
சென்ற மாத இறுதியில் வெளிவந்த கவலை வேண்டாம் என்ற படத்தைப் பற்றி எழுத ஒன்றுமில்லையென்றாலும், அதன் நாயகன் இதுபோன்ற கதைத்தேர்வில் கவனமின்றி இருப்பதைக் குறித்து அவருக்கு கவலை வேண்டும் என்பதை மட்டும் காதம்பரி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறாள்.
டிசம்பரின் முதல் படம் சைத்தான். சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதை என்னமோ அத்தனை ரகசியமாக வைத்திருந்தார்கள். படத்திற்காக பாதி மாற்றப்பட்ட அந்தக் கதை, நாவலின் விறுவிறுப்பு திரைப்படத்திற்குண்டான அழகியல் - இரண்டையுமே தொலைத்திருந்தது. முந்தைய பத்தியின் நாயகன் போலன்றி, கதைத்தேர்வில் கவனமுடன் இருக்கிறார் விஜய் ஆண்டனி. சைத்தானைப் பொறுத்தவரை, சுஜாதாவின் நாவலிலின் மையத்திலிருந்து விலகும்போது இரட்டிப்பு கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
அடுத்த வாரத்தில் வெளியான சென்னை 28 -II கொண்டாட்டப் படமாக இருந்தது. புற சூழல்களான, பணப் பிரச்னை, முதல்வர் மரணம் போன்றவைகளால் குமைந்து கொண்டிருக்கும் பலருக்கும் பெரிய ரிலாக்ஸாக அமைந்தது இந்தப் படம்.
முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை அப்படியே இரண்டாம் பாகத்திலும் கொண்டுவந்ததோடு அதற்கேற்ப கதையும் இருந்ததால்தான் ரசிக்க முடிந்தது. தொய்வற்ற திரைக்கதையும், யுவனின் பின்னணி இசையும் வெற்றிக்குப் பெரும்பங்கு வகித்தது.
அதற்கடுத்த வாரம் வீர சிவாஜி. ஒவ்வொரு காட்சியும் யூகிக்கக் கூடிய விதத்தில் இருந்தது பெருத்த ஏமாற்றம். கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என்று பேசக்கூடிய அளவுக்கு எதுவுமற்ற ஒரு படம்.
கடைசி வாரத்தில் வெளியான கத்தி சண்டை, பலே வெள்ளையத் தேவா இரண்டுமே ரசிகன் தலையில் சம்மட்டி அடி அடித்த படங்கள்தான். பலே வெள்ளையத்தேவாவின் அமெச்சூர்த்தனமான கதையும், படமாக்கலும் பெரும் தூக்கத்தை வரவழைத்தது. ஆனாலும் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்காக படம் தயாரித்து நடிக்கும் சசிகுமாரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கத்திச்சண்டை, வெறும் குப்பை. இதன் இயக்குநர் வேறு ‘காசு வாங்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டத்தான் வேண்டும்’ என்று தன் திருவாய் மலர்ந்தருளியிருந்தார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி என்று பெரிய பட்டாளமே கையிலிருந்தாலும் கதையின்றி அணுவும் அசையாது என்று நிரூபிக்கும் இன்னொரு படம்.
டங்கல் படம் மூலம் அமீர்கான், எல்லா நாயகர்களின் மனசாட்சியையும் உலுக்கியிருந்தார். உண்மையான ஒரு பயோபிக். தெளிவான திரைக்கதை. தேர்ந்த கதாபாத்திரங்கள். எல்லாவற்றையும் மீறி அமீர்கானைப் பாராட்டக் காரணம் - தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் படம் முழுவதும் கீதா, பபிதாவை ஒட்டியே அமைத்து ஒதுங்கி இருந்ததால்தான்.
டிசம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் வெளியான மாவீரன் கிட்டுவுக்காக சுசீந்திரனுக்கு மகுடம் சூட்டுவதில் மகிழ்ச்சி. சாதிய பிரச்னைகளை வைத்துக் கதை பின்னியதும், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டவர்களை, ஒதுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்க செய்யும் மறைமுக உபாயங்களையும் தெளிவாகக் காட்டியிருந்தார் சுசீந்திரன். பாடலெழுதும் போது பூஞ்சிலையாக இருக்கும் யுகபாரதியின் பேனா, வசனம் எழுதுவதில் பூகம்பமாக மாறியிருந்தது இந்தப் படத்தில்.
இதைப் போன்ற படங்கள் வணிகரீதியாகவும் வெற்றிபெற வேண்டியது சுசீந்திரன் போன்றவர்களை ஊக்கப்படுத்தும். அதுதான் அவருக்கும் நமக்கும் நன்மை பயக்கும்!
ஜனவரி, 2017.