நம்பிக்கை தந்த 'நீளிரா'

நம்பிக்கை தந்த 'நீளிரா'
Published on

முதல்வாரத்தில் காளிதாஸ் 2, லீடர், நீளிரா, கார்மேனி செல்வம் என்று வரிசைகட்டி படங்கள் வெளியாகின.

காளிதாஸ் ஒன்றுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுல்லை என்கிற முன்னுரையோடே காளிதாஸ் 2 படம் பற்றிப் பார்க்கலாம். ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் தொடர்கொலைகள், அதைத் துப்புத் துலக்கும் இன்ஸ்பெக்டர் பரத் அவரது உயரதிகாரி பவானி. வெளியுலகிலும் சில ரவுடிகள் கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் என்ன, கொலையாளி யார் என்பதே படம்.

ஒன்லைனராக ஓகே ஆனாலும், திரைக்கதை சொதப்பல். முன்கூட்டியே கணிக்கக்கூடிய காட்சிகள், அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள் என்று சுமாரான படமாக அமைந்துவிட்டது. முதல்பாகத்தில் இருந்த விறுவிறுப்பை இயக்குநர் செந்தில் இதில் கோட்டை விட்டுவிட்டார்.

லெஜண்ட் சரவணா நடிப்பில் லீடர். மசாலாவாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அழகாகப் பூர்த்தி செய்திருக்கிறார் லெஜண்ட். துறைமுகத்தில் லோக்கல் தாதா, 'சால்ட்'டுடன் மோதல் வருகிறது லெஜண்ட் சரவணாவுக்கு. அந்த லோக்கல் தாதா ஒரு சர்வதேசக் குற்றவாளியுடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா அதைத் தடுக்க முயல்கிறார். அவரது முயற்சிகளுக்கு உயரதிகாரிகளே முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்நிலையில் லெஜண்ட் சரவணாவுக்கும் லோக்கல் தாதாவுக்குமான மோதல் ஆண்ட்ரியாவுக்குத் தெரியவருகிறது.

தொடர்விசாரிப்பில் அவர் யார், அவரது கடந்த காலம் என்ன என்பதை அறியும் ஆண்ட்ரியா.. மீதியை ஓடிடி திரையில் காண்க.

ஜாலியாகவேதான் போகிறது படம். முந்தைய படத்துக்கு இதில் தேவலாம் என்கிற நடிப்பு சரவணனுக்கு. ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் முடிந்த அளவு, சரவணனின் நாயக பிம்பத்துக்குக் கைகொடுத்திருக்கிறார். அம்புட்டுதேன்!

சமுத்திரக்கனி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, கவுதம் வாசுதேவ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் கார்மேனி செல்வம் அதே வாரத்தில் வெளியானது. எளிமையான கார் டிரைவரான சமுத்திரக்கனி வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள், அவரை ஆடம்பர வாழ்க்கை ஆசைக்குள் தள்ளுகிறது. அதற்காக சிலவற்றைச் செய்ய என்ன ஆகிறது என்பதே கதை.

சமுத்திரக்கனிக்கே உரித்தான கதை & கதாபாத்திரம். சமுத்திரக்கனி, லட்சுமி ப்ரியா ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு என்பதெல்லாம் தாண்டியும் படம் இன்னும் கருத்துத் தெளிவோடு எடுக்கப்பட்டிருந்தால் கொஞ்சமாவது பேசப்பட்டிருக்கும்.

சோமீதரனின் இயக்கத்தில் நீளிராவும் இந்தப் படங்களோடு வெளிவந்து தனித்த கவனம் பெற்றது. இலங்கை வடக்கில் உள்ள கிராமத்தில் போர்ச் சூழலுக்கிடையே வசித்து வருகிறார் கபிலா வேணு. மறுநாள் அவரின் மகள் சிது குமரேசனின் திருமணம் நடக்க உள்ள நிலையில் இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையில் ராணுவக் குழு ஒன்று பக்கத்து வீட்டில் பதுங்குகிறது. இவர்களது வீட்டுக்குள்ளும் வருகிறது அக்குழு. வெளியே போராளிகள், உள்ளே இந்த அமைதிப்படையினர். நீளும் இரவின் மூலம் போர்ச்சூழல் குறித்துப் பேசுகிறது நீளிரா.

அற்புதமான கதைக்களன், அறிமுக இயக்கம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை / இயக்கம் என்று படம் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றது. நடிகர்கள் தேர்வு, அவர்கள் நடிப்பு என்று பல ப்ளஸ்கள்.

அடுத்த வாரம் ப்ரதிப் ரங்கநாதனின் நடிப்பில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, நட்டி நடராஜ் நடிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில் டிஎன்.2026 இரு படங்களும் வெளியாகின.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி 2040இல் நடக்கும் கதை. செல்போனால் பலரும் பாதிக்குமளவு போய்க்கொண்டிருக்க செல்போனே பயன்படுத்தாத ப்ரதீப் ரங்கநாதனுக்கு கீர்த்தி ஷெட்டி மீது காதல் வருகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் LIK எனும் ஆப்தான் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அது இவர்கள் காதலுக்கு மதிப்பெண் கம்மியாகக் கொடுக்க கீர்த்தி ஷெட்டி, ப்ரதீப்புக்கு நோ சொல்லிவிடுகிறார். ஆப் எல்லாம் மனித மனதுக்கு ஈடாகுமா என்று சவால் விடும் ப்ரதீப் எப்படி அந்தச் சவாலில் ஜெயிக்கிறார் என்பதே கதை. சுவாரஸ்யமான கதையை கிரிஞ்சாக எடுத்து வைத்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இத்துடன் வெளிவந்த டி.என்.2026 ஒரு உச்சநடிகர் அரசியலுக்கு வரும் சம்பவத்தைப் பேசியது. வட இந்தியாவிலிருந்து வந்து பெரும் நடிகரான நட்டி நடராஜ், அரசியலுக்கு வருவாரோ என அரசாங்கம் குடைச்சல் கொடுக்கிறது. அரசியலுக்கு வரும் அவர் முதல்வர் ஆனாரா என்பதுதான் கதை.தமிழ்நாட்டு நிலவரங்களை பிரதிபலிக்கும் காட்சிகள். அழுத்தமாக இல்லாததாலும் ஒரு கட்டத்தில் ஸ்பூஃப் என்ற உணர்வைத் தருவதாலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com