அழுத்தமாய்க் கால்பதித்த மாரி-துருவ்!

அழுத்தமாய்க் கால்பதித்த மாரி-துருவ்!
Published on

 சென்ற மாதக் கடைசியிலிருந்தே இட்லிக் கடை, இட்லிக் கடை என்று ஒவ்வொரு நகரமாகச் சென்று அது என்ன.. ஆங், முன் வெளியீட்டு நிகழ்வு நடத்திக்கொண்டிருந்தார்கள். தனுஷ் இயக்கத்தில் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்க ஒன்றாம்தேதியே வெளியானது, தலைப்பில் ‘க்’ இல்லாத இட்லி கடை.

கிராமத்தில் இட்லிக்கடை வைத்திருக்கும் அப்பா. கேட்டரிங் படித்த நாயகன். முன்னேறி முன்னேறி வெளிநாட்டில் வேலை, மிகப்பெரிய ஹோட்டல் அதிபரின் மகளை மணம் முடிக்கும் வாய்ப்பு என்று செட்டில் ஆகிவிட்ட நிலையில், தந்தையின் மரணத்துக்காக கிராமத்துக்கு வருகிறான். வந்த இடத்தில் இதுதான் நம் இடம், இதை விட்டுவிட்டுப் போகக்கூடாது என்கிற முடிவெடுக்கிறான். நாயகனை நம்பி திருமண ஏற்பாடு செய்திருக்கும் சத்யராஜ், அவர் மகன் அருண் விஜய் இன்னொரு புறம் கிராமத்தில் சமுத்திரக்கனி இவர்களால் வரும் இடர்களையெல்லாம் எப்படிக் கடக்கிறார், இட்லிக்கடை வெற்றிகரமான கடையாக மாறியதா என்று பேசும் படம்.

ரொம்ப மேலோட்டமாக பார்த்தால் நல்ல கதை என்று தோன்றும் இந்தக் கதைக்குள், நிறைய நிறைய பிற்போக்குத்தனங்கள். படித்து முன்னேறிய நாயகன், அந்தப் படிப்பினால் எதையுமே சாதிக்காதது மாதிரியான ஒரு கதையமைப்பு. பெண்கள் வெளியுலகத்தைக் காணத் தடையாக அடுப்படி என்ற ஒன்றுக்குள் உழன்றிருக்கும் நிலையை நவீன உபகரணங்கள் கொஞ்சம் மாற்றியது. இந்தப்  படம் அதெல்லாம் வேண்டாம், அம்மில சட்னி அரைக்கணும், ஆட்டாங்கல்லுல மாவு ஆட்டணும் என்கிறது. அவரது கேட்டரிங் படிப்பின் ஒரு சிறப்பம்சத்தையும் கிராமத்துக் கடையில் அவர் காட்டவில்லை. முன்னோர்களொன்றும் முட்டாள்களில்லை டைப் கதை.

ஆனால் நடிப்பில் யாரும் குறைவைக்கவில்லை. இயக்குநராகவும் தனுஷ் ஏமாற்றவில்லை. அருண் விஜய்க்கும், தனுஷுக்குமான அந்தக் க்ளைமாக்ஸ் காட்சி ஒரு உதாரணம்.

பதினேழாம் தேதி பைசன், ட்யூட், டீசல் என்று மூன்று படங்களோடு கம்பி கட்ன கதையும் வந்தது.

டீசல், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா, விவேக் ப்ரசன்னா, சாய்குமார், வினய், கருணாஸ் உட்பட பலர் நடிப்பில் வெளியானது.

தன் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்காக கச்சா எண்ணெயைத் திருடி டீசல் மாபியாவாக மாறுகிறார் சாய். அவரது வளர்ப்பு மகன் ஹரீஷ். விவேக் பிரசன்னாவும் - காவல் துறை அதிகாரி வினய் உதவியுடன் - சாய் - ஹரீஷ் கூட்டணிக்குப் போட்டியாக வர நினைக்கிறார். யார் கை ஓங்குகிறது என்று போகிறது படம்.

வெற்றிமாறன் குரலில், வடசென்னைக் கடற்கரையோரத்தில் எழுபதுகளில் பிற்பகுதியிலிருந்து நிகழும் பலவற்றை திரையில் கேட்கும்போது ஆர்வம் அதிகமாகிறது. ஆனால் வாய்ஸ் ஓவருக்கான எழுத்து படம் தொடங்கியபின்னான காட்சிகளுக்கு இல்லை. தேவையற்ற நாயகியின் கனவுகள், எந்த பாதிப்பையும் தராத ஹரீஷின் ப்ளாஷ்பேக் என்று நிறைய போதாமைகள்.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியானது ட்யூட். காதல் தோல்வியில் இருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆறுதலாக இருக்கிறார் அவரது மாமா - சரத்குமாரின் - மகளான மமிதா பைஜு. ஒரு கட்டத்தில் மமிதா, பிரதீப் ரங்கநாதனைக் காதலிக்க அதனை ரிஜெக்ட் செய்கிறார் பிரதீப். பிறகு மமிதா வெளியூர் சென்றுவிட, அவரை மிஸ் செய்யும் பிரதீப்புக்கு காதல் பிறக்கிறது. இருவருக்கும் திருமணம் என்று முடிவாகிறது. ஆனால் இப்போது நோ சொல்கிறார் மமிதா. ஏன், அதன்பின் என்ன ஆனது என்பதை இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை, காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.

தன் வழக்கமான சேஷ்டைகளோடு பிரதீப் ரங்கநாதன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அழுத்தமான காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். மமிதாவுக்கும் ஏனோ தானோ என்றில்லாமல் நல்லதொரு கேரக்டர். அவரும் போட்டி போட்டு நடிக்கிறார்.

சரத்குமார் அவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ற சுவாரஸ்யத்தை தன் உடல்மொழியிலும் நடிப்பிலும் வழங்கி தனது சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார். அகன், குறள் என்று பெயர்களாகட்டும், படத்தின் கருவாகட்டும் இக்கால இளைஞர்களுக்கு தேவையான ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்றே கூறலாம். பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றி!

தீபாவளி ரிலீஸாக களத்தில் இறங்கியது மாரி செல்வராஜின் பைசன் @ காளமாடன். நெல்லையைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையையும் நெல்லை மாவட்ட கபடி ப்ரியர்களின் வாழ்க்கையையும் பின்னி எழுதப்பட்ட கதை.

வனத்தி கிட்டானாக துருவ். கிட்டானுக்கு கபடி மீது தீராக்காதல். ஆனால் அந்தப் பகுதியில் இரு தலைவர்களுக்கிடையேயான பகையில் அவ்வப்போது மாறி மாறி பழிவாங்கும் படலங்கள் நடந்துகொண்டே இருக்க, கபடி என்று போனால் வன்முறைக் கலாசாரத்தில் போய்விடுவானோ என்று பயந்து அவரது தந்தை பசுபதி தடுக்கிறார். ஆனால் துருவுக்குள் இருக்கும் கபடி மீதான காதலும், அவ்விளையாட்டில் துருவ் காட்டும் நேர்த்தியும் அவரின் விளையாட்டு ஆசிரியராக வரும் மதனைக் கவர்கிறது. மதனுக்கு எப்படியாவது துருவை சிறந்த வீரராக பயிற்சி அளித்து இந்திய அணியில் சேர்த்துவிட ஆசை. அந்த ஆசை நிறைவேற கபடி வீரரான துருவும், அப்பா பசுபதியும், ஆசிரியரான மதனும் சந்தித்த சவால்களைச் சொல்லும் படம்.

திரை எழுத்து எனும் கலையில் நேர்த்தியைக் கூட்டிக்கொண்டே போகிறார் மாரி. அமீர், லால் இருவரின் கதாபாத்திரங்களும் அவர்கள் பேசும் வசனங்களும் படத்தின் மிக முக்கியமான ஒன்று. துருவ் அவரது வாழ்நாளுக்கான உழைப்பை பைசன் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா இருவரின் பங்களிப்பும் அபாரம். விளையாட்டுக்குப் பின்னிருக்கும் அரசியல், பின்தங்கிய ஒரு கிராமத்தில் இருக்கும் ஓர் இளைஞன் முன்னேறிப் பெயர் பெற்றால் நடக்கும் சமூக மாற்றங்கள் என்று படம் சொல்லாமல் சொல்லும் பல விஷயங்கள் இன்னும் இன்னும் பேசப்பட வேண்டியவை. குறைகளைத் தாண்டி கலை நேர்த்தியும், கதைக் கருவின் ஆழமும் மாரியை இன்னும் நேசிக்க வைக்கின்றன!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com