நம்பிக்கை தந்த சிறை!

நம்பிக்கை தந்த சிறை!
Published on

சென்ற மாத இறுதியில் வெளியான ரிவால்வர் ரீட்டா பற்றி முதலில்...

கீர்த்தி சுரேஷ், ராதிகா, சூப்பர் சுப்பராயன், கல்யாண் மாஸ்டர் உட்பட பலர் நடிக்க ஜேகே. சந்துரு இயக்கியிருந்தார். இரண்டு டான்கள், பழி வாங்கிக்கொள்ளும் படலத்துக்கு நடுவே, கீர்த்தி சுரேஷ் குடும்பம் மாட்டிக்கொள்கிறது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு கொலையும் நடக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதே கதை. டெம்ப்ளேட் கதைதான் என்றாலும் சுவாரஸ்யம் மிக்க ஒன்று. ஆனால் ஒன்றிரண்டு காட்சிகள் தவிர வேறு எதற்கும் அவ்வளவாக சிரிப்பு வரவில்லை.  ராதிகா நடிப்பும் காட்சிகளும் ஆறுதலாக அமைந்தன.

அங்கம்மாள்... டிசம்பர் முதல் வாரத்தில் கீதா கைலாசம் நடிக்க விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருந்தார். சிறுவயதில் கணவனை இழந்த அங்கம்மாள், இரு மகன்களையும் சிரமப்பட்டு வளர்க்கிறார். சுருட்டு பிடித்துக்கொண்டு ரவிக்கை அணியாமல் கிராமத்தில் வளையவருகிறார். இரண்டாவது மகன் சரண், பணக்கார வீட்டுப்பெண்ணைக் காதலிக்கிறார். இருவீட்டாரும் சம்மதிக்கிறார்கள். ஆனால் பழைமைவாதியான அம்மாவை, தன் காதலி வீட்டார் எப்படி எதிர்கொள்வார்களோ என்று பயந்து 'ரவிக்கை எல்லாம் அணிந்து நாகரிகமாக இருக்கலாமே' என்று மாற்ற முயற்சிக்கிறார் சரண்.  ஆனால் அங்கம்மாள் மறுக்கிறார். என்ன ஆகிறது என்பதே கதை.

மூத்த மகனான பரணியின் நடிப்பும் காட்சிகளும் படத்தை இலகுவாக நகர்த்துகிறது. அங்கம்மாளாக கீதா கைலாசத்தின் நடிப்புக்கு குறைவில்லை. ஆனால் திரைக்கதை கொஞ்சம் வலுவிழந்து இருந்தது.

டிசம்பர் மாதமே கொஞ்சம் டல்லாகத்தான் இருந்தது. அங்கம்மாளுக்குப் பிறகு கடைசி நாட்களில் ஒரு சில படங்கள் வர இருந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு காணொலி வெளியிட்டு, படையப்பா மறுவெளியீட்டுக்கு விளம்பரம் கொடுத்தார். அவ்வளவுதான், கோலிவுட் கொண்டாட்டவுட்டாக மாறியது. எங்கு பார்த்தாலும் கேட்டாலும் படையப்பா புராணம்தான்.

சரி, நாமும் படையப்பாவை விமர்சித்தால் ரொம்ப லேட்டு பாஸ் என்பதால், அந்த ப்ரமோவையே விமர்சிக்கலாமென்று தோன்றியது.

ரஜினி என்ன சொன்னாலும் செய்தாலும் செய்திதான் என்கிற நிலையில் அவர் படத்தில் நடித்த நினைவுகள் குறித்துச் சொன்னதெல்லாமே மிகவும் நன்றாகவும் நாஸ்டால்ஜியாகவும் இருந்தது. சிவாஜிக்கு அவ்வளவு சம்பளமா என்று கே.எஸ்.ரவிக்குமார் கேட்டார் என்பதைச் சொல்லி ரவிக்குமாரை சிவாஜி ரசிகர்களிடம் மாட்டிவிட்டார். அந்த ஷூட்டிங் அனுபவமெல்லாம் அவர் கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் சொல்வதெல்லாம் நன்றாக இருந்தது. ஆனால்... மிகவும் ஆணாதிக்கமான, பிற்போக்குத்தனமான சில வசனங்களை இப்பொழுதும் அவர் வியந்து பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். அந்தப் படம் வந்த காலகட்டத்தில் ஹீரோயிசத்துக்காக பேசியவைதான் அவை என்றுமட்டும் சொல்லி விட்டிருக்கலாம். அதேபோல, ஏ.ஆர்.ரகுமான் என்ற பெயரையே உச்சரிக்காததும் குறையாகப்பட்டது. க்ளைமாக்ஸை மாற்றியது, நீலாம்பரிக்கு முக்கியத்துவம் கொடுத்ததெல்லாம் நிச்சயம் ரஜினி, ரசிகர்களின் மனம் அறிந்த கலைஞன்தான் என்று சொல்லியது. அதனாலேயே படம், தியேட்டர் அதிபர்களுக்கு பாலை வார்த்தது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் - ஜனவரியில் கடைசி வாரத்தில் குடும்பஸ்தன் வந்து மக்களின் ஆதரவு மூலமாகவே நன்றாக ஓடியதல்லவா, அதே போல வருட இறுதியிலும் கடைசி வாரத்தில் 'சிறை' வெளிவந்து மக்களிடையே பேசுபொருளாகி கூட்டம் அதிகரித்து வருகிறது.

வெற்றிமாறனிடம் பணிபுரிந்துவந்த சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கம்.   ’டாணாக்காரன்' தமிழ் கதை, இருவரும் இணைந்து திரைக்கதை என்று மிக அற்புதமான கூட்டணி.

காவல்துறையின் ஒரு பிரிவான AR (Armed Reserve) ல் ஏட்டாகப் பணிபுரிகிறார் விக்ரம் பிரபு. குற்றவாளிகளை சிறையில் இருந்து அழைத்துக்கொண்டு போய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் சிறைக்குக் கொண்டுவரும் பணியில் இருக்கும்போது ஒரு கைதியை சுட்டுக்கொல்ல, விசாரணையில் இருக்கிறார் விக்ரம் பிரபு. அந்த சமயத்தில் இன்னொரு கைதியை அதே போல அழைத்துச் செல்கிறார். அவனது கதையைக் கேட்கிறார். அவனுக்கு உதவ நினைக்கிறார். என்ன ஆகிறது என்பது கதை.

மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது திரைக்கதை. மலையாளத் திரையுலகில் காவல்துறையில் பணிபுரியும் பலரும் திரைத்துறையிலும் இருக்கிறார்கள். இங்கே தமிழ் அப்படி ஒரு வரவு. முதல் பாதியில் காட்டப்படும் காவல்துறையின் சில விதிகள், நடைமுறைகள் இதுவரையில் நமக்குக் காண்பிக்கப்படாதது என்பதே படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது. அவர்களின் உலகத்தை அவர்களில் ஒருவராக இருந்தவரின் எழுத்து என்பதால் அத்தனை நேர்த்தி.

படம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து,  கைதி அப்துல் ரவூஃபின் (அக்‌ஷய்குமார்) கதைக்குத் தாவும்போது சூடுபிடிக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் நடிகர் தேர்வும் அத்தனை சிறப்பு. மூணாறு ரமேஷின் கதாபாத்திரம் அதில் ஒரு உதாரணம். வசனங்களும் மிகச்சிறப்பு!  இப்படியாக 2025-ஐ நம்பிக்கையாக முடித்துவைத்திருக்கிறது சிறை.

2026 எல்லாருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com