ராஜினாமா

ராஜினாமா

உயிர்மை பிழை திருத்துனரின் ராஜினாமா கடிதம்:

அன்புள்ள அய்யா

உங்களிடம் பணியாற்றியதை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன். ஆனால் மிகுந்த மன அழுத்தத்தில் எனது இந்தப் பணி விலகல் கடிதத்தை அனுப்பவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஒரு பக்கத்திற்கு பத்து ஒற்றுப் பிழைகள், நான்கு வாக்கியப் பிழைகள் என்பது ஏற்கத்தக்க ஒன்று. ஆனால் முப்பது ஒற்றுப் பிழைகளும் 15 வாக்கியப் பிழைகளும் பெரும் சவாலாக இருக்கின்றன. முக்கியமான சவால், நீங்கள் தரும் ப்ரூஃப் ப்ரிண்ட் அவுட்டின் ஓரங்களில் திருத்தம் போட இடமில்லாமல் போகிறது. ஒரு நாவல் முழுக்க உரையாடல்களில் இன்வெர்டர்டட் கமா இல்லாவிட்டால் நான் என்ன செய்யவேண்டும் என நீங்களே சொல்லுங்கள். ஓர் அத்தியாயத்தில் வரும் கேரக்டர் பெயர் அடுத்த அத்தியாயத்தில் மாறிவிடுகிறது. சில இடங்களில் உறவு முறைகளே மாறிவிடுகின்றன. நீங்களோ முன்னூறு பக்கத்தைக் கொடுத்து மூன்று நாளில் தரும்படி துன்புறுத்துகிறீர்கள்.

இதன் காரணமாக எனக்கு மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டு , குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுமோ என அஞ்சுகிறேன். என் உடல் மற்றும் மனநலத்தை கணக்கில் கொண்டு என் பணி விலகலை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

இது உயிர்மை பத்திரிகை ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகநூல் பதிவு. புத்தகக் கண்காட்சிக்காக நூல் தயாரிப்புப் பணிகளில் மண்டை காய்ந்துபோயிருந்த நிலையில் கவிஞர் தன் மனக்குமுறலை எழுதியிருப்பார் போலிருக்கிறது.

 ஃப்ரியா வுடுங்க கவிஞர்!

இட ஒதுக்கீடு

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தம் மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளில் எண்பது சதவீதம் முழுக்க முழுக்க கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று முழங்கி இருக்கிறார். முந்தைய காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக உரிமைகளுக்கு  முழங்கியபோதும் கன்னடத்துக்காக தனிக் கொடி அறிமுகப்படுத்தியபோதும் பாஜக சும்மா இருந்தது. கன்னட அடையாளத்

துக்குப் பதிலாக இந்துத்துவா பேசியது. ஆனால் இப்போது

சட்டமன்றத்தேர்தல் வரப்போகும் நிலையில் ஆட்சியில் இருக்கும் பாஜக முதலமைச்சர், வாக்குக்காக கர்நாடக அடையாளத்தை கையில் எடுக்கிறார் என்று விமர்சிக்கிறார்கள்.

பாடத் தெரியதா?

கோவை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வந்த வங்க தேச வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை எப்படிக் கண்டு பிடித்தார்களாம்?  என்ற கேள்விக்கு பதில்: அவரை இந்திய தேசிய கீதம் பாடச் சொன்னோம் அவருக்குத் தெரியவில்லை. எனவே சந்தேகம் வலுத்து, ஆளை விசாரித்தால் வங்கதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். என்னய்யா மாத்திச் சொல்றீங்க..

தேசிய கீதம் பாடத் தெரியலேன்னாதான் இந்தியன் என ஊர்ஜிதம் ஆகும்னு எவ்வளவு ஜோக்குல படிச்சிருக்கோம்?

புதுசா கிளப்புறாங்க

கேரளத்தில் அடல்ட் படம் ஒன்றில் தன் விருப்பத்துக்கு மாறாக நடிக்க வைத்துவிட்டார்கள் என காவல்நிலையப் படியேறி இருக்கிறார் நடிகர் ஒருவர். ஆளரமற்ற இடம் ஒன்றி படப்படிப்பு. இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் எனமறுத்தபோது நடிக்காவிட்டால் 5 லட்சம் தந்தால்தான் போகவிடுவோம் என மிரட்டினார்கள். வேறு வழியின்றி நடித்தேன். இப்போது அந்த படத்தை வெளியிடக்கூடாது என புகாரில் கூறி உள்ளார் அவர். இயக்குநர் ஒரு பெண். அவர் முன் பிணை கேட்டு நீதிமன்றம் போக, அவரைக் கைது செய்ய இடைக் கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

என்னய்யா புதுசு புதுசா கிளம்புறீங்க..

கிண்டல்

இந்தி நடிகை ரவீணா டாண்டனுக்கு கலையுலக பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இதை அறிவிப்பதற்காக செய்தியாளர் ஒருவர் அழைத்திருக்கிறார். ‘என்னது எனக்கா? பத்ம ஸ்ரீயா? கிண்டல் பண்ணாதீங்கப்பா..' என்றுதான் முதலில் கூறினாராம். நடிக்க வந்து முப்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் ரவீணா டாண்டனுக்கு இப்போது வயது ஐம்பது! அவரது பெயர் ரவீணா ரவி டாண்டன் என பட்டியலில் எழுதப்பட்டிருந்தது. ரவி அவரது அப்பா. சமீபத்தில்தான் மரணம் அடைந்திருந்தார். அப்பா பெயரையும் சேர்த்து பெயரைக் குறிப்பிட்டிருப்பது ரொம்ப ஸ்பெஷல் என நெகிழ்ந்து போயிருக்கிறார்.

வாலிப வயோதிக ரவீணா ரசிகர்களே, திருப்தியா?

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com