
வழக்கமாக தேர்தல் காலங்களில் திரைத்துறை தன் வெளியீட்டைக் கொஞ்சம் மந்தப்படுத்திக்கொள்ளும். தேர்தல் தேதி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்பது தெரியவந்ததால், மார்ச் மாதமே டல்லாகத்தான் இருந்தது.
பிப்ரவரி இறுதி வாரத்தில் வந்த 'தாய் கிழவி' குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.
ஊருக்குள் வட்டிக்கு கடன் கொடுத்து கெத்தாக வாழ்ந்துகொண்டிருக்கும் ராதிகா, உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். 160 சவரன் தங்க நகைகள் அவரிடம் இருப்பதாக அறிந்த மகன்கள், (அருள்தாஸ், சிங்கம் புலி, பால சரவணன்) கோமாவில் இருக்கும் ராதிகாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். முழித்து அந்த நகைகள் இருக்குமிடம் அறிந்தால் போதுமென்பதே அவர்கள் எண்ணமாக இருக்கிறது. அதற்காக அவர்கள் செய்யும் பிரயத்தனங்களும், ராதிகா திரும்ப வந்து என்ன சொன்னார் என்பதையும் காமெடி, செண்டிமெண்ட் என்று கலந்து கட்டிக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன்.
ஓவர் ஹைப் ப்ரமோஷன்கள்தான். ஆனாலும் படம் மோசமெல்லாம் இல்லை. படம் நெடுக இழையோடும் நகைச்சுவை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. சிங்கம்புலியின் பாத்திரப்படைப்பும் அவருக்காக காட்சியமைப்புகளும் அதிரிபுதிரி. இறுதியில் வழக்கம்போல அட்வைஸ்தான் என்றாலும் திருப்தியான படைப்பு.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் காதல் ரீசெட் ரிப்பீட் படம் வெளியானது. இசைத்துறையில் சாதிக்கும் கனவுடன் இருக்கும் ஜியா ஷங்கர், ஒரு தனியிசைக் குழுவில் பாடகி. அதே குழுவில் இருக்கும் அர்ஜூன் அசோகனும் ஜியாவும் காதலர்கள். இந்நிலையில் நாயகன் மதும்கேஷ், ஜியாவை ஒரு தலையாயக் காதலிக்கிறார்.
இசைப்போட்டிக்காக தனியிசைக்குழு ஸ்காட்லாந்து செல்ல, அங்கும் தொடர்கிறார் மதும்கேஷ். மூவருக்கும் அங்கு நடக்கும் எமோஷனல் + ரொமாண்டிக் டிராமாதான் படம். நாயகியின் ஞாபக மறதி என்ற ஒன்லைன் நன்றாக இருந்தாலும் அழுத்தமான காட்சிகளோ, குறிப்பிடத்தகுந்த மாதிரியான செண்டிமெண்டோ படத்தில் இல்லை. நடிப்பும் சுமார் ரகம் என்பதால் வந்தது தெரியாமல் போய்விட்டது படம்.
தாய் கிழவி படம் போலவே, யூத் படத்துக்கும் ப்ரமோஷன்கள் களைகட்டின. மூன்றாம் வாரத்தில் தியேட்டர்களில் வெளியானது யூத்.
படிப்பைவிட காதலின் சுவையில் மயங்கிக்கிடக்கும் பள்ளி மாணவர் கென். கென்னின் முதிர்ச்சியற்ற தன்மையினால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்தான் படம். இறுதியில் ஒரு முடிச்சோடு படம் முடிகிறது.
கென் நடிப்பில் ஏற்கெனவே பாஸானவர். இதில் இயக்கத்திலும் பாஸாகிறார். அம்மா தேவதர்ஷினியும் அப்பா சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் மிடில் க்ளாஸ் வாழ்க்கையை கண்முண் கொண்டு வந்திருக்கிறார்கள். கென் நண்பர்கள் குழுவும் அவர்களின் லூட்டியும் ரசிப்பு. இத்தனை சுதந்திரமான பள்ளி என்பது மாய யதார்த்தமாக இருக்கிறது. இசையில் ஜிவிபி.. வாவ்.
படம் ஓகேதான்... ஆனாலும் இப்படி பள்ளிக்கூடத்தில் காதல் என்ற கான்செப்டை இனியும் தொடரவேண்டுமா என்று திரைத்துறையினர் சிந்திக்கலாம்.
கடைசி வாரம் வெளியானது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ். அப்பாவின் தோற்றத்தால் கிண்டலுக்குள்ளாகும் மகனாக ஜிவிபி. காதல்வரை அது தொடர்கிறது. இந்த ஊரே வேண்டாம் என்று பெங்களூர் சென்று காதலில் விழும் அவருக்கு, அங்கும் அப்பாவினால் ஒரு சிக்கல். எப்படி எதிர்கொண்டார், காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே கதை.
காதலை அப்பா செண்டிமெண்டோடு கலந்து கொடுத்திருக்கும் மரியராஜா இளஞ்செழியன் கோலிவுட்டுக்கு ஓகேவான வரவு. ஜிவிபிக்கு ஜாலியான வேடம். மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார். ஹீரோயின் கவுரி பிரியா நடிப்பில் பாஸாகிறார். ரொம்ப நாள் கழித்து தமிழ்ப்படத்தில் நடிக்கும் அப்பாஸுக்கு அந்த கெட்டப் யார் ஓகே சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஜார்ஜ் மரியான்.. படத்தின் மிகப்பெரிய பலம்.
அழுத்தமான காட்சிகள் இல்லாதது, காமெடி என்ற பெயரில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான காழ்ப்பு என இயக்குநரின் போதாமையும் படத்தில் வெளிப்படுகிறது. இன்னும் செதுக்கியிருக்க வேண்டிய படம்.