சென்ற மாத இறுதியில் வெளியான ஹாய் (Hi), ஒன்ஸ் மோர் இரண்டு படங்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.
'ஹாய்': வெவ்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு சென்னைக்கு வந்த கவின், நயன்தாரா இருவருக்குள்ளும் நட்பு மலர்கிறது. இவர்கள் சந்திப்புக்குப் பின்னான வேறுபாடுகளும் அவர்களுக்குள்ளான உரையாடல்களும் அவர்களின் உறவை எவ்வாறு கொண்டு செல்கிறது என்பதே கதை.
விஷ்ணு எடவன், முதல் படம் என்கிற உணர்வைத் தராமல் நேர்த்தியாக இயக்கியுள்ளார். கதாபாத்திரங்களின் தேர்வு படத்துக்கு பலம். ஆனாலும் சில காட்சிகளின் நம்பகத்தன்மை, மேலோட்டமான பார்வை என்று படம் தொய்வடைகிறது.
ஒன்ஸ் மோர்: விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்து வெளியானது. கல்லூரி சீனியர் அர்ஜூன் தாஸை, நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்த அதிதி, அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ஆனால் கடந்த கால சம்பவங்களால் அதிதிக்கு ஓகே சொல்லாத அர்ஜூன் தாஸை, சம்மதிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் அதிதி. ஓகே சொன்னாரா, அப்படி என்ன கடந்த காலக் கசப்பு அர்ஜூன் தாஸுக்கு என்பதைச் சொல்கிறது மீதிப்படம்.
அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் மற்றும் சில கதாபாத்திரங்கள் என பலரும் நிறைவான நடிப்பு. சில செயற்கை காட்சிகள், டெம்ப்ளேட் ப்ளாஷ் பேக் ஆகியவற்றைக் கொஞ்சம் செதுக்கியிருந்தால் இன்னும் ஹிட்டடித்திருக்கும்.
ஆகஸ்ட் 10இல் மண்டாடி, சர்தார் 2 இரண்டு படங்கள் வெளியாகின.
சர்தார் 2, மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்க வெளியானது. முதல் பாகம் கொஞ்சம் அப்படி இப்படி பேசப்பட்டதால் இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு. ஆனால் அதைக் கொஞ்சமும் நிறைவேற்றாமல் சொதப்பலான ஒரு படைப்பாக வந்திருந்தது சர்தார் 2.
மண்டாடி. மிரட்டலான படம். வெற்றிமாறன் ஸ்கூலில் இருந்து வந்த மதிமாறன் இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் உட்பட பலர் நடிப்பில் வெளியானது.
ராமநாதபுரம் மாவட்டம், முகவைப்பட்டினத்தில் ஒரு திருவிழாவின்போது ஊருக்குள் வஸ்தாதான சாட்டப்புலியின் (சுஹாஸ்) மகனை அடித்துவிடுகிறான் மாரி (மிதுன் சங்கர்). சாட்டப்புலி, மாரியைப் பழிவாங்கத் தேடுகிறான். மாரியோ, சென்னையில் நீச்சல் குளத்தின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காளி என்ற முத்துக்காளியிடம் (சூரி) தஞ்சம் புகுகிறான்.
மாரியைத் தொடர்வது, தான் விட்டுவைத்த மிச்சப் பகைதான் என்றுணர்ந்து மாரியுடனே முகவைப்படினம் வரும் சூரி, பாய்மரப்படகுப்போட்டியில் சாட்டப்புலியை வெல்வதே கதை.
பாய்மரப் படகுப்போட்டியில் வீரனாகத் திகழும் ஒருவன், சென்னை பூங்காவில் நீச்சல் குளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் என்பதே ஓர் அற்புதமான சிறுகதை. இப்படி படம் நெடுக அருமையான கதை முடிச்சுகள். இயக்குநரின் பெரும் உழைப்புக்கு மனம் நெகிழ்ந்த வணக்கங்கள்!
வில்லன் சாட்டப்புலியாக சுஹாஸ் அருமையான தேர்வு. அவருக்கு இயக்குநர் மதிமாறனே குரல் கொடுத்திருக்கிறார். இதுவரை நாம் பார்த்தே இராத கடலுக்குள் நடக்கும் பாய்மரப்போட்டி என்கிற களம் பிரமிக்க வைக்கிறது. அந்த விளையாட்டின் கலைச்சொற்கள் நம்மைப் படத்துக்குள் கட்டிப் போடுகிறது. சூரி நடிப்பில் பல படிகள் தாண்டியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.
கடைசி வாரத்தில் டோரதி வெளிவந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்.
தொண்ணூறுகளில் நடக்கும் கதை. அப்பா, அண்ணன்கள் எல்லாரும் கேங்ஸ்டர்களாக இருக்கும் குடும்பத்தின் கடைக்குட்டி சனந்த். சிறுவயது முதலே சனந்த்தின் உற்ற நண்பன் ரிஷிகாந்த். சாதிய மனநிலை கொண்ட சனந்தின் குடும்பம், ரிஷிகாந்தை கொஞ்சம் விலக்கி வைத்தாலும், ரிஷியின் முரட்டுத்தனம் தங்கள் ரௌடியிசத்துக்கு உதவும் என்று கூடவே வைத்துக்கொள்கிறார்கள். சனந்தின் அண்ணன் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வருகிறார். அதன்பிறகு நடக்கும் சில மாற்றங்களும், சனந்த் காணாமல் போவதும் ரிஷிகாந்த் - சனந்த் நட்பு என்னவானது என்பதுமே கதை.
மிகத் துணிச்சலான ஒரு படைப்பு. அதற்கேற்ப நேர்மையாக எழுதப்பட்ட திரைக்கதை. பொருத்தமான நடிகர் தேர்வு, பிரமிப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கும் இளையராஜாவின் இசை என்று ஒரு விருந்தாகவே அமைந்த படம் டோரதி.
சனந்த், ரிஷிகாந்த் இருவரும் தங்கள் உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார்கள். முத்துக்குமார் இந்தப் படத்துக்குப் பிறகு 'லிட்டில் பிஸிஸ்' அல்ல, ரொம்பவே பிஸியாக இருப்பார். இளையராஜாவைப் பற்றி எழுத இனி சொற்களே இல்லை. படத்தின் ஆன்மாவாக அவர் இசை இருக்கிறது.
பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே, 'படம் ஒண்ணும் அவ்வளவு சிறப்பில்ல' என்று சொல்லக்கூடும். அதைத்தாண்டியும் காலம், தனக்குள் இந்தப் படத்தை உயர்த்தி வைத்திருக்கும்!