்தார்.

சச்சின் அந்த கோப்பையின் போது ஆறாவது பேட்ஸ்மேனாகத் தான் களமிறங்கிகொண்டிருந்தார். மனோஜ்பிரபாகர், அஜய்ஜடேஜா இருவரும் ஓபனிங் இறங்குவார்கள். இந்த ஹீரோ கோப்பை பலவிதங்களில் இந்திய கிரிக்கெட் உலகம் பெரும் பாய்ச்சலுக்குத் தயாராகி அதே சமயம் தடுமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்தது. உலகமயமாக்கலுக்காக இந்தியா அப்போது கதவுகளைத் திறந்திருந்தது. தனியார் கேபிள் டிவி வருகையால் தூர்தர்ஷனின் இரும்புப்பிடி தளர ஆரம்பித்திருந்தது. அசாருதீனின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில் மெல்ல உருவானார் சச்சின் என்ற நாயகன். மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஜிம்பாப்வே, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் கலந்துகொண்ட இந்த கோப்பையை இந்தியா வெல்லும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு ஆரம்ப கட்ட ஆட்டங்களில் தடுமாற்றம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி வெற்றியை அடுத்து இறுதி ஆட்டத்தில் பலம்வாய்ந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்த்து ஆடி வென்றது இந்தியா.

இந்த கோப்பையை அடுத்து நியூசிலாந்து பயணம். அங்கே தான் சச்சின் தொடக்க ஆட்டக்காரராக உருவெடுக்கிறார். அதிலிருந்து ஆரம்பமாகிறது சச்சினின் உலகமயமாதல் மற்றும் கடவுள்மயமாதல்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com