சென்ற மாதத்தில் டோரதி படத்தைப் பற்றிப் பேசினோமல்லவா? அந்தப் படம், இன்னும் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு படைப்பு, உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும். இந்நாட்டில் பல ஜி-க்களை தொந்தர்வு செய்தது டோரதி. அதற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு மனமார்ந்த நன்றி.
அக்டோபரை 'பத்தா' ஆரம்பித்து வைத்தது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோள் ஜோஸ், மாஸ்டர் சாய் ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது பத்தா.
எண்பதுகளில் நடக்கிற கதைக்களம். ஊருக்குள் பெரிய ரவுடியாக வலம் வருகிறார் பத்தா. (விஜய் சேதுபதி) பத்தாவைப் பற்றிய பயமூட்டும் கதைகளோடு அதே ஊரில் வாழும் சிறுவன் சபரி (சாய் ப்ரித்விராஜ்) ஒரு சந்தர்ப்பத்தில் விடுமுறை விட்டபட்ட பள்ளியின் கழிவறை ஒன்றில் பத்தா இருக்கும்போது, தெரியாமல் கதவைப் பூட்டி விடுகிறான். திறந்துவிட்டால், வெளியில் வந்து தன்னை எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் அப்படியே ஓடிவிடுகிறான்.
சபரி அதை எப்படி சமாளித்தான் என்பதையும், அந்த நிகழ்வு பத்தாவுக்குள் ஏற்படுத்தும் மன மாற்றங்களையும் சொல்கிறது படம்.
நேர்த்தியான படைப்பு. சிறுவனான சாய் ப்ரித்விராஜ், லிஜோமோள், விஜய் சேதுபதி என்று ஒருவரும் நடிப்பில் குறைவைக்கவில்லை. பாலாஜி தரணிதரனின் இயக்கம், வித்தியாசமானது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கதைக்குள் நம்மை இழுத்துச் செல்வார். இதிலும் அப்படியே. படத்தில் கடைசிக் காட்சிகளில் நம்மையும் உணர்வுபூர்வமாக ஒன்ற வைத்துவிடுகிறார்.
அடுத்து இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை. எட்டாயிரம் ஆண்டுகளாக தன் காதலியைத் தேடும் நிவின் பாலி. எட்டு வருடமாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, அவர்களை சந்திக்க ஊருக்குப் போய்க்கொண்டி ருக்கும் சூரி. இருவரும், யாருமே இல்லாத ஒரு ரயிலில் தீபாவளி இரவில் பயணிக்கிறார்கள். நிவின் பாலியின் உருவமே சூரிக்கு பயத்தைத்தர, மெதுவாகப் பேச்சுக் கொடுக்கிறார். அதன்பின் என்ன ஆனது, நிவின் பாலியின் காதலி யார் என்பதற்கெல்லாம் விடைதருகிறது படத்தின் மீதிக் காட்சிகள்.
காதல் கதை என்ற வகைமையில் வந்தாலும், படத்தின் எக்கச்சக்கமாக வரும் தத்துவார்த்தங்களும், பழங்கதைகளும் சலிப்பூட்டுகின்றன.
அசோக் செல்வன், ப்ரீத்தி நடிப்பில் புதுமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியானது அன்பில் அவன். காதல் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன், ப்ரீத்தி ஜோடி தங்கள் கனவை செயல்படுத்த ஒரு அழகான வீட்டை வாங்க முடிவெடுக்கிறார்கள். அதில் வரும் சிக்கல்களும், அதை இவர்கள் எதிர்கொள்ளூம் விதமுமே படம்.
காதல், இருவரின் வேலை டென்ஷன்கள் என்று போகும் வரை படம் மிகவும் ரசிக்கும்படி போனது. இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் காட்சிகளில் திரைக்கதை ஒத்துழைக்கவில்லை. நடிப்பில் இருவருமே மிகச் சிறப்பாகவே பங்களித்திருந்தனர்.
டிரோன்ஸ் என்று ஒரு படமும் இம்மாத இறுதியில் வந்தது. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக், சித்தி இத்னானி, தேவதர்ஷினி, குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். குரேஷியின் ஆய்வுக்கூடத்தில் மாட்டிக்கொள்ளும் மூவர் குழுவில் ஒருவரான ட்ராவிட், ஒரு ட்ரோன் மூலம் பக்கத்து வீட்டில் இருக்கும் சித்தி இத்னானியைப் பார்க்கிறார். காதல் கொள்கிறார். சித்தி இத்னானிக்கோ பாட்டி தேவதர்ஷணி என்றால் பயம். அது ஏன், இவர்கள் காதல் என்ன ஆனது என்றெல்லாம் சொல்கிறது படம்.
சயின்ஸ் பிக்ஷனாக ஆரம்பித்து, எங்கெங்கோ அலைபாய்ந்து பேய், ரோபோ என்று போய் ஒரு நேர்கோட்டில் இல்லாத மாதிரியான கதை. அதனாலேயே படம் கொஞ்சம் தொய்வாகத் தெரிகிறது.
அக்டோபர் 15ல் வெளியானது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2. பெரிய எதிர்பார்ப்பைப் படத்தின் டிரைலரோ, ஆடியோ வெளியீட்டுக் காணொளிகளோ ஏற்படுத்தவில்லை. ஆனால் படம்... அதிரி புதிரி!
ஜெயிலரில் கொல்லப்பட்ட வர்மாவின் பின்னால் இருக்கும் ஆட்கள் யார் யாரெனக் கண்டுபிடித்துக் கொல்வதுதான் இந்தப் படத்தின் கதை. மிகச் சரியாக ரஜினியை எப்படியெப்படிக் காட்ட வேண்டுமோ அப்படிக் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நெல்சன். வசனங்களும் அருமை. காமெடி எழுத்தும் சரி, பில்டப் எழுத்தும் சரி நெல்சனுக்கு நன்றாகவே கைவருகிறது. நமோ நாராயணா கேங்கின் காமெடி அட்டகாசம், சூரஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி - வித்யா பாலன் - எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் வில்லத்தனம் இதற்கிடையில் ரஜினியின் மாஸ் என்று எல்லாமே கைகொடுத்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு காமெடி கொஞ்சம் குறைவு. குடும்பம் சம்பந்தப்பட்ட அந்த ஒரு காட்சியில் ரஜினி நடிப்பிலும் கலக்கியிருக்கிறார்.
போன மாதம் டோரதி என்ற படத்தில் 83 வயது இளைஞர் இளையராஜா, தன் இசையில் மக்களைக் கட்டிப்போட்டார் என்றால் இந்த மாதம், ரஜினி எனும் 74 வயது இளைஞர் எண்டர்டெய்ன்மெண்டில் மக்களைப் பாராட்ட வைத்திருக்கிறார். இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது!