கலகல செப்டம்பர்!

கலகல செப்டம்பர்!
Published on

போன மாதம் கூலி, அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷல் படங்கள் என்பதால் இந்த மாதம் ரிலீஸுக்குக் காத்திருந்த பல படங்கள் வெளியாகின.

பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு வெளியானது Bad Girl. வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கியிருந்தார். ஒரு பெண்ணின் மூன்று பருவங்களிலும் அவர் சந்திக்கும் பருவ மாற்றங்கள், அதன் ஏக்கங்கள், சந்திக்கும் ஆண்கள் என்று சொல்லும் படம்.

நாயகியாக அஞ்சலி சிவராமன் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். நாயகியின் அம்மாவாக சாந்தி ப்ரியா (நிஷாந்தி), பாட்டியாக பார்வதி பாலகிருஷ்ணன் மற்றும் பல நடிகர்கள், நடிகைகளிடமிருந்து படத்துக்குத் தேவையான பங்களிப்பை வாங்கியிருந்தார் இயக்குநர் வர்ஷா. படம் முழுவதும் இருந்த ஒரு சீரியஸ்தன்மை மட்டும் சிறு குறை. பெண் உலகை, ஒரு பெண் இயக்குநர் அவர் பார்வையில் எழுதிய படம் என்ற விதத்தில் நிச்சயம் இது வரவேற்கத்தக்க படம். ஆனால் படத்துக்கு போதிய திரையரங்குகளும் மக்கள் ஆதரவும் கிடைக்கவில்லை. இன்னும் பல வருடங்கள் கடந்து  இதை எப்படி மக்கள் கொண்டாடவில்லை என்று கேட்பார்கள் என்பது உறுதி.

கலக்கப்போவுது யாரு பாலாவுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க வெளியானது காந்தி கண்ணாடி. ப்ரமோஷன்களெல்லாம் களை கட்டியது. பாலா எவ்ளோ நல்லது பண்ணிருக்காரு, அவர் படத்தை ஓட வைக்கணும்பா என்ற குரல் பல திசைகளிலிருந்தும் ஒலித்தது.

செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கு மனைவி அர்ச்சனா மேல் கொள்ளைக் காதல். அறுபதாவது திருமணம் நடத்த ஆசைப்படும் அவர், அதற்கான ஈவண்ட்ஸ் நடத்தும் பாலாவைத் தொடர்பு கொள்கிறார். 50 லட்சத்துக்கு மேல் ஆகும் என்று அவர் சொல்லி அனுப்புகிறார். செக்யூரிட்டி வேலை பார்க்கும் இவர் எங்கே அவ்வளவு செலவு செய்யப்போகிறார் என்று எண்ணி.

ஆனால் ஊரில் கோடிக்கணக்கில் போகும் சொத்துக்களை எண்பது லட்சத்துக்கு விற்றுவிட்டு பையில் பணக்கட்டுகளோடு பாலாஜி சக்திவேல் வரும் நாள் தான் நம்ம மோடிஜி, "மித்ரோன்.. அந்தக்காசெல்லாம் செல்லாது" என்று அறிவித்த நாள். அழுத்தமான கதைதான். ஆனால் கலகலப்பான பாலாவை அந்த க்ளைமாக்ஸில் ஏற்க முடியவில்லை. அதுபோலவே சீரியஸான காட்சிகளை கலாய்ப்பாகவும், சில காமெடிக்கு ஏற்ற காட்சிகளை சீரியஸாகவும் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும் காட்சி அமைப்புகள் வேறு.

மதராஸி. முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜூ மேனன், ருக்மிணி வசந்த், ‘டான்ஸிங் ரோஸ்' சபீர் கல்லரக்கல், வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கொண்டுவரத்துடிக்கும் வில்லன் கேங். காதலி நோ சொன்னதால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கும் எஸ்கேவை வைத்து அவர்களை வீழ்த்த நினைக்கும் N.I.A அதிகாரி பிஜூ மேனன். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் யாருக்கு என்ன ஆனது என்பதே மதராஸி.

கதை சரி. ஆனால் காட்சிகளில் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாததால் சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் அவதாரம் மட்டுமே ஆறுதலாக இருக்கிறது.

அடுத்த வாரம் ப்ளாக்மெய்ல், பாம், காயல் என்று மூன்று படங்கள் வெளியாகின.  விளம்பரத்தில் காட்டியிருந்த கிரியேட்டிவிட்டியை இரட்டிப்பாக படத்தில் காட்டியிருந்தால் பாம் கொஞ்சம் தப்பித்திருக்கும். காயல், எழுத்தாளர் தமயந்தியின் இயக்கம். அவரது எழுத்தின் அழுத்தம் படத்தில் தெரிந்தது.

அதற்கடுத்து, பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் 'குமார சம்பவம்' வெளியானது. திரைப்பட இயக்குநராகும் ஆசையில் இருக்கும் குமரன் தங்கராஜன் தயாரிப்பாளர் கிடைக்காததால், தன் பூர்வீக வீட்டை விற்க திட்டமிடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரான இளங்கோ குமரவேல் மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். கொலையாளி யார், குமரனின் இயக்குநர் கனவு என்ன ஆனது என்பதே கதை.

பாலாஜி வேணுகோபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படம். நகைச்சுவையும், சீரியஸும் கலந்து கட்டி வருகிறது. காட்சிகளில் இன்னும் அழுத்தம் தேவை என்றாலும் படம் நெடுக வரும் ஒன்லைனர்கள் அவற்றை மறக்கடிக்கிறது.

கவின், ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியானது கிஸ். காதலும் ஃபேண்டசியும் கலந்த ஒரு படம்.

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொப்பளிக்கிற மனிதரான சதீஷ் கிருஷ்ணனின் படமும் அதையே செய்கிறது. முதற்பாதி மாதிரியான கலகலப்பும் திரைக்கதையும் தொடர்ந்திருந்தால் சூப்பர் ஹிட் அடித்திருக்கும்!

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில் வெளியானது சக்தித் திருமகன். விஜய் ஆண்டனிக்கு அழுத்தமான வேடம். தன் தாயின் மரணத்துக்கு பழிவாங்கும் கதை என்று ஒருவரியில் சொல்லலாம். ஆனால் அரசியல் / அதிகார வர்க்கத்தின் பல்வேறு இண்டு இடுக்குகளின் அழுக்குகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கும் படம். வில்லன் கண்ணன், 'காதல் ஓவியம்' கண்ணனா இது என்று பிரமிக்க வைக்கிறார். அருவி, வாழ் போன்ற முந்தைய படங்களின் சாயல் கொஞ்சமும் இல்லாத ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் அருண் பிரபு. சபாஷ்.

பா. ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது தண்டகாரண்யம். கலையரசன், தினேஷ் இருவருமே படத்துக்கு மிகப்பெரிய பலம். படத்தின் இன்னொரு பலமாக பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவைச் சொல்லலாம்.

மிக முக்கியமான அரசியலைப் பேசும்படம். கதாபாத்திரங்களின் தனிக்குணங்கள், அரசியல்வாதிகளின் / அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி என்று பலவற்றையும் கோர்த்திருக்கிறது படம். அதனாலேயே கொஞ்சம் ஆங்காங்கே தீவிரத்தன்மை. ஆனாலும் மண்ணின் அரசியலை, மக்களின் அரசியலை பேசிய விதத்துக்காகவே அதியன் ஆதிரை பாராட்டப்படவேண்டும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com