அவரை விட்டுவிடுங்கள்!

அவரை விட்டுவிடுங்கள்!

வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசினாவுக்கு ஒரு கோரிக்கை வைத்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்கள் நாற்பது பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர். ஹிலாரி கிளிண்டன், அல்கோர், இன்போசிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்கள் அதில் அடக்கம். விளம்பரம் சொல்வது இதுதான்: வங்கதேச பிரபலமும் நோபல்பரிசு பெற்றவருமான கிராமீன் வங்கி நிறுவனர் முகமது யூனிஸை தொல்லை செய்யவேண்டாம் என்று ஷேக் ஹசீனாவைக் கோருகிறது இந்த விளம்பரம். முகமது யூனிசுக்கும் ஷேக் ஹசீனாவுக்கும் சில அரசியல் காரணங்களால் பிடிக்காமல் போய்விட, யூனுசின் நிறுவனங்கள் மீது வழக்குகள் போட்டு அலைக்கழிக்கிறார் பிரதமர்! வாஷிங்டன் போஸ்ட் விளம்பரத்துக்கு செவிசாய்ப்பாரா ஹசீனா?

மரணத்துக்குக் காரணம்!

இசை மேதை பீத்தோவன் 56வயதிலேயே மரணம் அடைந்தவர். அவரது மரணத்துக்குக் காரணமாக காரீயம் அவர் உடலில் அதிகம் கலந்து இருந்தது சொல்லப்பட்டது. அவர் 1827-இல் மரணம் அடைந்தார். தற்போது அவரது தலைமுடிகள் சிலவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவரது மரபணுவில் இருந்த கோளாறுகளே அவருக்கு ஏற்பட்ட செவிட்டுத் தன்மை, வயிற்றுக் கோளாறுகளுக்குக் காரணம் என்று கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக மரபியல் ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு பீத்தோவனுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள் பற்றிய பல கருதுகோள்களுக்கு விளக்கமளிப்பதாக அமைந்துள்ளது!

சும்மா இருக்க ஒன்றரை கோடி!

பேஸ்புக் தளத்தை நடத்திவரும் மெடா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பலரின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளது. ‘ எந்த வேலையும் செய்யாமலேயே ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றேன்‘ என்று அவர் சொல்லியுள்ளார். மெடாவுக்கு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அவர் பணியாற்றியபோது ஆறு மாத காலத்துக்கு யாரையும் வேலைக்கு எடுக்கப்போவதில்லை என்ற நிலையில் சும்மா பயிற்சிகள், ஆபீஸ் மீட்டிங்குகள் ஆகியவற்றில் மட்டுமே கலந்துகொண்டு வந்துள்ளார். மெடா நிறுவனம் கடந்த சில காலமாக ஆயிரக்கணக்கில் ஆட்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இதில் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கும் பிரிவினர் வேலை இல்லாமல் சும்மாதானே இருப்பார்கள்? ஆனால் சும்மா இருப்பதுக்கு ஒன்றரை கோடி என்பது ஓஓஒவர்ர்ர்...

 அவரா இவரு?

கராத்தே கிட் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்த வில்ஸ்மித்தின் மகன் ஜேட் ஸ்மித் ஞாபகம் இருக்கிறதா? இப்போது 24 வயது இளைஞர்! வில்ஸ்மித் துடன் மேலும் சில படங்கள் நடித்த ஜேட், ஓய்வு நேரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் சுற்றிவருகிறார். நல்லதுதான் அப்பாவைப் போல் காமெடி நடிகர்களை நேரலை நிகழ்ச்சிகளில் அறையாமல் இருக்கும்வரை நல்லதுதான்.

ஏன் இழக்கவேண்டும்?

அமெரிக்காவில் உள்ள விமானசேவை நிறுவனமான யுனைட்டட் ஏர்லைன்ஸில் விமானப் பணியாளராகப் பணியாற்றியவர் கேலி ஸ்காட். மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த இவர் அந்த விமான சேவை நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி பிரபலமானவர். பன்மைத்துவத்தை வலியுறுத்தும் விளம்பரம் ஒன்றில் தோன்றி கவனம் ஈர்த்தவர். 25 வயதான இவர் சமீபத்தில் தன் இல்லத்தில் இறந்து கிடந்தார். மரணத்துக்கு முன்பாக, சமூக வலைதளங்களில்,‘ என்னால் வாழ முடிய-வில்லை. அனைவரையும் நேசிக்-கிறேன். யாரையும் குற்றம் சாட்ட-வில்லை... மறு உலகில் உங்களை சந்திக்கிறேன்‘ என்கிற ரீதியில் உணர்வு-பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழ்க்கை இனிது; மன அழுத்தங்கள் இருப்பின் மனநல உதவியைப் பெறுங்கள்!

ஏப்ரல்-2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com