ஜனவரி மாதத்தில் வரவிருந்த விடாமுயற்சி தள்ளிப்போனதால் பெண்டிங் வைத்திருந்த படங்களெல்லாம் வரிசை கட்டி ரிலீஸாகின. பொங்கலுக்கு நான்கு நாள்கள் முன்பு பாலாவின் வணங்கான் களத்தில் இறங்கியது. காது கேளாத வாய் பேசமுடியாத நாயகன் எப்போதும் விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு துன்பமென்றால் அவர்கள் பக்கம் நின்று சண்டை செய்பவர். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தில் காவலாளி வேலைக்குச் சேர்க்கப்படுகிறான். அங்கே நடக்கிற ஒரு விஷயம் அவன் கவனத்துக்கு வர, அவன் எடுக்கும் வேறொரு அவதாரமும் அதன் பின் விளைவுகளுமே கதை.
அருண் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும் படியான படம். அவரும் கதாபாத்திரத்தை வெகுநேர்த்தியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக சமுத்திரக்கனி, மாவட்ட நீதிபதியாக மிஷ்கின், நாயகி டீனா என அனைவருமே பாலாவின் கதாபாத்திரப் படைப்பை புரிந்துகொண்டு அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
முந்தைய சில பாலா படங்களின் காட்சி சாயலும், பாடல்கள் - பின்னணி இசை சோபிக்காததும் மைனஸ்.
பன்னிரெண்டாம் தேதி பன்னிரெண்டு வருஷ பழைய படமான மதகஜராஜா ரிலீஸாகி அல்லோலகல்லோலப் படுத்தியது.
சுந்தர்.சி இயக்கம். விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி என்று நட்சத்திரப் பட்டாளம் என்று தியேட்டர்கள் கொண்டாடின. படத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பும் இருந்தது.
நண்பர்களுடன் தன் ஸ்கூல் வாத்தியார் குடும்ப திருமணத்துக்குச் செல்லும் விஷால், அங்கு நண்பர்கள் ஒவ்வொருவரின் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு அதைத் தீர்த்துவைப்பதுதான் படம். டிபிகல் சுந்தர்.சி ஃபார்முலா. ஆனால் சந்தானத்தின் உருவகேலி டைப் காமெடிகளும், சகிக்கவே முடியாத மலினக் காட்சிகளும் கொண்ட படத்தை மக்கள் ரசித்துக் கொண்டாடி ஹிட்டாக்கியிருக்கிறார்கள் எனும்போது சொல்வதற்கொன்றுமில்லை.
14ஆம் தேதி காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா இரண்டும் போட்டிபோட்டன. ஜெயம்.. ஸாரி ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகிபாபு நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கிய படம் காதலிக்க நேரமில்லை.
ஒரு காரணத்தால் திருமணம், குழந்தை மேல் நாட்டமில்லாமல் வாழும் ரவிமோகன். செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் நித்யா மேனன். இருவரும் நண்பர்களாகிறார்கள். அந்த நட்பின் பயணம் எங்கே - எப்படி செல்கிறது என்பதே கதை.
ரவி மோகன், நித்யா மேனன் இருவருமே படத்துக்குப் பொருத்தமான தேர்வு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் சில ஹிட்டாகி பெரும் எதிர்பார்ப்பைப் படத்துக்கு கொடுத்திருந்தது. வினய்யின் கேரக்டர் பாராட்டப்படவேண்டியது. பல ப்ளஸ்கள் இருந்தாலும் அழுத்தமான ஓரிரண்டு காட்சியமைப்புகள் இருந்திருந்தால் ஒருபடி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கும்.
ஆதவ் முரளி, அதிதி ஷங்கர், பிரபு, சரத், குஷ்பு ஆகியோர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்தது ‘நேசிப்பாயா’. போர்ச்சுகலில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார் அதிதி ஷங்கர். அவரது ‘எக்ஸ்’ காதலர் ஆகாஷுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. தன் முன்னாள் காதலிக்காக போர்ச்சுகல் கிளம்புகிறார். அங்கு சென்று குற்றவாளியைக் கண்டுபிடித்து, அதிதியை மீட்பதுதான் கதை.
ஆதவ் முரளிக்கு முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. தேர்ந்த நடிப்பு. அதிதியின் நடிப்பில் பாராட்டத்தகுந்த முன்னேற்றம். ஆரம்பத்தில் அடுத்து என்ன என்று நம்மை ஒன்றவைக்கிற படம், போகப்போக ‘என்ன ஆனால் என்ன’ என்ற மனநிலைக்கு தள்ளுகிறது. காட்சிகளில் அழுத்தமோ, பெரிய ட்விஸ்டோ எதுவும் இல்லாமல் படம் பயணிக்கிறது.
ஜனவரி 24-ல் ரிலீஸானது குடும்பஸ்தன். யூட்யூபில் கவனம் பெற்ற சேனலான நக்கலைட்ஸ் டீமின் படம். அந்த டீமின் ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரனின் எழுத்தில் ராஜேஷ்வர் இயக்கியிருக்கிறார். சுஜித் ஒளிப்பதிவு.
நாயகி ‘சான்வே மேகனா’வுடனான லவ் மேரேஜுக்குப் பிறகு குடும்பஸ்தனாக மாறும் மணிகண்டன் எதிர்கொள்ள மிடில் க்ளாஸ் பிரச்னைகளும் அவற்றை அவர் கடக்கும் விதமுமே படம்.
விசு, வி.சேகர் பாணி குடும்பக் கதை. இந்தக் கால இளைஞர்களின் பாணியில் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்களும், அந்த கோவை ஸ்லாங்கும். ஆர்.சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், குரு சோமசுந்தரம் உட்பட்டவர்களோடு ஜென்சன் உட்பட நக்கலைட்ஸ் குழுவின் பலரும் படத்தின் கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்கள்.
மணிகண்டனின் அக்கா கணவனாக வரும் குரு சோமசுந்தரத்துக்கும் மணிகண்டனுக்குமான மோதல் சுவாரஸ்யமும் கதை நகர்வுக்கு முக்கியத்துவமாகவும் இருந்தாலும் சில அளவுக்கு மீறி இருக்கிறது. முதல் பாதி எக்ஸ்பிரஸ் வேகத்தில் காமெடி கலக்கலாகப் பயணித்து, இரண்டாம் பாதி மணிகண்டனின் பேக்கரி போலவே மெதுவாகப் பயணிக்கிறது. முடிவில் வேறு வழி இல்லை என்பதாக ஹீரோவை விட்டுக்கொடுக்காமல் கடகடவென்று முடித்திருக்கிறார்கள். ஆனாலும் எப்போதாவது வரும் குடும்பக் கதைகள் என்ற ஜானரில் நல்லதொரு காமெடி கலந்த படம்.