'டீசல்' பட விமர்சனம்!

டீசல்
டீசல்
Published on

தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. பட்டாசு, புத்தாடை, பலகாரத்தோடு குடும்பம் சகிதமாக வெளியாகும் புதுத்திரைப்படத்திற்கு போனால்தான் பலருக்கும் தீபாவளியே நிறைவாக இருக்கும். அப்படி இந்த தீபாவளியை சிறப்பிக்க பெரிய நட்சத்திரங்கள் அல்லாது வளரும் இளம் தலைமுறை நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி இருப்பது திரைத்துறையில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'டீசல்' பட விமர்சனத்தை பார்க்கலாம்.

அன்றாடம் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் டீசலுக்கு பின்னால் நடக்கும் எண்ணெய் திருட்டை மையமாகக் கொண்ட கதைதான் 'டீசல்' படத்தின் ஒன்லைன். அதாவது வடசென்னை பகுதியில் முறைகேடாக கடத்தப்படும் கச்சா எண்ணெய் காரணமாக அங்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை முன்னெடுத்து செல்பவர் சாய்குமார். அவரின் மகன் வாசுவாக வரும் ஹரிஷ் கல்யாண், தன் தந்தை வழியில் கச்சா எண்ணெய்க்கு பின்னால் நடக்கும் கடத்தல் நெட்வொர்க்கை வழிநடத்துகிறார். அவருக்குப் போட்டியாக விவேக் பிரசன்னாவும் கிளம்ப இரு தரப்புக்கும் இடையில் வெடிக்கும் ஈகோ மோதலும் அதன் பிரச்சினைகளும்தான் 'டீசல்'.

பக்கத்து வீட்டு பையன் கதாபாத்திரத்தில் இதுநாள்வரை நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் 'டீசல்' படம் மூலம் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அவரைத்தவிர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வினய் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை முடிந்தளவு மெருகேற்றி இருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் அதுல்யா நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. வெறும் அழகுப்பதுமையாகவே ஃபிரேம் நிறைத்து செல்கிறார்.

குறிப்பாக, படம் ஆரம்பிக்கும்போது எண்ணெய் கடத்தலுக்குப் பின்னால் உள்ள உலகம், இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, போராட்டம் என நம்பிக்கை தரும் விதமாக விரியும் கதை, திடீரென ஹரிஷ்- அதுல்யா லவ் டிராக்கில் தடம் மாறுகிறது. அந்த போர்ஷனும் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் வெறுமனே கமர்ஷியல் மசாலாவாக கடந்து போவது கதைக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகம் பரபரப்பானது. ஆனால், அதை தீர்மானத்தோடு திரையில் கொண்டு வராமல் கதை தடுமாறுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் 'வடசென்னை' கதை 'கத்தி' படக்கதையை சந்திப்பது போன்ற உணர்வைத் தருகிறது 'டீசல்'. இருந்தாலும் சில இடங்களில் உண்மை சம்பவங்களை திரைக்கதையாக்கி சுவாரஸ்யம் கூட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

திபு நிணன் இசை படத்திற்கு ஆறுதல். பாடல்களும் பின்னணி இசையும் கதையோட்டத்தில் மிகைப்படுத்தாமல் செல்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வலுவாக்கி இருக்கலாம். பழைய போர்ஷன்களில் எல்லாரும் விக் மாட்டிக் கொண்டே வருவது துருத்திக் கொண்டிருக்கிறது.

ஆகமொத்தத்தில், சீரியஸ் டோனிலும் இல்லாமல் கமர்ஷியல் டிராக்கிலும் செல்லாமல் சொல்ல வந்த கதையில் முழுமை அடையாமலும் உள்ளது. டீசலை கீழே கொட்டிட்டீங்களே பாஸ்...

logo
Andhimazhai
www.andhimazhai.com