எஞ்சாய் எஞ்சாமி!

எஞ்சாய் எஞ்சாமி!
Published on

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய சுதந்திர (சுயாதீன) இசைக் கலைஞர்களை வளர்த்தெடுக்கும் விதத்தில் மாஜ்ஜா என்னும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வைத்தார். அதன் முதல் பாடலாக வெளியாகி இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடல் தற்போது வரை இரண்டு கோடிக் கும் மேற்பட்ட பார்வைகள் கடந்து உள்ளது. இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத் துள்ளார், தீ, அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.

பாடலில் மூதாதையர்களைக் கொண்டாடுவது என்ற உலகளாவிய கருப்பொருள் இருந்து வருகிறது. ஆனால் இங்கே இந்தப் பூவுலகை, நகரங்களைக் கட்டமைத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த முன்னோர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்த முன்வருவதில்லை. அப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலி பாடலாகவும் இந்தப் பாடலை கருத வேண்டிய தேவையுள்ளது.

பாடலில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட அம்பாரி, மும்மாரி, களை வெட்டி, மீன்கொத்தி, அல்லி மல்லி கொடி அங்கதம் போன்ற வார்த்தைகள் பொதுவாகத் தமிழ் பாடல்களில் காண்பது ரொம்பவும் புதுமையாகவும், மலரும் நினைவுகளை மீட்டெடுப்பதாகவும் இருந்தது.

‘நல்லபடி வாழ சொல்லி இந்த மண்ணைக் கொடுத்தானே பூர்வக்குடிகம்மாங்கரை காணியெல்லாம் பாடி திரிஞ்சானே பூர்வக்குடி நாயி நரி பூனைக்கும் தான் இந்த ஏரி குளம் கூடச் சொந்தமடி‘ என்ற வரிகளில் நம் முன்னோர்கள் வாழ கொடுத்த இந்த நிலத்தை நாம் எப்படி என்று வைத்திருக்கிறோம் என்று சற்றுயோசித்துப் பார்க்க வேண்டும் ஏனெனில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிளாஸ்டிக்கும் நச்சு குப்பைகளுமே நிரம்பி வழிந்து உள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியலில் உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை மிக முக்கியமான அதே சமயத்தில் புரிந்துக்கொள்ளச் சற்று சிரமமான கருத்தாகும், ஆனால் இந்தப் பாடலில் ஒரே வரியில் நாய்க்கும் பூனைக்கும் இந்த இடம் சொந்தமடி என்று மிகச் சிறப்பாய் மற்ற உயிரினங்களின் தேவையையும் சொல்லிவிட்டனர்.

ராப் பாடகர் அறிவு அவர்களின் பாட்டி வல்லியம்மா கூலி தொழிலாளியாக இலங்கை தேயிலை தோட்டத்திற்குச் சென்று திரும்பி வரும்போது எவ்வாறான சூழலை அவர் சந்திக்கிறார் என்பது இந்தப்பாடலின் சாரமாகும்.

எதிர்காலத்தில் இதே போல நாமும் ஏதோ ஒரு தொழிலுக்காகவோ அல்லது வேலைக்காகவோ ஏதோ ஒரு தேசத்திற்குச் சென்று பின் நமது தேசத் திற்கு வரும்பொழுது எவ்வாறான சுற்றுச்சூழலை நம் பேரக்குழந்தைகள் அல்லது மகன்கள் பெற்றிருப்பார்கள் என்பது குறித்த ஓர் எதிர்காலச் சிந்தனை கொண்ட பாடலாகவே இந்தப் பாடலை கருதவேண்டும். இன்னும் ஐம்பது, நூறு வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட சூழலியல் நம் நாட்டில் நிலவும் என்பது அச்சம் தருகிறது!

சூழலை காப்போம்.. வாங்கோ வாங்கோ ஒண்ணாகி..

                                             - ஜீ.கே.தினேஷ்

தலைவி!

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே அமளி துமளியாகிக் கொண்டிருக்கிறது சமூக வலைத்தளம். கங்கனா ரனாவத் அச்சு அசல் ஜெயலலிதா போன்றே நடித்திருப்பதாக ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, அவரோ இயக்குநர் விஜய்யை போல் தன்னை கண்ணியமாக நடத்திய இயக்குநர் யாருமில்லை என்று பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார். பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தைப் பற்றி அடிக்கடி கங்கனா விமர்சித்து வருவதால் பாலிவுட் பிரபலங்கள் யாரும் தலைவி ட்ரெய்லர் பற்றி மூச்சு விடவில்லை. ஆனால் சிலர் சொல்கிறார்கள் எம்ஜிஆராக நடித்திருக்கும் அரவிந்த சாமியைப் பார்க்க பல்ராம் நாயுடு மாதிரி இருக்கிறதே என்று. படம் வரட்டும்யா.. அதுக்குள்ள ஏழரையை இழுக்காதீங்க!

இன்னும் என்ன செய்யணும்?

இந்திய கிரிக்கெட் வாரியத்தை பார்த்து அத்தனை ரசிகர்களும் இன்றைக்கு கேட்கும் ஒரே கேள்வி சூர்ய குமார் யாதவை ஏன் ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பதுதான். முதல் தர கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்த சூர்ய குமாருக்கு 30 வயதில்தான்  இந்திய அணியில் டி20 இல் ஆட வாய்ப்பு கிடைத்தது. சந்தித்த முதல் பந்தையே ஃபைன் லெக்கில் சிக்ஸ். என்ன அடிய்யா என்று ரசிகர்கள் சிலிர்த்தார்கள். ஒற்றைக்காலில் நின்று அவர் அடித்த அந்த அடியானது, முப்பது ஆண்டுகளாக பசியுடன் காத்திருந்த ஒரு வெறிபிடித்த கிரிக்கெட் வீரனின் அடி, இந்த ஷாட் மட்டுமே இன்றைய தேதிக்கு இந்திய கிரிக்கெட்டின் திறமையாளர்கள் கொட்டிக்கிடப்பதைக் காண்பிக்கிறது!

அந்த போட்டியில் 57 ரன்கள் எடுத்து அன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.  அடுத்த நாளே இந்திய ஒரு நாள் அணியில் அவர் பெயர் சேர்க்கப்பட்டது.  கனவுகள் நிறைவேறட்டும்!

பூஜா வா... பூஜா வா...

சன் பிக்சர்ஸ தயாரிக்கும் விஜய்யின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ராஷ்மிகா, தமன்னா என்று பல பெயர்கள் அடிப்பட்ட நிலையில் பூஜாவுக்கு அடித்திருக்கிறது லக்கி பிரைஸ்.‘

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜாவுக்கு சரியான வரவேற்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சாய அங்கே ஏக வரவேற்பு.  இரண்டாவது சுற்றில் தமிழ் ரசிகர்களை ஒரு கை பார்ப்பார்.

படிங்க பாஸ்!

சுடோகு என்ற சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜப்பானிய எண் விளையாட்டு. சுண்டோகு (tsundoku)என்றால் என்ன தெரியுமா?  ஏராளமான புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிவிட்டு படிக்காமல் குவித்து வைத்திருப்பதற்குப் பெயராம் அது! எத்தனை பேருக்கு சுண்டோகு பழக்கம் உள்ளது? நிறைய கைகள் உயரும் போலிருக்கிறதே..

ரகிட...ரகிட...

அவைலபிள் என்றுதான் சுயகுறிப்பு வைத்திருக்கிறான் கிடைப்பதே இல்லை!

ரெண்டு வரியில் கவிதை எழுதியிருக்கேன் நல்லா இருக்கா? என்று நக்கலாக கேட்டார் நண்பர். என்ன ஆச்சு என்றேன். எப்ப போன் பண்ணினாலும் எடுக்காத நண்பனின் வாட்ஸப் சுயகுறிப்பால் வந்த வரிகள் இவை என்றார். என்னங்கடா வாட்சப்பில் வரும் கவிதைகளையே தாங்க முடியல... வாட்சப்பையே கவிதை ஆக்கிட்டீங்களே என்றவாறு என் வாட்ஸப் கான்டாக்ட் லிஸ்ட்டில் கண்களை ஓட்டினேன்.

ஏகப்பட்ட பேர் மணிமணியாக சுயகுறிப்பு வைத்துள் ளனர். அவைலபிள் என வாட்ஸப்பே தரும் சுயகுறிப்பை மாற்றாமல் வைத்திருக்கும் நட்புக்குரிய சோம்பேறிகளை விட்டுவிட்டு பிறவற்றை மட்டும் இங்கே சொல்லலாம். பேச முடியாது. வாட்ஸப் மட்டும் பண்ணவும் என்கிற ஊமைகளையும் விட்டுவிடலாம்.

பாசமான அப்பாக்கள் சிலரின் சுயகுறிப்புகள் இவ்வாறு இருக்கின்றன: 

என் மகளையும் மகனையும் ரொம்ப நேசிக்கிறேன்!

மகள்களை பெற்றுப்பார் மகோன்னத அன்பை அனுபவிப்பாய்!

தேவதைகளின் தந்தை!

சில கோபக்காரர்கள், மிக பாதிப்படைந்தவர்களும் இருப்பதை உணர முடிந்தது.

குப்பையை அனுப்பாதீர்கள்! வீடியோ அனுப்பாதீர்கள், குரூப்பில் சேர்க்காதீர்கள்! போன் பண்ணாமல் செய்தி மட்டும் போடுங்கள் உள்ளிட்ட சில குறிப்புகள் இவர்களுடையது.

எலும்பு மருத்துவர்: நான் ஒட்டவைப்பேன். கடவுள் இணைப்பார்!

ரொம்ப நல்லவர்: ஜிம்மில்  உள்ளேன். மற்றவர்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு!

என் அன்பைப் பெறுவது எளிதானது என்று எழுதி இருந்தார் ஓர் இயக்குநர். அப்படியா என்று மேலும்படித்தபோது அதற்கு அவர் குறித்திருந்த வழி ரொம்ப கஷ்டம்: அதற்கு தர்மத்தின் பாதையில் துணிவுடன் வரவேண்டும் . அவ்வளவுதான்!  ஹிஹி நடக்கிற விஷயமா இது? எல்லாம் இறைவன் செயல், துணிவுடன் இரு, திருக்குறள் வரிகள் இவற்றையெல்லாம் கடந்துபோனால் கவிஞர்கள் சிலரின் சுயகுறிப்புகள்  கவனிக்க வைத்தன.

எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு சிங்கம் உள்ளது. நான் வெல்வேன் அல்லது கற்றுக்கொள்வேன். தோற்கவே மாட்டேன் என்று ஒரு பெண்ணின் குறிப்பு சொன்னபோது கைகள் சற்று ஆடின.

கடவுள் இருக்காண்டா குமாரு.. என்னடா பொல்லாத வாழ்க்கை, மனதைப் போல் உடனிருந்து கொல்லும் கொலைக்கருவியை நம்மால் உருவாக்கவே முடியாது. என்னவும் செய்; செய்வதில்  நீ இரு. அறிவுரைகள் ஏற்கப்படுவதில்லை என பல வேறுபட்ட சுயகுறிப்புகளைப் பார்த்து கண்கள் வியர்த்தன.

சரி.. நம் அரசியல் தலைவர்களுக்கு கற்பனையாக சில வாட்ஸப் சுயகுறிப்புகளை எழுதிப்பார்ப்போம் என முயற்சி செய்ததில்:

மு.க.ஸ்டாலின்:

சூதானமா இருந்துக்கோணும்!

எடப்பாடி: என்ன.. லேசா தொண்டையக் கவ்வுதே..

எல். முருகன்: நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்..

 சீமான்: வாய்ப்பில்ல ராஜா!

கமல்: புரிஞ்சவன் பிஸ்தா!

டிடிவி:கூட்டிக்கழிச்சு பாரு,

கணக்கு சரியா வரும்!

விஜயகாந்த் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!

ஓபிஎஸ்: அம்மா என்றழைக்காத நாளில்லையே

ரஜினி: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்... ரகிட ரகிட..

                             - மிலிந்த்

ஏப்ரல், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com