மனதைக் கொள்ளை கொண்ட மாரீசன்!

மனதைக் கொள்ளை கொண்ட மாரீசன்!
Published on

ஜூலை மாதம் கொஞ்சம் உற்சாகமாகவே தொடங்கியது. காரணம் 3BHK, பறந்து போ. இந்த இரண்டு படங்களின் ப்ரமோஷனும் மாறி மாறி சமூக ஊடகத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. ராமின் பறந்து போ-வுக்கு பாலா, மிஷ்கின், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என்று பலரும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துக் கொண்டாடினர்.

3 BHK.  ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத், சித்தார்த், தேவயானி, மீத்தா ரகுநாத் முதலிய நடிகர்கள். டைட்டிலே கதை சொல்லும். அதுதான். ஒரு வீடு வாங்க நடுத்தர வர்க்கம் படும் பாட்டை திரைமொழியாக்கிக் காட்டியிருந்தார் ஶ்ரீகணேஷ்.

சித்தார்த் நடிப்பு அட்டகாசம். மீத்தா ரகுநாத்தின் நடிப்பும் அந்தக் கதாபாத்திரமும் மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்தது. அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, பார்வையாளர்களையுமே ஈர்த்துச் சென்றது அவர்தான்.

சரத்குமார், தேவயானி இருவரின் கதாபாத்திரங்களை நல்லதங்காள் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுமளவு சோகமே உருவாகக் காட்சிப்படுத்தியிருந்தது பெரும் மைனஸ். வீடு கட்ட முடியவில்லை என்றாலும், கையில் கணிசமாக (லட்சத்தில்) காசு வைத்துக்கொண்டிருக்கற, 35 லட்சத்துக்கு கல்யாணமெல்லாம் செய்ய முடிகிற, மகனைப் பணம் கொடுத்து ப்ரைவேட் கல்லூரியில் படிக்க வைக்கிற, அரசுப்பள்ளியில் படித்து அத்தனை அறிவோடு குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிற மகள் இருக்கிற பெற்றோருக்கு இத்தனை சோகமுகம் ஏனென்றே தெரியவில்லை. விட்ரா பாத்துக்கலாம் என்று எப்போதும் ஜாலியாகவே இருக்கிற தகப்பனாக, மகனோடு டிவி பார்த்து டான்ஸ் ஆடுகிற அப்பாவாக அவரைக் காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் பேசப்பட்டிருக்கும்.

பறந்து போ, ராம் தன்னைத் தள்ளிவைத்துக்கொண்டு இயக்கிய படமாக இருந்தது. மகன்  மிதுன் ரயானுக்காக உழைத்து ஓடாய்த் தேய்கிற பெற்றோராக சிவா, கிரேஸ் ஆண்டனி. மகனை வீட்டில் பூட்டிவிட்டுத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பது போன்றதொரு வாழ்க்கை. வீட்டைவிட்டு வெளியே, அப்பாவுடன் போக நேர்கிறது மகனுக்கு. இடையில் கடன்காரன் வந்துவிட, அது அப்படியே ஒரு பயணமாக மாறுகிறது. அப்பயணத்தின் மகனையும் தங்களையும் கண்டுகொள்கின்றனர் பெற்றோர் என்பதே கதை.

கிரேஸ் ஆண்டனி, தமிழுக்குப் புதியதொரு நல்வரவு, இடையில் அஞ்சலி - அஜு வர்கீஸின் கதாபாத்திர வார்ப்பும் அக்காட்சிகளும்.. ராம் ஸ்பெஷல்.

ஃபீனிக்ஸ், எம்.எல்.ஏ சம்பத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக சிறுவர் கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்கப்படும் மைனர் சூர்யா சேதுபதி. எம்.எல்.ஏ. மனைவியான வரலட்சுமி சரத்குமாரால் குறிவைக்கப்படுகிறார். தப்பித்தாரா, அவர் எம்.எல்.ஏ.வைக் கொன்றதற்க்கான பின்னணி என்ன என்பது கதை.

அனல் அரசு இயக்கம்.  சண்டைக்காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் படம் என்று பார்த்தால் சூர்யா சேதுபதி சிறப்பாகவே செய்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில். நிறைய துணை கதாபாத்திரங்கள் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்ட முயற்சிக்கிறார்கள். 

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் ஓஹோ எந்தன் பேபி. கவனம் ஈர்க்கும் முதல் பாதி. சினிமாவுக்குள் சினிமா என்கிற கான்செப்டில் விஷ்ணுவிஷால், மிஷ்கின் வரும் காட்சிகள், ரெடின் கிங்ஸ்லி என்று ஆங்காங்கே கலகலக்க வைக்கிறது. இடைவேளைக்குப் பின், கொஞ்ச நேரம் ரசிக்க வைத்தாலும் அதன்பின்னான காட்சிகள் முழுமையடையவில்லை. அதையும் சரி செய்திருந்தால்.. சரி.. வேறென்ன இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அதேவாரம், ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் மாயக்கூத்து வெளியானது.எழுத்தாளராக நாகராஜன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ் பத்திரிகை ஆசிரியராக வருகிறார். தாதாவாக தீனா. எழுத்தாளரின் மனைவியாக காயத்ரி, பணிப்பெண்ணாக ஐஸ்வர்யா என்று பலரும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படம் வெறும் 25 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதே வெற்றிதான்.

அதற்கடுத்த வாரம் வந்த பன் பட்டர் ஜாம். நாயகனும் நாயகியும் வேறு வேறு நபர்களைக் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களின் அம்மாக்களோ இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்கள், காட்சிகளில் புதுமை இல்லாததும், முக்கியத் திருப்பம் தேவைப்படும்போதெல்லாம் அழுத்தமற்ற திரைக்கதையாலும் படம் கவனம் ஈர்க்கவில்லை. 

தலைவன் தலைவி. படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் ‘பொண்டாட்டின்னாலே தலைவலி தானே' என்று ஆரம்பிக்கிறது. தலைவிகளை தலைவலிகளாகச் சித்தரிக்கும் தலைவன்களின் குரல்தான் இந்தத் தலைவன் தலைவி. அதனால் அந்த தலைவலியை விட்டுவிடலாம்!

அந்தப் படத்தோடு வந்த இன்னொரு படம் மாரீசன். வடிவேலு பகத் ஃபாசில் நடிப்பில் இந்தப் படத்தின் டீசரே கவனிக்க வைத்தது. மாமன்னனில் பேசப்பட்ட இருவர், இப்படி ஒரு படத்தை எப்போது ஆரம்பித்தார்கள், எப்படி முடித்தார்கள் என்பது தெரியாமல் சைலண்டாக டீசர், டிரைலர் என்று வந்து வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார்கள்.

அல்சைமரால் நினைவு மாறிமாறி வரும் வடிவேலுவுக்கும் அவரிடம் இருந்து பணம் பறிக்க நினைக்கும் பகத்துக்குமான பயணமே மாரீசன்.

மிக அருமையான கதை. அதற்கேற்ற கதாபாத்திரத் தேர்வு; அவர்களின் அருமையான நடிப்பு என்று ஒரு முழுமையான படமாக வந்திருக்கிறது மாரீசன். வடிவேலு... இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தாலே ஒரு பெரிய ரவுண்டு வந்து, இன்னும் பல வருடங்களுக்குத் திரையுலகில் நீடிப்பார் என்று தோன்றியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com