சபாஷ் மீரா கதிரவன்!

பரிமளா அண்ட் கோ
பரிமளா அண்ட் கோ
Published on

மே மாதக் கடைசியில் சத்தமில்லாமல் வந்து, சத்தமாக தன் தடத்தைப் பதித்தது ப்ளாஸ்ட். கராத்தே மாஸ்டரான அர்ஜூன், தன் மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் இருவருக்கும் தற்காப்புக் கலை கற்றுக்கொடுத்து தைரியத்துடன் இருக்கப் பழக்குகிறார். வில்லன் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு பிரச்னை வர, அதை இக்குடும்பம் எப்படி சமாளித்தது என்பதே கதை.

ப்ளாஸ்ட்
ப்ளாஸ்ட்

வளவள என்றில்லாமல் நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையும், படத்தின் பெயருக்குப் பொருத்தமான ப்ளாஸ்ட் காட்சிகளும் படத்தை மிகவும் ஒன்றிப் பார்க்க வைக்கின்றன. அர்ஜூனின் ஆக்‌ஷன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படத்தின் சர்ப்ரைஸ் ப்ரீத்தி முகுந்தன். இன்னும் நிறைய படங்கள் வாய்க்கட்டும்! முதல் படத்திலேயே முத்திரை பதித்த சுபாஷ் கே ராஜுக்கு பூங்கொத்து!

ஜூன் முதலில் வந்தது பரிமளா அண்ட் கோ. ஜெயராம், ஊர்வசி ஜோடிக்கு மகள்களாக சஞ்சனா, அனந்திகா ஆகியோர் நடிக்க வெளியானது. ஜெயராம் குடும்பத்துக்கு வில்லன் சாண்டியால் பெரும் தொல்லை. கொலை செய்யும் அளவுக்கு இவர்கள் திட்டமிட, கொலை செய்யபட்டுக் கிடக்கிறார் சாண்டி. கொன்றது யார், இவர்களைச் சுற்றும் அந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

கலகலவென ஆரம்பமானாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இழுவையாகப் போகிறது காட்சிகள். இயக்குநர் பாண்டிராஜன், டார்க் காமெடியை முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது முழுமையாகக் கைகூடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஓரிரு காட்சிகள் நிமிர வைத்தாலும், ஒட்டுமொத்தப் படமாக அவை பங்களிக்கவில்லை.

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்க வெளியானது ஹபீபி.

ஹபீபி
ஹபீபி

கடையநல்லூர் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வருகிறார் கஸ்தூரி ராஜா. தன் மகன் ஈஷா, இத்தொழிலைத் தொடர்வான் என எதிர்பார்க்கிறார். கைத்தறித் தொழில் அழிந்து வர, இளைஞர்கள் பலரும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்தப் பின்னணியில் இவர்கள் குடும்பம், மகனின் காதல், குடும்பப் பிணைப்பு ஆகியவற்றோடு ஒரு அழகான படத்தைக் கொடுத்திருக்கிறார் மீரா கதிரவன். திரைக்கதையின் வேகம் கொஞ்சம் சோதித்தாலும், ஓர் அழகான குடும்பத்தின் மூலம் ஒரு தலைமுறை வாழ்வைக் காட்சிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.

இஸ்லாமியக் கதாபாத்திரங்களை இதுவரை் காட்டிய தமிழ் சினிமாவின் போக்கை, 'பாருங்க. இதான் இஸ்லாமிய வாழ்வியல். இப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள்' என்று காட்டி விமர்சித்திருக்கிறார் மீரா கதிரவன். அதைவிடவும், தமிழ் ரசிகனின் ரசனையையும் - இந்தப் படத்தைப் பார்க்க வைத்து - சற்று உயர்த்தியிருக்கிறார் மீரா. அதற்காகவே அவருக்குப் பாராட்டுகள்!

சசி இயக்கத்தில் ஸ்வாசிகா நடிப்பில் வெளியானது நூறு சாமி. கைம்பெண்ணான ஸ்வாசிகா, தன் இரு மகன்களையும் உழைத்து வளர்த்திக்கொண்டிருக்கிறார். ஊராரின் தவறான பார்வையும் கேலிகளும் ஸ்வாசிகாவைத் துரத்த, அவருக்கு மறுமணம் செய்வது குறித்து ஒருவர் சிந்திக்கிறார். அது மகனுக்கு வெறுப்பையே தருகிறது. ஆனால் பின்னாட்களில் மகன்களே அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். இதையே மையமாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் சசி.

நூறு சாமி
நூறு சாமி

இன்னும் பேசப்பட வேண்டிய கதை. ஸ்வாசிகா நடிப்பில் பின்னிவிட்டார் என்றே சொல்லாம். அத்தனை நேர்த்தியான நடிப்பு. திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு. விஜய் ஆண்டனி கடைசியில் கொஞ்சநேரம் வரும்போது படம் சூடு பிடிக்கிறது. வாய்ஸ் ஓவர் பல இடங்களில் குழப்பம் .இதையெல்லாம் தாண்டி. நல்லதொரு செய்தியைச் சொன்னதால் நூறு சாமியை வரவேற்கலாம்!

மா இண்டி பங்காரம்
மா இண்டி பங்காரம்

மகாலட்சுமி மாதிரி ஒரு மருமகள் வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுற ஒரு குடும்பத்துக்கு மகா காளி அவதாரத்துல ஒரு பொண்ணு வந்து சேர்ந்தால் ? அந்த காளி நம்ம சமந்தாவா இருந்தால்?? இந்த கேள்விகளை விரித்தால் வந்தது மா இண்டி பங்காரம் என தெலுங்கிலும் எங்கள் தங்கம் என தமிழிலும் வந்த படம். சமந்தா ரசிகர்கள் பார்க்கலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com