அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் நடிப்பில் - சென்ற மாத இறுதியில் வெளியானது வெளியானது 'சப்தம்'.
மூணாறில் ஒரு தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைகள். பேய்க்கதை பரவுகிறது. கல்லூரியின் பெயர் கெடும் என்பதால், 'பாரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர்' ஆதி அதன்பின் உள்ள மர்மத்தை கண்டறிய இறங்குகிறார். என்ன ஆனது என்பதே கதை.
வித்தியாசமான முயற்சி. அமானுஷய சக்திகளின் நடமாட்டத்தை ஒலிகள் மூலம் கண்டுபிடிக்கும் ஆதி கதாபாத்திரம் தமிழுக்குப் புதுசு. அதை விளக்கும் ஆரம்பக் காட்சிகள் படத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. இடவேளைக்குப் பிறகு ஒலியின் இரண்டு வகைகளை விளக்கி மேலும் கதைக்கு அழுத்தம் தருகிறார் இயக்குநர். ஆதி, லட்சுமி மேனன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு. தேவையற்ற சில இடைச்செருகல்கள் தாண்டி நல்ல திரை அனுபவம்தான் 'சப்தம்'.
ஜென்டில்வுமன். ஜோசுவா சுவாமிநாதன் இயக்கத்தில் லிஜோமோள் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா உள்ளிட்டோர் நடித்த படம்.
கணவன் ஹரிகிருஷ்ணனை ஒரு அசாதாரணச் சூழலில் கொன்றுவிடுகிறார் லிஜோமோள். பதற்றமேதுமின்றி குளிர் பதனப்பெட்டியில் சடலத்தை ஒளித்து வைத்துவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது ஹரியைத் தேடி வீட்டுக்கு வருகிறார் லாஸ்லியா. பிறகு போலீஸும் வருகிறது. எப்படிச் சமாளிக்கிறார் என்ன ஆகிறது என்பதே கதை.
பெண்களை பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆண். அவனிடம் சிக்கிய இரு பெண்கள். அவர்களிடையேயான உரையாடல் என்று நகரும் கதைக்கு வசனங்களும், கதாபாத்திர வடிவமைப்பும் அழகாகக் கைகொடுத்திருக்கிறது. படத்தின் வசனங்களும், நடிகர்களின் நடிப்பும் படத்தை நன்கு கொண்டுசெல்கிறது. ஆனால், படத்தின் ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு க்ளைமாக்ஸ் அழுத்தமாக இல்லை.
மர்மர். அட்வென்ச்சர் வீடியோக்க்கள் வெளியிடும் ஒரு யூட்யூப் குழு. ஜவ்வாது மலைப்பகுதிக்குள் சென்று அங்கே ஒரு குளத்தில் குளிக்க வரும் சப்த கன்னிகைகளையும், அவர்களைத் தடுக்கும் ஒரு மங்கை எனும் ஆவியையும் குறித்து வீடியோ எடுத்து வெளியிட நினைக்கின்றனர். அந்தத் திட்டம் நிறைவேறியதா, இந்த யூட்யூபர்கள் உயிருடன் வீடு திரும்பினார்களா என்ற கதை.
இதுவும் புதிய முயற்சி. கேமரா கோணங்கள், பின்னணி இசை என்று சகல விதத்திலும் ரசிகர்களை கவர முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன். ஒலி வடிவமைப்பாளர் கேவ்யன் பிரெடெரிக்கும். ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸும் பாராட்டுக்குரியவர்கள். திரையரங்கில் வெளியானபோது இருவேறு விமர்சனங்களை எதிர்கொண்டது படம்.
எமகாதகியும் ஓரளவு பாஸிடிவ் ரிவ்யூக்களைப் பெற்றாலும் தியேட்டர்களில் காணக் கிடைக்காத அளவுதான் பிஸினஸ் இருந்தது. அடுத்த வாரத்தில் வெளியான ஸ்வீட் ஹார்ட், ரியோ, கோபிகா ரமேஷ் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் வெளியானது.
பந்த பாசமேதுமற்ற நாயகன். குடும்பம், குழந்தை என்று வாழ ஆசைப்படும் நாயகி, இருவரும் இணையும்போது நடக்கும் குழப்பங்கள், சிக்கல்கள்தான் படம். இன்றைய இளைஞர்கள் காதலை கையாளும் விஷயத்தை மிக அழகாக படம் பிடித்துள்ளார் இயக்குநர். ஆனாலும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது பெரும் குறை.
அதோட வெளிவந்த பெருசு படம், இருதரப்பு விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இறந்து போன பெரியவர் உடலில் ஒரு வினோத சிக்கல். அதை எப்படி வெளியே சொல்வது, எப்படி கையாள்வது என்று குழம்பித் தவிக்கும் குடும்பம். சமாளிக்கிறார்களே என்பதே கதை.
காண்பிக்கப்படும் சிக்கலே கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாகச் சித்தரிக்கப்படக்கூடியது. ஆனாலும் முடிந்தவரை சரியாகவே கையாண்டிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம். நகைச்சுவை எழுத்து படம் முழுவதையும் தாங்கிப்பிடித்திருக்கிறது.