அக்டோபர் இறுதிநாளில் தீபாவளி வெளியீடாக வந்தது அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். 'தீபாவளிக்கு எல்லாரும் மகிழ்ச்சியா இருப்பாங்க. இந்தப் படத்துல கடைசில சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆகும்னு எல்லாருக்கும் தெரியும்.. இப்டி ஒரு படம்.. ஓடுமா என்ன' என்று பலரும் விமர்சிக்க வெளியானது அமரன்.
முகுந்தின் மனைவி இந்துவின் பார்வையில் படம் சொல்லப்பட்டிருந்தது. அவர்களது காதல், முகுந்தின் ராணுவ கனவு, ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீரில் பணி அங்கு சந்திக்கும் சவால்கள் எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டில் சொல்லியிருந்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
கொஞ்சம் கூட நம்மை சோர்வடையச் செய்யாத திரைக்கதை. சிவகார்த்திகேயன் உடல்மொழி, அவரது நடிப்பு, உடலில் தெரியும் மாற்றம் என்று இந்தப் படத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்துள்ளார் என்பது ஒவ்வொரு சீனிலும் தெரிந்தது.
சாய் பல்லவி. எத்தனை விருதுகளைப் பெறப்போகிறார் என்று தெரியவில்லை. அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு. எந்தக் காட்சியிலும் சாய்பல்லவி தெரியவே இல்லை. இசை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர்கள் தேர்வு என்று சகலமும் அமைந்த இபப்டம் ராஜ்கமல் ப்ரொடக்ஷன்ஸின் இன்னொரு மைல்கல்.
அதே நாளில் வெளியான ப்ரதரும், ப்ளடி பெக்கரும் பெரிதாக கவனமீர்க்கவில்லை.
ப்ளடி பெக்கர். நெல்சனின் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான படம். ப்ரொமோவில் மிகவும் கவனிக்க வைத்த படம், படமாக மிளிரவில்லை. சொத்துக்காக வாரிசுகள் அடித்துக்கொள்ளும் ஒரு அரண்மனைக்குள் பிச்சைக்காரன் கவின் புகுந்துவிடுகிறார். அங்கே அவர் சந்திக்கும் ஆபத்து அதிலிருந்து அவர் மீள்வது என்பதான ஒன்லைன். கவினின் நடிப்பு ஓகே ரகம். சாலையோர மனிதர்களின் உயிர் சாதாரணமானதல்ல என்கிற கரு ஓகேதான். ஆனால் அதை எழுதும் முயற்சியில் எங்கெங்கோ சென்று அலைபாய்வதால்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.இன்னொரு படமான ப்ரதர், கொஞ்சமும் ஒட்டாத படமாக இருந்தது என்பது மட்டுமே போதும்.
அதே அக்டோபர் 31ல் லக்கி பாஸ்கர் என்ற டப்பிங் படமும் வெளியானது. தெலுங்கில் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கி துல்கர் சல்மான், மீனாட்சி சேசாத்ரி நடித்திருந்தனர். 1992ல் நடக்கிற கதை. அப்போது நடந்த ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை மோசடியின் போது அதே மும்பையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஒருவனின் வாழ்க்கை என்று கலக்கலாக ஒன்லைன் பிடித்திருக்கிறார் அட்லூரி. உண்மைக்கதையில் கொஞ்சம் புனைவைக் கலந்து எழுதுவதன் சுவாரஸ்யம்தாண்டி, பங்குச் சந்தை என்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தை மிக கவனமாக தன் எழுத்து நேர்த்தியின்மூலம் நமக்கு கடத்தியிருக்கிறார்கள். வசனங்களும் அதற்கேற்ற காட்சிகளும் நடிப்பும் என்று நல்லதொரு திரையனுபவம்!
நவம்பர் ஆரம்பம் தொட்டே கங்குவா ஃபீவர் பற்றிக்கொண்டது. கோவாவில் பணம்பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பவராக ப்ரான்சிஸ் (சூர்யா). ரஷ்யாவிலிருந்து ஒரு கும்பலிடமிருந்து தப்பித்து கோவா வரும் சிறுவன் ஸெடா. அவனைக்கண்டதும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமாக உணர்கிறார் சூர்யா.
பழைய கதையில் ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியின் இளவரசன் கங்குவா (சூர்யா). அவனுக்கும் அரத்தி தீவு அரசன் உதிரனுக்கும் (பாபி தியோல்) பெரும்பகை. பெருமாச்சி தீவுக்கு துரோகம் இழைத்ததற்காக தண்டிக்கப்படும் நட்டி நடராஜின் மகனைக் காக்கும் பொறுப்பை ஏற்கிறார் கங்குவா சூர்யா. அந்தக் காலத்தில் என்ன நடந்தது... அது ஏன் இத்தனை வருடம் கழித்து தொடர்கிறது என்பதை சொல்ல முயன்றிருக்கும் படமே கங்குவா.
முதல் அரை மணிநேரம் கொஞ்சமும் ஒட்டவில்லை. ஆனால் அதற்குப்பிறகு பீரியட் ஃப்லிமாக மாறத்தொடங்கியதும் பிரம்மாண்டம். நல்ல கதைதான். ஆனால் சிறுத்தை சிவா தன் வழக்கமான ஸ்டைலில், தேவையற்ற காட்சி அமைப்புகள், வெறும் மாஸாக கத்திக்கொண்டே இருப்பது என்று சோதித்துவிட்டார் . படத்துக்கு முன் கொடுத்த எந்த பில்டப்புக்கும் படம் பொருந்தவே இல்லை என்பதுதான் சோகம்.
படம் வெளியான பிறகு ஒவ்வொரு கேரக்டர் குறித்த வீடியோக்களாக வெளியிடுகிறார்கள்; மேக்கிங் வெளியிடுகிறார்கள். இதையெல்லாம் படவெளியீட்டுக்கு முன் செய்திருந்தால்கூட கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்னமோ!
நிறங்கள் மூன்று. சென்ற மாதம் 22ம் தேதி வெளியான படம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான், அதர்வா, சரத்குமார் ஆகியோர் நடித்திருந்த படம்.
ரகுமானின் மகள் காணாமல் போகிறார். அதர்வாவின் திரைக்கதையை ஜான் விஜய் திருடி படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். காவல் துறை அதிகாரி சரத்குமார், அமைச்சர் சந்தான பாரதியி்ன் வாரிசுகளைக் கைது செய்வதால் சில சிக்கல்களை எதிர்கொள்கிறார். - இந்த மூன்று சம்பவங்களையும் சொல்லியபடி இம்மூன்றுக்குமான முடிச்சு என்ன என்பதையும் மனிதர்களின் குண மாற்றங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
சொல்ல, நல்ல ஐடியாவான இதை படமாக்கியதில்தான் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார். எந்தக் கதாபாத்திரமும் நம்மை பாதிக்காததால் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க நேர்கிறது. ஒளிப்பதிவு, இசை என பிற கலைகள் கைகொடுத்தாலும் படத்தில் ஒன்ற முடியவில்லை.
அதே நாளில் வெளியானது பராரி. கிராமம் ஒன்றில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் ஒரு குறிப்பிட்ட சாதியினர். அதை மொழி இனப்பிரச்னையாகவும் மாற்றும் ஒரு அடிப்படைவாதக் கட்சி. இதனால் தண்ணீரே மறுக்கப்படும் நிலைக்குச் செல்ல, இதற்கு நடுவே ஒரு காதலும் முளைக்கிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
முதலிலேயே எல்லாம் காட்டப்பட்டு நாம் கதைக்குள் போனபிறகும் மீண்டும் அவையே வேறு வேறு விதமாகக் காட்டப்படுவது ஒரு கட்டத்தில் அலுப்பைத் தருகிறது. நல்ல கருவான இந்தக் கதை, கலைப்படமாக மிளிரத் தவறிவிட்டது திரையில் தெரிகிறது. இருந்தாலும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடியிடமிருந்து அடுத்த படைப்பு இன்னும் தீர்க்கமாக வரும் என்று நம்பலாம்.