சரக்கு சாப்பிட்டால் மூளை பாதிப்பு!

சரக்கு சாப்பிட்டால் மூளை பாதிப்பு!

டெய்லி ஒரு பெக் போட்டால் இதயத்துக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஓர் ஆபத்தான செய்தி. தினமும் ஒரு கிளாஸ் அல்லது ரெண்டு கிளாஸ் என்று குடித்துக்கொண்டிருப்பவர்களின் மூளைகளை ஆராய்ந்தபோது, அவை மிகவேகமாக முதுமை எய்திக்கொண்டிருக்கின்றன என புதிய ஆய்வு கூறுகிறது. சுமார் 36000 நடுத்தர வயது மனிதர்களிடம் ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. தினமும் நான்கு பெக் எனப் போடுகிறவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் மூளையானது பத்து ஆண்டுகள் முதுமை அடைந்தால் எந்த அளவுக்கு சுருங்குமோ அந்த அளவுக்கு சுருங்கிவிடுமாம். தினமும் ஒரு பெக் சாப்பிடும் பார்ட்டிகளுக்கு அது அரையாண்டு முதுமை எய்துவதற்குச் சமமாம்!

முதுமை அடைந்தால் முதலில் வருவது மறதி. சரக்குக்குப் பதிலாக சானிடைஸரை தண்ணீரில் கலந்து குடிக்கும் அளவுக்கு மறதி வந்துவிட்டால் என்ன செய்வது?

பணக்காரர்களின் நன்கொடை!

தமது சொத்தில் நற்காரியங்களுக்காக கொடையளிக்கும் பணக்காரர்களைப் பற்றிய இந்தியக் கொடையாளர்கள் அறிக்கை (2022) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த கொடையாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். 7 கோடியில் இருந்து 1000 கோடி வரை சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் உயர் சொத்துப் பணக்காரர்கள். ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் அதி உயர் சொத்து பணக்காரர்கள். இதில் முதல் பிரிவில் வருகிறவர்கள் சமூக நலனுக்காக அளிக்கும் கொடை கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் அதி உயர் பணக்காரர்கள் எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் அளிக்கும் கொடையின் சதவீதம் குறைவாகவே உள்ளது. இத்தனைக்கும் இவர்கள் சொத்துமதிப்பு சராசரியாக கடந்த ஆண்டில் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது! தொழில்நுட்பதுறையைச் சார்ந்த தொழிலதிபர்கள் கூடுதலாக நன்கொடை வழங்குகிறார்கள். புதிய தலைமுறையைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஜெரோதா நிறுவனத்தின் காமத் சகோதர்கள், பிளிப்கார்ட் நிறுவனர் பன்சல் போன்றோர் இதற்கு உதாரணம்!

இருப்பினும் கணக்குப் போட்டுப்பார்த்தால் இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் கொடையாக வழங்குவது அவர்களின் சொத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவே. 2021இல் வெளியான இந்திய கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் விப்ரோவின் அஸீம்ப்ரேம்ஜி!

40 பைசா கொள்ளை!

பெங்களூரில் ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கினார் அந்த மனிதர். மொத்த தொகை 264.60 ரூபாய் வந்தது. ஆனால் பில் தொகை 265 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 40 பைசா கொள்ளையடிக்கிறாயா என நுகர்வோர் கோர்ட்டுக்குப் போனார் அவர். அங்கே எட்டு மாதம் வழக்கு நடந்தது. இவரே வாதாடினார். தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதற்காக 1 ரூபாய் வழங்கவேண்டும் என்றும் கேட்டார். கடைசியில் சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அரசு விதிகள் படி ஐம்பது பைசாவைத் தாண்டிப் போனால் ஒரு ரூபாயாகக் கருதி பில்லில் கூட்டிக்கொள்ளலாம் என்பதைச் சுட்டிக்காட்டி, 40 பைசா கொள்ளை என்று சொல்லி கோர்ட்டுக்கு வந்து எங்கள் நேரத்தை வீணடிக்கலாமா என்று கண்டித்தது. அத்தோடு விடவில்லை. கட்டு 4000 ரூபாய் என அபராதமும் போட்டுவிட்டது!

நாற்பது பைசாவுக்கெல்லாம் கோர்ட்டுக்குச் சென்ற இவர், பிரியாணியில் முட்டை இல்லாமல் வெறும் சோற்றைக் கொடுத்து முழு கட்டணமும் வசூலிக்கும் ஓட்டல்களை என்ன செய்வாரோ?

பிராண்டின் கதை

கோகோ கோலாவால் 1993-இல் வாங்கப்பட்ட இந்திய குளிர்பான பிராண்ட் தம்ஸ் அப், நூறு கோடி டாலர் பிராண்டாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வளர்ந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த குளிர்பானத்தின் அட்டகாசமான விளம்பர உத்திதான்.

பெப்சி நிறுவனத்தின் போட்டியைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் இது தடுமாறிய காலகட்டத்தில் இதற்கு சரியான விளம்பர வாக்கியம் வேண்டுமே என யோசித்தார் இதன் விளம்பர ஏஜென்சிக் காரரன அசோக் குரியன். இவர் பெங்களூரில் இருந்த தன் நண்பரான பக்ஸ் என்பவரை நாடினார். அவர் மும்பை வந்து ஆலோசனை நடத்திவிட்டு பெங்களூரு விமானத்தில்

சென்று இறங்கினார். வழியெல்லாம் தம்ஸ் அப் குடித்திருந்தார். எனவே நல்ல ஏப்பம்! அப்போது பெங்களூரில் இடியுடன் கூடிய மழை. இதையும் இடி மழை புயலுடன் ஒப்பிட்டு, Taste the thunder எனத் தோன்றியது. அதை ஒரு நாப்கினில் எழுதி வைத்தார். மறுநாள் அசோக் குரியனைச் சந்தித்தார்.. என்ன வாக்கியம் போடலாம்னா.. என்று சுற்றி வளைத்து ஆரம்பித்தார்.. ‘நிறுத்துய்யா.. சுத்தி வளைக்காம சொல்லு,‘அவசரப்பட்டார் அசோக்.

அவரிடம் பையில் இருந்து  நாப்கினை எடுத்து

நீட்டினார் பக்ஸ். அதில் டேஸ்ட் தி தண்டர் என எழுதி இருந்ததைப் பார்த்ததும்..

அசோக்.. ‘இதுதான்யா..' என துள்ளிக் குதித்தார்! இதை வைத்து செய்யப்பட்ட விளம்பரங்கள் பெப்சியின் சவாலை தாக்குப் பிடிக்க தம்ஸ் அப் பிராண்டுக்கு உதவி செய்தன.

பல ஆண்டுகள் கழித்து பக்ஸ் லண்டனுக்குப் போனார். அங்கே கோக் நிறுவனத்தின் விளம்பர ஏஜென்சியின் மூத்த அதிகாரி ஒருவரை பப் ஒன்றில் சந்தித்தார். சாதாரண அறிமுகத்துக்குப் பின் இந்தியா பற்றி பேச்சு திரும்பியது. ‘அங்கே கோக் கம்பெனியின் லோக்கல் பிராண்ட் ஒண்ணு இருக்கு. டேஸ்ட் த தண்டர் னு அதற்கு விளம்பர வாக்கியம். அதை கோக்கோ கோலாவாலேயே முந்திட முடியல.. என்ன ஒரு வாக்கியம்யா..' என்று வியந்துள்ளார் அந்த மூத்த அதிகாரி.

‘‘அய்யா. அதை எழுதினதே நான் தான்!'' என்றிருக்கிறார் பக்ஸ்.

‘‘வாவ்..'' அந்த ஆள் எழுந்து பப் முழுக்க கேட்குமாறு கத்தினார். ‘ இந்தியாவில் நமக்கு இருக்கும் எல்லா தொல்லையும் இந்த ஆளால்தான். இன்னிக்கு நம்ம மதுபான பில் பூராவும் இவர்தான் கொடுக்கணும்!'

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com