ராக்ஸ்டார் ஜடேஜா

Published on

இந்த ஆண்டு ஐபிஎல்லில் சென்னை பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார், ரவீந்திர ஜடேஜா. அதுவும் ஊதா தொப்பி எனப்படும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஓவரில். இதற்கு முன்பாக கிறிஸ் கெய்ல் 2011இல் கொச்சின் அணிக்கு எதிராக அடித்த 36 ரன்களை சமன் செய்துள்ளார் ஜட்டு. போட்டி முடிவில் பெங்களூரு கேப்டன் கோலி, தனி ஒருவரிடம் இந்த போட்டியை நாங்கள் இழந்துவிட்டோம் என்று புலம்பியதற்கு 36 ரன்கள் மட்டும் காரணமல்ல, மூன்று விக்கெட், ஒரு ரன் அவுட் என்று அந்த மேட்சில் ஜடேஜா செய்த தரமான சம்பவம் தான் காரணம்.

இந்த ஐபிஎல்லில் இன்னொரு சுவாரசியமான சம்பவத்தை நடத்தியவர் டெல்லி ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா. ஏற்கெனவே திக்குத்தெரியாத காட்டில் கண்ணை கட்டிவிட்டது போல பரிதாபமாக விளையாடி வருகிறது ஷாருக்கானின்

கொல்கத்தா அணி. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இந்த அணியின் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி என்பவர் வீசிய முதல் ஓவரில்  ப்ரித்வி ஷா ஆறு பந்துகளிலும் ஆறு பவுண்டரிகள் விளாசிவிட்டார்.!

 அட்றா..அட்றா!

உன்னைப் போல் ஒருவன்!

 சார்லி அண்ட் சாக்லேட் பேக்டரி என்றொரு படத்தை ஓடிடி தளமொன்றின் உதவியுடன் பார்க்க முடிந்தது. 2005&இல் வெளியான இப்படம் குழந்தைகளுக்கான பேண்டஸி படம். நாயகனான வோன்கா என்ற பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜானி டெப்.  இசையும் விஷுவல் எஃபெக்ட்களுமாக பிரமாதப் படுத்தும் படம். இப்படத்தின் மூலக்கதை பிரிட்டன் எழுத்தாளர் ரோல்ட் டால் 1964இல் எழுதிய இதே பெயர் கொண்ட நாவல். சார்லி என்ற சிறுவன்  வோன்காவின் சாக்லேட் பேக்டரிக்கு சென்று தன் தாத்தாவுடன்  சுற்றிப்பார்ப்பதும் அப்போது நடக்கும் நிகழ்ச்சிகளும்தான் படம். வறுமையான நிலையிலும் தன்னிலை இழக்காத அந்த சிறுவன் பாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நமக்குப் பிடித்தது அந்த சிறுவனின் தாத்தாதான். படத்தில் அவர் பெயர் ஜோ. இந்த பாத்திரத்தில் நடித்திருப்பவர் டேவிட் கெல்லி என்ற பிரிட்டிஷ் நடிகர். ஏன்யா இவரைப் பற்றி இப்ப சொல்கிறாய் என்பவர்களுக்கு படத்தில் அவர் அச்சு அசலாக நம் எழுத்தாளர் அசோகமித்ரன் மாதிரியே இருக்கிறார். அ.மியை விட சற்று  தலையில் முடி கம்மி. மற்றபடிக்கு அவர் போலவே தோன்றுவது பெரும் ஆச்சரியம். உலகில் ஒருவரைப் போலவே ஏழுபேர் இருப்பார்கள் என்பார்களே.. இதோ இரண்டுபேரைப் பிடித்தாகிவிட்டது!

இதே போல் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரைப் பார்க்கும்போதெல்லாம் இவரும் நம் எழுத்தாளர் ஒருவரை ஞாபகப்படுத்துகிறாரே என யோசித்ததில் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது ஆய்வாளர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி. புவனேஷ்வருக்கு சற்று வயதாகி கண்ணாடி போட்டால் வெங்கடாசலபதி ஆகிவிடக்கூடும். ஆனால் இவர் அவரைபோல் பந்துவீசவோ, அவர் இவரைப் போல் ஆய்வு செய்யவோ மாட்டார்கள் என்பதால் ஒன்றும் பாதகம் இல்லை! இந்த வரிசையில் இன்னும் இரண்டு பேரைச் சேர்க்கலாம். ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இன்னொருவர்  இயக்குநர் சந்தானபாரதி. அமித் ஷா போல தான் இருப்பது சந்தானபாரதிக்கு பல விதங்களில் உதவியும் இருக்கலாம்! உபத்திரமாகவும் இருக்கலாம்! அவரைத் தான் கேட்கவேண்டும்! இந்த வரிசையில் அம்மன் பட வில்லன் நடிகர் மறைந்த ராமி ரெட்டியை சேர்க்கலாமே என்று உங்களில் சிலருக்கு நினைப்பு வந்தால் நீங்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டாக வேண்டிய வயசை எட்டியவர் என்று அர்த்தம்!

கண்ணை நம்பாதே!

ராட்சச நடிப்பு!

கொரோனா காலத்தில் ஓடிடியா திரையரங்கா என்று குழப்பத்தில் கதா நாயகர்கள் தவித்துக் கொண்டிருக்க அதிரடியாக மூன்று படங்களை கடந்த ஆறு மாதத்துக்குள் ஓடிடியில் வெளியிட வைத்து அசத்தி உள்ளார் மலையாள நடிகர் பகத் பாசில். சி யூ சூன், இருள், ஜோஜி என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஷேக்ஸ்பியரின் மெக்பத் பாதிப்பில் வெளியான ஜோஜி யில் பகத்தின் நடிப்பை இணைய உலகமே சிலாகித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் திலீஷ் போத்தன் பகத் கூட்டணி, தமிழில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி போல. திலீஷ் இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டி முதலும் திருக்‌ஷாசியும், ஜோஜி என்று  மூன்றுமே பகத் பாசிலுடன் சிறப்பான திரைப்படங்கள்.

சேட்டன்ஸ் ஆட்டம்!

பறந்தாச்சு!

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த செய்தி. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வேற்றுகிரகத்தில் விமானம் பறக்க விட்ட சாதனையை மானுடம் படைத்துள்ளது. அங்கு அனுப்பப்பட்டிருக்கும் கார் அளவிலான ரோவர் தன்னிடமிருந்து சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிட்டு படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.  செவ்வாய் கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டர் நான் தான் என்ற பெருமையுடன் டிணஞ்ஞுணதடிtதூ என்ற அக்கருவி உலா வந்துவிட்டதில் நாசா விஞ்ஞானிகள் பெருமை அடைந்துள்ளனர். பத்து அடி உயரம் எழுந்து 39 நொடிகள் பறந்து தன் முதல் பறக்கும் முயற்சியை நிறைவு செய்துள்ளது அந்த ஹெலிகாப்டர். அடுத்ததாக 2000 அடி வரை பறக்க வைக்கப் போகிறார்களாம்!

வானிலே தேனிலா!

கொரோனா பெருந்தொற்று பலருக்கு துயரங்களை அள்ளித்தந்துகொண்டிருக்கிறது. தற்சமயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது மாணவர்களே. அதுவும் இணையத் தொடர்பு இல்லாத  கிராமப் புற மாணவர்கள் நிலைமை மிக மோசம். மராட்டிய மாநிலத்தில் புனே அருகே உள்ள கிராமப் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் 150 மாணவர்களுக்கு கல்வியைத் தொடர உதவி இருக்கிறது திங்க் ஷார்ப் அறக்கட்டளை என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம்.  ட்ரைப்ஸ்பார்குட் என்ற அமைப்புடன் இணைந்து ஆறு லட்ச ரூபாய் திரட்டி 40 ஸ்மார்ட்போன்கள்,  டேப்லட் களை வாங்கி இந்த மாணவர்களுக்கு வழங்கி உள்ளது. ஒரே குடும்பம், அல்லது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 2&3 மாணவர்களுக்கு ஒரு டேப்லட் வீதம் வழங்கி அனைவரையும் கற்க ஊக்குவித்துள்ளனர்.

அத்துடன் ப்ரதம் என்கிற பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்து ஏராளமான நூல்களின் மின்னூல்களையும் ஒரு இலவச மின்னணு நூலக செயலி மூலம் வாசிப்புக்கு வழங்கி உள்ளனர். இந்தி, ஆங்கிலம், மராட்டி ஆகிய மொழிகளில் உள்ள நூல்கள். மாதந்தோறும் அதிகம் நூல்கள் வாசித்த மாணவர்களுக்கு பரிசுகளும் அளித்துள் ளனர். இதைத் தொடர்ந்து இணையத் தொடர்பு இல்லாத கிராமங்களுக்கும் பாடங்கள் தரவிறக்கப்பட்ட டேப்லட்களை அளிப்பதன் மூலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளது திங்க் ஷார்ப் அறக்கட்டளை!

இதுவரை 50 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9000 மாணவர்களுக்கு உதவி உள்ளதாக கூறுகிறார் இந்த அறக்கட்டளை நிறுவனர்  சந்தோஷ் பாட்.

நன்றே செய்!

கொரோனாவின் மடியில்...

தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக் கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம்.

-நடிகர் விவேக்

அடிப்படையில் நான் ஒரு புகைப்படக் கலைஞன். இயற்கைக் காட்சிகளின் பிரியன். மற்றவர்கள் மரத்தைச் சுற்றி ஆடும்போது என் படத்தில் மலை மீது ஆடுவது வித்தியாசமாக இருக்கும்.

இயக்குநர் கே.வி. ஆனந்த்

(அந்திமழை டிசம்பர் 2012)

நீ

சுழியத்திலிருந்து துவங்க நேரலாம்.

எதற்கும் கவலை கொள்ளாதே மகனே..

சுழியத்திலிருந்து துவங்கி வென்றெடுக்கலாம்.

உலகிற்கே சுழியத்தை கற்றுத் தந்தவர்கள் நாம்.

அச்சம் கொள்ளாதே...!

இந்தப் போருக்கு வேர் எது என கண்டுணர்..

மூலம் அறி

அதை வேரோடு அழி

இனி யாவும் உன்கையில்

தலைமுறைத்தவறை

சீர் செய்யும் பொறுப்பு

உன்னிடம் இருக்கிறது..

உறுதியாய் நின்று போராடு..

உயிர் தொலைக்காமல் களமாடு....!

-இயக்குநர் தாமிரா(மகனுக்கு எழுதிய கவிதையிலிருந்து)

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com